சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டின் ‘ஆண்டைகளுக்கு’ எதிராக கலகக் குரல் எழுப்பிய அதே கங்கணா ரணாவத் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜகவின் அரசியலையும் அப்பட்டமாக ஏற்கிறார்.  இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு பார்வையை அளித்திருக்கிறார், சமூக செயற்பாட்டாளர் காஞ்சா அய்லையா.

இடைநிலை சாதிகளிலிருந்து வந்த ஆதித்யநாத்தும், கங்கணாவும் இந்துத்துவ சக்திகளின் அடியாட்களாக மாறியுள்ளதையும் அவர்கள் பின்னால் பெரும்பான்மை சமூகம் திரளும் ஆபத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் காஞ்சா அய்லய்யா கூறுகிறார்.

0o0o0

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையும், சிவசேனா அரசாங்கத்திற்கு எதிரான கங்கனா ரணாவத்தின் கிளர்ச்சியும், பாலிவுட்டின் போதைப்பொருள் கலாச்சாரம் என்று அழைக்கப்படுவதும் வெறும் அரசியல் மட்டுமல்ல –  அது ஆழமான சாதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. இந்திய ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்த கேள்வியைத் தவிர்க்க முயற்சிக்கின்றன அல்லது அவை இவ்விவகாரங்களை புறக்கணிப்பவையாக இருக்கின்றன

கங்கனா, சுஷாந்த்சிங், ரியா

சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த சுஷாந்த்தும் கங்கனாவும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள். பாலிவுட், பிற பிராந்திய மொழித் திரைப்படத் தொழில்களைப் போலல்லாமல், பிராமணர்கள், பனியாக்கள், கயஸ்தாக்கள், காத்ரிகள் மற்றும் முல்லாக்களின் பழமைவாத கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறிய ஒரு சில முஸ்லீம்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

வரலாற்று ரீதியாக ஆளும் வர்ணமான சத்திரியர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு, நவீன, ஆங்கிலம் பேசும் மேற்கத்திய மயமாக்கப்பட்ட சமூகமாக உருவாகவில்லை. இந்த சமூகம் மிக சமீபத்திய காலம் வரை மிகவும் பழமைவாதத்துடன் இருந்தது. பாலிவுட் படிப்படியாக ஆங்கில படித்த, மேற்கத்திய முதலாளித்துவ கலாச்சாரத்துடன் – இந்தி மற்றும் ஆங்கிலம் என – இருமொழி பேசும் எழுதும் நபர்களைக் கொண்ட நவீன துறையாக வளர்ந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தி திரையுலகம் பல பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு வடிவங்களில் ஹாலிவுட்டைப் பார்த்து அதை அப்படியே இங்கும் பின்பற்றியது. சந்தைப்படுத்துதற்குரிய நல்லதொரு காரணியான நவீனத்துவத்தின் பாசாங்குகளைக் கொண்டிருந்தாலும் கூட, அதன் மையத்தில் அது மிகவும் பிற்போக்குத்தனமாகவே உள்ளது. தயாரிப்பாளர்கள் பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தாலும், பெரும்பாலான முதன்மை நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மேற்கத்திய தாக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டில் பிறந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிகர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வாய்ப்புகளைத் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் காரணிகள் அனைத்தும் அதற்கு ஒரு உலகளாவிய பரிமாணத்தைக் கொடுத்தன.

தேசியவாத இயக்கத்தின் போதும் அதற்குப் பின்னரும் பார்ப்பனர்கள், பனியாக்கள், கயஸ்தாக்கள் மற்றும் காத்ரிகள் சீர்திருத்தப் பட்டதால் திரையுலகிற்குள் விரைவாக நுழைந்தனர். 2014 இல் ஆர்.எஸ்.எஸ் / பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தொழில்துறையில் ஒரு கலாச்சார மோதல் நிலவுகிறது. தவிர்க்கவியலாத வகையில் எதிர்வரப் போகும் நிலைமையை உணர்ந்து அவர்களில் சிலர் இந்துத்துவ சார்பு நிலைப்பாட்டை அழுத்தமாக எடுத்தனர். பாலிவுட் கலாச்சாரம் எப்போதும் இந்துத்துவ கலாச்சார பெரியண்ணன்தனத்துடன் முரண்பட்டதாகவே உள்ளது. இருப்பினும், இன்னும் பலரும் வகுப்புவாதம், மத பழமைவாதம் மற்றும் கலாச்சார பெரியண்ணன்தனத்துடன் இயைவது இல்லை.

