திர்க்கட்சியாக இருந்தபோது, புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்த திமுக, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டது.
தேர்தலுக்கு முன்னர் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, புதிய கல்விக் கொள்கையை தமிழ்கத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கூறிவந்தது. புதிய கல்விக் கொள்கை, நீட் போன்ற மாணவர்களுக்கு எதிரான கல்விக் கொள்கைகளை ரத்து செய்வோம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சியில் அமர்ந்தது திமுக. ஆட்சியில் அமர்ந்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று வாயில் கூறிவந்தார். ஆனால் பின்வாசல் வழியாக பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
படிக்க :
ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
இந்நிலையில் தமிழகத்தின் ஆளுனர் ஆர்.என். இரவி கடந்த அக்டோபர் 30-ம் தேதி துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசுகையில் , புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களைக் கருத்தில் கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே நாளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநகரத்தின் தொழிற்கல்வி இணை இயக்குனர், பிற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில், புதிய கல்விக் கொள்கை அடிப்படியிலான கலை மற்றும் கலாச்சாரப் பயிற்சி தொடர்பாக நவம்பர் 15 முதல் 25 வரை பத்துநாட்களுக்கு ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனரை பணிமாறுதல் செய்தது திமுக அரசு.
ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என வாயில் வடைசுட்டு வருகையில் மற்றொரு புறத்தில் துணைவேந்தர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கட்டளைகள் பறக்கின்றன. அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையின் முக்கியமான காவி அம்சமான இல்லம் தேடி வரும் கல்வி திட்டத்தையும் தமிழ்நாடு அரசே அறிவித்து துவக்கி வைத்துவிட்டது. மேலும் அடுத்த ஆண்டு முதல் எண்ணும் எழுத்தும் எனும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 8 அன்று தனியார் நிறுவனத்தின் உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று பேசிய திமுக வாய்கள் இன்று புதிய கல்விக் கொள்கையின் புகழ்பாடத் துவங்கிவிட்டன.
கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை மோடியை விட கேவலமாக காற்றில் பறக்கவிட்டிருக்கிறது திமுக. இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழில் பெயர்மாற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது திமுக அரசு. இது மக்களை ஏமாளிகள் ஆக்கும் நரித்தனமாகும்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பல்வேறு விதங்களில் ஒன்றிய பாஜக அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்தது முந்தைய அடிமை எடப்பாடி ஆட்சி. ஒன்றிய அரசின் சாட்டைக்கு வெட்கமின்றி மண்டியிட்டு சலாம் போட்டதன் காரணமாகத்தான் கடந்த அதிமுக ஆட்சியின் முதலமைச்சராக இருந்த எடப்பாடியையும் துணை முதல் அமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தையும் அடிமைகள் என்று தமிழகமே அழைத்தது.
அடிமை அரசு என்று கடந்த அதிமுக ஆட்சியை அழைக்கக் காரணம் ஒன்றிய அரசின் பாசிசத் திட்டங்கள் அனைத்தையும் அப்படியே சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொண்டதன் காரணமாகத்தான். தற்போது திமுக அரசும் அப்படி அழைக்கப்படும் தகுதியை நோக்கி தரம்தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.
சரண்
செய்தி ஆதாரம் : ஈ-டிவி , மின்னம்பலம்