நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாகம் 1

லக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை, அட்டூழியங்களை, ஆக்கிரமிப்புகளை, ஈவு இரக்கமற்ற கொடுங்கோன்மைகளை, பச்சைப் படுகொலைகளை நடத்தி வருவது நாம் அறிந்ததே.

அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளையும், அந்நாட்டு உழைக்கும் மக்களையும் நாம் வேறுபடுத்திப்  பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வரலாறு என்பது அங்கு நடந்த வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தின் வரலாறுதான். நாம் அமெரிக்க மக்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. “ஏடறிந்த காலம் தொட்டு இதுவரையான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே” என்றார் மாமேதை கார்ல் மார்க்ஸ்.

படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

அடிமை மக்களின் துயரம் மிகுந்த வரலாறு, கருப்பின உழைக்கும் மக்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு, வெள்ளைப் பணியாளர்களின் உரிமைப் போராட்ட வரலாறு என்று உழைக்கும் மக்களின் தரப்பிலிருந்து, அவர்களின் சார்பில் நின்று, அமெரிக்காவின் வரலாற்றை இந்த வரலாற்று நூல் விவரித்து சொல்கிறது.

“அமெரிக்க மக்கள் வரலாறு” என்ற இந்த நூல் 25 தலைப்புகளில் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முழுமையான வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எண்ணற்ற தரவுகள் ஏராளமான சான்றாதாரங்களை முன்வைத்து மிகச்சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

“கொலம்பஸ் – இந்தியர்கள் – மனித முன்னேற்றம்”

அமெரிக்க மக்களின் வரலாற்றுப் பயணம் அடுக்கடுக்கான சோகங்கள் நிறைந்தது. ஏதுமறியாத அப்பாவி உழைக்கும் மக்களின் ரத்தமும் சதையும் அமெரிக்காவை நிர்மாணித்து உள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டு மன்னனிடமும் மகாராணியிடமும் தங்கத்தை கொண்டு வருவதாகப் பேராசைக் காட்டி தங்கத்தைக் கண்டறிய தனது கடல்வழிப் பயணத்தை துவக்கினான்.

தங்கத்தையும், வாசனைத் திரவியங்களையும் கொண்டு வருவதற்குப் பிரதிபலனாக லாபத்தில் பத்து விழுக்காட்டையும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலப் பகுதிகளில் கவர்னர் பதவியும் “அட்மிரல் ஆப் தி ஓசியன்” என்ற புகழ்மிக்க விருதையும் வழங்குவதற்கு, ஸ்பெயின் அரசு வாக்குறுதி வழங்கியது. மூன்று கப்பல்களில் 39 மாலுமிகளுடன் பயணத்தை மேற்கொண்டான்.

“பூர்வகுடி மக்களை கொன்றொழித்தக் கொடுங்கோலன் கொலம்பஸ்”

1492-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் கடல் பயணத்தைத் துவக்கிய 32-வது நாள் கடல் தண்ணீரில் மரக்கிளைகளும் பறவைகளின் இறகுகளும் மிதப்பதை கொலம்பஸ் குழுவினர் பார்த்தனர். இந்த அறிகுறிகள் அருகாமையில் நிலப்பரப்பு இருப்பதை தெரிவித்தன. அவர்கள் நிலப்பகுதியில் இறங்கியவுடன் அரவாக்குகள் என்ற பழங்குடியின மக்கள் அவர்களை வரவேற்றனர். அரவாக்குகள் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு இதர பயிர் வகைகளை விளைவிக்கும் ஒரு வளர்ச்சியடைந்த விவசாய முறையைக் கொண்டிருந்தனர்.

