ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத், 2021 மே 15-ஆம் தேதி அன்று இந்தியாவின் கோவிட் பெருந்தொற்று பேரழிவு பற்றி, ‘வரம்பற்ற நேர்மறையான’ கருப்பொருளில் உரையாற்றினார். அதன் பின்னர் தேசிய ஊடகங்களில் இருக்கும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் கூட மோடியை சாத்தான் போலவும், மோகன் பகவத்தை தேவதை என்றும் பாடத் துவங்கினர். “பகவத் மோடியை மட்டந்தட்டி பேசினார்’‘, “கூட்டுப் பொறுப்பு ஏற்குமாறு பகவத் அவருக்கு அறிவுரை வழங்கினார்’‘, “நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கு தான் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது” மற்றும் இது போன்றவையே அவற்றின் கருப்பொருள்களாகும். சமூக ஊடகங்களிலும் இதே போன்ற கருப்பொருளில் பல சுற்று விவாதங்களைக் கிளப்பி வருகின்றனர்.

மோடிக்கு நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கான செய்தியை வழங்கிய இந்த மகத்தான பேச்சுக்கு சற்று முன்பு, பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் ஒரு இணைய செய்தி ஊடகத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில், மோடியை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறும் அவருக்குப் பதிலாக வேறு எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் நபராவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் மோடிக்கு வழக்கத்திற்கு மாறான முறையில், “தயவுசெய்து பதவி விலகுங்கள்உங்களது இடத்தில் தற்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்ன் ஒப்புதலுடன் அமர உங்களது கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்திற்கும் தற்போதுள்ள (பெருந்தொற்று) நெருக்கடி நிலைமையைக் களையும் மேலாண்மைக் குழுவிற்கும் தலைமை தாங்க முடியும்என்பதாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். (Scroll.in).

படிக்க :
♦ கங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோகன் பகவத் ஒரு புதிய பிரதமரை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தவ்லின் சிங் போன்ற சில முன்னாள் மோடி பக்தர்கள்‘, பெருமளவில் நிகழ்வுகளின் போக்கை சரிசெய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சங்க பரிவாரத்துக்கு பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா நெருக்கடி மதச்சார்பற்றவர்களின் தார்மீக நெறிமுறைகளை மாற்றியுள்ளது. பகவத்தும் ஆர்.எஸ்.எஸ்ம் வரம்பற்ற நேர்மறையான வலைப்பின்னலாகத் தெரிகின்றன. அவர்களைப் பொருத்தவரையில், மோடி வெளியேறினால், அனைத்தும் சரியாகிவிடும்

மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய மதச்சார்பற்ற அறிவுத் துறையினரின் இவ்வகையான புரிதல், பல சூத்திர / இதர பிற்படுத்தப்பட்ட சாதி (OBC) இளைஞர்களை மோடியின் அரசியல் வலைக்குள் தள்ளி அவரின் பிடியில் சிக்க வைக்கிறது. மோடி சூத்திர OBC-யோ இல்லையோ, ஆனால் அவரது கையில் OBC என்ற சான்றிதழ் உள்ளது.

மோடி தன்னைப் பற்றிய பல சுய விளம்பரங்களின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, தான் ஒரு ஏழை இதர பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவராகவும், தான் ஒரு தேநீர் கடைக்காரனாகவும், அவரது தாயார் ஒரு வேலைக்கார பணிப்பெண் என்றும் தான் ஒரு காவலாளி என்றும் பல தோற்றங்களைக் கொடுத்திருக்கிறார். இது தென்னிந்தியா உட்பட, நாடு முழுவதும் உள்ள ஓ.பி.சி.க்களை அவரை நோக்கி சாய்த்துள்ளது.

மோகன் பகவத் 2014 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கூட தாம் ஒரு கடுமையான இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளன் என்பதை வெளிப்படையான அறிக்கைகளில் வெளியிட்டவர். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது பற்றி அவர் பலமுறை வெளியிட்ட அறிக்கைகள்தான், மத்திய அரசை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (இபிசி) 10 சதவீத ஒதுக்கீட்டை அரசியல் சாசனத் திருத்தத்துடன் கட்டாயமாகத் திணிக்கச் செய்தது.

தகுதி  மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கான எதிர்ப்பு குறித்த முக்கியமான அறிவுசார் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சித்தாந்தவாதிகளிடம் இருந்து வந்தது. மோடி அனைத்து அரசுத்துறை வேலை ஆதாரங்களையும், தனது ஏகபோக முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு பயனளிக்கும் வகையில்  தனியார்மயமாக்கினாலும், .பி.சி வாக்குகளை மனதில் கொண்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெளிப்படையாக பேசுவதில்லை.

மோடி தேர்தல் மூலமான கொடுங்கோன்மை ஆட்சி நடைமுறைப்படுத்தப் படுவதை நேசிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புரீதியாக தேர்தல்களை கீழறுப்பதன் மூலம் மனுதர்ம ரீதியான கொடுங்கோன்மை ஆட்சியை நேசிக்கிறது. ஹெட்கேவர் தொடங்கி கோல்வால்கர், மோகன் பகவத் வரை இந்திய தேசத்தின் மீதான சர்வாதிகாரக் கட்டுப்பாடு குறித்த கோட்பாட்டையும் நடைமுறையையும், அவர்களின் எழுத்துக்களிலும் நடைமுறைகளிலும் வகுத்துள்ளனர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முஸ்லீம் அச்சுறுத்தல் பற்றிய அச்சத்தை உருவாக்குவதை அடித்தளமாகக் கொண்டுதான் அவை வகுக்கப்பட்டுள்ளது.

சூத்திர /இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு / தலித் சமூகத்தைச் சேர்ந்த எவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாட்டை எழுதியதோ, 1925 முதல் இப்போது வரை அமைப்புத் தலைமைப் பொறுப்பை வகித்ததோ கிடையாது. அதன் கோட்பாட்டு எழுத்தாளர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்த தலைமை தாங்கியவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மட்டுமே. முக்கியமாக ஒரு வலுவான பிற்போக்கு சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களாக, அறிவியல் எதிர்ப்பு கண்ணோட்டமும் மனநிலையும் கொண்ட பார்ப்பனர்களாக இருந்தனர். இதனாலேயே ஜவஹர்லால் நேருவின் அறிவியல் அணுகுமுறையை மேற்கத்திய சார்புடையது என்று அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.

கொரோனா தாக்குதலின் சாவு மணிக்கான அடிப்படை, வேறு பல காரணிகளைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் எண்ணற்ற இந்துத்துவ அமைப்புகளின் வலைப்பின்னல்களின் நீண்டகால அறிவியல் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் வேர்கொண்டுள்ளது. ஜவஹர் லால் நேரு மற்றும் வி.பி.சிங் தவிர மற்ற அனைத்து பிரதமர்களும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைக்கப்பட்டனர். அவர்கள் ஒருபோதும் சொந்தமாக தமக்கென ஒரு அறிவியல் ஆர்வத்தைக் கொண்டதில்லை. பெரும் அறிஞராக அழைக்கப்படும் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இந்துத்துவா மீது மிகவும் அனுதாபம் கொண்டிருந்தார். அடல் பிகாரி வாஜ்பாயி இந்துத்துவவாதிகளின் சொந்த மனிதர் – அறிவியல் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அறிவியல் எதிர்ப்பு மூடநம்பிக்கையைப் பரப்பியது. இந்திய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் அறிவியல் எதிர்ப்பு பிரச்சாரத்தால் பலியாக்கப்பட்டுள்ளனர். மோகன் பகவத் அந்த மொத்த அறிவியல் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு தலைமை தாங்குகிறார் என்றால், மோடி அரசிற்கு (அந்த கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி) தலைமை வகிக்கிறார். இந்திய சமூகமானது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மீதான பார்ப்பன கட்டுப்பாட்டின் காரணமாக அறிவியலுக்கும் கட்டுக்கதைக்கும் இடையே போராடிக் கொண்டுள்ளது.

தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் பசுவின் மூத்திரம் மற்றும் அதன் சாணத்தின் மருத்துவ குணங்களுக்கும், அலோபதி மருத்துவ நடைமுறைகளுக்கு எதிர்ப்பாகவும் பிரச்சாரம் செய்து வருகிறது. பாபா ராம்தேவ் அவர்களின் கருத்தியல்ரீதியான வாரிசுதாரர். கும்பமேளா வகையான பழமையான ஆன்மீக அணிதிரட்டல்களே ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய பணிகளாக இருந்தன. அறிவியல் கண்ணோட்டத்தைப் புறக்கணிப்பதிலும் பரந்துபட்டமக்களின் சிந்தனையை வகுப்புவாதப்படுத்துவதிலும் தப்லீக் ஜமாத் போன்ற முஸ்லீம் அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் போட்டியிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லீம் பழமைவாதிகளுக்கு இடையிலான போட்டி இந்தியாவில் மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை தடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னை உலகின் மிகப்பெரிய சமூக-கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்கிறது. ஆனால் அது நாட்டில் எந்த ஒரு பெரிய சுகாதார மையத்தையும் கட்டவில்லை. முஸ்லீம் ஆட்சியாளர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், நல்ல மருத்துவமனைகளை ஒருபோதும் கட்டவில்லை என்பதே உண்மை. அவர்கள் கோட்டைகள் போன்ற பெரும் கட்டிடங்கள், சார்மினார் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அன்புக்குரிய பெண்களின் பெயரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ்-ம் கூட கோயில்களைக் கட்டும் பிரச்சாரங்களைச் செய்ததே ஒழிய, ஒருபோதும் சுகாதார நல மையங்களைக் கட்டவில்லை.

கிறிஸ்தவ மிஷனரிகள், சுதந்திர இந்தியாவில் கணிசமாக மதம் மாற்றவில்லை என்றாலும், அவர்களை மதமாற்றவாதிகளாகக் காட்டி ஆர்.எஸ்.எஸ் தாக்குகிறது. ஆனால் கி.பி. 1900-ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கட்டியது முதல் பல மருத்துவமனைகளை அவர்கள் நாடு முழுவதும் கட்டியுள்ளனர்.

மோகன் பகவத் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானபோது, நாக்பூர் கிங்ஸ்வே மருத்துவமனை (ஆங்கில / கிறிஸ்தவ பெயரை யாரும் கவனிக்க முடியும்) என்று அழைக்கப்படும் அலோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். (இந்தியன் எக்ஸ்பிரஸ், 16 ஏப்ரல், 2021). பல மாநிலங்களில் உள்ள அவரது ஊழியர்கள் மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாண சிகிச்சை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், மோகன் பகவத் அதிக புரோட்டீன் சத்து கொண்ட நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கான உணவைச் சாப்பிட்டதாக மருத்துவ அறிக்கை கூறியது. மாட்டு மூத்திரம், மாட்டுச் சாண சிகிச்சை போன்ற அறிவுக்குப் பொருந்தாத சங்கி கும்பலின் நடவடிக்கைகளை அவர் ஒருபோதும் பொதுவெளியில் கண்டிக்கவில்லை. இந்த கலாச்சார தேசியவாதத்தின் அர்த்தம் என்ன? அவரது மதச்சார்பற்ற அபிமானிகள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நாட்டை கொரோனா நோய்த் தொற்று தாக்கியதற்குப் பின் அருந்ததி ராய் மற்றும் பல அறிவுத் துறையினர் செய்வதுபோல மோடி என்ற தனிமனிதரை குறிவைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோகன் பகவத் போன்ற அதன் தலைவர்களை தேவதூதர்களாக முன்னிறுத்துவது, சூத்திர / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளவதற்கே உதவும். அவர்கள் மேலும் மேலும் மோடியின் (RSS) பிடிக்குள் செல்வதற்கான ஆபத்துள்ளது. இதில் இந்தியாவில் நீண்ட காலமாக அதிகாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களின் உணர்ச்சிபூர்வமான பிரதிநிதித்துவ பதில் உள்ளது.

