சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் || செய்தித் தொகுப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் நச்சு பிரச்சாரம் செய்யும் பள்ளிகள், பஞ்சாப் அரியானாவில் சரிவைச் சந்தித்த ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் மீண்டும் ஒரு முற்றுகைக்குத் தயாராகும் விவசாயிகள் - உள்ளிட்ட செய்திகள்

ன்னிய தூண்டுதலால் டெல்லியில் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து பத்திரிகைக்கு கடிதம் எழுதக் கூறி 10-ம் வகுப்பு தேர்வில்  கேள்வி !

பிரபல கர்நாடக இசைப் பாடகரும், சமூகச் செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா, தனது டிவிட்டரில் இன்று (19-02-2021) ஒரு கேள்வித்தாளை பகிர்ந்திருந்தார். சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளின் ஒரு பகுதி அது என்று குறிப்பிட்டு அந்த கேள்வித்தாளை பகிர்ந்திருக்கி்றார். அந்தக் கேள்வித்தாளில், விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி “அன்னிய தூண்டுதலின் கீழ் வன்முறையில் ஈடுபட்டவர்கள்” என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்.

சென்னையின் பிரபல பள்ளி என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் எந்தப் பள்ளி என்று குறிப்பிடவில்லை. அவரது பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த “ரிவரெண்ட் ப்ரீஸ்ட்” என்பவர் அது கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளி என்று குறிப்பிட்டிருந்தார். எந்தப் பள்ளி என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

அந்தக் கேள்வித்தாளில், கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறையை அன்னிய தூண்டுதலால் ஏற்பட்ட வன்முறை என்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது, தேசியக் கொடியை அவமதிப்பது, போலீசை தாக்குவது போன்ற குற்றச் செயல்களில் போராட்டக் காரர்கள் ஈடுபட்டனர் என்றும் குறிப்பிட்டு, இந்தச் செயல்களுக்கு என்ன காரணங்கள் சொன்னாலும் அவை ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் கூறி இவ்விவகாரத்தை நகரில் உள்ள பத்திரிகை ஆசிரியருக்கு கடிதமாக எழுதுமாறு குறிப்பிட்டிருந்தது. மேலும், அன்னியத் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இந்த வன்முறைகள் இனி வருங்காலங்களில் வராமல் இருப்பதற்கு வழிமுறைகளைக் கூறுமாறும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி விளக்கி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் எழுது என்று கூறியிருந்தால் ஒரு சாதாரண வினாத்தாள் என்ற வகையில் கடந்து போகலாம். ஆனால் அந்தப் போராட்டத்தையும் விவசாயிகளையும் இழிவுபடுத்தும் தமது கருத்துக்களையும் அதே கேள்வித்தாளில் குறிப்பிட்டு இன்ன கருத்துக்களை கடிதம் போல எழுதக் கேட்டிருக்கிறது, அந்த வினாத்தாள்.

சென்னையில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களின் யோக்கியதை இதுதான். தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் மோடிக்கு வால் பிடிக்கும் இந்த தனியார் கல்விக் கூடங்கள், கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயத்தை அள்ளிக் கொடுக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

விவசாயிகளின் வியர்வையால்தான் நம் வயிற்றை நிறைக்கிறோம் என்ற நன்றி உணர்வு சிறிதேனும் இருப்பவர்கள், இப்படிப்பட்ட கேள்விகள் மூலம் தங்களது குழந்தைகளின் மனதில் நச்சுக் கருத்துக்கள் விதைக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

000

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டம் : அம்பானியை உலுக்கிய விவசாயிகள் !

டந்த செப்டம்பர் மாதம் முதலாக வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் அம்பானியின் ஜியோ தொலைதொடர்புச் சேவையை புறக்கணிக்குமாறு அறைகூவல் விடுத்தனர்.

வேளாண் விளைபொருட்களின் சில்லறை விற்பனை வர்த்தகத்திலும், ஆன்லைன் வர்த்தகத்திலும் பெரும் மூலதனமிட்டிருக்கும் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வேளாண் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், யாருக்காக இந்தச் சட்டங்களை மோடி கொண்டு வந்திருக்கிறாரோ, அவர்களைப் புறக்கணிப்பதுதான் இதற்கான தீர்வு என முடிவு செய்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு இணைப்புகளை புறக்கணிக்க அறைகூவல் விடுத்திருந்தனர்.

