விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெறு ! சிதம்பரத்தில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் !
மத்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அவசர சட்டங்களை அமல்படுத்தி கொண்டு வருகிறது.
இதில் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய, பெரும்பாலான மக்கள் உழைப்பில் ஈடுபடுகின்ற விவசாயத்தை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்க கூடிய வகையிலும், கார்ப்பரேட்டுகளின் அடிமையாக விவசாயிகளை மாற்றக்கூடிய வகையிலும் புதிய மூன்று சட்ட மசோதாக்களை பாராளுமன்ற விதிகளுக்கு எதிராக குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது, பாசிச மோடி அரசு.
இச்சட்டத்தை அமல்படுத்த, பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (25/9/2020) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு விவசாயிகள் கைதாகியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI),விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள், கட்சியைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பாசிச மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியும், பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர்