பீகார் மாநிலம் சாப்ரான் கிராமத்தில் கடந்த டிசம்பர் 22-ல் தனது 89-ஆவது வயதில் நம்மிடம் இருந்து விடைபெற்றார் தோழர் இராஜ்கிஷோர்.
இந்தியா முழுவதிலும் இருந்த புரட்சிகர எழுத்தாளர், கலைஞர்கள், கலை – இலக்கியவாதிகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்ட கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகளின் கூட்டமைப்பாக அனைத்திந்திய புரட்சிகர பண்பாட்டு மையம் (AILRC) செயல்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகமும் கூட்டமைப்பின் அங்கமாக இருந்து செயல்பட்டது. இந்த கூட்டமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக விளங்கியவர் தோழர் இராஜ் கிஷோர்.
இந்தியா முழுவதும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சீரழிவு கலாச்சாரத்திற்கெதிரான, பிரச்சாரங்களையும் முக்கிய நகரங்களில் மாநாடுகளையும் நடத்தியது AILRC. தமிழகத் தலைநகர் சென்னையிலும் இதன் மாநாடு நடத்தப்பட்டது.
தோழர் இராஜ் கிஷோர், பீகாரில் செயல்பட்டு வரும் புரட்சிகர அறிவுஜீவுகள் சங்கத்தின் (RBS) நிறுவனரும் பொதுச் செயலாளருமாக இருந்துள்ளார். பீகாரின் முதல் மாணவர் சங்கமான புரட்சிகர மாணவர் சங்கத்தை உருவாக்குவதிலும், சாதி ஆதிக்க குண்டர்படைகளை எதிர்த்து புரட்சிகர விவசாயிகள் கமிட்டிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் தோழர் இராஜ்கிஷோர்.
‘ஜன் ஜவார்’ (மக்கள் பாதை) மற்றும் ‘ஜன் ப்ரதிரோத்’ (மக்கள் யுத்தம்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வெகுமக்களை அரசியல்படுத்துவதிலும் அமைப்பாக்குவதிலும் கடுமையாக உழைத்துள்ளார்.
2005-ல் பீகாரில் நடந்த ஒரு சம்பவத்தை காரணம் காட்டி 2013-ல் பொய்வழக்கில் தோழரை கைது செய்தது அரசு. பீமா கொரேகான் பொய் வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ள தோழர்கள் வரவரராவ், பேரா. சாய்பாபா போன்ற பலருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார் தோழர் இராஜ்கிஷோர்.
அரசு அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நாட்டைச் சூறையாடும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அரை நிலவுடமை சுரண்டல்களுக்கு எதிராகவும், பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தோழர் இராஜ்கிஷோர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தீவிர உடல் நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார் தோழர் இராஜ்கிஷோர். மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.
தோழர் இராஜ்கிஷோருக்கு எமது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறோம்.
இவண்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 97916 53200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க