ரு கால்பந்து மைதானத்தின் பாதி அளவுக்கும் குறைவான பரப்பளவு கொண்ட இந்த மிகிங்கோ தீவில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். கென்யா, உகாண்டா ஆகிய இரு நாடுகளும் இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடி வருவதால் எப்போதும் போர் நிலவுவதைப் போன்ற ஒரு பதட்டத்துடன் இருக்கிறது இந்தத் தீவு.

பாறைகளால் சூழப்பட்ட அந்தக் குட்டித்தீவில் பாறைகளே தெரியாத அளவுக்கு மிக மிக நெருக்கமாக தகரக் கொட்டகைகளை அமைத்திருக்கின்றனர். அடிப்படை வசதிகள் எதுவுமற்ற இந்தத் தீவில் மதுக்கடைகள், விபச்சார விடுதி, சூதாட்டம் என சகலமும் நடந்து வருகிறது. இந்தத் தீவுக்கு உரிமை கொண்டாடி உகாண்டாவும், கென்யாவும் ஒரு குட்டிப்போரையே நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஏரியின் நடுப்புறம் சிறிய அளவில் வெளியே தெரிந்து கொண்டிருந்த பாறைகள், 1990-களின் தொடக்கத்தில் மேலும் மேலும் நீர் உள்வாங்கியதன் காரணமாக பெரிய அளவில் வெளிப்பட்டு, மக்கள் குடியேறும் நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் ஐ.எஸ்.எஸ் ஆப்ரிக்கா நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகச் செயல்பட்டுவரும் இமானுவேல் சியாங்கனி.

அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதாலும், நீர்த் தாவரங்களின் பெருக்கத்தினாலும் இப்பகுதியில் மீன்பிடித்தொழில் நலிந்துவருகிறது. எனினும் ஏரியின் ஆழ்பகுதியில் கிடைக்கும் நைல் பெர்ச் என்ற மீன்களுக்கான சந்தைத்தேவை அதிகரித்திருப்பதால் மிகிங்கோ தீவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2004-ம் ஆண்டு உகாண்டா அரசு இந்தத் தீவுக்கு ஆயுதமேந்திய காவலாளிகளையும், கடற்படை வீரர்களையும் அனுப்பி, மீனவர்களைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறி வரி வசூலில் ஈடுபட்டது.

அதே சமயம் கென்ய நாட்டு மீனவர்களோ தாங்கள் உகாண்டா நாட்டு அதிகாரிகளால் சித்திரவதைக்குள்ளாகிறோம் என்று புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து கென்ய நாடும் தன் பங்கிற்கு ஆயுதமேந்திய காவலாளிகளை இத்தீவுக்கு அனுப்பியிருக்கிறது.

இத்தீவில் மனிதர்கள் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க கென்யாவும், உகாண்டாவும் 2016-ம் ஆண்டு ஒரு குழுவை ஏற்படுத்தி தங்கள் நாட்டு எல்லைகளை 1920-ம் ஆண்டுமுதல் கிடைத்த வரைபடங்களின் மூலம் வரையறுக்க முயற்சித்தன. இறுதியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரு நாடுகளும் சேர்ந்து இந்தத் தீவை நிர்வகித்து வந்தாலும் இரு நாட்டு மீனவர்களுக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவது வழக்கமாகிவிட்டது.

இந்தத் தீவு யாருக்குச் சொந்தமானது என்று இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இத்தீவுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்கிறார் உகாண்டா மீனவர் எடிசன் ஊமா.

இங்கு கிடைக்கும் நைல் பெர்ச் மீன்களுக்கு ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் கடும் கிராக்கி நிலவுவதால் கடந்த 5 வருடத்திற்குள் இதன் விலை 50 சதவீதம் எகிறியுள்ளது என்கிறார் கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங்.

நன்னீரால் சூழப்பட்ட மிகிங்கோ தீவு.

கென்யா நாட்டுக்குச் சொந்தமான உசிங்கோ தீவில் கென்யக் கொடி பறக்கிறது. இது மிகிங்கோ தீவை எதிர்நோக்கி அமைந்துள்ளது. கென்யக் கொடியை மிகிங்கோ தீவில் பறக்கவிடும் முயற்சிக்கு உகாண்டாவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

மிகிங்கோ தீவில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி. கென்ய எல்லையிலிருந்து 2 மணி நேர பயணத்திலும், உகாண்டா எல்லையிலிருந்து 12 மணி நேர பயணத்திலும் இத்தீவை அடையலாம். கென்யா இத்தீவிற்கு உரிமை கோருவதும் இதே காரணத்திற்காகத்தான்.