உணவும், தண்ணீரும், பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி உபசரித்த அரவாக்கு பழங்குடியின மக்களை முதுகில் குத்தி ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த கொலம்பஸ், அந்த அப்பாவி பழங்குடி மக்களை நர வேட்டையாடினான். 1495-ஆம் ஆண்டு மிகப்பெரிய அடிமை வேட்டைகள் நடந்தன. சுமார் 1500 அரவாக்குகளை (பழங்குடி இனமக்களை) பட்டியில் அடைத்து, ஸ்பானியர்களையும் நாய்களையும் கொண்டு காவல் காத்தான். நீண்ட தூர கடல் பயணத்தில் 500 பேரில் 200 பேர் வழியிலேயே இறந்து விட்டனர். உயிருடன் ஸ்பெயினை அடைந்த அடிமைகளை நகரத் தந்தை விற்பனைக்கு நிறுத்தினான்.

அடிமைகள் ஆடைகளின்றி நிறுத்தப்பட்டனர். “புனித கடவுளின் (Holy Trinity) பெயரால் நாம் அடிமைகளை மொத்தமாக அனுப்பி கொண்டே இருப்போம், அடிமைகள் அனைவரும் விற்பனை ஆகட்டும்” என்றான் கொலம்பஸ். “நான் திரும்பி வரும்போது தேவையான அளவு தங்கத்தையும் அடிமைகளையும் கொண்டு வருவேன் என்றென்றும் நிலை பெற்றிருக்கும்”, “நமது கர்த்தர் அவரது பாதையில் நாம் செல்ல நமக்கு வெற்றிகளை தருவார்”, தனது மனிதாபிமானமற்ற கொடுங்கோன்மைக்கு கடவுளைத் துணைக்கு அழைத்து கொலம்பஸ் செய்தி அனுப்பினான்.

தங்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்கின்ற அசாத்தியமான பணி செவ்விந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. நீரோடையில் உருளும் துகள்கள் மட்டும்தான் அங்கு இருந்த ஒரே தங்கம். அடிமைகளில் பலர் தப்பி ஓடினர். வேட்டை நாய்களின் துணையோடு அடிமைகளை வேட்டையாடிக் கொன்றனர்.

அடிமைகளை விற்கலாம் வாங்கலாம் கொலை செய்யலாம் என்ற முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தியவன் கொலம்பஸ். கொடுங்கோன்மையின் தீவிரம் தாங்க முடியாமல் அடிமை மக்கள் விஷத்தன்மை உள்ள கிழங்கு உட்கொண்டு கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர். “பரலோகத்துபிதா நமது கடவுள் அவருடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வெற்றியை தருவார்” என்று கொக்கரித்தான் கொலம்பஸ்.

தப்பிப் பிழைப்பதற்காக முயற்சி செய்த அரவாக்குகள் ஸ்பானியர்களின் ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கைதிகளாகப் பிடித்த அடிமைகளை தூக்கிலிட்டனர். உயிருடன் கொளுத்தினர். உடல் உறுப்புகளை துண்டித்தனர். இரண்டரை லட்சம் செவ்விந்தியர்களின் பாதிபேர், இதன் விளைவாக இறந்து விட்டனர்.

அடிமைகளின் உழைப்பை சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்த ஸ்பானியர்கள் ஆணவம் பிடித்தவர்களாக வளர்ந்தனர். சிறிது தூரம் நடக்கக் கூட மறுத்து அடிமைகளின் முதுகில் சவாரி செய்தனர். நாற்காலியில் அமர்ந்து கொண்டு அடிமைகளை சுமக்கச் செய்தனர். மனிதகுல வரலாற்றின் கண்டும் கேட்டிராத அக்கிரமச் செயல்களை அரங்கேற்றினர். சிறுவர்களின் தலையை வெட்டி வீசி விளையாடினார்கள். தங்களது கொலைவாள் கூர்மையானதாக இருக்கிறதா என்பதை சோதித்து அறிய அடிமைகளின் உடம்பில் பதம் பார்த்தனர். ஆயிரமாயிரம் அடிமைகள் சுரங்கங்களில் துன்புற்று இறந்தனர்.

“கொலம்பசின் அமெரிக்க கண்டுபிடிப்பு மாபெரும் வரலாற்றுப் புரட்டு”

அடிமைகளும் தங்கமும் என்ற இலக்கை நோக்கி பயணித்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்வதில் கூட சந்தேகத்துக்கு இடம் உண்டு. கொலம்பஸ் தரையிறங்குவதற்கு முன்பே நீக்ரோக்கள் அமெரிக்க மண்ணில் நுழைந்தவர்கள். வெள்ளையர்களின் வரலாறு இந்த வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்து விட்டது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர்.

