ரு தடவை ஸ்டாலின் ஒரு கோழியின் இறகுகளை பிடுங்கி அரசியல் கற்பித்ததாக மேற்கத்திய முதலாளியவாதிகளும், அவர்களது அடிவருடிகளான போலித் தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு நகைப்புக்கிடமான, பொய்யான புனைகதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். இது விஷமிகளால் பரப்பப்படும் கட்டுக்கதை:

//ஒரு முறை ரஷ்ய அதிபர் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து , அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது, முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் . பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது … மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி … அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது .

அப்போது ரஷ்ய அதிபர் கூறினார் . ” இதுதான் அரசியல் , மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு , கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் ” என்று. “மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும். இனியாவது சிறுபான்மை இனத்தவர்கள் அற்ப சலுகைக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல்வாதிகளின் பகட்டு பேச்சுக்கும் விலைபோகாவிட்டால் சரிதான். இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்து தான் என்னபயன்” //

படிக்க:
♦ ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொர்பெசேவ் ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் எதிர்ப்பு எழுத்தாளர் Chingiz Aitmatov எழுதிய புனைகதை, மேற்கத்திய தீவிர வலதுசாரிகளால் பரப்பப் பட்டது. அதை எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் சில தமிழர்களும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

முதலாவதாக, அரசியல் தெரியாத முட்டாள்கள் யாரும் சோவியத் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுவதில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லப் படுகின்றது.

முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, சோவியத் யூனியனில் “அரசு எதிர் மக்கள்” என்ற அரசியல் பேசப்படுவதில்லை. இன்னும் சொன்னால், ஸ்டாலின் காலத்தில் “அனைத்து மக்களுக்குமான நாடாக” சோவியத் யூனியன் இருக்கவில்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தினரின் தேசமாக இருந்தது.

தோழர் ஸ்டாலின்
மக்க்ள் மனதிலிருந்து நீங்காத தோழர் ஸ்டாலின்

அதன் அர்த்தம் முதலாளிய வர்க்கத்தினரும், அவர்களை ஆதரிப்பவர்களும் சம உரிமை கொண்ட மக்களாக கருதப் படவில்லை. ஆகவே இந்தப் புனை கதையில் சொல்லப் படும் “மக்கள்” யார் என்பது கேள்வி. இந்தக் கதையில் உவமை காட்டப்படும் கோழி முதலாளிய வர்க்கத்தினரை குறிக்கின்றதா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, “அரசு மக்களுக்கு சலுகைகள் கொடுக்கும்” முறை முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதார அமைப்பு சார்ந்த விடயம். மேற்கத்திய நாடுகளில் கூட, பொருளாதாரம் முழுவதும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் அரசு மக்களுக்கு சலுகைகள் வழங்குகின்றது.

ஒரு சோஷலிச நாட்டில் அந்த “சலுகைகள்” மக்களின் உரிமைகளாக கருதப் படுகின்றன. அவற்றை செயற்படுத்துவது அரசின் கடமை. அந்த வகையில் ஸ்டாலின் காலத்தில் கொல்ஹோஸ் போன்ற கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அந்த பண்ணை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மக்கள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக, அதாவது தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். தமக்கு தேவையான தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் எதற்காக அரசில் தங்கியிருக்க வேண்டும்?

இந்தக் கதையில் எந்த லாஜிக்கும் இல்லை. கொல்ஹோஸ் பண்ணைகள் தானியங்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாது, உணவு பதனிடும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழிலகங்களையும் கொண்டியங்கின. அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத டிராக்டர் போன்ற இயந்திரங்களை மட்டும் அரசு வழங்கியது.

எந்த விதமான புரிதலுமின்றி, அடிப்படை அரசியல் அறிவில்லாமல் இது போன்ற கட்டுக்கதைகளை பரப்பி வரும் விஷமிகள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது: “இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்துதான் என்ன பயன்?”

முகநூலில் : கலையரசன்

disclaimer