நூல் அறிமுகம் – பாகம் 2 : அமெரிக்க மக்கள் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1

டிமைகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. ஹேர் பர்ட் அப்தேகர் அமெரிக்காவில் அடிமைகள் எதிர்ப்புகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த தனது அமெரிக்க நீக்ரோ அடிமை கிளர்ச்சிகள் (American Negro Revolts) என்ற நூலில் குறைந்தபட்சம் 10 பேர் சம்பந்தப்பட்ட 250 கிளர்ச்சிகள் அல்லது சதிகளை பட்டியலிடுகிறார். சுரண்டல் கொடுமைக்கு இலக்கான அதிருப்தி அடைந்த வெள்ளையர்கள், கறுப்பின அடிமைகள் உடன் சேர்ந்து நிலவுகின்ற, இந்த சுரண்டல் சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட முனைவார்கள் என்ற பீதியின் காரணமாக நிறவெறியை ஒரு கோட்பாடாகவே உருவாக்கினார்கள்.

வர்ஜினியா ஆளும் வர்க்கம் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கருப்பர்களை விட மேலானவர்கள் என்பதை அறிவித்தது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்த வெள்ளையர்களுக்கு சலுகைகளை வழங்கியது. வெள்ளையின உழைக்கும் மக்களையும் கருப்பின அடிமைகளையும் ஒரு பொது நோக்கத்திற்கு ஒன்றுபடவிடாமல் செய்வதற்கான ஒரு சிக்கலான வரலாற்று வலைப்பின்னலை அமெரிக்காவில் காணலாம்.

இதனை தனது நூலில் சிறப்பாக விவரித்திருக்கிறார் ஹாவாட் ஜின்

கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர், உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டி செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும், நெறி புகட்டப் படாதவர்களாகவும், கருணை வெட்கம் பற்றி எல்லாம் கவலைப் படாதவர்களாகவும் இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்த காலத்திலும் இவற்றுக்கு ஒப்பான அட்டூழியங்களை புரிந்ததில்லை. (வில்லியம் ஹோவிட் எழுதிய குடியேற்றமும் கிறிஸ்தவ சமயமும்) – காரல் மார்க்ஸ் – மூலதனம்.

படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

பேகன் கிளர்ச்சி

பேகன் கிளர்ச்சி 1676-ஆம் ஆண்டு வர்ஜீனியா உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பின் நடந்த, அமெரிக்கப் புரட்சியின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாபெரும் கிளர்ச்சி. வெள்ளையர்கள் மற்றும் கருப்பின அடிமைகளுடன் பணியாளர்கள் இணைந்த கிளர்ச்சி. இந்தக் கிளர்ச்சியின் வெம்மை தாங்காமல் தலைநகர் ஜேம்ஸ் டவுனை விட்டு கவர்னர் ஓட வேண்டி வந்தது. கிளர்ச்சியை அடக்க ஆயிரம் பேர் கொண்ட ராணுவத்தை இங்கிலாந்து அனுப்பியது. அந்த கிளர்ச்சியின் தலைவர் பேகன் இறந்துவிட்டார். அவருடைய தளகர்த்தர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1676-ஆம் ஆண்டு பேகன் வெளியிட்ட மக்கள் பிரகடனத்தைப் பற்றியும் பேகனின் கிளர்ச்சி பற்றியும் நேரடியாக அந்தச் சூழலுக்கு நம்மை அழைத்துச் சென்று விவரிக்கிறார் ஹாவாட் ஜின்.

வர்க்கப் பிரிவினை காலனிய காலத்தில் கெட்டிபட்டது. ஏழைப் பணக்காரன் வேறுபாடு கூர்மை அடைந்தது, 1700-ஆம் ஆண்டுவரை வர்ஜீனியாவில் 50 பணக்கார குடும்பங்கள் இருந்தன. அவர்களுடைய செல்வ வளம் ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு சமமானதாக (அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை) இருந்தது. கருப்பின அடிமைகளின் உழைப்பையும் வெள்ளை பணியாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுத்து சுகபோகங்களில் திளைத்தனர். இந்த செல்வ சீமான்களே கவர்னர் கவுன்சில் உறுப்பினர்களாக, நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேய மன்னரால் உரிமை வழங்கப்பட்ட உரிமையாளரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தனர். 1650-ஆம் ஆண்டு முதல் 1689-ஆம் ஆண்டு வரை இந்த காலனிய ஆட்சியின் உரிமையாளரை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.

அடிமை உழைப்பாளிகளும் – வெள்ளை பணியாளர்களும்

அமெரிக்க அமைப்பு முறையின் முன்னோர்களின் தத்துவத் தந்தை என்று கருதப்பட்ட ஜான் லாக் அவர்களால் 1600-ம் ஆண்டுகளில் அரசியலமைப்பு சட்டத்திற்கான அடிப்படைகள் எழுதப்பட்டன. நிலவுடமை உயர்குடி சீமான்கள், ஊக பேர நிலப்பிரபுக்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில் இந்த சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. பாஸ்டன் தலைவர்கள், மதகுருமார்கள் உடன் இணைந்து அமெரிக்க சமூகத்தை தாய் நாடான இங்கிலாந்தின் சமூக ஏற்பாடுகளை போலவே அமைத்து பாதுகாக்க ஆர்வமாக செயல்பட்டனர். தேவாலயம் மற்றும் நகர கூட்டங்களின் மூலம் குடியானவர்கள் மீது தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர்.

