ம்மில் பலர் எங்கேனும் ஓரிடத்திலாவது இந்த வாக்கியங்களையெல்லாம் ஆண்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்டியிருப்போம். “பொம்பளப்பிள்ள மாதிரி அழக்கூடாது”, “உனக்கு எதுக்கு பேண்ட் சட்ட.. நீயெல்லாம் பாவாடை கட்டிட்டுப் போ”.  ஆண்களின் ‘வீரத்தை’ சீண்டிப் பார்க்கும் வசனங்களாகவே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அழுதல், பாவாடை அணிதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கானவை என்று எழுதப்படாத விதியாக ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனை நம் தலைகளில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த வசனங்கள் எல்லாம். இவற்றை பெண்களுக்கானது என்று வரையறைத்த சமூகம் ஏன் அவற்றின் வரலாற்றை பேச மறுக்கிறது? ஏன் ஆண்கள் அழக்கூடாதா என்ன?  அது போன்று தான் ஆண்கள் ஏன் பாவாடை அணியக் கூடாதா? அது ஏன் கேலிக்குரியதாகப் பார்க்கப் படுகிறது.  இந்தப் பாவாடை எனும் உடை பெண்களுக்கான உடுப்பாக மட்டுமே இருந்து வந்ததா? வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம் வாருங்கள் !

படிக்க :
♦ எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?
♦ ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

நாம் தெருவில் நடக்கையில் யாரேனும் ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால் அதை பார்த்துவிட்டு கடந்து விடுவது போல,  ஓரு ஆண் பாவாடை அணிந்து சென்றால் அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடுவதில்லை. அதை ஆண்கள் அணிவதைக் கண்டு கடந்து செல்வதில் ஏன் அவ்வளவு தயக்கம்?

வரலாற்று ரீதியாகப் பாவாடை பெண்களுக்கான அடையாளமாகவே நீடித்ததா எனில் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதுதான்.  உண்மை என்வெனில், பண்டைய நாட்களில் இந்த பாவாடையானது ஆண் பெண் இருபாலரும் உடுத்தும் உடையாக இருந்து வந்துள்ளது. பண்டைய கால எகிப்து மற்றும் ஆசியா-வில் பாவாடை அவர்களின் தினசரி ஆடையாக இருந்து வந்துள்ளது.

பண்டைய எகிப்து-ல் முதன் முதலில் பாவாடை உடுத்தியதும் ஆண்களே. இடுப்பிற்கு கீழ் துணிகளை சுற்றி உடம்பை மறைக்கும் ஓரு அங்கி. அதன் பெயர் ஷெண்டிட்(Shendyt). இது மிகவும் மெல்லியதாக இருந்ததோடு உடம்பிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும் என்று கருதி அவர்களின் சூழல்களுக்கு ஏற்றவாறு ஆடையை வடிவமைத்திருந்தனர். அப்போது அங்கு ஆட்சி செய்த அரசர் முதல் விவசாயி வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இதைத்தான் உடுத்தி வந்தனர். விலைக்கேற்ப ஆடையின் தரம் கூடுதமே தவிர ஆடையில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்களைவிட தரம் மற்றும் விலையில் குறைவான ஆடைகளை பெண்கள் அணிந்திருந்தனர். ஏனெனில் அப்போது அங்கு வேலைப் பிரிவினைகளும் அதன் காரணமாக பாலினப் பாகுபாடுகளும் வளர்ந்திருந்தன.

இதைப் போன்றே சீனாவிலும் பேரரசர்கள் ஜரிகையால் நெய்யப்பட்ட நீண்ட மஞ்சள் நிறப் பாவாடைகளையே ஆடைகளாக அணிந்திருந்தனர்.  அதைப் போன்றே தென் அமெரிக்காவிலுள்ள இன்கா நாகரிக மக்கள் (ஆண், பெண் என இரு பாலரும்) பாவாடையையே உடுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து பண்டைய ரோமாபுரி மற்றும் கிரீஸ்-யில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் டுனிக்ஸ் (Tunics) என்ற ஆடையை பயன்படுத்தினார். அது உடல் முழுவதும் துணிகளை சுற்றி தோள்பட்டையில் கிடத்தி கையில் ஏந்தியவாறு நடப்பது வழக்கம்.

பண்டைய ரோமானிய, கிரீஸ் அரசுகளைப் பற்றிய இன்றைய சினிமாக்களில் அதனைக் கண்டிருப்பீர்கள். அவற்றை இன்றைய அருங்காட்சியங்களிலும் பார்க்க முடியும். பெண்களுக்கும் அதே ஆடையே ஆனால் நீளமான நிலத்தை தவழும் வடிவமைப்பு கொண்ட உடையை அணிந்தனர்.  இதேப் போன்று ஐரோப்பியர்களும் ஆண், பெண் இருபாலரும் பாவாடையை உடையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி வரலாறு முழுவதும் பாவாடை எனும் இந்த உடை ஆண்களுடன் பயணித்து வந்திருக்கிறது.

பின் எங்கிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது?  வர்க்க சமூகத்தில் சொத்துடைமை தீவிரமடையத் தீவிரமடைய ஆண் பெண் பாகுபாடும், பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகளும் அதிகரித்தன. குறிப்பாக நாகரிகச் சமூகமாக மனித இனம் வளர்ந்தாலும் அதன் வளர்ச்சிப் போக்கில் போரும், மதமும் ஒரு அங்கமாகின.

