கெயில் எரிவாயு குழாயை கேரளா மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் வரை தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தைப் போன்று தற்போது சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் ஒன்றை ஐ.ஓ.சி. நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
கெயில் குழாய் பதிப்பு துவங்கி தற்போதைய ஐ.ஓ.சி. குழாய் பதிப்புவரை அனைத்திலும் விவசாய நிலங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய்களை கொண்டு போவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்த டிசம்பர் மாதத்தில் கூட கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் விவசாயிகள் போராடினர். “எங்கள் விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிக்க கூடாது நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்ல வேண்டும்” என கோரிக்கை வைத்து பல்வேறு கிராம மக்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றனர்.
படிக்க :
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
♦ உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !
இதைப்போல ஐஓசி நிறுவனத்தின் “சென்னை எண்ணூர் – திருவள்ளூர் – நாகபட்டிணம் – மதுரை – ராமநாதபுரம் – தூத்துக்குடி” வழித்தடத்தில் நடைபெற்றுவரும் குழாய் பதிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி வட்டார கிராமங்களிலும் மதுரையில் மேலூர் அருகே அலங்கம் பட்டி மற்றும் சென்னை அருகே சில பகுதிகள் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை எப்படியாவது சீர்குலைத்து மக்களை அடக்கி பணிய வைப்பது என அரசு ஒரு பக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மோடி அரசு சுற்றுச்சூழல் சட்டத்தை திருத்தி உள்ளது. இதன்படி “மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை திட்டத்தை முதலில் அமல்படுத்த வேண்டும்” பிரச்சனை பாதிப்புகள் என்று வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தனது கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டி வருகிறது மோடி அரசு. பல கிராமங்களின் வெளியாக செல்லும் இந்த எரிவாயு குழாய் என்பது எரியும் கொள்ளிக்கட்டை போன்றுதான் இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் இத்தகைய எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டு பல இடங்களில் பெரும் விபத்துகளும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதுயெல்லாம் இந்த அரசுக்கு தெரியாதது இல்லை. தெரிந்தேதான் இதைச் செய்கிறார்கள். ஏனென்றால் இந்த திட்டத்தை சாலையின் வழியே கொண்டு சென்றால் பல ஆயிரம் கோடிகள் செலவு அதிகரிக்கும். அதைவிட மக்களின் உயிர் வாழ்வாதாரம் ஒன்றும் பெரியது இல்லை என்பதே அரசின் எண்ணம்.
சென்னை – தூத்துக்குடி எரிவாயு திட்டத்தைப் பொருத்தவரையில், “பாதிப்பு ஏற்படாத வண்ணம் குழாய்களைக் கண்காணிப்போம். தினமும் ஒரு நபர் இந்த வழித்தடத்தின் வழியே நடந்து சென்று கண்காணிப்பார். எரிவாயு கசிவு எந்த இடத்தில் என்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து வருவோம்” என்கின்றனர் ஐஓசி அதிகாரிகள்.
எரிவாயு கசிவு ஏற்பட்ட உடனே அந்த இடத்திற்கு இவர்கள் வருவது வரையில் எரிவாயு காத்திருக்குமா ? அதற்குள் விபத்து ஏற்பட்டு ஒட்டு மொத்தமும் நாசமாகி விட்டிருக்கும். ஆந்திராவில் நாகாரம் கிராமத்தில், இத்தகைய எரிவாயு குழாயில் நள்ளிரவில் ஏற்பட்ட கசிவினால் வெளியேறிய எரிவாயு, அதிகாலை 4:00 மணி அளவில் தேநீர் கடைக்காரர் தனது அடுப்பைப் பற்ற வைத்த போது இந்த எரிவாயு பற்றி எரிந்தது. கிராமம் முழுவதும் பரவியிருந்த இந்த மனமற்ற எரிவாயு பற்றி எரிந்து ஏற்படுத்திய நெருப்பின் காரணமாக 16 பேர் இறந்தனர். சுற்றி இருந்த வீடுகளும், மரங்களும், கால்நடைகளும் தீக்கிரையாகின.
ஒருபக்கம், “கண்காணிப்போம், பாதுகாப்போம்” என தேன் தடவிய தோட்டாக்களை வீசும் இந்த அரசு மறுபக்கம் யாருடைய நிலத்தில் எரிவாயு கசிவு ஏற்படுகிறதோ அந்த நிலத்துக்காரரே அதற்கு பொறுப்பு அவருக்குத்தான் தண்டனை என்கிறது இந்த அரசு. இதனைப் புரிந்து கொள்ளாத, மதுரை மாவட்டம் மேலூர் அலங்கம்பட்டி உட்பட சுற்றியுள்ள பல கிராம மக்கள், “விவசாய நிலம் வழியில் சென்றால் இழப்பீடு தருகிறார்கள், நமக்குப் பிரச்சனை இல்லை” எனக் கருதுகின்றனர்.
இதுபோக எரிவாயு கசிந்து நிலமும் நீரும் மாசுபடுகிறது மழைப்பொழிவை குறைக்கிறது. இவ்வளவு இழப்புகளை சந்திக்கும் மக்களுக்கு குறைவான விலையில் எரிவாயுவாவது கிடைக்குமா?.
படிக்க :
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
அனைத்து அரசுத் துறைகளையும் அப்படியே கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைத்து வரும் மோடி அரசு, கெயிலையும், ஐ.ஓ.சி-யையும் விட்டுவைக்குமா என்ன ? இந்த அரசு துறை நிறுவனங்கள் அப்படியே கார்ப்பரேட்டுகளாக மாற்றப்படும். அவர்களின் வருங்கால இலாபத்திற்காக தற்போது விவசாயிகளை மோசடி செய்கிறது அரசு. இதனை அமல்படுத்த போலீசைக் கொண்டு மக்களை மிரட்டுகிறது அரசு. விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு என்பது வெறும் விவசாயிகள் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. இதற்கு எதிராக மொத்த சமூகமும் கொதித்தெழ வேண்டும்.
பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் ஆரம்பித்த டெல்லி போராட்டம் பலநூறு விவசாய சங்கங்கள் ஒன்றுபட்டு மக்களை திரட்டியதே இன்று அரசை அச்சுறுத்துகிறது. இதேபோல நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளும் தொழிலாளர்களும் சங்கங்களாகவும் அமைப்பாகவும் உருவெடுத்து வர்க்கமாய் ஒன்றிணைந்து போராடும் விதத்தில்தான் கார்ப்பரேட் நலனுக்காக செயல்படும் இந்த கார்ப்பரேட் காவி அரசை நாம் வீழ்த்த முடியும். இல்லையேல் நாம் இந்த கார்ப்பரேட் காவி அரசால் நசுக்கப்படுவோம்.

தகவல்
ரவி
மதுரை