ஓ.டி.டி. தளங்கள், சமூக ஊடகங்கள், மற்றும் மின்னணு செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் “இடையீட்டாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான நெறிமுறைகள் விதிமுறைகள் 2021” (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021) என்ற புதிய விதியை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.
மேற்கண்ட இந்த விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியே அறிமுகப்படுத்தியிருந்தது. அனைத்து சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்களின் நிறுவனங்களும் இவ்விதிமுறைளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்காக மே மாதம் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்ததால், தற்போது அனைத்து நிறுவனங்களும் அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. கூகுல், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துவிட்டனர்.
படிக்க :
♦ காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்நிலையில் இந்த புதிய விதிகள் என்ன சொல்கிறது? இதுவரை சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இதுபோன்ற எந்த விதிகளும் இல்லாத போது, தற்போது புதிதாக இத்தகைய விதிமுறைகளைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஏன் இந்தப் புதிய விதிமுறைகள், மோடி அரசு சொல்லும் காரணங்கள் என்ன?
இந்த புதிய விதிமுறைகளை டெல்லியில் அறிமுகப்படுத்திப் பேசிய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர், “இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் வரவேற்புக்குரிய ஒன்று என்றாலும், அவற்றில் பகிரப்படும் சில தகவல்கள், வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதாக உள்ளன என்று மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் பல ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. போலிச் செய்திகளின் பிரச்சனையும் இதில் அடங்கும்”

“மேலும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்று புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கான காரணங்களை சொல்லியுள்ளார்.
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள்; நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்கள், தங்கள் பயனர்களின் புகார்களை விசாரித்து தீர்ப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பவராக இருக்க வேண்டும்.
மேலும், இணைச்செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை “அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக” அரசு நியமிக்கும். இவர் நினைத்தால் குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும்.
சமூக ஊடகங்களில் ‘சட்டவிரோதமான’, ‘வெறுப்பைத் தூண்டும்’, ‘தேசத்தின் ஒற்றுமைக்கு அல்லது இறையாண்மைக்கு எதிரான’, இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய ‘தவறான கருத்துகள்’, சிறுவர் ஆபாச படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை “முதலில் பதிவிட்ட நபரைப்” பற்றிய விவரங்களை அரசிற்குத் தரவேண்டும். அதனை வைத்துக் கொண்டு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்த உள்ளடக்கங்களைப் பகிர்வோருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது.
மேற்கண்டவை தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை 36 மணி நேரத்திற்குள் நீக்க அல்லது அந்த கணக்கை முடக்க வேண்டும்.
மேலும், இந்த நிறுவனங்களைக் கண்காணிக்கும் “மேற்பார்வைக் குழு அல்லது கண்காணிப்புக் குழு” ஒன்று அமைக்கப்படும்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாதுகாப்பு, சட்டம், உள்துறை, வெளிவிவகாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் அங்கம் வகிப்பார்கள். மேற்கண்ட ‘நெறிமுறைகளை’ மீறுவதாக புகார் வந்தால் அதனை “தானே முன்வந்து விசாரிக்கும் அதிகாரம்” இந்த மேற்பார்வைக் குழுவுக்கு இருக்கும்.
ஓ.டி.டி. தளங்கள் தாங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை U, U/A7+, U/A13+, U/A16+, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் A என்று வகைப்படுத்தி, குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்காத வண்ணம் தடுக்க வேண்டும்.
இதுபோன்று பல விதிமுறைகளைப் பற்றி சொல்கிறது.
இந்த விதிமுறைகளின் உண்மையான நோக்கம் !
சிறுவர் ஆபாசப் படங்கள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான பதிவுகள் போன்றவற்றை தடுப்பது என்பதையும் இந்த விதிமுறைகள் தனது நோக்கமாக காட்டினாலும் உண்மை அதுவல்ல.
இந்து முன்னணி காலிகளால் பெண் உறுப்பு சிதைத்துக் கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி முதல் காஷ்மீரில் கருவறையிலேயே வைத்து சிதைக்கப்பட்ட அசீபா, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு முறித்து போடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் மனிஷா வரை பாதிக்கப்பட்டது யாரால்? இந்த கொடூரங்களை செய்தவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும் யார்? இவர்கள் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கப் போகிறார்களா? இது ஒரு சகிக்க முடியாத பொய்.
உண்மையில் “தேச விரோதக் கருத்துக்கள் அல்லது தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தான கருத்துக்கள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள்” என்று கூறி தங்களையும் தங்களது இந்துத்துவ அரசியலையும் சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்கள், அது தொடர்பாக எழுதும் மின்னணு செய்தி ஊடகங்கள் மற்றும் இந்துத்துவத்தை விமர்சிக்கும் வகையில் வரும் சில ஓ.டி.டி. திரைத்தொடர்கள் (உதாரணமாக ‘லைலா’ (LEILA) போன்ற இணையத் தொடர்கள்) ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது தான் இந்த விதிமுறிகளை மோடி அரசு அறிவித்திருப்பதற்கான காரணமாகும்.
