The Caravan இதழில் இந்த மாதம் அட்டைப்படக் கட்டுரையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலைத் தீர்மானித்த ‘குருஜி’ கோல்வால்கரின் ஜெர்மானிய நாஜி பாசம் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாஜி கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதையும் முன்வைத்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர் திரேந்திர ஜா.

நிழல் ராணுவங்கள்’ என்ற தலைப்பில் சங் பரிவாரின் அமைப்புகள் குறித்து இவர் எழுதிய புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இவரது ‘Aesthetic Games’ இந்து சாமியார்களுக்கும், இந்துத்துவத்திற்கும் இடையிலான தொடர்பை விவரிக்கும் முக்கியமான நூல்.

படிக்க :
♦ மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா
♦ நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர் மெக்வன்ஷி || சு.கருப்பையா

’குருஜியின் பொய்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையில் இருந்து…

  • We or Our Nationhood defined என்று கோல்வால்கர் எழுதிய புத்தகம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்துக்களுக்கு ஹிட்லர் போன்ற தலைவர் தேவை என்றும், சிறுபான்மையினரை நாஜிக்கள் யூதர்களை அழித்ததுபோல அழிக்க வேண்டும் எனவும், இந்துத் தேசியம் குறித்து நாஜி ஜெர்மனியைப் போன்ற ஒப்பீடுகளுடன் எழுதியிருக்கிறார் கோல்வால்கர். 1939-ல் வெளியான இந்தப் புத்தகத்தை, காந்தி படுகொலைக்குப் பிறகு, தான் எழுதவேயில்லை என்று பல்டி அடித்ததை அம்பலப்படுத்தியிருக்கிறார் திரேந்திர ஜா.
  • We or Our Nationhood defined புத்தகம் சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் மராத்தி மொழியில் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்று 1963ல் அறிவிக்கிறார் கோல்வால்கர். கணேஷ் சாவர்க்கர் எழுதிய அந்தப் புத்தகம் இந்துத் தேசியம் குறித்த புத்தகம் என்ற போதும், அது நாஜி ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையில் விளக்கப்படுகிறது. கணேஷ் சாவர்க்கர் இறந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாஜி தத்துவத்தோடு ஒப்பிட்டு விமர்சனங்கள் எழ, தனது தலைமைப் பொறுப்பையும், தனது அமைப்பையும் காப்பாற்ற இப்படியொரு பொய்யைக் கூறியிருக்கிறார் கோல்வால்கர்.
  • முசோலினியின் பாசிஸ்ட் கட்சியும், ஹிட்லரின் நாஜி கட்சியும் தங்கள் தேசிய வளர்ச்சியை முன்னிறுத்தி, தங்கள் வரலாற்றுப் பெருமையை மீட்டதை இந்துக்களும் செய்ய வேண்டும் என்று எழுதுகிறார் கோல்வால்கர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரும், அதன் முதல் தலைவருமான ஹெட்கேவாரின் குரு மூஞ்சே இந்து மகா சபா அமைப்பை நடத்தி வந்தவர். இவர் இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்தவர்.

  • We or Our Nationhood defined புத்தகமே கோல்வால்கருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அடையாளத்தைத் தேடித் தந்திருக்கிறது. அதுவரை ஹெட்கேவாரின் வலதுகரமாக கருதப்பட்டவர், இந்தப் புத்தகத்தின் மூலமாகவும், அதுகுறித்த விவாதங்களின் மூலமாகவும் சங்கிகளை ஈர்த்திருக்கிறார். அதனால் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவி அவருக்குக் கிடைத்தது. ஹெட்கேவார் தனக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் தலைவராக கோல்வால்கரை நியமித்திருக்கிறார்.
  • காந்தி படுகொலை வரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோல்வால்கரின் நாஜி கருத்துகளை வெளிப்படையாகப் பிரசாரம் செய்து வந்திருப்பதை அன்றைய உளவுத்துறை அறிக்கைகள் காட்டுகின்றன. ‘முஸ்லிம்களை எதிர்ப்பது மட்டும் நமது குறிக்கோள் அல்ல; அவர்களை அழிக்க வேண்டும். அதற்காக ஆட்களைத் தயார் செய்ய வேண்டும்’ என்று 1942-ல் பேசியுள்ளார் கோல்வால்கர். அன்றைய உளவுத்துறை அறிக்கைகளின்படி, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஹெட்கேவார், சாவர்க்கர், மன்னர் சிவாஜி ஆகியோரின் வரலாற்றோடு ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். கோல்வால்கர் தன்னை Hindu führer ஆக மாற்றிக்கொள்ள கடும் முயற்சி எடுத்திருக்கிறார்.
  • காந்தியின் படுகொலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது. அமைப்பு தடை செய்யப்பட, மென்மையான பாதையைத் தேர்ந்தெடுத்தார் கோல்வால்கர். அதுவரை, இந்துக்களின் காவலனாகத் தன்னை முன்னிறுத்திய அவர், அதன் பிறகு தன்னை கடவுளின் அவதாரம் என்று முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கினார். We or our Nationhood defined புத்தகத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டவர், பத்திரிகை சந்திப்புகளில் தன்னைப் புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கட்டளையிட்டார். அவரது ஆணையையும் மீறி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் தனது முகத்தை மறைத்திருப்பதையும் The Caravan இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
  • 1998-ல் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பி.ஜே.பிக்கும் பாசிஸ்ட் கட்சிக்கும் தத்துவார்த்த ரீதியாகத் தொடர்பு இருப்பதைக் கேள்வி எழுப்பிய போது, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, கோல்வால்கருக்கும் அந்தப் புத்தகத்திற்கும் தொடர்பில்லை என்று பதிலளித்தார்.

வெளிநாட்டு இந்துத்துவ ஆதரவாளர் டேவிட் பிராவ்லி முதல் உள்நாட்டு சங்கி இண்டெலெக்சுவல்கள் வரை கோல்வால்கருக்கும் நாஜி தத்துவத்திற்கும் தொடர்பில்லை என்பதைப் பதிவு செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்திருந்தாலும், அதனை ஆதாரங்களோடு மறுத்திருக்கிறது திரேந்திர ஜாவின் இந்தக் கட்டுரை.

ஃபேஸ்புக் பார்வை
ர. முகமது இல்யாஸ்

முகநூலில் : Ilyas Muhammed Raffiudeen

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க