மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு.
தமிழ்நாடு அரசோ, ஆளுநர் அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டுகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தரவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டாலும் அதைத் தட்டிக் கேட்கத் தயாராக இல்லை தமிழக அரசு. சி.பி.எஸ்.இ. நீட் தேர்வுக்கான ‘தமிழ் வினாத்தாளில்’ 49 தவறுகள்.
இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதிய தமிழ்நாட்டைச் சார்ந்த 24,720 பேரில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 460 பேர் மட்டுமே. மதுரை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கால் தமிழ் வழியில் தேர்வு எழுதியவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமாக தமிழக அரசு தொடர்ந்திருக்க வேண்டிய வழக்கு இது. இப்போது ‘சி.பி.எஸ்.இ.’ மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் போன நிலையிலும் தன்னையும் ஒரு மனுதாரராக தமிழ்நாடு அரசு இணைத்துக் கொள்ள முன்வராமல் சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டையே நடுவண் ஆட்சிக்கு அடிமையாக்கி விட்டார்கள். எதிர்பார்த்தது போல் சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தடையும் வாங்கி மதுரை நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவிட்டது.
இராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை, தமிழக அமைச்சரவை தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161 ஆவது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய முன் வந்தது. அந்த பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். கேட்டால் ஆளுநருக்கு இதில் முடிவெடுப்பதில் கால நிர்ணயம் எதுவும் இல்லையென்று கூறுகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
படிக்க :
♦ சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?
♦ ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
நீதிபதிகள் ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார்கள், அரசியல் சட்டத்தில் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிற ஆளுநர் போன்றவர்கள் இத்தகைய பிரச்சனைகளில் முடிவெடுப்பதற்கு அரசியல் சட்டம் கால நிர்ணயம் எதுவும் செய்யாததற்கு காரணம் இந்த உயர் பதவியில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பியதால்தான் என்று சுட்டிக்காட்டினார்கள். ஆனால் ஆளுநர் இதில் வரம்பு மீறி அப்பட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையை கவிழ்ப்பதற்கு பாஜக கட்சி மாறல்களை ஊக்குவித்து குறுக்கு வழியில் கவிழ்த்தபோது அந்த மாநில ஆளுநர் எப்படியெல்லாம் பலிகிடாவாக செயல்பட்டார் என்பதையும் அன்மையில் பார்த்தோம்.
இந்தப் பின்னணியில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடக்கும் ஆம் ஆத்மி’ ஆட்சி ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக உறுதியுடன் களமிறங்கியது. இப்போது ஆளுநர் அதிகாரத்துக்கு கடிவாளம் போடும் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழியாகப் பெற்றிருக்கிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஜூலை 4, 2015இல் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய சார்பிலும், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பிலும் தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட் மற்றும் அசோக் பூஷன் இணைந்து தனியாக தீர்ப்பு எழுதினார்கள். அனைவரது தீர்ப்பின் மய்யக் கருத்தும் ஒரே குரலை பேசியிருக்கின்றன)
உச்சநீதிமன்றம் ஒருமித்தத் தீர்ப்பாகக் கூறியிருப்பது என்ன?
- ஒன்று – டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்துக்கான தலைவர் முதலமைச்சரே தவிர, ஆளுநர் அல்ல.
- இரண்டு – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு உண்டு. அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
- மூன்றாவது – குடியரசுத் தலைவரிடம் ஆளுநர், அனைத்து அமைச்சரவை முடிவுகளுக்கும் விளக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க வியலாத சூழ்நிலையில் கருத்து மாறுபாடுகள் நியாயமானவையாக இருந்தால் மட்டுமே அப்படி விளக்கம் கேட்க முடியும். கடைசி வாய்ப்பாக மட்டுமே ஆளுநர்இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; குடியரசுத் தலைவர் கருத்தை அப்படியே செயல்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு.
- நான்காவதாக – அமைச்சரவை எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்ற அவசியமில்லை. முடிவுகளை ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு அமைச்சரவைக்கு உண்டு.
– இவை தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு தனித் தகுதி உண்டு. சட்டமன்றம், அமைச்சரவை உள்ளிட்ட சிறப்புத் தகுதிகளை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட் டுள்ளன. அந்தமான் நிக்கோபர், இலட்சத் தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டய்யூ, சண்டிகார் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றங்கள் கிடையாது. நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் (பிரிவு 239ஏ) சட்டசபை அதிகாரங்கள் வழங்கப்பட்ட யூனியன் பிரதேசம்
இரண்டாவது வகை. புதுச்சேரி மாநிலம் இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. நாடாளுமன்ற சட்டத்தை பயன்படுத்தாமல் அரசியல் சட்டத்தையே திருத்தி, அதன் வழியாக சட்டசபை மற்றும் அமைச்சரவை அதிகாரம் பெறுவது.
மூன்றாது வகை. டெல்லி யூனியன் பிரதேசம் இந்த சிறப்புப் பிரிவின் கீழ் வருகிறது. (1991-இல் சட்டத்தில் 69-ஆவது திருத்தத்தின் வழியாக டெல்லி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது) இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை டெல்லி யூனியன் பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். டெல்லி யூனியன் பிரதேச குடிமக்களின் ஜனநாயக, சமூக, அரசியல் அதிகாரங்களை உறுதி செய்வதற்காகவே டெல்லி யூனியனுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதே வழக்கில் 2016 ஆகஸ்ட் 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக டெல்லிக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் அது ஒரு யூனியன் பிரதேசமாகவே கருத வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்தது. வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் போகும் நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டது.
சொல்லப்போனால் ஆம் ஆத்மிக்கும் நடுவண் அரசுக்குமிடையிலான மோதல் – மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அய்க்கிய முன்னணி ஆட்சிலேயே தொடங்கிவிட்டது. 2014-ஆம் ஆண்டு மெஜாரிட்டி பலமின்றி வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்ற கெஜ்ரிவால், ரிலையன்ஸ் குழும நிறுவனர் அம்பானி, மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் முரளி தியோரா மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழியாக ஊழல் வழக்குப் பதிவு செய்தார். எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் உடன்பாட்டுடன் நடந்த ஊழலுக்கு எதிரான வழக்கு அது. இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும், டெல்லி மாநில ஊழல் ஒழிப்புத் துறைக்கு மத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர உரிமை இல்லை என்றும் அன்றைய அய்க்கிய முன்னணி ஆட்சி நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.
அம்பானியின் மீது கை வைத்தால் மோடி ஆட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியும் சும்மா விடாது. மோடியின் தேசிய முன்னணி பதவிக்கு வந்தவுடன் இன்னும் ஒரு அடி மேலே சென்று மத்திய அரசு ஊழியர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருந்த வழக்குப் போடும் உரிமையையே பறித்து தாக்கீது வெளியிட்டது. இதற்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. கெஜ்ரிவால் முதல்வரானார். மோடி ஆட்சி தாக்கீதை எதிர்த்து நீதிமன்றம் போனார். அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநில அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்து மோடி ஆட்சி வெளியிட்ட அறிவிப்பு ‘சந்தேகத்துக்கு’ வழி வகுக்கிறது என்று கூறியதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று மே 25, 2015-இல் தீர்ப்பளித்தது.
படிக்க :
♦ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !
♦ பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !
மோடி ஆட்சி விடவில்லை; அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வந்தால் அதைப் பதிவு செய்ய காவல் நிலையங்களுக்கு உரிமை கிடையாது என்று அறிவித்தது (டெல்லி மாநில அரசுக்கு காவல்துறை, பொது ஒழுங்கு, நிலம் குறித்த உரிமைகளில் அதிகாரம் கிடையாது. எனவே காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது) அதைத் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்கியது மோடி ஆட்சி.
அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியை ஆளுநரே நியமித்தார். அதிகாரிகளை மாற்றம் செய்யும் உரிமைகளும் நியமிக்கும் உரிமைகளும் மாநில ஆட்சியிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் போனார் கெஜ்ரிவால். இந்த வழக்கில் 2016-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஆளுநருக்கே அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு இல்லை என்று 2015-இல் வழங்கிய தீர்ப்பை அப்படியே புரட்டிப் போட்டது. தீர்ப்பு ஆளுநருக்கு சாதகமாக வந்தது.
டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை ஆளுநர் முடக்கினார். அதிகாரிகள், முதல்வர் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்தனர். தலைமைச் செயலாளராக இருந்த அன்ஷீ பிரகாஷ், மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து முதல்வர் தன்னை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக புகார் கூறினார். ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களை முடக்குவதற்காகவே இத்தகைய பொய்ப் புகார்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியினர் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே 24 மணி நேரமும் ‘அமரும்’ முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் உரிமைக் கதவுகளைத் திறந்து விடும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஓட்டெடுப்புக்கு முன்பே பதவி விலகி ஓடினார்.
(தொடரும்)
விடுதலை இராசேந்திரன்
மிக விரைவில் சுப்பிரமணியசாமிக்கும் வைக்கோவுக்கும் கூட ஆளுநர் பதவி வழங்கினால் வியப்பதர்க்கு ஒன்றுமில்லை…!!!
(PPE) proper programmed election, மென்பொருள் வல்லுனர்களால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் நடைமுறைகள், நாடகங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது ஜனநாயக மாயை கலையாமல் இருக்க…
ஓட்டு பெட்டிகளின் முன்னேற்ப்பாட்டு முடிவுகளுக்கு எவ்வளவு கருத்து கணிப்புகள், அரசியல் பிரகடனங்கள், பகுப்பாய்வுகள்…