சென்னை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (மேற்கு), காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள இணைப்பு மற்றும் கிளைச் சங்கங்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மகத்தான ரசிய சோசலிசப் புரட்சியின் 103-வது ஆண்டு விழாவானது எமது மாவட்டப் பகுதியான பட்டாபிராமில், குடும்ப விழாவாக, அரங்கு கூட்டமாக  முன்னெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் கூட்டத்துக்கு தலைமையேற்று  உரையாற்றினார்.  மாவட்டப் பொருளாளர் தோழர் மு.சரவணன் வரவேற்புரையாற்றினார்.

அடுத்ததாக, தொழிலாளர்களது குடும்பங்களிலிருந்து விழாவுக்கு வந்த சிறுவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குழந்தைகள் தங்களின் திறனை வெளிப்படுத்தினர். இதில் தற்போது பாஜக முன்னெடுத்துள்ள வேல் யாத்திரையின் முகத்திரையை கிழிக்கும் வகையில் சிறுவர்களின் சிறிய நாடகம் ஒன்று சிறப்பாக அமைந்தது.

இதனையடுத்து, காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் ஆ.கா. சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என்கிற நமது முழக்கத்தை தற்போதைய பேரழிவுகளோடு பொருத்தி விவரித்தார். முதலாளித்துவம் சொர்க்கமல்ல; அது ஒரு நரகம் என்பதை கொரோனா பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட சோசலிசம்தான் ஒரே மாற்று – ஒரே தீர்வு என்பதையும் எடுத்துரைத்த  தோழர் சிவா, சோசலிச இலட்சியத்தை நோக்கி முன்னேறுவோம் வாரீர் என அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக, பல்வேறு வகையில் தங்களது ஆற்றல், சமூக விடியலை உந்தித்தள்ளும் உணர்வுகளை விழா மேடையில் அரங்கேற்றிய மேடைக்கு வராவிட்டாலும் தங்களது குடும்பத்தினர் புரட்சிகர அமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையோடு தங்களை இந்த விழாவில் இணைத்துக் கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் எதிர்கால புரட்சிகர கலைஞர்களாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைமைக் குழு உறுப்பினரான தோழர் பா.விஜயகுமார்,  சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் அமிர்தா ஆகியோர் பரிசினை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினருமாக 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த வகையில், பட்டாபிராமில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா கூட்டம், இந்திய நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான உற்சாகத்தையையும், நம்பிக்கையையும் உருவாக்கியது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு)
9444831578

தருமபுரி

நவம்பர் – 7 ரஷ்யா புரட்சி 103-ம் ஆண்டு விழா: ”கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த ஒன்றிணைவோம், சபதமேற்போம்” என்ற தலைப்பில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக, காலை 10 மணிக்கு கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பு.மா.இ.மு தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினர். மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்வில் பகுதி மக்கள் மற்றும் தோழமை அமைப்புத் தோழர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட மக்களுக்கும், கடைவீதியில் இருந்த அனைத்து மக்களுக்கும் இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நிறைவடைந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
6384569228

ஒசூர்

நவம்பர் 7, 103-ம் ஆண்டு ரஷ்ய புரட்சி நாளையொட்டி, “கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்! சபதம் ஏற்போம்!” என்ற முழக்கத்தின்கீழ் ஒசூர் தாலுக்கா பாகலூர் பகுதியில் கொடியேற்றுதல் மற்றும் அரங்கக்கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி உரயாற்றினார். அதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் சங்கர் தலைமையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் ஆலைத் தொழிலாளி தோழர் கண்ணன், புஜதொமு-ன் முன்னணித் தோழர்களான தோழர் ரவிச்சந்திரன், தோழர் வெங்கடேசன், தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் சங்கர் தனது தலைமையுரையில் ரஷ்யப் புரட்சியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன? என்ற வகையில் கேள்வி எழுப்பி விளக்கிப் பேசினார்.

அடுத்ததாக உரையாற்றிய ஆலைத் தொழிலாளி தோழர் கண்ணன், இளைஞர்கள் ஏன் அமைப்பாக திரளவேண்டும் ? என்ற தலைப்பில் உரையாற்றினார். பள்ளிப் படிப்பின்போது உனக்கு ஏன் அரசியல்? படிக்கிற வேலையை மட்டும் பார்! என்றும், பள்ளி படிப்பு முடித்து வேலைக்கு வந்தால் கம்பனியில் உன் வேலையை மட்டும் பார் வேலையை காப்பாத்திக்கொள் என்றும், திருமணம் செய்து கொண்டால் உன் குடும்பத்தை மட்டும் பார் அரசியல் உனக்கு வேண்டாம் என்றும், வயசான பிறகு ஓய்வெடு ஓய்வு முக்கியமானது உனக்கு ஏன் அரசியல்? என்றெல்லாம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை வடிவமைத்து வருகின்றனர். இதனை நாம், தோழர் லெனினின் வழிகாட்டுதல்படி போராடி உடைத்தெறிய வேண்டும். அமைப்பாக திரள வேண்டும். அப்போதுதான் நமது நாட்டிலும் ஒரு நவம்பர் 7-ஐ நாம் படைக்க முடியும் என்ற வகையில் உணர்வூட்டி பேசினார்.

அடுத்து தோழர் வெங்கடேசன் தனது உரையில், மனு தர்மத்தில் உள்ள பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அம்பலப்படுத்தியும், அதேபோன்று கார்ப்பரேட் முதலாளிகள் தொழிலாளர்களை எப்படியெல்லாம் வகை வகையாகப் பிரித்து கொடுமையாக அவர்களது உழைப்பை சுரண்டுகின்றனர் என்பதையும் அப்பலப்படுத்திப் பேசினார். தோழர் பரசுராமன் தனது உரையில் ரசிய சோசலிச புரட்சி சோவியத் ரசியாவில் சாதித்த சாதனைகளைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார். இறுதியாக, புஜதொமு தோழர் ராமசாமி நன்றியுரையாற்றினார்.

பள்ளிச் சிறுவர்கள் இருவர் தாங்கள் பயிற்சிப் பெற்றிருந்த கராத்தே மற்றும் சிலம்பாட்ட தனித் திறன்களை வெளிப்படுத்தினர். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது இயல்பான உணர்வை மகிழ்வுடன் வெளிப்படுத்தி சிறப்பித்தனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்.
தொடர்புக்கு : 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க