பாஜகவால் இலட்சத்தீவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட படேலை உடனடியாக பதவிநீக்க வேண்டும், புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள் ரத்து செய்யப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இலட்சத்தீவு மக்கள் கடந்த ஜூன் 7 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தங்கள் வீடுகளிலும், கடலோரங்களிலும், நீருக்கடியிலும் இருந்து, இலட்சத் தீவு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பிரபுல் கோடா படேல் வகுத்த புதிய சர்ச்சைக்குரிய வரைவு விதிமுறைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர், இலட்சத்தீவு மக்கள் .

படிக்க :
♦ இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
♦ இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

“நாங்கள் பிறந்த நிலத்தில் நிம்மதியாக வாழ்கிறோம்”, “நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல; தவறான தகவல்களை பரப்பாதீர்கள்” – இது போன்ற முழக்கங்களை உள்ளடக்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி கடந்த  ஜூன் 7-ம் தேதி 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை இலட்சத் தீவு மக்கள் துவங்கினர். “இலட்சத்தீவை காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்.” என்ற முழக்கமே பெரும்பாலான பலகைகளில்  ஒளித்தது.

முன்மொழியப்பட்ட, இலட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (எல்.டி.ஏ.ஆர்), சமூக நடவடிக்கை எதிர்ப்பு ஒழுங்குமுறை இலட்சத்தீவு தடுப்பு சட்டம் (குண்டாஸ் ஆக்ட்) மற்றும் இலட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை (எல்.ஏ.பி.ஆர்) ஆகியவற்றை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று போராடும் மக்கள் கூறுகிறார்கள்.

“குண்டர்கள் இல்லாத ஒரு பகுதியில், இந்தச் சட்டத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்” என்று ஒரு பதாகையில் முழக்கமிட்டிருந்தனர்.

இலட்சத் தீவில் உள்ள அனைத்து மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இவை ஊடகங்கள் மூலம் பிற மக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டது பாஜக. சமூக வலைத்தளங்கள் மூலமே இப்போராட்டத்தை பல்வேறு நபர்கள் வெளிக்கொண்டு வந்தனர்.

“இந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் தங்குவோம், எங்கள் காம்பவுண்டுகளுக்குள் பலகைகளை வைத்து கறுப்புக் கொடிகளை உயர்த்துவோம். இன்று யாருக்கும் உணவு கிடைக்காது. எங்கள் எதிர்ப்பு அனைத்து கோவிட் -19 நெறிமுறையையும் பின்பற்றும். நாங்கள் சட்டத்தை மீற விரும்பவில்லை. இது நிர்வாகியால் எடுக்கப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டங்களின் ஆரம்பம்” என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் இலட்சத்தீவு தலைவர் புன்யாமின் டி.என்.எம். கூறினார்.

இது புதிய நிர்வாகி படேலுக்கு எதிரானது மட்டுமல்ல, இலட்சத்தீவு கலெக்டர் அஸ்கர் அலிக்கும் எதிரானது என்றும் அவர் கூறினார்.

கொச்சியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “பட்டேலின் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய மக்களின் போராட்டங்கள் ஒரு தவறான பிரச்சாரத்தின் விளைவே ஆகும். இது தீவுக்கு வெளியில் இருக்கும் தீய சக்திகளால் வழிநடத்தப்படுகிறது. தீவுகளில் எந்தவிதமான பதற்றமும் இல்லை” என்று கலெக்டர் கூறியிருந்தார்.

“ஆர்ப்பாட்டங்கள் இங்குதான் தொடங்கியது, இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். எங்களுக்கு வெளியில் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. 93 ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் படேலை திரும்ப அழைக்குமாறு மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர். எங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவர்கள் எங்களை போராடத் தூண்டிவிடுபவர்கள் அல்ல, எங்கள் ஆதரவாளர்களே. இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்” என்று புன்யமின் கூறினார்.

இந்த போராட்டத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் பங்கேற்கின்றனர், மேலும் பலர் கருப்பு நிற உடையணிந்து பதாகைகளை வைத்திருந்தனர்.

“நான் இங்கு பிறந்து கடந்த 88 ஆண்டுகளாக தீவில் வசித்து வருகிறேன். இதுபோன்ற எதுவும் இதுவரை நடந்ததில்லை. பல நிர்வாகிகள் இங்கு வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் எங்கள் கலாச்சாரத்தையும் உணர்வுகளையும் மதித்தனர். இதுவே முதல்முறையாக நாங்கள் இவ்வாறு நடத்தப்படுகிறோம். இந்த நிலம் கையகப்படுத்தும் விதிகள் வந்தால், நான் எனது வீட்டை இழக்க நேரிடும், அவர்கள் சாலைகளை அகலப்படுத்தக்கூடும், தீவு மூழ்கக்கூடும். எங்கள் பால் பண்ணைகள் மூடப்பட்டும்” என்று மினிகோய் நகரில் வசிக்கும் முகமது கூறுகிறார்.

படிக்க :
நூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..
மிகிங்கோ தீவு : கென்யா – உகாண்டா நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மீனவர்கள் | படக்கட்டுரை

காஷ்மீரை கபளீகரம் செய்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது நிலத்தையும் பறித்து பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்க ஏற்பாடி செய்தது போல, தற்போது இலட்சத்தீவையும் செய்யத் துடிக்கிறது மோடி அரசு.

இலட்சத் தீவு மக்களின் இந்த ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், முற்போக்கு அமைப்புகள், உழைக்கும் மக்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்களும், விவசாய சங்கங்களும் இணைந்து ஆதரவு கரம் நீட்டுவோம். இலட்சத்தீவை காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கையில் இருந்து பாதுகாப்போம்.


சந்துரு
செய்தி ஆதாரம் : The news minute