நிறவெறியும் ஆதிக்க வெறியும் பண வெறியும் கொண்ட ஒரு கடல் கொள்ளைக்காரன்தான் கொலம்பஸ். அரவாக்குகள், செவ்விந்தியர்கள், கரீபியர்கள் போன்ற பழங்குடி மக்கள் தங்கள் மண்ணை இழந்து, பூர்வீகத்தை இழந்து, தங்கள் வரலாற்றை இழந்து விரட்டப்பட்டனர். அடிமை மக்களின் அவல வாழ்விலிருந்து நிர்மாணிக்கப்பட்டதுதான் இன்றைய அமெரிக்கா. 25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை அப்புறப்படுத்திவிட்டு அமெரிக்கா என பெயர் சூட்டி குடியேறினார்கள்.

அமெரிக்காவை நிர்மாணித்தவர் யார்? இந்த நாட்டை உயிர்த்துடிப்பு ஆக்கியவர் யார்? அமெரிக்க பேரரசை அட்லாண்டிக் துவங்கி பசிபிக் கடல் வரை விரிவு படுத்தியவர்கள் யார்? எல்லையற்ற வசதி வாய்ப்புகளை அங்கு உருவாக்கியவர்கள் யார்? “சபிக்கப்பட்ட அந்த தாழ்ந்த மனிதர்களால்தான் இந்த அமெரிக்கா உருவாக்கப்பட்டது என்ற அந்த ஒப்பற்ற உண்மையை உலகமெங்கும் பரப்புவோம்” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.

இதனை வரலாற்று வரிசைப்படி விவரிக்கிறது இந்நூல்.

“கப்பலில் வந்த மர்மமான சரக்கு”

அடிமைகள் பண்டங்கள் போலவும் ஆடு, மாடுகள் போலவும் விற்பனை செய்யப்பட்டனர். அடிமை விற்பனையில் திருடனும், மொழிபெயர்ப்பாளரும், விற்பனையாளரும் முக்கியமானவர்கள். 1619-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்கரையை வந்தடைந்த டச்சு கப்பலில் தொடங்கியது அடிமைகளின் வணிகம். வர்ஜினியாவின் ஜேம்ஸ் டவுன் என்னும் ஐரோப்பிய குடியிருப்பை எட்டியது டச்சு கப்பல். வந்தது-வணிகம்-செய்தது-திரும்பி சென்றது. அதுவரை எந்த கப்பலும் ஏற்றி வராத மர்மமான சரக்கை இந்தக் கப்பல்  ஏற்றி வந்தது. அது 20 அடிமைகள். இவ்வாறு முதல் அமெரிக்க அடிமை வியாபாரத்தை சாண்டர்ஸ் ரீடிங் வர்ணிக்கிறார்.

அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. “பணம் பிறவியிலேயே கண்ணத்தில் ரத்தக்கரை படிந்ததாய் உலகில் பிரவேசித்தது” என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். எல்லையற்ற லாப வெறி, நிற வேற்றுமை அடிப்படைகள், வெள்ளையன் எஜமானனாக கருப்பினத்தவர் அடிமையாக நடத்தும் கொடூரமான அமெரிக்க அடிமைமுறை உலகில் வேறு எங்கும் இல்லாதது.

ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கடல் பயணங்கள் சில நேரங்களில் ஆயிரம் மைல்கள் தூரம் கொண்டவையாக இருந்தன. கருப்பினத்தவர் கழுத்தில் சங்கிலிகளை மாட்டி துப்பாக்கி, சாட்டைகள் கொண்டு அடித்தபடி நடத்திக் கொண்டு செல்லப்படும் பயணங்கள் அவை. கப்பலில் சென்ற அடிமைகளில் ஐவருக்கு இருவர் பயணங்களில் இறந்துவிடுவர். தரையில் அவர்கள் விற்கப்படும் வரை கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

கப்பலில் அமைக்கப்பட்ட அந்த இருட்டு அறை திறக்கப்படும் போது, மல நாற்றமும் இறந்து கிடக்கும் அடிமைகளின் உடலின் அழுகல் வாடையும் மாலுமிகளை மூச்சுத்திணற செய்யும். கப்பலின் மேல் தளத்தில் வெள்ளை மனிதர்களின் குடியும் கேளிக்கையும் கர்த்தரின் ஆசி பெற்றவையாக தொடரும். அடிமைகளில் மூன்றில் ஒருவரே உயிர் தப்பி கரை இறங்கினர்.

