நூல் அறிமுகம் – பாகம் 3 : அமெரிக்க மக்கள் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1
படிக்க : நூல அறுமுகம் – பாகம் 2

மெரிக்க வரலாற்றின் 400 ஆண்டுகளும் போர்களின் வரலாறு. கொடுங்கோன்மையின் வரலாறு, அடிமை உழைக்கும் மக்களின் 250 ஆண்டுகள் நீடித்த சோகக்கதை. இந்த அக்கிரமங்களை கொடூர வரலாற்று விவரங்கள் அனைத்தையும் இந்த நூல் விவரித்துக் கூறுகிறது.

வரலாறு தவிர்க்க முடியாத பாதையில் நடைபோடுகின்றது. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக அல்லது அடக்கப்பட்ட மக்களின் கலக நிர்ப்பந்தத்தால் வரலாறு உருவாக்கப்படுகிறது.

அமெரிக்க பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாட நூல்களில் அடிமைகளை இனப்படுகொலை செய்த கொடுமைகள் பற்றி ரத்த வெள்ளம் பற்றி எந்த விவரமும் இல்லை. உண்மையான வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

1766-ம் ஆண்டு முதல் 1771-ம் ஆண்டு வரை ஊழல் மிகுந்த செல்வந்தர்களாக திகழ்ந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து சக்திவாய்ந்த வெள்ளை விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர். அந்த இயக்கம் ரெகுலேட்டர் இயக்கம் என்று அழைக்கப்பட்டது. வெள்ளை விவசாயிகள் உள்ளூர் அரசாங்கத்தை , ஜனநாயக படுத்த முயற்சி செய்தனர். ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருந்த வரி விதிப்பை ரெகுலேட்டர் அமைப்பினர் எதிர்த்தனர்.

உயர்குடி சீமான்கள் 10 சதவிகிதம் பேர் பாஸ்டனில் வரி விதிக்கத்தக்க செல்வத்தில் 66 சதவீதத்தை கொண்டிருந்தனர். அதே நேரத்தில் அடிமட்டத்தில் 30 சதவீத மக்கள் வரி செலுத்தும் வகையில் சொத்து எதுவும் கொண்டிருக்கவில்லை. சொத்து இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. கருப்பர்கள் – பெண்கள் – இந்தியர்கள் போன்றவர்கள் நகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட் ஜின்
♦ நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்

1776-ம் ஆண்டுகளில் ஆங்கிலேய காலனிகளில் உள்ள குறிப்பிட்ட சில பிரமுகர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பெரிய அளவில் பயன்படக்கூடிய ஒன்றை கண்டுபிடித்தனர். ஒரு தேசத்தை ஐக்கிய நாடுகள் என்கின்ற ஒன்றிணைவு சட்டத்தை கண்டுபிடித்தனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முறையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. 1760-ம் ஆண்டில் பேகன் கிளர்ச்சியுடன் தொடங்கி காலனி அரசாங்கங்களை தூக்கி எறிவதற்காக பதினெட்டு கிளர்ச்சி போராட்டங்கள் நடந்தன. அதில் கருப்பின மக்களுடைய ஆறு எழுச்சிகளும் அடங்கும்.

சுரண்டல் கொள்ளையை பாதுகாக்க நிறவெறி கோட்பாடு :

கென்னத் ஸ்டாம் Kenneth என்ற சமூகவியலாளர் அடிமை முறை ஆய்வு செய்தபோது 17ஆம் நூற்றாண்டில் நீக்ரோ மற்றும் வெள்ளை வேலைக்காரர்களும் தங்களுக்கு இடையே காணப்பட்ட வேற்றுமை பற்றியோ அல்லது உடலுறுப்பு தோற்ற வேறுபாடுகளை பற்றியோ அலட்டிக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ஆதலின் கருப்பின வெள்ளையின நிற வேறுபாடுகளின் ஊற்றுக்கண் ஆதிக்க வர்க்கங்கள் உருவாக்கிய திசைதிருப்பும் தந்திரமே.

1776-ம் ஆண்டு தாமஸ் பெயின் எழுதிய காமன் சென்ஸ் என்ற நூல் 25 பதிப்புகளில் லட்சக்கணக்கில் விற்பனையானது. ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு எதிராக இந்த நூல் கலகக் குரலை எழுப்பியது. இந்த நூல் முதன்முதலாக விடுதலைக்காக துணிச்சலான ஒரு கருத்தை முன்வைத்தது. “சமூகம் அதன் எந்த நிலையிலும் அது ஆசீர்வதிக்கபட்டதே. ஆனால், அரசாங்கம் என்பது அதனுடைய மிகச்சிறந்த நிலையிலும் – ஒரு தவிர்க்க முடியாத தீமையே.” முடியாட்சியின் வரலாற்றுக் கேடுகளை தாமஸ் பெயின் விவரித்தார். அதன் கருத்தோட்டத்தை தூக்கி எறிந்தார். ஆட்சியாளர்களின் தெய்வீகத் தன்மை வாய்ந்த உரிமையை (divine right) கிழித்தெறிந்தார்.

காலனிய எதிர்ப்பு கிளர்ச்சிகள் அடுக்கடுக்காக நிகழ்த்தப்பட்டன. காலனிய மக்களின் எதிர்வினை கீழ்கண்ட வடிவங்களில் வெளிப்பட்டது. முத்திரை சட்ட எதிர்ப்பு, விடுதலைப் புத்திரர்கள், கமிட்டி ஆஃப் கரஸ்பாண்டன்ஸ், பாஸ்டன் தேநீர் விருந்து இறுதியாக 1774-ம் ஆண்டில் கான்டினென்டல் காங்கிரஸ் என தொடர்ந்து விடுதலை இயக்கப் போராட்டங்கள் நடந்தன.

வாஷிங்டன்

ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க விடுதலைப் போர் வெடித்தது. தாமஸ் ஜெபர்சன் வரைந்த சுதந்திரப் பிரகடனம் கான்டினென்டல் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. 1776 ஜூலை 4-ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. 1775-ம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தனது பண்ணையில் ஆயிரம் அடிமைகளை வைத்திருந்தார்.பிரித்தானிய காலனியை எதிர்த்த போராட்டத்தில் வாஷிங்டன் தலைமையேற்றார். ஐக்கிய அமெரிக்க நாட்டின் முதல் அதிபராக பொறுப்பேற்றார்.

சுதந்திரப் போராட்ட காலத்திலும் உழைப்பை சுரண்டும் பேராசையும் லாப வெறியும் குறைந்தபாடில்லை. கட்டாய வேலை எப்போதையும் போலவே இருந்தது.

சுதந்திரப் பிரகடனம், சுதந்திரம், மகிழ்ச்சி, உரிமைகள் அனைத்தும் அமெரிக்க வெள்ளையர்களுக்கு மட்டும்தான். கருப்பின அடிமைகள், ஏழைகள், கூலிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கான சுதந்திரம் என்பது  வெறும் மாய்மாலமே.

அன்று நடந்த – உயிரியல் யுத்தம்

1763-ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்கள் கைவசம் இருந்த நிலங்களை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். ஆங்கிலேயர்கள் மேற்குக் கோட்டைகள் மீது செவ்விந்தியர்கள் யுத்தத்தை தொடுத்தனர். பிரிட்டிஷ் ஜெனரல் ஜெப்ரி ஆம்ஸ் ஹார்ஸ்ட் என்பவன் உத்தரவின்படி செவ்விந்தியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தந்திரம் செய்து அம்மை நோய் நோய் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த போர்வைகளை வழங்கினர்.
இந்தப் பேரழிவு அம்மை நோய் வெகு விரைவாக செவ்விந்திய மக்களிடம் பரவி பலரது உயிரை குடித்தது. இன்றைய உயிரியல் யுத்தம் biological war க்கு இணையான ஈவு இரக்கமற்ற ஈன செயலை செய்தனர். பிரிட்டிஷ்காரர்களால் இது பொண்டியாக் சதி என்று அழைக்கப்பட்டது.

மக்கள் தொகையில் ஆகப் பெரும்பான்மையான மக்களை அரசியல் அமைப்புச் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நியாயமான மனிதர்களாக இருந்தார்களா? ஆதிக்க சக்திகளுக்கு இடையே சமநிலை மட்டும் விரும்பினர். ஆதிக்க சக்திகளுக்கு நிகராக அடிமைகள், கருப்பின மக்கள், செவ்விந்திய பூர்வ குடிமக்கள் ஆகியோருக்கு உரிமை வழங்கப்படவில்லை. அரசு என்பது ஒரு வர்க்கத்தை ஒடுக்கி மற்றொரு வர்க்கத்தைப் பாதுகாக்க உருவாக்கப்படுவது என்பதன் கண்கூடான உதாரணம் இது.

