31.5.2021

இலட்சத்தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசின் நயவஞ்சகத்தை முறியடிப்போம் !
பு.மா.இ.மு கண்டன அறிக்கை

ளர்ச்சி என்ற பெயரில் நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக திறந்து விடும் அயோக்கியத்தனத்தை மத்திய – மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. எங்கெல்லாம் இயற்கை எழிலும், அமைதியும் நிலவுகிறதோ, அந்தப் பகுதிகள் எல்லாம் காவிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் கண்ணை உறுத்துகின்றன. கூடுதலாக, அங்கு வசிக்கும் மக்கள் இசுலாமியர்களாக இருந்துவிட்டால், அவர்களது வாழ்வைக் கெடுக்காமல் காவிகளுக்கு தூக்கமே வருவதில்லை.

படிக்க :
♦ மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை
♦ புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்

மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மாநிலத்தையே துண்டாடினார். காஷ்மீரைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளைக்குத் திறந்துவிட்டு, தொழில்வளர்ச்சி இனி நிச்சயம் என்றார். பல பத்தாண்டுகளாக இந்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வரும், காஷ்மீர் மக்களை வீடுகளுக்குள் முடக்கி, இணையத்தைத் துண்டித்து, தங்களது ‘வளர்ச்சிக்கு’ காஷ்மீரில் எதிர்ப்பில்லை என வெளியுலகிற்கு காட்ட முயன்று வருகின்றனர் மோடியும் அவரது சகாக்களும்.

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாடே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிருக்கும் போது கூட, ஊரடங்கு என்ற பெயரில் நாட்டில் பல பகுதிகளை முடக்கி வைத்திருக்கும்போதும் கூட சங்கிகளின் ஆக்கிரமிப்பும், கார்ப்பரேட் சேவையும் முடங்கிவிடவில்லை. அந்த வகையில், காஷ்மீரைத் தொடர்ந்து சங்கிகளின் பிடியில் சிக்கியிருக்கிறது இலட்சத்தீவுகள் பகுதி.

கேரளாவிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில், அரபிக்கடலில் அமைந்திருக்கின்றது இலட்சத்தீவுக் கூட்டம். வெறும் 32 ச.கி.மீ பரப்பளவுள்ள எழில் கொஞ்சும் இப்பகுதி, யூனியன் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு சட்டமன்றம் ஏதும் இல்லாமல் இந்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் இருத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்டது என்பதால், நிர்வாக அதிகாரி மட்டுமே உண்டு. இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் ஷர்மா 2020 டிசம்பரில் இறந்ததால், பொறுப்பு நிர்வாக அதிகாரியாக பாஜகவின் பிரஃபுல் படேலை நியமித்தது மோடி அரசு.

இத்தனை ஆண்டுகாலமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளே நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை நியமித்துள்ளது ஒன்றிய அரசு. மோடி – அமித்ஷா கும்பலுக்கு நெருக்கமான இந்த சங்கி பொறுப்பேற்றதிலிருந்து, காவி-கார்ப்பரேட் நலனுக்காக இலட்சத்தீவுகளை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்திலான விதிமுறைகளைத் திணித்து வருகிறார்.

இத்தீவின் மக்கள் தொகை 70 ஆயிரத்திற்கும் குறைவு; இவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் பழங்குடிகளாகவும், மத அடிப்படையில் இசுலாமியர்களாகவும் இருந்து வருகின்றனர். இங்கு காய்கறிகளை விளைவிப்பதற்கான சூழல் இல்லாததாலும், இசுலாமியர்கள் அதிகம் என்பதாலும் இயல்பாகவே மாட்டுக்கறியை பிரதான உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

அங்குள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மதிய உணவிலும் கூட மாட்டுக்கறி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதியின்படி பசு, காளைகள், கன்றுகள் போன்றவற்றை கொல்வதற்கு தடை விதித்துள்ளது காவி கும்பல். இனி பள்ளிகளில் மாட்டுக்கறி கிடையாது என்று அறிவித்து, பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளார் புதிய நிர்வாக அதிகாரி புரஃபுல் படேல். தமது அடவாடியான, காவித் திமிரோடு மாட்டுக்கறிக்குத் தடைவிதித்து அம்மக்களின் உணவு உரிமையைப் பறித்துள்ளது ஒன்றிய அரசு.

இது மட்டுமில்லாமல், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதைத் தடுக்க பஞ்சாயத்து ஒழுங்குமுறை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இசுலாமியர்கள் ஏராளமாகக் குழந்தை பெற்றுக்கொண்டு தமது எண்ணிக்கையைப் பெருக்கி, இந்துக்களுக்கு ‘அச்சுறுத்தலாக’ இருக்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் காவி கும்பல், இவ்வாறு தடை விதிப்பதன் மூலம் தமது இசுலாமிய வெறுப்பை வெளிப்படையாகக் கக்குகிறது.

இவை மட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவங்களில் ஏற்கனவே பணிபுரிந்த பலரையும் பணிநீக்கம் செய்துவிட்டு, தம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளதாக படேல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஷ்மீரைப்போல் லட்சத்தீவிலும் வெளிநபர்கள் யாரும் நிலம் வாங்க முடியாது. தற்போது லட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் மூலம், லட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கமுடியும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள், பெரும்பணக்கார கும்பல்கள் இலட்சத்தீவைக் கொள்ளையிட வழிவகை செய்யபப்டுள்ளது.

தேசிய குற்ற அறிக்கை ஆவணத்தின்படி லட்சத்தீவில் கொலை, குழந்தை கடத்தல் தொடர்பாக ஒரு குற்ற வழக்குக்கூட பதியப்படவில்லை. ஆனால், லட்சத்தீவு சமூகவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் என்றபெயரில் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2019  -ல் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தியதோடு, அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், இலட்சத்தீவின் பூர்வகுடிகளான இசுலாமிய மக்களை அச்சுறுத்தவும், சிறையிடவுமான ஏற்பாடுகளே.