சத்திரியர்கள் தங்கள் நிலப்பிரபுத்துவ இந்து கலாச்சாரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், இந்தத் தொழிற்துறைக்கு வெளியே இருந்தனர். இன்றும் கூட, வேறு எந்த இருபிறப்பாளர் சமூகத்தின் பெண்களையும் விட அவர்களின் பெண்கள்தான் அதிகமாக ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

இருபிறப்பாளர் சாதிகளான பார்ப்பன, பனியா, கயஸ்தா மற்றும் காத்ரி ஆகியவற்றைப் போல் அல்லாமல், சத்திரியர்கள் ஆங்கில வழிக் கல்வியைப் பயில தயங்கியபோது தங்கள் சமூக பீடத்திலிருந்து கீழிறங்கினர். இது அவர்களின் அரசியல் வாய்ப்புகளையும் பாதித்தது.

படிக்க :
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
♦ இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

பார்ப்பனர்கள் ஆங்கில வழிக் கல்வியைப் பெற்று பயனடைந்தனர் – ராஜா ராம்மோகன் ராய் முதல் பண்டிட் ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் வரை (இடையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பி.வி. நரசிம்ம ராவ்) – டெல்லியில் பார்ப்பன ஆதிக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது. பனியாக்களில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி முதல் ராம் மனோகர் லோஹியா, நரேந்திர மோடி (ஓபிசி சான்றிதழுடன்) வரை வெளிப்பட்டார்கள். ஆங்கிலக் கல்வியிலும் அவர்களின் தொழில்துறை மூலதனக் குவிப்பிலும் தங்களது வேர்களைக் கொண்டுள்ளனர். (மோடி ஆங்கிலம் படித்தவர் அல்ல என்றாலும், ஏகபோக பனியா மூலதனத்தின் அவரது ஆதரவு தளம் இணையற்றது).  சுபாஸ் சந்திரபோஸ் முதல் ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண் , லால் பகதூர் சாஸ்த்ரி, ஜோதி பாசு வரை கயாஸ்தா சமூகத்திலிருந்து வந்தனர். சில அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் பிரதமர்களாக ஆன இந்தர் குமார் குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் காத்ரி பின்னணியைச் சேர்ந்தவர்கள்.

நன்கு அறியப்பட்ட அரசியல்வாதிகளான வி.பி. சிங், சந்திர சேகர் ஆகியோர் பிரதமர்களானபோது, அவர்கள் இருவரையும் ஊடகங்கள் விரும்பவில்லை. சவுதாரி சரண் சிங் (ஜாட்) மற்றும் எச்.டி.தேவேகவுடா (ஒக்கலிகா) ஆகியோர் சூத்திர பிரதமர்களாக இருந்தனர். அவர்களுக்கும்  நல்ல வசதியோ, நல்ல ஆங்கிலக் கல்வியோ கிடைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் இருந்து, அவர்கள் கிராமப்புற விவசாய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்நிலைமையின் ஒரு பகுதியாகவே, பாலிவுட்டில் அதிகமான சூத்திரர்களும் தலித்துகளும் உயர் மட்ட வேலைகளில் இல்லை.

இதில் ஆர்வமூட்டக்கூடியது என்னவென்றால், வி.பி.சிங் மற்றும் சந்திர சேகர் இருவரும் ஏழைகளுக்கு ஆதரவானவர்களாகவும் சிங்கின் ஓபிசி / எஸ்சி / எஸ்டி சார்பு நிலை நன்கு அறியப்பட்டதாகும். அவர்கள் சத்திரியர்களின் தலைவர்கள் அல்ல.

ராமர் கோயில் பிரச்சினையை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதன் மூலம் யோகி ஆதித்யநாத் ஒரு சத்திரிய பின்னணியில் இருந்து உருவாகிவரும் வரை, அவர்களில் வலுவான தலைவர் அங்கு இல்லை. யோகி, தனது இந்துத்துவ உடையில் ஒரு துறவியாக (பார்ப்பனர்கள் எதிர்த்த விஸ்வாமித்ரரைப் போலவே), இந்துத்துவப் படைகளின் தளபதி நிலையை அடைந்தார். உ.பி.யில் சத்திரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒரு உதாரணம் அண்மையில் ஒரு ‘என்கவுண்டரில்’ ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டதில் காண முடிந்தது.

