மோடி அரசாங்கம் இந்தியா முழுவதையும் கார்ப்பரேட்டுகளுக்குப் பங்கிட்டு கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக, இவ்வளவு நாளும் அமைதியாகப் வாழ்ந்து வந்த இலட்சத் தீவு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அந்தத் தீவுகளை கார்பப்ரேட்டுகளுக்குத் தாரைவார்த்து வருகிறது.

இலட்சத்தீவுக்கான நிர்வாக அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த தமது எடுபிடியான பிரஃபுல் கோடா படேல் என்பவரை நியமித்தது மோடி அரசு. இவர் பதவியேற்றதும், இலட்சத்தீவினை கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு ஏகபோகமாகத் திறந்து விடும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றினார்.

படிக்க :
♦ இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !
♦ #Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !

இலட்சத் தீவு மக்களின் வாழ்வாதாரம் முழுவதும், கடல்சார்ந்தும், சுற்றுலாத்துறை சார்ந்துமே இருந்து வருகிறது. இயற்கை எழில் நிறைந்த இலட்சத்தீவுகளின் சுற்றுலாத் துறையை கார்ப்பரேட்டுகளின் கையில் அள்ளிக் கொடுக்கும் வகையில் அங்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக , அங்கு இலட்சத் தீவைத் தவிர பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்க முடியாது என்ற கட்டுப்பாட்டை தளர்த்தியிருப்பதோடு, சாலைகளை விரிவுபடுத்துவது, மதுக்கடைகளைத் திறப்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்வதற்குச் சாதகமாகக் கொண்டுவந்துள்ளார் பிரஃபுல் படேல்.

மேலும், மாட்டுக் கறிக்குத் தடை, பள்ளிகளில் இறைச்சு உணவுக்குத் தடை என ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையும் நடைமுறைப்படுத்தி வருகிறார் மோடியின் செல்லப் பிள்ளையான பிரஃபுல் படேல்.

இவை தவிர கருத்துரிமையைப் பறிக்கும் சட்டங்கள் மற்றும் குண்டர் சட்டம் உள்ளிட்ட பிற கருப்புச் சட்டங்களையும் அங்கு கொண்டுவந்திருக்கிறார் பிரஃபுல் படேல்.

இலட்சத்தீவில் புதியதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் இத்தகைய சட்டங்களை எதிர்த்து, பல்வேறு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டு, இலட்சத்தீவு மக்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

பிரஃபுல் படேல் நிர்வாக அதிகாரியாக பதிவியேற்ற இந்த ஆறு மாதங்களில் மட்டும், அவருக்கு எதிராகவும், போலீசு மற்றும் இலட்சத் தீவின் உள்ளாட்சி அரசாங்கத்தின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும். 11 ரிட் மனுக்கள் உள்ளிட்ட 23 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இலட்சத்தீவுகளைப் பொருத்தவரையில் அங்கு வாழும் மக்களில் சுமார் 83% பேர் மலையாளிகள். அங்கு அலுவலகரீதியாக மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா, இலட்சத்தீவுகளில் இருந்து கடல்வழியில் 200 கிமீ தூரம் அருகாமையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் அந்த யூனியன் பிரதேசத்திற்கான வழக்குகளின் மேல் முறையீட்டிற்கான உயர்நீதிமன்றமாக கேரள உயர்நீதிமன்றமே செயல்பட்டு வந்தது. சமீபத்தில் அங்கு நடந்த போராட்டங்கள் தொடர்பான வழக்குகளுக்கான மேல்முறையீடுகள் கேரளா உயர்நீதிமன்றத்தில் தான் நடத்தப்பட்டன.

கேரள மக்களுக்கும், இலட்சத் தீவில் இருப்பவர்களுக்குமான உறவு உயர்நீதிமன்றம் என்பதாக இல்லாமல், மொழிசார்ந்ததாகவும், கலாச்சாரம் சார்ந்ததாகவும் இருந்து வருகிறது. சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்களுக்குப் பயந்து, அருகாமை போக்குவரத்து வழியாகிய கேரளாவில் இருந்து இலட்சத்தீவுக்குச் செல்லாமல், கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்றுவந்தார், பிரஃபுல் படேல்.

இந்நிலையில், இலட்சத்தீவுக்கான மேல்முறையீட்டு மன்றமாக இருந்து வரும் கேரள உயர்நீதிமன்றத்திற்குப் பதிலாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தை இலட்சத்தீவு மக்களின் மேல்முறையீட்டுக்கான மன்றமாக மாற்றுவதற்கான வரைவு ஒன்றை முன்வைத்திருக்கிறது, லட்சத்தீவு நிர்வாகம்.

கேரளாவில் மேல் முறையீடு என்பது இலட்சத்தீவு மக்களின் மொழி என்ற வகையிலாகட்டும், எளிமையான போக்குவரத்து என்பதிலாகட்டும் அனைத்து வகையிலுமே எளிமையானது. சாதாரண மக்களுக்கும் கூட ஓரளவுக்குச் சாதகமானது. ஆனால் மேல் முறையீட்டுக்கான நீதிமன்றத்தை கர்நாடகாவில் வைப்பது என்பது, நீதிமன்றத்தை மக்கள் எளிமையான வகையில் அணுக முடியாததாக மாற்றும் நடவடிக்கை ஆகும்.

படிக்க :
♦ இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
♦ இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்

அந்த வகையில் மக்களின் உரிமைகளை சத்தமின்றி பறிக்கவும், எதிர்த்துப் போராடும் மக்களை சிறையில் அடைத்து, அவர்கள் எளிதில் நீதிபெற முடியாதபடி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தை மேல்முறையீட்டுக்கான நீதிமன்றமாக அறிவிக்கக் காத்திருக்கும் முன் மொழிவு ஆகும்.

இந்த நீதிமன்ற மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட்டு விட்டதெனில், அத்தகைய நிகழ்வு, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதற்கான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.


கர்ணன்
செய்திஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க