000
நாள் தோறும் கோடிக்கணக்கான மக்கள் – ஜனநாயக சக்திகள் மோடி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளார்கள். அவர்கள் இந்தப் பாசிச அரசிற்கு எதிரான கோபத்தைப் போராட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.
அதில் ஒன்றாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதுபோன்ற உள்ளடக்கங்கள் நாடு முழுக்க வைரலாவதும் மோடி அரசின் யோக்கியதை அம்பலமாவதும் நடக்கிறது. தமிழகத்தின் கோ பேக் மோடி (GO BACK MODI) ஹாஷ்டேக் முதல் “டெல்லிச் சலோ” விவசாயிகள் போராட்டம் உலக அளவில் டிரெண்டானது வரை இந்த பார்வையில் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயல்பவர்களும் ஆவர்.
ஏனெனில், தங்களது பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வது அவர்களுக்கு முன்தேவையாக உள்ளது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடாகத் தான் சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்களுக்கான இந்த புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட விதிகளைப் பார்ப்போம், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒருவரை புகார் அதிகாரியாக நியமிப்பது, அரசு அதிகாரப்பூர்வமாக நியமிக்கும் பிரதிநிதியிடம் (சங்கிகளை தான் நியமிப்பார்கள் என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ள முடியும்) எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடைவிதிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவது.
மேலும், இதற்கெல்லாம் மேல், மோடி அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் ‘கண்காணிக்கும் குழு’ என்ற பெயரில் அனைத்து சமூக ஊடக, மின்னணு செய்தி ஊடக, ஓ.டி.டி. தளங்களின் நிறுவனங்களையும் விசாரணை செய்யும் அதிகாரத்தில் அமர்ந்து கொள்வது என்பது அனைத்தும் முற்று முழுதாக இந்த தளங்களை பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் அதன் மூலம் தங்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுபவர்கள், அதை பரப்புபவர்களைக் கண்டறிந்து அவர்களை தண்டிக்கவுமே ஆகும்.
அதற்கு தான் ‘சட்டவிரோத’, ‘தேச விரோதக் கருத்துக்களை’ முதலில் பதவிடுபவர்களை கண்டறிவதும் அதை பரப்புபவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது போன்றவற்றை தங்களது புதிய விதிமுறைகளில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும்பட்சத்தில் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிரான கருத்துக்களே இல்லாத இந்தியாவை நாம் பார்க்கலாம் ! ஏனெனில் அதன் பின் அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பேசத்துணியும் குரல்வலைகள் அறுத்து வீசப்பட்டிருக்கும்.
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராஸ் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதி, செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உட்பட அவருடன் வந்த சக ஊடகவியலார்கள் மீது உத்திரப்பிரதேசத்தில் ஒரு சதியை அரங்கேற்ற வந்ததாக கூறி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) கைது செய்தது உ.பி அரசு.
மேலும் கொரோனா இரண்டாம் அலையால் காவி கும்பல் ஆளும் உத்திரப்பிரதேசம் மருத்துவ நெருக்கடிக்கு உள்ளானபோது “உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று யாராவது சமூக ஊடகங்களில் பொய் செய்தியைப் பரப்பினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும்” என்று யோகி ஆதித்யநாத் அரசு மிரட்டியது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, கொரோனா உயிர் பலிகளை மறைத்தல் என கொரோனா இரண்டாவது அலையை மோடி அரசு கையாளும் கொடூரத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு எதிராக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவர் “அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் கருத்துருவாக்கம் செய்வதற்காக காங்கிரஸ்காரர்கள் தாயாரித்த டூல்கிட்” என்று போலியான ஒன்றை பகிர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் புகாருக்கு பிறகு அந்த டூல்கிட் போலியானது என்பதை உறுதிபடுத்திய ட்விட்டர் நிறுவனம் பா.ஜ.க-வினரின் பதிவை “சித்தரிக்கப்பட்டது” என வகைப்படுத்திக் காட்டியது.
மூக்கு உடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பா.ஜ.க டூல்கிட் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீதி வழக்கு தொடுத்தது மட்டுமின்றி ட்விட்டர் நிறுவனத்திற்குள் அதிரடியாக டெல்லி போலிசை அனுப்பி ‘விசாரித்திருக்கிறது’ (மிரட்டியிருக்கிறது என்று சொல்வது தான் பொருந்தும்).
படிக்க :
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
நாடே அறிந்த உண்மையாகினும் தன்னை எதிர்த்து எந்தக் கருத்தும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள். தற்போது இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்ததன் மூலம் நமது கருத்துரிமைக்கு எதிரான பார்பன பாசிச தாக்குதல் சட்டப்பூர்வாகியிருக்கிறது.
இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
பால்ராஜ்
செய்தி ஆதாரங்கள் : BBC News Tamil, BBC News Tamil2