பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
‘குரல் வாக்கெடுப்பு வளர்ச்சி நாயகன்’ மோடியின் பரிந்துரையின் பேரில் பெண்களின் திருமண வயதை மறுபரிசீலனை செய்ய, சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்ததாகவும், அதனால் தான் இந்தச் சட்ட மசோதா திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறிவருகிறது மோடி கும்பல். மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
படிக்க :
தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !
பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
இந்து திருமண சட்டம், (1955), இந்திய கிருத்துவ திருமணச் சட்டம் (1872) ஆகிய இரண்டுமே பெண்ணுக்கு 18 வயதையும் ஆணுக்கு 21 வயதையும் திருமண வயதாக வரையறுத்துள்ளன. இஸ்லாமிய தனிஉரிமை (ஷரியத்) சட்டத்தின்படி ஆணும், பெண்ணும் வயதுக்கு வந்துவிட்டால் திருமணத்திற்கு தகுதியானவர்கள் என்று வரையறுத்துள்ளது. இதன்மூலம் 1954-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி, பெண்ணுக்கு 18-ம் ஆணுக்கு 21-ம் என்ற வரையறை மீறப்படுகிறது. எனவே அனைத்து மதங்களுக்கும் திருமண வயதை ஒரே மாதிரி (21-ஆக) இருபாலரும் கடைப்பிடிப்பதற்கேற்ப சட்டத்திருத்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது மோடி அரசு.
இத்துடன் பெண்கள் அதிகாரம் பெறுவதையும், பாலின சமத்துவத்தைப் பெறுவதையும், கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இச்சட்டம் என்றும் அறிவித்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தை மீறி திருமணம் செய்வது சட்டவிரோதம் என்பதோடு செல்லத்தக்கவையும் அல்ல. இதையும் மீறி நடத்தும் பட்சத்தில் அப்பெண் 21 வயது முடியும் வரை பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைப்பதோடு – அதாவது சிறை வைப்பதோடு – திருமணம் நடத்துபவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த திருமண சட்டத் திருத்தத்தை ஏற்பவர்கள் வளரும் பருவத்தில் கர்ப்பமாவது, இதனால் உடல்நலப் பாதிக்கப்படுவது; மகப்பேறு இறப்பு; சிசு இறப்பு ஆகியவை தடுக்கப்படுவதோடு, பெண்ணின் கல்வி வளச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது என்ற வகையிலும் வலியுறுத்துகின்றார்கள்.
எதிர்ப்பவர்கள், இந்த சட்டத் திருத்தம் தேவையற்றது; அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 25-ஐ மீறுவதால் இது சட்ட விரோதமானது; தனி நபர்கள் மீதான தாக்குதல்; குறிப்பாக இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது; அவர்களை குறிவைத்தே கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறார்கள். மேலும் சாதி கடந்த காதல் திருமணங்கள் நடப்பதை தடுப்பதற்கும் ஏதுவாகவே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
18 வயதில் வாக்களிக்கலாம், வாகனம் ஓட்டலாம், கல்லூரிக்குச் செல்லலாம் என்ற நிலையில்
முன்னர், பெண்களுக்கு திருமண வயதை 18-ஆக திருமண சட்டம் வரையறுத்தப் பிறகும்; மேலும் 18 வயதுக்குட்பட்டு திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை; 1 லட்சம் அபராதம் என்று சட்டம் இருந்தும் இதுவரை 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் தடுக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியருக்குத் திருமணம் செய்து வைப்பவர்கள் இதுவரை  தண்டிக்கப்படாத நிலையில், மக்களுக்கும் சட்டம் பற்றி தெரியாமலிருப்பது ஒருபுறமும், தெரிந்தாலும் அது நடைமுறையில் மீறப்படுவது மறுபுறமும் இருக்க திருமண வயதை 21-ஆக ‘சட்டப்படி’ உயர்த்துவது எவ்விதத்திலும் பலனைத் தராது என்பது சங்க பரிவாரக் கும்பலுக்கு நன்றாகத் தெரியும்.