அந்த அறைகூவலை ஏற்று பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இலட்சக்கணக்கானவர்கள் தங்களது ஜியோ தொலைத் தொடர்பு இணைப்புகளை திருப்பியளிக்கத் துவங்கினர். மேலும் பல இடங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் டவர்கள் தாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அலறியடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தாம் வேளாண் விளை பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு முதலீடும் செய்யவில்லை என்று பச்சையாகப் புளுகியது.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

ஆனாலும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளை பஞ்சாப் அரியானா மக்கள் இணைப்புகளை திருப்பியளித்தனர். தற்போது வெளியாகியுள்ள தொலைதொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் இணைப்பு குறித்த புள்ளி விவரங்களின் படி பஞ்சாபில் கடந்த நவம்பர் 2020 இறுதியில் 1.40 கோடியாக இருந்த ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 2020 இறுதியில் 1.25 கோடியாகக் குறைந்தது. கிட்டத்தட்ட 15 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது ரிலையன்ஸ் ஜியோ.

இதே போல, அரியானா மாநிலத்தில் கடந்த நவம்பர் 2020 இறுதியில் 94.48 இலட்சமாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பர் 2020 இறுதியில் 89.07 இலட்சமாக குறைந்திருக்கிறது, கிட்டத்தட்ட 5 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இந்தியா முழுவதும் உள்ள மக்கள், வேளாண் துறையை விழுங்க வரும் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்களின் பொருட்களையும் சேவைகளையும் நிராகரிக்கத் துவங்கினால் மட்டுமே, அவர்களின் சேவகனான மோடி அரசு இறங்கி வரும்.

செய்தி ஆதாரம் : தி வயர் 

எரிபொருள் நிரப்பி டிராக்டர்களைத் தயாராக வைத்திருங்கள் ! திகாயத் அறிவிப்பு !

டெல்லியில் குடியரசு தினத்தில் பாஜக மற்றும் டெல்லி போலீசின் கூட்டுச் சதியால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி சீர்குலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பில்லை என்று அறிவித்தது மத்திய மோடி அரசு.

மேலும், விவசாயிகள் மீது பல்வேறு அவதூறுகளைக் கிளப்பிவிட்டு அந்நிய சதி பூச்சாண்டிகளை எல்லாம் காட்டிப் பேசியும் விவசாய சங்கத்தினர் இன்னும் உறுதியாக தங்களது கோரிக்கைகளில் ஊன்றி நிற்கின்றனர்.

கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசை பரந்துபட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவின்றி எதிர்கொள்வது சாத்தியமல்ல என்பதை நன்கு உணர்ந்திருக்கும் விவசாயிகள் சங்கத்தினர், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம விவசாயிகள் மகா பஞ்சாயத்துக்களைக் கூட்ட முடிவெடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஹிசார் பகுதியில் உள்ள கரக் பூஞ்சியா கிராமத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பேசியுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் திகாயத்,  விவசாயிகள் அறுவடையை ஒட்டி தங்களது சொந்த மாநிலங்களுக்கு போராட்டக் களத்தில் இருந்து கிளம்பிச் சென்று விடுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. விளைந்த பயிரை தீயிட்டுக் கொளுத்தும் அவசியம் இருந்தாலும் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். விவசாயிகள் அறுவடைக்கு ஊர் திரும்புவார்கள் என்ற மத்திய அரசின் நினைப்பைப் பொய்யாக்க வேண்டும். நாம் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே அறுவடையையும் ஒரே நேரத்தில் செய்வோம். என்று கூறியிருக்கிறார்.

மேலும், “உங்களது டிராக்டருக்கு எரிபொருளை நிரப்பி வைத்துத் தயாராக இருங்கள். எந்த நேரத்திலும் டெல்லி நோக்கிச் செல்வதற்கான அழைப்பு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இருந்து வரலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும் அரியானாவில் மகாபஞ்சாயத்துக்கள் கூட்டப்பட்ட பிறகு, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் மகா பஞ்சாயத்துக்களை கூட்டப் போவதாகத் தெரிவித்தார். வர்க்கரீதியாக மக்களை அணிதிரட்டும் விவசாய சங்கத்தினரின் இந்த முயற்சி மிகவும் அவசியமானது என்பதோடு காலத்தின் கட்டாயமுமாகும்.

செய்தி ஆதாரம் : தி வயர்

கர்ணன்