பாலிவுட்டில் சாதி ஆதிக்கம் ! நன்றி : யூத் கி ஆவாஸ்

ஒரு சமூகமாக சத்திரியர்கள் இப்போது தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதன் மூலம், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனாவை உருவாக்கியுள்ளனர், இது பத்மாவத் படத்திற்கு எதிராக பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தது, இதில் தீபிகா படுகோனே (ஒரு சரஸ்வத் பார்ப்பனர்) நடித்தார். இப்போது கங்கனாவை ‘பாதுகாக்க’, அவருக்கு வழங்கப்பட்ட மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு மேலாக,  கர்ணி சேனாவும் யோகியின் ஆதரவோடு மும்பைக்கு வந்துள்ளது. கங்கனா ரணாவத் சிவசேனாவுக்கு எதிராக பாஜக சார்பு நிலைப்பாட்டை எடுப்பதைப் பயனுள்ளதாகக் கருதுகிறார். (உத்தவ் தாக்கரேயின் குடும்பம் சந்திரசேன கயஸ்த பிரபு குலத்தைச் சேர்ந்தது என்றாலும், இக்கட்சிக்கு மராட்டியர்கள் மற்றும் ஓபிசிக்களின் ஆதரவு உள்ளது.)

கங்கனா, தனது ஆரம்ப ஆண்டுகளில், ஆங்கிலத்தில் சரளமின்மை மற்றும் அவரது சிறு நகர பின்புலம் காரணமாக பாலிவுட்டில் களத்திலிருக்க முடியாது என கூறியிருந்தார். ஆனால் இப்போதும் களத்திலிருக்கிறார். இப்போது அவர் வங்காள பார்ப்பனப் பெண்ணான ரியா சக்ரவர்த்தியுடன்  சண்டையிடக்கூடிய, ஜெயா பச்சன் (பிறப்பால் ஒரு பார்ப்பனர், ஒரு கயஸ்தாவை மணந்தவர்) போன்ற வலிமையானவர்களையும் தாக்கக் கூடிய ஒரு கட்டத்தை அடைந்துவிட்டார்.

கங்கனா ஒரு வலுவான இந்துத்துவ தேசியவாத அடையாளத்துடன், காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் சிவசேனாவை ‘சோனியா சேனா’ என வர்ணித்தார்.

2019-ம் ஆண்டு அவரது மணிகர்னிகா திரைப்படத்தில், ஜான்சியின் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கணா நடித்துள்ளார். ஒரு இணை இயக்குநராக, வரலாற்றுச் சிறப்புமிக்க லட்சுமிபாயை சத்திரிய பெண்களின் சீர்திருத்த மற்றும் பெண்ணிய முன்மாதிரியாக கங்கனாவால் சிதைக்க முடிந்தது. லட்சுமிபாய் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் திருமணத்தால் சத்திரியரானார், கங்கனா புத்திசாலித்தனமாக அதை தனது சித்தரிப்பில் பயன்படுத்தினார்.

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா (ஒரு காத்ரி) ஆகியோரின் குடும்பங்கள், தங்கள் மகள்களை அவர்கள் விரும்பும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள ஊக்குவித்தது போலல்லாமல், மாடலிங் மற்றும் சினிமாவுக்கான  முயற்சியை கங்கணா குடும்பத்தினர் எதிர்த்தனர். படுகோன் அல்லது சோப்ரா அல்லது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷில்பா ஷெட்டி (பன்ட் சமூகத்தில் நன்கு படித்த பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரின் குடும்பத்தைப் போல மேற்கத்திய வாழ்க்கை முறைகளுக்கு கங்கனாவின் குடும்பத்தினர் பழக்கப்படவில்லை.

நவீனமான எதையும் மிகுந்த விரோதத்துடன் எதிர்த்த ஆளும் வர்க்கங்களாக இருந்த வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து கங்கணா ரணாவத் வந்தவர். பிற இருபிறப்பாளர்கள் மற்றும் முஸ்லீம்களைப் போலல்லாமல், சத்திரியர்களுக்கு பாலிவுட்டில் பெரிய முதலீடுகள் இல்லை. அவரது தைரியம் அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் இப்போது மும்பையின் முக்கியத்துவத்தை குறைக்க உ.பி.யில் ஒரு திரைப்பட நகரத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளார். கங்கணாவும் தேசிய (இந்தி) திரைப்படத்துறையாக உள்ள பாலிவுட்டின் ஏகபோகத்தை குறைக்க விரும்புகிறார். இந்துத்துவ – தேசியவாத யோசனையுடன் முழு திரையுலகிற்குமான ஒரே திரைப்படத்துறை என்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட திட்டத்தின் வழிப்பாதை வரைபடம்தான் இது. இது அவர்களின் ‘ஒரு நாடு ஒரு கலாச்சார தேசியவாதம்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். கங்கனா இதற்கு சரியாக பொருந்துகிறார்.

