PP Letter head

 

 

பத்திரிகை செய்தி

12.10.2020

க்கள் அதிகாரம் அமைப்பை சீரமைக்கும் நோக்கில் கடந்த 06.10.2020 அன்று செயற்குழு கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக தோழர் ராஜுவை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்ததோடு, கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோரும் அவரவர் வகித்து வந்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சீர்குலைவு மற்றும் அமைப்பு விரோத வேலைகளில் ஈடுபட்டு வந்த தலைமைக் குழு உறுப்பினர்களான கணேசன் மற்றும் காளியப்பன் ஆகியோர் மக்கள் அதிகார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்த செயற்குழுவின் முடிவு அன்றைய தினமே விடுவிக்கப்பட்ட, நீக்கப்பட்ட தலைமை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு பத்திரிக்கை செய்தியாகவும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர் ராஜு அவர்கள் “நான் மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து விலகப் போகிறேன்” என்று 06.10.2020 அன்று தலைமைக் குழுவிற்கான வாட்சப் பதிவில் வெளியிட்டு விட்டு, மாநில பொதுக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை வைத்துக் கூட்டம் நடத்தி, அதில் தீர்மானம் என்ற பெயரில் தொகுக்கப்பட்ட அவதூறுகளை பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

படிக்க :
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !
♦ உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !

மக்கள் அதிகாரம் அமைப்பு முறையாக தனது செயற்குழுவைக் கூட்டி 06.10.2020 அன்று எடுத்த மேற்கண்ட முடிவை “அமைப்பு விரோத – ஜனநாயக விரோத” நடவடிக்கை என்று கூறுவது உண்மை நிலைமைக்கு மாறானது. ஆகையால் இது அவதூறானது. ஏனெனில் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளாதவர்களும் அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டவர்களும் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது என்பது அமைப்பை ஆக்கப்பூர்வமாக வழி நடத்திச் செல்வதற்கு உகந்ததல்ல. ஆகையால் இவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே.

இவர்கள் கூறுவது போல மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கப்பட்ட காலத்திலிருந்தே வழக்கறிஞர் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராகவும், கணேசன் மற்றும் காளியப்பன் ஆகிய இருவரும் தலைமைக் குழு உறுப்பினராகளாகவும் செயல்பட்டு வருவதாகவே இருக்கட்டும்; அதற்காக கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முயலாமல் தொடர்ந்து நீடிப்பதையும், அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் தெரிந்தே ஈடுபடுவதையும் அனுமதிக்க முடியுமா? முடியாது.

ஆகையால் அமைப்பின் நோக்கத்திற்கேற்ப, நிலைப்பாட்டிற்கேற்ப ஒருங்கிணைந்து செயல்பட தன்னிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முன்வராதவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே. ஆக்கப்பூர்வமாக விவாதித்து கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆரோக்கியமாக அமைப்பை வழி நடத்தி செல்லும் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, சாந்தகுமார், முத்துக்குமார் ஆகியோரை, மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜுவின் தலைமையிலான பொதுக்குழு நீக்குவது என்பதுதான் அமைப்பு விரோத நடவடிக்கை. இது ஒரு எதிர் நடவடிக்கை.

இவர்கள் கூறுவது போல ‘சிலரின் ஆசை வார்த்தைக்கு’ பலியாக அணிகள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்களும் அல்ல. ஆகையால்தான் நீங்கள் உண்மையை திரித்து சொல்வதையும், அணிகளை அவமதிப்பதையும் அவர்களின் சொந்த சிந்தனையில் உணர்ந்துதான் உங்களைப் புறக்கணித்து எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில் அமைப்பிற்கு விரோதமாகவும், சதி வேலைகளில் ஈடுபட்டு அமைப்பை சீர்குலைக்கும், பிளக்கும் கணேசன், காளியப்பன் போன்ற சதிகாரர்களையும், கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட முன்வராதவர்களையும் வைத்துக்கொண்டு அமைப்பை ஆரோக்கியமாக வழிநடத்தி செல்ல இயலாது. “ஒரு படி பாலுக்கு ஒரு பிடி விஷம்” என்பது போல பெரும்பான்மை மக்களுக்கு இது கேடு விளைவிப்பதாக அமைந்து விடும். இந்த கேட்டை அமைப்பிற்குள் அனுமதிக்காமல் அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை அசராமல் நடத்துவதன் மூலமே ஆக்கப்பூர்வமான அமைப்பை கட்டி வளர்க்க முடியும். ஆரோக்கியமான புரட்சிகர உணர்வுள்ள அணிகளை வளர்த்தெடுக்கவும் இயலும் என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆதிக்க சாதியினரால் மனிஷா என்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதற்கு ராஜூ தலைமையிலான பொதுக்குழு முன்வைக்கும் கோரிக்கையானது; “குண்டர்கள் ஆட்சி நடக்கும் உ.பி பாஜக அரசை கலைத்துவிட்டு, நீதித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிலகாலம் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்பதே. ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே திவாலாகி தோற்றுப்போய் நிலைகுலைந்து எதிர்நிலை சக்திகளாக மாறிப்போன இவற்றில் ஒன்றை மாற்றாக முன்நிறுத்தக் கோருவது மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது. ஆகையால் இவர்களுடன் இணைந்து இயங்க முடியாது.

“மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். ஆள அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். அதை தடுக்க ஏறிதாக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை மக்களுடன் இரண்டறக் கலந்து களத்தில் நின்று முறியடிப்போம்.” இதன்மூலம் ஏற்றுக்கொண்ட இலக்கை சாதிப்போம்.

தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.