செப்டம்பர் 12, 2020 தியாகிகள் தினத்தை முன்னிட்டு தருமபுரி நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள அப்பு, பாலன் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றி, நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

வசந்தத்தின் இடி முழக்கமாக 1967-ம் ஆண்டு இந்தியா முழுவதும் நக்சல்பாரி அரசியல் எழுச்சி பெற்று ஆளும் வர்க்கத்தை அலறச் செய்த சமயத்தில் தமிழகத்தின் நக்சல்பாரி அரசியலைக் கட்டியமைத்தவர்கள் தோழர்கள் அப்புவும் பாலனும் தான்.

தோழர் அப்பு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியின் தொழிற்சங்கத் தலைவராகத் திகழ்ந்தார். நக்சல்பாரி இயக்கம் உருவான போது, தமிழகத்தில் நக்சல்பாரி இயத்திற்குத் தலைமை ஏற்றவர். 1970-ம் ஆண்டு அவரைக் கைது செய்த போலீசால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் பாலன், மார்க்சிய லெனினிய இயக்கத்தை தமிழகத்தில் வீச்சாக எடுத்துச் சென்றவர். தர்மபுரி பகுதியில் மக்களை ஒடுக்கிவந்த நிலக் கிழார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். 1980-ம் ஆண்டு பாசிச எம்.ஜி.ஆர்.-ன் ஆட்சியில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 12 அன்று தோழர் பாலனும் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர்கள் அப்பு, பாலன்

ஆளும்வர்க்கத்தை அச்சத்திற்குள்ளாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு கொண்ட நக்சல்பாரி தலைவர்களின் நினைவுநாள் தியாகியர் தினமாக நினைவுகூரப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியன்று தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் உள்ள தோழர்கள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நக்சல்பாரி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடியை பாடல் வரிகளின் ஒரு பகுதி..

… சாதிக் கொடுமை பண்ணைக் கொடுமை தலை விரித்தாடிடும்
தருமபுரி வட ஆற்காடு வயல்வெளியும் கிராமமும்..
எங்கள் அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்..
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்…

ஆல மரங்கள் சாய்ந்ததடா ..
அழுத கண்கள் சொல்லி மாளதடா..

கோடானுகோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே !
வர்க்கப் போராட்ட பாதையிலே மீண்டும் புதைந்திட்ட வித்துக்களே !
வீர வணக்கங்களே ! வீர வணக்கங்களே !

இதில் திரளாக கலந்துகொண்ட மக்கள் அதிகாரம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, இனங்களின் இறையாண்மைக்கான மாணவர் இயக்கம், இ. பொ. க(மாலெ) விடுதலை, இ.பொ.க. (மாலெ), தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.