படிக்க :
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

கங்கனா ஒரு முழு சமூகத்தின் ஆதரவுடன் வளர்ந்து வரும் கதாநாயகி மற்றும் தயாரிப்பாளர் ஆவார். முழு சத்திரிய சமூகமும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் வருத்தமடைந்துள்ளது, மேலும் இது ரியா சக்ரவர்த்தியை குடைவதன் மூலம் அவரது மரணத்தை விசாரிக்க மத்திய அரசை கட்டாயப்படுத்தியது. ரியா சக்கரவர்த்தி வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் என்பதால் துன்புறுத்தப்படுகிறார் என மீண்டும், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவருக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்தார். கங்கனாவும் ஜெயா பச்சனைத் தாக்கியதால், விஷயங்கள் மேலும் மேலும் வெளிச்சமின்றி இருண்டன.

சத்திரியர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் வலுவான ஆதரவாளர்கள். ஏனெனில் அந்த அமைப்பின் பார்ப்பனர் அல்லாத ஒரே தலைவரான ராஜேந்திர சிங் (ராஜு பையா), ஒரு சத்திரியர். அவருடைய பொறுப்புக் காலத்தில்தான் ராம் ஜன்மபூமி கோயில் பிரச்சினை மீண்டும் எடுக்கப்பட்டது. தமது நிறுவனக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸால் சத்திரியர்களை புறக்கணிக்க முடியாது. அவர்கள் தங்கள் இருப்பை உணர ஆரம்பித்துள்ளனர். கங்கனா சினிமாவில் மட்டும் கண்காணிக்கப்பட வேண்டிய நபரல்ல, அரசியலிலும் தான்.

இருப்பினும், தற்போது வரை நவீனத்துவம் மற்றும் ஆங்கில வழி கல்வி ஆகியவற்றிற்குக் பரிச்சியம் என்ற அடிப்படையில் இருபிறப்பாளர் சமூகத்துடன் பலவீனமான கண்ணியாக இருக்கின்றனர். வரலாற்று ரீதியாக அவர்கள் பெருமளவில் இறைச்சி உண்பவர்கள் என்றாலும், அவர்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ்ஸின் உணவு கலாச்சாரத்தில் பொருந்த, சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறார்கள்.  ஆர்வமூட்டும்வகையில், பார்ப்பனர்களும் பனியாக்களும் இறைச்சி உண்பவர்களாக மாறும்  திரைக் கலாச்சாரத்தில் கங்கனா சைவமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் ராஜ்புத்தின் அகால தற்கொலையும் கங்கனா ரணாவத் ஒரு சண்டையிடும் கதாநாயகியானதும் வலதுசாரி ஊடகங்களை அந்த சமூகத்தின் மீது அதிக கவனம் செலுத்த வைக்கின்றன. உத்தரபிரதேசத்தில், விகாஸ் துபே என்கவுண்டருக்குப் பின்னர் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுடன் பார்ப்பனர்கள் பருஷுராமரை முன்னிறுத்த முயன்றனர். இப்போது எங்கும் கங்கனா இருக்கிறார்.

யோகி ஆதித்யநாத் கடந்த காலங்களில் வேறு எந்த சமூகத்தையும் போல அல்லாமல் சத்திரிய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளார். கங்கனாவின் எழுச்சி இருபிறப்பாளர்கள் முகாமில் உள்ள பழைய மேலாதிக்க சமூகங்களுக்கு பாலிவுட் தொழில்துறையிலும் மற்ற துறைகளிலும் சத்திரியர்கள் விடுக்கும் சவாலாகவே பார்க்கலாம்.

கட்டுரையாளர் : காஞ்சா அய்லய்யா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

1 மறுமொழி

  1. மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை, மூல ஆசிரியரின் கருத்தையும் சேர்த்து வழிமொழிகிறதா? உ.பி.யில் சத்திரிய சாதிகளின் ஒருங்கணிப்பும் எழுச்சியும் எதற்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை ஹாத்ரஸ் சம்பவம் அம்பலப்படுத்தவில்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க