சொத்துடைமையற்ற வர்க்கத்தினர் போலவே மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களை அரசியல் அமைப்புச் சட்டம் கண்டுகொள்ளவே இல்லை. வெள்ளை இனப் பெண்கள் பாலின ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்குமுறை என இரண்டு வகையான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். கருப்பின பெண்களோ பாலின, வர்க்க, நிறவெறிக் கொடுமைகள் என மும்முனைத் தாக்குதலை சந்திக்க வேண்டி இருந்தது. அன்றைய பெண்களின் அவல நிலையைப்பற்றி இந்த நூலில் பல்வேறு வரலாற்று தகவல்களோடு சொல்லப்பட்டிருக்கிறது.

படிக்க :
♦ புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !
♦ தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

குறைந்த கூலி கொடுத்து பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் அவலத்தைப் பற்றி கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன 1837 ஆம் ஆண்டில் பெண்களின் சராசரி கூலி 37.5செண்டுகள் ஆக இருந்தது. பல்லாயிரம் பெண்கள் 12 மணி முதல் 16 மணி நேரம் வரை உலக நிர்பந்திக்கப்பட்டனர். வேலை நேரம் குறைப்புக்கான போராட்டம், கூலி உயர்வுக்கான போராட்டமும் அலை அலையாய் தொடர்ந்து நடத்தப்பட்டன. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் அனைவரும் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். உயர்குடிப் பெண்கள் வீட்டுக்கு நெருக்கமாக வைக்கப்பட்டனர்.

அரசு அதிகாரம், அரசு பலம், பண பலத்துடன் மேலும் நிலத்திற்கான தேடுதல் வேட்டை தேசிய விரிவாக்கத்திற்கான வெறி ஆகியவை வெடித்துக் கிளம்பின. மெக்சிகோ – அமெரிக்கப் போர் 1846-1848 -ல் நடைபெற்றது. இந்தப்போர்க்களத்தில் மெக்ஸிகோ சரணடைந்தது. மெக்ஸிகோவின் பாதி நிலப்பரப்பை அமெரிக்கா கபளீகரம் செய்து கொண்டது. புதிய எல்லைகளை நோக்கி பல போர்கள், பல இனப்படுகொலைகளை, பல மோசடிகள்,பல உடன்படிக்கை மீறல்கள், பல அருவருக்கத்தக்க கொடுமைகள் மூலம் மேற்கு கடற்கரை வரை பசுபிக் சமுத்திரத்தை தொட்ட எல்லைவரை நீண்டு.. ஐம்பது ஆண்டுகளில் பிரம்மாண்டமான நிலப்பரப்பு ஆகியது அமெரிக்கா.

கருப்பின மக்களின் அடிமை எதிர்ப்பு போராட்ட தடங்கள் :

அமெரிக்காவில் கறுப்பின மனிதனின் அடிமைத்தனத்தை விட மோசமான அடிமைத்தனம் உலக வரலாற்றில் இருக்கவில்லை. எகிப்தில் இஸ்ரேலியர்களின் அடிமைத்தனம் உட்பட வேறு எங்கும் இத்தகு அடிமைமுறை இருக்கவில்லை என்று வாக்கர் கூறுகிறார்.

1860-ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதியானார். வடக்கும் தெற்கும் மோதிக் கொண்டிருந்தன. உள்நாட்டுப் போரின் போது அடிமை முறைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்றன.

விடுதலை அறிவிப்பு அடிமைமுறை எதிர்ப்புக்கு பெரும் நம்பிக்கையையும் பலத்தையும் தந்தது. 1864-ல் அடிமைமுறை ஒழிப்புக்காக 4 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இது அமெரிக்க வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத திருப்புமுனையாக நிகழ்ந்தது. அமெரிக்க நாடாளுமன்றம் 1865-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது என்று அறிவித்தது.

அடிமை முறை ஒழிப்பு – லிங்கனின் பங்கு என்ன?

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை அநீதியின் மீது நிற்கிறது என்றார். ஆனால், அதை ஒழிக்கும் சட்டம் இயற்றுவது அதன் கொடுமையை குறைப்பதை விட அதிகரிக்கவே செய்யும் என்றார். 1861-ம் ஆண்டு லிங்கன் பதவியேற்றபோது அடிமைத்தனத்தை எதிர்த்து அற்புதமான உரையாற்றினார். கருப்பர்களை விடுதலை செய்த பெருமை லிங்கனுக்கு கிடைத்தது.

