துரைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கடந்த 22-ம் தேதி வந்திருந்த நிலையில் அவர் செல்லும் வழித்தடங்களை செப்பனிட்டு, தெருவிளக்குகளை சரி செய்து, சாலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி கடந்த 21-ம் தேதியன்று மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம் மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டார்.

அந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் அதே நாளில் பரவலாகப் பரவி, பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். சமூக ஜனநாயக அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொண்ட நபரின் வருகைக்குக் கொடுக்கப்படும் வழக்கமான அறிவிப்பு என்பதாக முதலில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் காரணம் தெரிவித்தார்.

படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !

பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற் போல சாலையில் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது போன்றவை அரசு விதிமுறைப்படி தேவையாக இருக்கலாம். ஆனால் சாலையை சுத்தமாக வைத்திருப்பது, தெரு விளக்குகளை சரி செய்வது என பெரும் தனிச் சிறப்பு எடுத்து உத்தரவிட்டிருப்பது பெரும்பாலானோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டைக் கெடுக்கும் இந்துத்துவக் கும்பலின் தலைவருக்கு இவ்வளவு மெனக்கெடலா என்ற கேள்வியை பலரும் திமுகவை நோக்கி சமூக வலைத்தளங்களில் எழுப்பினர். திமுகவைக் கடுமையாகத் தாக்கியும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். என்ற தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத அமைப்பின் தலைவருக்கு கொடுக்கப்படும் வரவேற்பு பெரும்பான்மையினரின் வெறுப்புக்கு ஆளானது.

அண்ணாமலையின் அறிக்கை

அதனைத் தொடர்ந்துதான் அந்த துணை ஆணையரை பொறுப்பிலிருந்து விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கடந்த 21-ம் தேதியே உத்தரவிட்டார்.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடந்து 23.07-2021 அன்று பாஜக சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையை முடிக்கும் போது, துணை ஆணையர் சண்முகத்தின் பணி விடுவிப்பு ரத்து செய்யப்படவில்லை என்றால் இவ்விவகாரம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

துணை ஆணையர் சண்முகத்தை திமுக தானாக பொறுப்பு விடுவிப்பு செய்யவில்லை. ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட மோகன் பாகவத்துக்கு கூடுதலாக அக்கறை செலுத்திய சண்முகத்தின் செயல்பாட்டை தமிழக அரசின் செயல்பாடாகத்தான் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். பாஜகவை நோக்கிச் சரணடையும் திமுக என கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த கண்டனங்களைக் கண்டு அஞ்சி தான் திமுக அரசு சண்முகத்தை அந்தப் பதவியிலிருந்து விடுவித்தது.

ஆகவே, “ஸ்ரீ அண்ணாமலை ஜி” அவர்களே, மக்கள் மன்றத்திலிருந்து எழுதப்பட்ட தீர்ப்புதான் சண்முகத்தின் மீதான பணி விடிவிப்பு நடவடிக்கையே தவிர, அது மதுரை மாநகராட்சி ஆணையரோ, தலைமைச் செயலரோ, திமுக தலைமையோ தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.


கர்ணன்
செய்தி ஆதாரம்
: தீக்கதிர் – 23/07/2021