ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு வலுவடைந்து, அவர் மீது விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அவரை  அதே பதவியில் நீடிக்கச் செய்து அழகுபார்க்கிறது தமிழக அரசு.  எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிவரும் #TNgovtDismiss_Surappa டிரெண்டிங்கும் இணைந்து தாக்கம் செலுத்திய பின்னர்தான், விதிமுறைப்படி சூரப்பா இடைநீக்கம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்டது முதல், இன்றுவரையில்  மோடி அரசின் கல்வி கார்ப்பரேட்மய காவிமய அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் செவ்வனே செயல்பட்டுவந்தார்.

திறமையான பல்வேறு தமிழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இருக்கையில் கர்நாடகாவில் இருந்து ஏன் சூரப்பாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகளும் கல்வியாளர்களும் அச்சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரது “திறமையையும்”, “நேர்மையையும்” பாராட்டித் துதிபாடி கவர்னர் மாளிகையே அறிக்கை வெளியிட்டது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு நெருக்கமானவர் சூரப்பா .

அந்த ”நேர்மையான”, ”திறமையான” சூரப்பா தான் ரூ. 280 கோடி அளவிலான லஞ்ச, ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 200 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதமே வந்த புகாரைக் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திடீரென விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது எடப்பாடி அரசு.

மேலும், அண்ணா பல்கலைக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான பேராசிரியர் நியமனத்தில், ஒரு பணி நியமனத்துக்கு ரூ. 13 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை நிர்ணயித்து, மொத்தமாக ரூ. 80 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலஞ்சப் புகாரில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் துணை இயக்குனர் சக்திநாதன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், சூரப்பா தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தனது மகளை அண்ணா  பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது எடப்பாடி அரசு.

லஞ்ச ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் நபர் அதிகாரத்தில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.    ஆனாலும் சூரப்பாவையோ, சக்தி நாதனையோ அதே பதவியில் அமர்த்தி அழகுபார்த்துக் கொண்டிருந்தது எடப்பாடி அரசு.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

இதனைக் கண்டித்து திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சூரப்பாவை பதவி நீக்கம் செய் ( #TNgovtDismiss_Surappa ) என வலைஞர்கள் ட்ரெண்டிங் செய்யத் துவங்கிவிட்டனர்.

புறச்சூழலில் இப்படி ஒரு நெருக்கடி வரத் துவங்கியதும்தான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சூரப்பா மீதான நடவடிக்கை குறித்து வாய் திறந்துள்ளார். “விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் அன்பழகன். அதாவது ஆளுநர் இடைநீக்க உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இடைநீக்கம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அன்பழகன்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் திமிரோடு பதிலளித்துள்ளார் சூரப்பா. தன் மீதான ஊழல் புகார் குறித்துப் பதிலளிக்கையில், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கிருந்து வந்தடைந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தமிழக அரசின் விசாரணை குறித்துக் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்குத் தேவை என்பதால்தான் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்” என்றும், ”என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார் சூரப்பா.

சூரப்பா ஒருவேளை நேர்மையாளராக இருந்திருக்கலாம், ஆனால் யாருக்கு நேர்மையாக இருந்தார் என்பதுதான் கேள்வி ?

பஞ்சாப் ஐ.ஐ.டியில் இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.ஐ.டி-க்கான புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடியை முதல் ஐந்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி ஆண்டில் செய்ததன் காரணமாக அந்தக் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அன்றைய இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூரப்பாவின் நியமனத்தின் போதே தெரிவித்துள்ளார்.

மேலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பை தமது கண்டுபிடிப்பாகக் காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் சூரப்பா மீது இருந்ததை  ராமதாஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூ. 750 கோடி செலவில் முடிக்க வேண்டியதை 1958 கோடிக்கு உயர்த்தியதன் பின்னணியில் என்ன நேர்மை இருந்திருக்க முடியும் ? ஒருவேளை சூரப்பா இப்போது கேட்பது போல அப்போதும் “ஆதாரம் இருந்தால் காட்டமுடியுமா?” என்று கேட்டு தனது நேர்மையை “காப்பாற்றியிருக்கலாம்” !

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூரப்பா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.

கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்துள்ள சூழலில், தேர்வுக் கட்டணமாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சூரப்பா. ஆய்வே நடத்தாமல் 8000 ஆய்வு மாணவர்களிடமிருந்து செமஸ்டர்கட்டணம் வசூலித்ததாகவும் சூரப்பாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
♦ அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !

அதே போல, உயர் சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனமாக, அண்ணா பல்கலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விவகாரத்தில்,  தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சூரப்பா. அக்கடித்தில், மாநில அரசினுடைய நிதிப் பங்கீடு இல்லாமலேயே தம்மால் ஐந்தாண்டுகளில் ரூ.1500 கோடி திரட்ட முடியும் என்றும், அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்புத் தகுதி வழங்கும்படியும் எழுதியுள்ளார்.

ஒரு மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தின், தலையெழுத்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்றால், அதற்குக் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சித்தாந்தமும், நோக்கமும் இருக்க வேண்டும்.

மாநில அரசின் நிதியில்லாமல், அண்ணா பல்கலையின் நிதியை தாமாகத் திரட்டுவது என்றால், சூரப்பாவால் நோட்டு அச்சடித்தா விட முடியும் ? மாணவர்களிடமிருந்து கல்விக்கட்டணமாகத்தான் கறக்க முடியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் சிறப்புக் கல்விநிறுவனத்தில் இனி சாதாரண ஏழை, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை சேரவிடாமல் தடுப்பதுதான் இதன் பின்னணியில் இருக்கின்ற காரணம்.

மத்தியில் ஆளும் மோடி – சங்க பரிவாரக் கும்பல் தமது தனியார்மயமாக்க – பார்ப்பனிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான நபர்களைக் கண்டறிந்து, கல்வி, கலாச்சாரம், வரலாறு, அறிவியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் அவர்களை நியமித்து வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், சந்தையையும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும், பார்ப்பனிய சனாதனத்தை கல்வியில் உள்நுழைக்கவும் சிறப்பாக செயல்படக் கூடிய “செயல்வீரர்களை” தட்டிக் கொடுத்து ஊக்கமளித்து தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கி முன் செல்லுகிறது பாஜக அரசு.

சங்கபரிவாரத்தின் அத்தகைய ஒரு செயல்வீரர்தான் ‘சூரப்பா’. பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவந்ததிலேயே நம் அனைவருக்கும் அது தெரியவந்துவிட்டது. இந்நிலையில், அந்த செயல்வீரரை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு கேட்டதுமே, பாஜகவின் கைத்தடியாகச் செயல்படும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியளித்துவிடுவாரா ?

“சூரப்பாவை பதவி நீக்கு” #TNgovtDismiss_Surappa என சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் டிரெண்டிங், தமிழக அரசை வேண்டுமானால் அசைக்கலாம், சூரப்பாவை நீக்கு என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

கர்ணன்