கருப்பின மக்களை விடுவித்தற்காக லிங்கன் மொத்தமாக பாராட்டப்பட்டார். ஆனால் அவர் அதை செய்தாரா? அவர்கள் சொந்தக்காலில் நின்று வாழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல், அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கினார். வேலைக்காக -உணவுக்காக – உழைக்க அவர்கள் தெற்குப்பகுதி வெள்ளையர்களை சார்ந்திருக்க வேண்டி இருந்தது. கருப்பினத்தவரின் இந்த வாழ்வாதாரத் தேவையை முன்னிட்டு வெள்ளையர்கள் அவர்களைப் பிடித்து வைத்திருந்தனர். விடுதலை அறிவிப்புக்குப் பின்னும் அவர்கள் வாழ்நிலை அடிமை முறையைப் போன்றதுதான்; ஆனால் பழைய அடிமைமுறையை விட சற்று மேலானது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தை குலைநடுங்க வைத்த தொழிலாளர்கள் போராட்டம் !

இக்காலகட்டத்தில் தொழிலாளர் இயக்க போராட்டங்கள் சூறாவளியாய் சுழன்று அடித்தன. இந்தப் போராட்டத்தை தீயை அணைத்திட தேசபக்த நாடகம் போடப்பட்டது. வெளிநாட்டுப் போர்கள் தேவைப்பட்டன.பொது வேலை நிறுத்தத்திற்கான துண்டறிக்கைகள் நகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன; நதிகளில் 400படகுகள் அணிவகுத்து நின்றன… 600 தொழிற்சாலை பாட்டாளிகள் “தொழிலாளர் உரிமைகள்” – “ஏகபோகம் வேண்டாம்”, என்ற முழக்கத்தை தாங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். இந்தப் பேரணியின் முடிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொழிற்சங்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்டனர்.

சிக்காகோவில் புதிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு 15 ஆயிரம் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருந்தது. மக்கள் திரள் பங்களிப்போடு கிளர்ச்சிப் போராட்டங்களையும் அணிவகுப்புகளையும் நடத்தி வந்தது. 22 தொழிற்சங்கங்களை உள்ளடக்கி அமைந்திருந்த சென்ட்ரல் லேபர் யூனியன் ஆப் சிகாகோ சக்திமிக்க தொழிற்சங்க அமைப்பாக திகழ்ந்தது. 1886-ம் ஆண்டு வசந்த காலத்தில் 8 மணி நேர வேலைக்கான உரிமைகுரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் நாடுதழுவிய வேலை நிறுத்தங்களுக்கு அறைகூவல் கொடுத்தது.

1885-ம் ஆண்டு இறுதியில் பார்சன்ஸ்-ஸ்பைஸ் தலைமையிலான 22 தொழிற்சங்கங்கள் கொண்ட மைய தொழிற்சங்கம் ஒரு அனல் பறக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை நமது குறைந்தபட்ச கோரிக்கை.

சிகாகோ போராட்ட தியாகிகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ஆளும்வர்க்கத்தின் துப்பாக்கி ரவைகள் நெஞ்சில் பாய்ந்தன மேனாள் போராட்டத்தின் மாபெரும் தலைவர் ஸ்பைஸ் கொதிப்படைந்த கிளர்ச்சியூட்டும் பிரசாரத்தை ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் வெளியிட்டார்.

“பழி தீர்ப்போம்! தொழிலாளர்களே ஆயுதம் ஏந்துங்கள்! அவர்கள் உங்களை சுட்டுக்கொல்ல ரத்த வெறியர்களை அனுப்புகிறார்கள்; ஆயுதம் ஏந்துங்கள்! உங்களை ஆயுதமேந்த அழைக்கின்றோம்!” என்ற வரலாற்று சிறப்பு மிகுந்த பிரசுரத்தை வெளியிட்டார்.

எழுச்சிமிகு பிரசுரத்தை தயாரித்த அச்சக தொழிலாளி ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல்ஸ், லூயிஸ் லிங்க் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அமெரிக்க ஆதிக்க சக்திகள் அந்த மகத்தான வீரர்களை தூக்கிலிட்ட போதும் உலகம் முழுவதிலும் உள்ள பாட்டாளிகளின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்று விட்டனர். இந்த புவிப்பரப்பில் கடைசி சுரண்டல் எச்சம் உள்ளவரை அந்த மாபெரும் போராளிகள் தியாகத் திருவிளக்குகள் என்றென்றும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டம், கருப்பின மக்களுடைய சமத்துவத்துக்கான போராட்ட இயக்கங்கள், வரலாற்று ஏடுகளில் மறைக்கப்பட்டாலும் அமெரிக்க பேராசிரியர் ஹாவாட் ஜின் அவர்கள் உருவாக்கிய அமெரிக்க மக்களின் வரலாறு என்று இந்த நூல் அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது!!

இந்த நூல் அறிமுகத்தின் இறுதிப் பகுதியில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் சொந்த நாட்டில் இருந்து உலகளாவிய அளவில் பரந்து விரிந்தது பற்றி இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

(தொடரும்…)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க