கொரோனா நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தியதன் மூலம் கடந்த 2020 வரை லட்சத்தீவில் ஒரு கோவிட் நோயாளிகூட கிடையாது என்ற நிலை இருந்தது. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற பின்பு, லட்சத்தீவிற்குள் நுழைய கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும் என்று கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டதால், கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

தற்சமயம் 6000-க்கு மேற்பட்ட நோயாளிகள் இத்தீவில் உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையைப் பரப்பிய சூப்பர் ஸ்பிரடர் மோடியின் வாரிசு என்பதை நிரூபித்துள்ளார் பா.ஜ.கவின் பிரஃபுல் படேல்.

விவசாய நிலப்பரப்பு இல்லாததால், மீன்பிடித் தொழிலும், தென்னை சார்ந்த தொழில்களும்தான்  அம்மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றன.  கேரளாவின் பெய்பூர் துறைமுகம் வழியாகத்தான் இத்தனைக் காலமாக  தங்களது வணிக நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர் இம்மக்கள். கேரள மக்களோடு மொழிரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் நெருங்கிய உறவு கொண்டுள்ள இலட்சத்தீவு மக்களை, பாஜக ஆளும் கர்நாடாகவின் மங்களூர் துறைமுகம் வழியாகத்தான் இனி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார், படேல்.

இதன் மூலம், லட்சத்தீவு மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வுரிமையையும் சூறையாடத் துடிக்கிறது காவி பாசிசக் கும்பல். இந்தியாவின் முக்கியக் கடற்கரைப் பகுதிகளை எல்லாம் சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு திறந்து விடுவதை, மறுகாலனியாக்கத்தின் ஒரு பகுதியாக அமலாக்கிக் கொண்டிருக்கின்றன அரசுகள்.

கடற்கரைகளை அழகுபடுத்துவது, ரிசார்ட்டுகளைத் திறக்க அனுமதிப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது என்ற பெயரில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழிலையும், கடற்கரையில் நடக்கும் பாரம்பரிய மீன் பதப்படுத்தலையும் ஒழிக்கும் வேலையைச் செய்து வருகின்றன  அரசுகள்.

இதன் ஒரு பகுதியாக, மீன்பிடித் தொழிலையே முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இலட்சத்தீவு மக்களையும், கடற்கரையில் இருந்து பிரிக்கும் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு.

இலட்சத்தீவில், கடற்கரையில் இருந்த பல மீனவர்களது வலைகள், மீன்பிடிக் கருவிகள் தூக்கியெறியப்பட்டு, அங்குள்ள கடல்சார் பழங்குடிகளின் இருப்பிடங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தனியார்-அரசு கூட்டு மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது என்ற பெயரில், லட்சத்தீவின் நிலங்களை அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக, லட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் மூலம் லட்சத்தீவில் நெடுஞ்சாலைகள், வட்டச்சாலைகள், விமான நிலையங்கள், இரயில்வே தண்டவாளங்கள் மற்றும் கால்வாய்கள் அமைக்க திட்டமிட்டுள்ள மோடி அரசு, லட்சத்தீவிற்கும் இந்தியாவிற்கும் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற லட்சத்தீவு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது.

ஆனால், இலட்சத்தீவு மாவட்ட ஆட்சியரோ, இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினால், இலட்சத்தீவு வருங்காலத்தில் மாலத்தீவு போல மாறிவிடும் என்றும், வளர்ச்சிப்பணிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பப்படுவதாகவும் அபாண்டமாகப் புளுகிக் கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட் கம்பெனிகள் காஷ்மீரின் வளத்தை சூறையாடவும், முஸ்லீம்கள் என்பதற்காக காஷ்மீரிகளின் அரசியல் சுயநிர்ணய உரிமையைப் பறித்தும், அம்மாநிலத்தைத் துண்டாடி, இராணுவத்தைக் கொண்டு கார்ப்பரேட்-காவி பாசிச நலனை நிலைநாட்டியது போல் லட்சத்தீவிலும் முயற்சித்து வருகிறது, மோடி அரசு.

லட்சத்தீவு மக்களின் பண்பாட்டையும், பொருளாதாரத்தையும் அழித்து, லட்சத்தீவை இன்னுமொரு காஷ்மீராக்க துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. கேரள மக்களும், திரைத்துறையினரும் மட்டுமின்றி ராகுல்காந்தி, ஸ்டாலின், வைகோ போன்றோரும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

“சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது போல, அமைதியாக தமது வாழ்வை நடத்திக் கொண்டிருந்த இலட்சத்தீவு மக்களின் உள்ளத்தில் கோபக் குமுறலை உருவாக்கியிருக்கிறது  மோடி அரசு.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் இசுலாமியப் பெண்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்த மோடி, விவசாய சட்டத் திருத்தங்கள் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகளை சாலைகளில் இறங்க வைத்தார். இப்போது இலட்சத்தீவு மக்களும் இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார்கள்.

படிக்க :
♦ சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்
♦ கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

காவி – கார்ப்பரேட் நலனுக்கான சட்டங்கள், செயல்பாடுகளால் பாதிக்கப்படும் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமும், தீரமிக்க மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவோம்.

மோடி அரசுக்கு எதிராக போராடத் தொடங்கியிருக்கும் இலட்சத்தீவு மக்களுடன் தோளோடு தோள் நிற்போம்! அம்மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்!

இலட்சத்தீவைக் களவாடத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் தாசன் மோடி அரசுக்கு எதிராக கண்டனங்களை முழங்குவோம்!


இரா.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642
rsyftamilnadu@gmail.com
Facebook : Rsyftn