பெண்களை போரில் இருந்து தவிர்த்தன இந்த சொத்துடைமைச் சமூகங்கள். போர்களில் குதிரையேற்றத்திற்கு வசதியான வகையில் ஆண்களின் உடைகள் சுருக்கப்பட்டன.  மதங்கள் வேறுன்ற தொடங்கியதும் மத நூல்கள் ஆண்-பெண் பாலினங்களின் ‘அம்சங்களாக’ உடைகளையும் வகுத்தன.  அப்படி பைபிளில் இடம்பெற்ற வார்த்தைகள் ஆண்-பெண் பாகுப்பாட்டை வெளிக் கொணர்ந்தது.

“The women shall not put on the weapons(armour) of the warrior, neither shall a warrior put on a women’s garment for all that do are abomination and the LORD thy God. ”

அதாவது, “பெண்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது அதே போல,  பெண்களின் ஆடைகளை அணிந்து ஆண்கள் போருக்குச் செல்லக்கூடாது” என்பதே இதன் பொருள். கி.பி.1604-க்குப் பின் இங்கிலாந்தை ஆண்ட அரசர் ஜேம்ஸ் 1-ஆல், பைபிள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த மொழிபெயர்ப்பு சில இடங்களில் தவறானப் புரிதலை உருவாக்கியது. அதன் பின் “Modern International English”-ல் மொழி பெயர்க்கப்பட்டது.

“A women must not wear Mens clothing nor a man wear women’s clothing for the Lord your God detests anyone who does this”

இத்தகைய மத ரீதியானக் கட்டுப்பாடுகள் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக பெண்கள் ஆடையும் ஆண்களின் ஆடையும் தனித்தனியாக வளர்ந்து வந்தன. முன்பே கூறியது போல, இதற்கு மத நூல்கள் மட்டும் காரணமல்ல. அதைக் கடந்த நடைமுறைப் பணி நிலைமைகளும் முக்கியக் காரணமாக இருந்தது. ஆண்கள் பயன்படுத்தத் துவங்கிய டிரவுசர்கள் (Trousers) வேலைகளை எளிமையாக செய்யவும், குதிரை சவாரி செய்யவும், போர் புரியவும் உதவின.

சொத்துடைமை அடிப்படையிலான வர்க்கச் சமூகம் பெண்களை அழகுப் பதுமைகளாகவே (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) நடத்தி வந்தது. அதற்கேற்ற வகையில் அவர்களது உடைகளின் பரிணாம வளர்ச்சி இருந்தது.

காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் கூட ஓரு ஆண் பாவாடை அணிந்து தெருவில் நடந்தால் கேலியாகவும் கிண்டலாகவும் பார்க்கின்றனர். காரணம், நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பாலினப் பாகுபாட்டின் விளைவே.

இன்றும் கூட பல நாடுகளிலும் பாவாடை போன்ற ஆடைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு சுற்றலாவாசியாக நான் பூட்டானில் அவற்றைப் பார்த்திருக்கிறேன். பூட்டானில் ஆண்கள் அணியும் அடர்த்தியான, கோ(Gho) என்ற ஆடையும் பாவாடையைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அங்கு பெண்கள் அணியும் கீரா(Kira) கணுக்கால் வரை நீண்டிருக்கும்.

ஆசிய புத்தத் துறவிகள் அணியும் ஆடை கூட ஓரு வித சீலை போன்ற தோற்றத்தையே தருகின்றது. ஆனால் அதைப் பார்த்து நாம் சிரிப்பதில்லை. அதேபோல, பாலி நாட்டில் சாராங்(Sarang)  எனப்படும் நீண்ட துணிகளை இடுப்பிற்கு கீழ் உடுத்தும் பழக்கம் இருக்கிறது.

ஸ்காட்லாந்தில் ஆண்கள் கில்டு(Kilt) என்ற ஆடையை அணிந்து வேலைகளைச் செய்கின்றனர். “As they say in Scotland, It takes a real Man to wear a skirt”  என்று ஓரு பழமொழிக் கூட உண்டு. ஸ்காட்லாந்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஆடையும் கீல்டு (Kilt). ஏன் தென் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் ஆண் பாவாடை அணிந்தால் என்ன தவறு ?

இன்று பெண்களும் தங்களது வேலை சூழலுக்கு ஏற்ற வசதியான ஆடையாக சுடிதார், ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளையே பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக இந்தச் சமூகம் இந்த ஆடைகளையும் இளப்பமான ஆடைகளாக அடையாளப்படுத்தப் போகிறதா?

படிக்க :
♦ காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!
பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

ஆண்களின் கோழைத்தனத்திற்கு அடையாளப்படுத்தும் விதமாக ஆண்களைப் பார்த்து “பாவாடை கட்டிக் கொள்” என்று யாரேனும் சொன்னால் அதை ‘உரிய’ முறையில் எதிர்கொள்ளுங்கள். தைரியம் என்பது எந்த ஒரு பாலினத்திற்குமான தனிப்பட்ட உரிமை கிடையாது. கோழைத்தனத்தைப் பெண்மைக்கு நிகரானதாகவும், பாவாடையை அதற்கான அடையாளமாகப் பேசுவதும் கேலிக்கூத்தாகும். வரலாற்று அறிவோ சமூக அறிவோ இல்லாதவர்களாக நம்மை நாமே  தூற்றிக் கொள்வது போன்றதாகும்.  ஆடை வெறும் அடையாளம் அல்ல. அது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்.

ஆகவே, இனி நாம் கேட்போம், “Why dont Men wear skirt? ”

சிந்துஜா
சமூக ஆர்வலர்