அடிமைகள் மீது தொடுத்த கொடுங்கோன்மை, கொலைபாதக செயலை ஜான் பார்பட் என்பவர் இவ்வாறு வர்ணிக்கிறார் “அடிமைகள் கடற்கரை அருகில் உள்ள சிறைச்சாலை போன்ற பட்டியில் அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களை வாங்குவதற்கு அரேபியர்கள் வரும்போது விசாலமான திறந்த வெளிக்கு கொண்டு வரப்படுவார்கள். அங்கு, கப்பல் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பாக சோதனை செய்வார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் நிர்வாணமாக சோதனையிட்ட பின் நல்ல உடல் கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பவர்களை ஒருபக்கமாக ஒதுக்குவார்கள் அவர்கள் மார்பில் பிரஞ்சு இங்கிலீஷ் டச்சு என கம்பெனிகள் முத்திரைகளை பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவார்கள் முத்திரையிட்ட அடிமைகள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றும் வரை அடைத்து வைக்கப்படுவார்கள்.

கழுத்திலும் கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கப்பல் தளத்தில் பூட்டப்பட்டு இருப்பார்கள். மூத்திர நாத்தமும், மூச்சுத் திணறலும், துயரமும் தாங்க முடியாதது. அந்த நிலை நீக்ரோ அடிமைகளுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்தது”.

வர்ஜீனியார்களுக்கு உணவு தேவையை இருந்தது. அமெரிக்க இந்தியர்களை வேலை செய்யவைக்க முடியவில்லை. அவர்களை அடக்கவோ அழிக்கவோ முடியவில்லை. அவர்கள் மண்ணில் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல, என்ற நிலையில் வேலை செய்ய போதுமான வெள்ளை பணியாளர்கள் இல்லை. அதற்கு கருப்பர்களை இருந்தனர். 1619-ஆம் ஆண்டு 10 லட்சம் கருப்பர்கள் அடிமைகளாக அமெரிக்காவில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

அவர்கள் மண்ணிலிருந்து பண்பாட்டில் இருந்தும் பிரித்து எடுத்து வரப்பட்ட கறுப்பின மக்கள், தங்கள் மொழி-கலை-பண்பாடு-குடும்பம் என அனைத்தையும் இழந்து வேற்று மண்ணுக்கு அடிமைகளாகப் பெயர்த்து எடுத்து வரப்பட்டனர். இந்த கொடுங்கோன்மையின் வரலாற்றை ஈடு இணையற்ற நம் பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்கள் கீழ்கண்டவாறு தனது மூலதனம் நூலில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

படிக்க :
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

“அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்தது, அந்த கண்டத்து பூர்வகுடிமக்களை அழித்து, அடிமைப்படுத்தியது, சுரங்கங்களில் சமாதி செய்து, அவர்களை நாசமாக்கியது, கிழக்கிந்திய பகுதிகளைப் (East Indies) பிடித்து சூறையாடத் தொடங்கியது, கருப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்காக வேட்டைகாடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது, இவையெல்லாம் முதலாளித்துவ பொருளுற்பத்தி சகாப்தத்தின் அருணோதயக் காட்சிகளாய் அமைந்தன” என்று அன்றைய நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஒடுக்கப்படும் அடிமைகள் கிளந்தெழாமல் போய் விடுவார்களா என்ன ? ஐரோப்பியர்களின் ஒடுக்குமுறைக்கு அடிமைகளின் எதிர்வினை என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

(தொடரும்…)

 

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க