மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் என்றாலே, பிரக்யாசிங் தாக்கூர் தான் முதலில் நம் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு அந்த குண்டுவெடிப்பில் அவரது பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசால் (ATS) உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பாஜகவின் ஏவல் நிறுவனமாகச் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பிரக்யாசிங் தாக்கூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்துள்ளது சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பையில் உள்ள சிறப்பு என்..ஏ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிரக்யா சிங்கின் உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அடிக்கடி இந்த வழக்கில் ஆஜராவதற்காக மும்பை வந்து செல்ல முடியாது என்றும், அதனால் அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பிரக்யா சிங் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !

அந்த மனுவில், பிரக்யா சிங் தாக்கூருக்கு இருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும், மருத்துவர்கள் குழுவால் அவர் சிகிச்சையளிக்கப்பட வேண்டுமென கோகிலாபென் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும் பயங்கரவாதிகளால் அவரது “உயிருக்கு ஆபத்து” இருப்பதால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையின் காரணமாகவும் அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று என்..ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் பிரக்யாவிற்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளார்.

இதற்கு முன்னரே பலமுறை மாலேகான் குண்டுவெடுப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத பிரக்யாசிங் தாக்கூர், கடந்த திங்கள்கிழமை (04-01-2021) அன்று மும்பையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020, டிசம்பர் மாதத்தில் இந்த விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மூன்றாம்தேதி இவ்வழக்கு தொடர்பான அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால் பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட பெரும்பான்மையினர் பெருந்தொற்றைக் காரணம்காட்டி ஆஜராகவில்லை.

ஆனால் இதே பிரக்யாசிங் தாக்கூர் டிசம்பர் 14-ம் நாள் மத்திய பிரதேசம் செகூரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, “சூத்திரர்கள், தங்களை பிறர் சூத்திரர்கள் என்று குறிப்பிடுவதை வெறிப்பதற்குக் காரணம் அறியாமைதான்” என்று பேசியது நினைவிருக்கலாம்,

இந்த சம்பவத்திற்குப் பிறகு, டிசம்பர் 19-ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து இறுதியான வாய்ப்பு ஒன்றை வழங்கினார் நீதிபதி. அதன் காரணமாகத்தான் கடந்த திங்கள் கிழமை தவறாமல் ஆஜராகியிருக்கிறார் பிரக்யாசிங்.

பிரக்யாவின் இந்த சந்திப்புகளோ பயணங்களோ எதுவும் ரகசியமாக நடந்தவை அல்ல. பயங்கரவாதி பிரக்யா சொல்வதெல்லாம் ஒரு காரணமல்ல என்று நீதிபதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் பிரக்யா சிங்கிற்கு விலக்கு அளிக்கிறது என்... நீதிமன்றம். பாசிசத்தின் ஏவல்படையாக என்..ஏ ஏற்கெனவே மாறியிருக்கையில், தற்போது என்... சிறப்பு நீதிமன்றம் மாறியிருப்பதில் அதிசயிக்க ஒன்றுமில்லை


கர்ணன்
நன்றி : The Wire