சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களின் செய்தித் தொகுப்பு.

***

திருச்சி:

சாத்தான்குளம் தந்தை மகனை அடித்துக்கொன்ற போலீசை கொலை வழக்கில் கைது செய்! சிறையிலடை!

பரிசோதிக்காமல் போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறைத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்! நடவடிக்கை எடு!

27.06.2020 அன்று காலை  11 மணி அளவில் மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெற்றது. போலீசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை அட்டைகளாக பிடித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்வதும், மருத்துவர், நீதிபதி, சிறைத் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும் வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி மிகு முழக்கமிட்டனர்.

மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். கொலை வழக்கில் போலீசாரை கைது செய்ய வேண்டும்.  போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை ரத்து செய்து, மக்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். மனவுளைச்சல், பணிச்சுமை காரணமாக சில காவலர்கள் இது போன்ற தவறுகள் செய்வதாக கொலைக்கு நியாயம் பேசுகிறார்கள். இது மிக அயோக்கியத்தனமான கருத்து. வியாபாரிகள், தொழிலாளர்கள் பல்வேறு மக்கள் பிரிவினரும்தான் கொரானா ஊரடங்கின் பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் என்ன கொலையா செய்கிறார்கள்? அப்படி கொலை செய்தால் இந்த அரசு ஏற்றுக் கொள்ளுமா?

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போலீசை மக்கள் கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும். அதற்கு காவல்நிலையத்தில் லாக்கப் மற்றும் பிற இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து அதன் ஒளிபரப்பை மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளான எம். எல். ஏ, எம். பி ஆகியோர் பார்க்கும்படி வைக்க வேண்டும்.

பொதுமக்களும் காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை வீடியோவில் பார்த்து கண்காணிக்கும் வகையில் இருக்க வேண்டும். போலீசாரை கொலை வழக்கில் கைது செய்யும் வரை எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா அமெரிக்காவில் கருப்பின மக்களில் ஒருவரை போலீசால் கழுத்தை நெரித்து கொல்லும் செயலுக்கு அங்கு நடந்த மக்களின் போராட்டம் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிர்ந்தது, பதுங்கு குழிக்குள் சென்று டிரம்ப் ஒளிந்து கொண்டார். போலீசை மண்டியிட வைத்தனர். அதுபோன்ற போராட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட வேண்டும் நாம் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று பேசினார்.

அடுத்து அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரன் பேசுகையில், காவல்துறையை கொலைவழக்கில் கைது செய்ய வேண்டும். நீதி விசாரணைக்கு உட்படுத்தி இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் தண்டிக்க வேண்டும் எனபேசினார்.

அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சம்சுதீன் கொரோனா ஊரடங்கால் மக்கள் பல பாதிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில் வியாபாரிகளை போலீஸ் அடித்துக் கொன்றது, மனித நேயமற்ற செயல். கொலை குற்றவாளிகளை      தண்டிக்கவேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை  பாதுகாக்கவேண்டும். மருத்துவர்கள், நீதிபதிகள், சிறை அதிகாரிகள் என  உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்யவேண்டும் எனப்பேசினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் வழக்கறிஞர் தோழர் சந்துரு ஆகியோரும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