இருபிறப்பாளர்களான பார்ப்பன அறிவுத் துறையினர் இசுலாமியர்களை மையப்படுத்தி இந்து மதத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் வகை பார்ப்பனியத்தின் ஒரு பகுதியாக அனைத்து சூத்திரர்கள் / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளையும், இந்து மதத்திற்குள் அடைத்து இந்து பெரும்பான்மைவாத கோட்பாட்டை நிறுவுகிறார்கள். பார்ப்பனியம்தான் இந்த சூத்திர / ஓபிசி / தலித் / ஆதிவாசி வாழ்க்கையை தொட்டால் தீட்டு என தீண்டத் தகாதவர்களாகவும், கண்ணால் பார்ப்பதே பாவம் என பார்க்கக் கூடாதவர்களாகவும், பொதி சுமக்கும் கழுதைகளைப் போல கடுமையாக உழைக்கும் விவசாயக் கூலிகளாகவும் ஆக்கியது. ஜாட்கள், குஜ்ஜார்கள், படேல்கள், மாராத்தாக்கள் போன்ற உயர்மட்ட விவசாய சூத்திரர்கள் கூட இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மத தேசிய வாத அமைப்பாக வழிநடத்துவதாக கூறிக்கொள்ளும் ஆசாரியத்துவ உரிமையைப் பெறவில்லை.

இத்தகைய அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரின் பிரச்சினையை மையமாகக் கொண்டு வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்த்தனர். தலித்/ஆதிவாசி/சூத்திர விடுதலை என்பது மிகவும் வரலாற்று ரீதியான கேள்வியாகும். இந்த சக்திகளின் விடுதலை விஞ்ஞானவாத வளர்ச்சியுடன் தொடர்புடையது. மோகன் பகவத் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அறிவியல் வாதத்திற்கு எதிரானது. மோடியின் அதிகாரவெறி கொண்ட தலைமையை அகற்றுவதற்காக, அவர்கள் மோகன் பகவத்தை நம்பியிருந்தால் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் பலவீனமடையப் போவதில்லை.

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் தமது சித்தாந்த அடிப்படையாக அறிவியல் வாதத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கவில்லை. ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனத்தை உருவாக்க முயன்றார், அதனால் வழக்குகளை எதிர்கொண்டார். இப்போது அவரும் நின்றுவிட்டார். தனது கட்சியில் ஒரு சூத்திர / ஓபிசி தலைவரைக் கூட கொண்டிராமல், மோடி மீது மட்டுமே அவரது கவனம் உள்ளது. அது இப்போதும் கூட நிச்சயமாக மோடிக்கு உதவுகிறது.

படிக்க :
♦ வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா
♦ காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை

இப்போது கவனம் மோடியை அகற்றுவதில் மட்டுமே உள்ளது. அது எதிர்க்கட்சிகளுக்கு சரியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் மோடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அமித் ஷா அல்லது யோகி ஆதித்யநாத்தை நிறுத்துகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குச் சம்மதமா? ஆர்.எஸ்.எஸ்-ல் யார் ஜனநாயகவாதி?, அந்த நபர் தற்போதைய சகதியில் இருந்து வெளியேற நாட்டிற்கு எவ்வாறு உதவுகிறார்? இரண்டாவது கொரோனா அலை கும்பமேளாவில் பரவியது, இதில் ஆர்.எஸ்.எஸ்-ன் காரியகர்த்தாக்கள் தரைமட்டத்தில் வேலை செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, கிராமம் கிராமமாக,  நகரம் நகரமாகச் சென்று வைரசை பரப்பவில்லையா? இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது மோகன் பகவத் என்ன செய்தார்? ஒரு நெருக்கடியான தருணத்தில் மேலும் அதை ஆழப்படுத்தும் ஒரு தவறைச் செய்யாதீர்கள் !

(குறிப்பு : காஞ்சா அய்லையா ஷெப்பர்ட் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் ஆசிரியர். அவரது சமீபத்திய புத்தகம் கார்த்திக் ராஜா கருப்புசாமியுடன் இணைந்து தொகுக்கப்பட்ட ’ஒரு புதிய பாதைக்கான சூத்திரர்கள்-பார்வை’)

கட்டுரையாளர் : காஞ்சா அய்லைய்யா
தமிழாக்கம் : நாகராசு
செய்தி ஆதாரம் : Counter Currents

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க