நைல் பெர்ச் மீன்கள் ஐரோப்பாவிற்கு நூறு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் ஆசிய சந்தையிலும் தேவை அதிகரித்துள்ளது.

37 வயதான கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங் வெறும் கையோடு திரும்பி வருகிறார். உகாண்டா கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லையில் கென்னடி அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 300 கிலோ எடையுடைய நைல் பெர்ச் மீன்கள் மட்டுமன்றி, வலை மற்றும் எரிபொருளையும்  பிடுங்கிக் கொண்டுவிட்டனர் என்கிறார்.

மிகிங்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் கென்ய மீனவர்கள் தாங்கள் உகாண்டா கடற்படையினரால் பல்வேறு வகையில் அவமதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆழமற்ற பகுதிகள் கென்ய பகுதியிலும், ஆழம் நிறைந்த இடங்கள் உகாண்டா பகுதியில் இருப்பதே இதற்கு பிரதான காரணம்.

மீனவர்கள் வாடகை படகுகளை நம்பியிருக்கவேண்டிய சூழல்தான் நிலவுகிறது. 80 சதவிகித மீன்கள் படகின் சொந்தக்காரருக்கும் 20 சதவிகித மீன்கள் மீனவர்களுக்கும் சொந்தமாகிறது என்கிறார் உகாண்டா மீனவர் எடிசம் ஊமா.

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் மற்ற மீன்வளங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டாலும், நைல் பெர்ச் மீன் வகைகள் ஆழம் நிறைந்த பகுதிகளில் நிறைய கிடைக்கின்றன.

கென்ய மீனவர்கள் வார இறுதியில் தங்கள் வீடுகளுக்குச் சென்று வரும் நிலையில், உகாண்டா மீனவர்களோ வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் செல்ல முடிகிறது.

திறந்தவெளியில் ஜரூராக நடைபெறும் சூதாட்டங்கள்.

சில பெண்கள் தங்களின் கணவன்மார்களுடன் இங்கேயே தங்கி உணவகங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர்.

35 வயதான கென்ய எலக்ட்ரீசியன் டேனியல் ஒபாதா. கடந்த இரு வருடங்களாக முடிதிருத்தும் நிலையம் மற்றும் அலைபேசி மின்னேற்ற நிலையம் அமைத்துள்ளார். கென்ய, உகாண்டா, தான்சானியா நாட்டு மக்கள்தான் தனது வாடிக்கையாளர்கள் என்றும், கென்யா நாட்டில் சம்பாதித்ததை விட மிகிங்கோ தீவில் கூடுதலாகச் சம்பாதிப்பதாகவும் கூறுகிறார்.

32 வயதான உகாண்டா மீனவர் எடிசன் ஊமா. கடந்த 5 வருடங்களாக இத்தீவில் வசித்து வருகிறார். குழந்தைகள், மனைவியை ஊரில் தங்கவைத்துவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ அவர்களைப் பார்க்கச் செல்கிறார். உகாண்டாவில் வேறு வேலைகள் எதுவும் கிடைக்காததால் இங்கே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளார். உகாண்டா கடற்படையினர் தன்னைப் பாதுகாப்பதற்காக சில மீன்களை அவர்களுக்கு இலஞ்சமாகக் கொடுக்கிறார்.

மிகிங்கோ தீவில் முதலுதவி அளிக்கும் செவிலியர் ஒருவர். சிறிய அளவிலான பிரச்சினைகளுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மை பெரிதானால் கென்யாவுக்குத்தான் செல்ல வேண்டும்.

நைல் பெர்ச் மீன்களுக்கான சந்தைத் தேவை அதிகரித்துள்ளதால் இத்தீவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. கென்யா இதை சர்வதேச அரங்கில் எடுத்துச்சென்று தங்களின் மீன் பிடி உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்கின்றனர் உள்ளூர் அரசியல் தலைவர்கள்.

நன்கு வளர்ந்த நைல் பெர்ச் மீன்களின் விலை கடந்த 5 வருடத்திற்குள் 50 சதவிகிதம் உயர்ந்து விட்டது என்கிறார் கென்ய மீனவர் கென்னடி ஊச்சிங்.

கட்டுரையாளர்கள்: Andrea Dijkstra & Jeroen Van Loon
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera


இதையும் பாருங்க :
அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க