சமூகநீதிப் பேரவை  மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  ரவிக்குமார் இந்த போலீஸ் மக்களைக் காக்க அல்ல. மாறாக  மக்களை மிரட்டி, அடித்து சித்திரவதை செய்து பணம் வசூல் செய்கிறது.  போலீஸ் தன்னுடைய அண்ணன்,  தம்பி, அக்கா- தங்கச்சியை அடித்துக் கொலை செய்யுமா? எனக் கேள்வி கேட்டு போலீசுக்கு வந்தா ரத்தம், மக்களுக்கு வந்தா  தக்காளி சட்னியா எனக்கேள்வியெழுப்பினார். போலீசின் அராஜகத்துக்கு முடிவு கட்டவும் நியாயம் கிடைக்கவும் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் பஷீர், இந்த அராஜகமான காவல்துறையைப்  பணிய வைக்க மக்கள்  புரட்சி தேவை அப்படிப் பட்ட போராட்டங்களை  நாம் தொடுப்போம் எனப்பேசினார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  ஐயா  ம. ப. சின்னதுரை, மக்களுக்கு பணியாற்ற என்று வந்த போலீசு, மக்களை எப்படி அடித்துக் கொள்ளலாம்? சட்டமும் ஜனநாயகம் இதைத்தான் கூறுகிறதா? அராஜகத்தில் ஈடுபட்ட காவலர்களை கொலை வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். உடந்தையாக  இருந்த அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் ராஜா, இந்தக் காவல்துறை மக்களுக்கானதல்ல, இது ஒரு சமூக விரோத ரவுடிக்கும்பல். மக்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட அடியாள் படை. அதை நீதிபதிகளே பேசியுள்ளனர். மேலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் மக்களைத் தாக்குவதும், பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவதும், கொலை செய்வதும் நீடிக்கிறது.  இந்த கட்டமைப்பு தோற்றுப்போய் மக்களுக்கு விரோதமாகப் போய் விட்டது என்பதற்கு போலீசின் கொலையும் அதைத்தடுக்காமல் துணை போன நீதித்துறை நடுவர், மருத்துவர், சிறை அதிகாரி போன்றோரின் வக்கிரமான நடவடிக்கையே உதாரணமாக உள்ளது. அமெரிக்கா போல மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அந்த எழுச்சியை இங்கே நாம் நடத்த வேண்டும். நீதி, நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும், போலீசை மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தி மக்கள்  பிரதிநிதிகளின் மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்றார்.

அப்பகுதியைச் சுற்றி இருந்த கடை வியாபாரிகளிடம்  நமது முழக்கங்கள் நகலெடுத்து பிரசுரமாக கொடுக்கப்பட்டது.  இது ஆர்ப்பாட்டத்தின்  நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவும் அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக முழக்கமிட்டு, நன்றி கூறி முடிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராத நிலையில் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் எந்தவிதத் தொல்லையும் தர முடியாமல் அமைதி காத்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
தொடர்புக்கு : 94454 75157

***

புதுச்சேரி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகன் இருவரையும் சித்திரவதை செய்து படுகொலை செய்த போலிசை கண்டித்தும், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் 26.6.20 அன்று காலை 10 மணி அளவில் நெல்லித்தோப்பு சிக்னல் சுப்பையா சிலை அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நூகர்வோர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திரவிட விடுதலை கழகம், தமிழர் கலம், இந்திய ஜனநாயக கட்சி, CPI (ML) ஆகிய கட்சிகள் அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

***

மணப்பாறை:

சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் போலீசால் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மக்கள் அதிகாரம் சார்பாக மணப்பாறையில் 27.6.2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் மணப்பாறை ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி இதற்கு தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தோழர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.

***

கரூர்:

சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து, 25.06.2020 அன்று காலை 10 மணி அளவில் கரூரில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • சாத்தான்குளம் தந்தை மகனை அடித்துக்கொன்ற போலீசை கொலை வழக்கில் கைது செய்! சிறையிலடை!
  • பரிசோதிக்காமல் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவர், நீதித்துறை நடுவர்,சிறைத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்! நடவடிக்கை எடு!

என மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தவகல் :
மக்கள் அதிகாரம்
கரூர்.

***

விருத்தாசலம்:

விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக, சாத்தான்குளம் லாக்கப் படுகொலையைக் கண்டித்து பாலக்கரையில் அனைத்து கட்சியும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கம்மாபுரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் ஆரம்பி கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல் ஸ்டீபன், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தோழர் ராமர் அவர்களும், மாவட்ட செயலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வில்வநாதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர் புஷ்ப தேவன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணியரசு மற்றும் மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் மாற்று கட்சி நிர்வாகிகள் என  சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டனர்.

போலீசின் நெருக்கடி காரணமாக மேற்கூறிய கட்சிகள் சார்பாக, 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று போலீஸ் சொன்னதால், ஒவ்வொரு கட்சியும் 5 நபர்களை கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும், கைது செய்யவேண்டும். மருத்துவம் பார்க்காத நீதிமன்ற நடுவர், மருத்துவர் சிறைத்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வரம்பு மீறிய போலீஸ் அதிகாரத்தை மக்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

***

கோவை:

கோவை பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக காலை 11 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி சாத்தான்குளத்தில் போலீசால் நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், நாட்டில் நடந்துவரும் போலீசு ராஜ்ஜியத்தை எதிர்த்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 15 தோழர்கள் கலந்துகொண்டனர். உணர்வுபூர்வமான முழக்கங்களுடனும், பதாகைகளுடனும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் மூர்த்தி, இந்த கொரோனா ஊரடங்கில் போலீசின் அடக்குமுறை வெறியாட்டத்தையும், சாதாரண மக்களை எப்படி நடத்துகிறார்கள், சாதிவெறி கொலையாளிகளிடமும், கிரிமினல்களிடமும், ஊழல்வாதிகளிடமும், அரசியல் செல்வாக்குள்ள பாலியல் குற்றவாளிகளிடமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் விளக்கிப் பேசினார்.

அரசு கட்டமைப்பின் தோல்வி குறித்தும், அதன் அனைத்துத் துறைகளும் மக்களுக்கு எதிரானாதாக மாறிவிட்டதையும், இனி மக்களே அதிகாரத்தைக் கைபற்றுவதுதான் ஒரே தீர்வு என்றும் விளக்கினார். குறிப்பாக தோழர் அன்பு வரைந்திருந்த கருத்துப்படம் அனைவரின் கவனத்தைக் கவரும் விதத்தில் இருந்ததால் போலீசார் அந்தப்படத்தைக் காட்ட வேண்டாம் என்றனர். ஆனால் அதை மீறி ஆர்ப்பாட்டத்தில் அப்படம் காட்டப்பட்டது. மொத்தத்தில் இன்றைய ஆர்ப்பாட்டம் போலீசு ராஜ்ஜியத்தின் கொடுமைகளை மக்களிடம் சென்று சேர்ப்பதாகவும், அதை முறியடிக்க மக்கள் அமைப்பாகத் திரளக் கோருவதாகவும் இருந்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

***

  • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸின் கொட்டடிப் படுகொலைக்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்கில் பதிவு செய்து கைது செய்!
  • படுகொலைக்குத் துணைபோன மருத்துவர், நீதிபதி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
  • இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கு!

என்கிற முழக்கத்தை முன் வைத்தும்.

கோவையில் இட்லிகடை நடத்திய பெண் மற்றும் அவருடைய மகன் மீது தாக்குதல் நடத்தியது; குழுக்கடனைக் கட்டுவதற்கு அவகாசம் வழங்கப் போராடிய ஒத்தக்கடை பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது.

மேலும் விசாரணைக்காக யா. ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமைப்புத் தோழரைத் தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, தனித் தமிழர் இயக்கம், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று (29/06/2020) காலை 10.30 மணிக்கு யா.ஒத்தக்கடையில் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டம் தோழர்.பா. காளிதாஸ் (இ.க.க) தலைமையிலும் தோழர்.கலைச்செல்வம் (இ.க.க-மா), தோழர்.சரவணன் (ம.அ), தோழர். விஜயகுமார்(த.பு.க), தோழர்.எழிலரசு (த.த.இ), தோழர்.பிலால் (ம.ம.க) ஆகியோரின் முன்னிலையிலும் நடந்தது.

தோழர் பா. காளிதாஸ் பேசிய 15 நிமிட உரையில் சுற்றியிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது. இறுதியாக தோழர். சரவணன் (ம.அ) நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரைப் பகுதி.
தொடர்புக்கு : 63832 43495.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க