1630-ஆம் ஆண்டில் காலனி ஆட்சியின் துவக்கத்திலேயே கவர்னர் ஜான் விந்த் ரோப், தங்களது ஆட்சிமுறை கோட்பாட்டை அறிவித்தார். சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், சிலர் அதிகாரத்தில், அந்தஸ்த்தில் முக்கியமானவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் சிலர் கீழானவராகவும் கீழ்படிந்தவராகவும் இருக்கும் நிலை எல்லா காலங்களிலும் இருக்கும் என்றார்.

அடிமை உழைப்பாளர்களின் உதிரத்தை அட்டைபோல் உறிஞ்சிய பணக்கார வியாபாரிகள், உயர்குடியினர் ஒய்யாரமாய் கையில் மதுக் கோப்பைகளை வைத்துக் கொண்டு, உயர் வகை உணவுகளையும், கேக்குகளையும் உட்கொண்டனர். எல்லா இடங்களிலும் ஏழைகள் உயிர் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருந்தனர். கடும் குளிரில் உறைந்துசாகாமல் உயிர் வாழ்வதற்காக ஜீவ மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

கருப்பின அடிமைகளை கண்காணிக்க ஏழை வெள்ளையர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அடிமைத்தனமும் நிறவெறியும் மேன்மேலும் அதிகமாக நடைமுறைக்கு வந்தது. எட்மன்ட் மோர்கன் என்பவர், வர்ஜினியாவின் அடிமை முறையை ஆராய்ந்து “நிறவெறி என்பது கருப்பு-வெள்ளை வித்தியாசங்களை ஒட்டி இயல்பானது அல்ல, வர்க்க இழிவிலிருந்து வந்த ஒரு விஷயமாக இருந்தது என்கிறார்”. அமெரிக்க வரலாறு முழுமையிலும் உயர்குடி ஆட்சி தொடர மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதனை தனது நூலில் துலக்கமாக விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

அடிமைகளை படுகொலை செய்வது தெய்வ குற்றம் அல்ல

அமெரிக்க மேல்தட்டு வர்க்கம் தமது செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் சுக போகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆட்சி செய்வதற்காக நடுத்தர வர்க்கத்திற்கு சில சலுகைகளை வழங்கியது. அடிமைகள் மற்றும் ஏழை வெள்ளையர்கள் உழைத்து உருவாக்கிய உபரியை செல்வ வளங்களில் சில பங்கை நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கியது.

1610-ஆம் ஆண்டு அருட்தந்தை ஜான் டேவல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இத்தகைய அடிமை வணிகம், அடிமைமுறை கிறிஸ்துவத்திற்கு ஏற்புடையதா? என்று கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு கிறிஸ்துவ பாதிரியார் லூயிஸ் பிராண்டன் பதில் எழுதினார். அடிமைகளை வாங்குவதும் விற்பதும் தெய்வ குற்றமாகாது என்று எழுதினார். இந்த கொடுமை மத அங்கீகாரத்துடன் 200 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹிட்லரின் நாஜிகளின் சித்திரவதைக் கூடத்தை விடக் கொடூரமானது  அமெரிக்க சித்திரவதைக் கூடங்கள். அடிமை முறையை எதிர்த்து பல கலகங்கள் கிளர்ச்சிகள் எழுந்தன.

அமெரிக்க வரலாற்றில்  இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்தப் பகுதியின் மீது ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது இந்நூல்.

கருப்பின அடிமைகளின் தலைவர் பிரடரிக் டக்லஸ்  “நமக்கான விடுதலையைப் பெறும்வழி என்ன? எந்த மனிதனின் உரிமையும் தரப்படுவதில்லை, போராடிப் பெறுவது. போராட்டம் அமைதியான அறவழியில் நடத்துவதா? அல்லது வலிமையும் ஆயுதமும் கொண்ட வழியிலா? எப்படி இருந்தபோதும் கேட்காமல் எதுவும் கிடைக்காது, எப்போதும் இதுவே உண்மை” என்றார்.

நீதிமன்றத்தில் உரிமை முழக்கம்

கருப்பின அடிமைகளுக்காகப் போராடிய தியாகி ஜான்  பிரவுன் ஒரு வெள்ளையர். தென்பகுதி முழுவதும் அடிமைகளை எழுச்சி பெறச் செய்தார். கோரியட்டூப்மன் என்ற வீரம் மிகுந்த கருப்பினப் பெண், அந்தப் போராளிக்கு துணை நின்றார். கைது செய்யப்பட்டு வர்ஜீனியா நீதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜான் பிரவுன் “நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தூக்குமேடை முன்பு நின்று துணிந்து முழக்கமிட்டார்.

தூக்கிலிடுவதற்கு முன் அந்த மகத்தானப் போராளி “நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நாட்டின் பாவக் கரையை, ரத்தம் கொண்டு மட்டுமே கழுவ முடியும்” என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். “ஜான் ப்ரவுன் அவர்களை கொன்ற கழுமரம் சிலையைப் போல் புனிதமானது” என்கிறார் ரால்ப் எமர்சன் என்ற பிரபல எழுத்தாளர்.

சரித்திரத்தில் மறக்க முடியாத அமெரிக்க மக்களின் உரிமை போராட்ட வரலாற்றுப் பயணத்தை சுவைபட தமது நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். அமெரிக்காவில் அடிமை முறை சட்டப்படி மட்டும் ஒழிக்கப்பட்டது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்…)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer