டந்த வாரத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம்,  விமானநிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, இந்தி தெரியாமல் இந்தியராக எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டதை ஒட்டி, சமூக வலைத்தளங்களில் #StopHindiImposition எனும் ஹேஸ்டேகில் கண்டனங்கள் பதிவேற்றப்பட்டன.

இதனைக் கண்டித்து பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது என்று திருவாய் மலர்ந்திருந்தார். பாஜக-வின் திட்டங்களை சிரம் மேல் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்தும் அதிமுக அரசே, இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டிய அரசியல் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்பது கேள்விக்குறியே !

கடந்த வாரம் லீட் எனும் இணையப் பத்திரிகை சென்னையில் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தித் திணிப்பு வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படுகிறது என்பதும், அவ்வாறு இந்தியைக் கற்று தேர்வில் தேறத் தவறுபவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிரந்தரப் பணியும் மறுக்கப்படும் என்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்தித் திணிப்பு புதிய கல்விக் கொள்கையின் காகிதங்களில் மட்டுமில்லை; தமிழகத்தின் மத்திய அரசு அலுவலகங்களிலும் நடைமுறையில் இருக்கிறது. இது இந்திய அரசியல்சாசனத்திற்கு புறம்பானதாகும்.

இதுகுறித்து தி லீட் இணையதளம் நடத்திய கணக்கெடுப்பில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இது குறித்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நிறுவனங்களில், வேலை நேரத்திற்கு மத்தியில் இந்தி வகுப்பு எடுக்கப்படுகிறது. இந்த வகுப்புகள் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஊழியர்களின் பணி நேரத்தில் சுமார் 1.30 மணிநேரம் நடத்தப்படுகிறது. இதில் குறிப்பான கட்டத்தில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், நேர்காணல் தேர்வு 20 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது.

இந்த வகுப்புகளில் பங்கேற்க மறுத்தால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை மறுக்கப்படுவதோடு நிரந்தர ஊழியராகவும் முடியாது என்கிறார் ஒரு ஊழியர். இப்படி ஊழியர்களை மிரட்டியே இந்தி வகுப்புகளில் பங்கேற்கச் செய்கின்றனர்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்

மத்திய அரசு அலுவலகங்களில், வேலைபார்க்கும் அளவிற்கு இந்தியை கற்றுக் கொடுப்பதற்கான இந்த முனைப்பு, அரசியல் சாசனத்தின் பிரிவு 343-ன் கீழ் வருகிறது. இப்பிரிவின் பல்வேறு திருத்தங்களும், பரிந்துரைகளும், ‘சி’ வகைப்பிரிவில் வரும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வலிந்து இந்தியைத் திணிப்பதைத் தடை செய்கிறது.

2004-ம் ஆண்டு அலுவலக மொழியை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை எண். 11.5.13  நிராகரிக்கப்பட்டது. பணித் தேர்வுக்கான கேள்வித்தாளிலும் நேர்முகத் தேர்விலும் ஆங்கிலம் இருக்கக் கூடாது என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது 1968-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றபட்ட அலுவல் மொழி தீர்மானத்தின் ஆன்மாவிற்கு நேர் எதிரானதாக இருக்கிறது என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் 2011-ம் ஆண்டு இந்தியில் கட்டாயத் தேர்வு வேறொரு வடிவத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேர்வு அறிவிப்பில் இந்தி செல்கள் உருவாக்கப்படுவது குறித்து அங்கீகரிக்கப்பட்டு, இந்தி கற்றுக் கொள்வது கட்டாயமக்கப்பட்டது. இது ‘சி’ வகைப்பிரிவு மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவில்லையெனில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிக்கிறது.

1990 முதலே இதற்கான விவகாரங்கள் பேசப்பட்டு வந்தாலும் 2015—ம் ஆண்டிலிருந்துதான் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அடிக்கடி பேசப்பட்டு வந்தது என்கின்றனர் அலுவலர்கள். இதன் பின்னர் தான், சென்னையிலுள்ள வரி வருவாய்த் துறையிலும் பிற மத்திய அரசு அலுவலகங்களிலும் வரி உதவியாளர் பணிக்கான 100 மதிப்பெண்களுக்கு இந்தி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய அரசு அலுவலகங்களில் குறிப்பான அதிகாரி இந்தி துளியும் தெரியாத ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இந்தி வகுப்பிற்கு ஏற்பாடு செய்வார்.

ஊழியர்கள் வகுப்பிற்கு வரத் தயங்குகிறார்கள் என்ற அடிப்படையில் பரீட்சையில் 75% மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தால், இந்திக் கல்வி நிலைக்கு தகுந்தவாறு பணப் பரிசும் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்கின்றனர். ரூ.400 முதல் ரூ. 2400 வரை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. “இந்தியை நாங்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும், சென்னையில் குடியிருப்பவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள மாட்டார்களா ?”  என சென்னை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் கேள்வி எழுப்புவதாக கூறுகிறது லீட் இணையதளம்.

இந்தி எப்படி படிப்படியாக தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் திணிக்கப்பட்டது என்பதை நினைவுகூரும் சில மூத்த அதிகாரிகள், ஊழியர்களில் இந்தி பேசும் நபர்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்தி வகுப்பிற்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட மாநிலங்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமிருக்கக் கூடிய மொழியையும் கலாச்சாரத்தையும் தமிழர்களின் தனித் தன்மையையும் ஒழித்து காலனிய காலத்து அடிமை  நிலைக்குத் தமிழகத்தை இட்டுச் செல்லும் சதியே இது !


நந்தன்
நன்றி: த லீட்.