ஆகவே இந்தச் சட்டத் திருத்தம், குறிப்பாக சிறுபான்மையினரை பழிவாங்குவதற்கும், பொது சிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாகவும் கொண்டு வரப்படுகிறது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
ஸ்மிருதிராணி
அதே வேளையில் மோடியோ, திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்கு ஜெயா ஜெட்லி குழு முன்வைத்த பரிந்துரைகளில் குறிப்பாக “பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கவும்; வாழ்வில் முன்னேறவும் போதிய அவகாசம் கிடைக்கும் வகையில் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் முடிவு சிலருக்கு பிடிக்கவில்லை என்னும் இந்திய கிருத்துவ திருமண சட்டம்; பார்சி திருமண சட்டம் மற்றும் விவாகரத்து சட்டம், முஸ்லீம் தனிநபர் (ஷரியத்) சட்டம் – திருமண சட்டம்; இந்து திருமண சட்டம், வெளிநாட்டு திருமண சட்டம் போன்றவைகளில் திருத்தங்களைக் கொண்டு வருவது, நாட்டின் வரலாற்றில் இது ஒரு தீர்க்கமான நடவடிக்கை” என்றும் அமைச்சர் ஸ்மிருதி இராணியும் திருவாய் மலர்ந்துள்ளார்.
மோடி கும்பலைப்போல ஒரு முடிவு எடுத்துக் கொண்டு அதற்கேற்ப விவரங்களைப் பொருத்தி நியாயப்படுத்தும் அயோக்கியத்தனத்தை அனுமதிக்க முடியாது. இருப்பினும், அவற்றிலுள்ள சரி தவறுகளை பருண்மையான விவரங்களில் இருந்து உண்மையை கண்டறிந்து முடிவுக்கு வருவது என்ற அடிப்படையில் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிப்போம்.
000
மோடி திருவாய் மலர்ந்துள்ள கல்லூரி கல்விக் கற்கவும், வாழ்வில் முன்னேறவும் போதிய அவகாசம் கிடைக்கும் என்ற வகையில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை முதலில் பரிசீலிப்போம்.
கல்லூரி வரை சென்று பெண்கள் படிக்க வைக்கப்படும் சூழல் இந்தியாவில் ஏற்படுத்தப்படவில்லை. ஆண்கள் கல்லூரிப் படிப்பை படிப்பதே மிகவும் குறைவான அளவு இருக்கையில், பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  படித்தப் படிப்பிற்கேற்ப வேலையும் கிடைப்பதில்லை. PHD படித்த மாணவர்கள் வரை ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவுப்பொருள் வழங்கும் தொழில்களிலும் இன்னும் பல்வேறு உதிரித் தொழில்களிலும் ஈடுபட்டு பிழைப்பை நடத்தி வருகின்றார்கள்.
10-வது வரை படித்தால்போதும் என்ற கடைநிலை ஊழியர், செக்யூரிட்டி, கான்ஸ்டபிள் போன்ற வேலைகளுக்குக் கூட பட்டதாரிகளும், PHD மற்றும் பொறியியல் படித்தவர்களும் போட்டி போட்டுகின்றனர். படித்தப் படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வேலைக்கு போகலாம் என்றால் அதற்கும் ஏகப்பட்ட போட்டி; அதாவது 100 வேலை வாய்ப்புக்கு 10,000 பேர் விண்ணப்பிக்கும் நிலை.
இப்படி ஆண்களே படாதபாடுபடும் போது பெண்களின் நிலைமையைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
வேண்டுமானால் நடுத்தர மேட்டுக்குடியினரிடம் சிறிது மாற்றம் வரலாம். காரணம் இவர்களின் வருவாயும் வேலையைப் பெறுவதற்கான சூழலும் இருப்பதால் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவர்கள் கூடப் படித்தப் படிப்பிற்கேற்ப வரண் தேடுவதில் வரதட்சணை தருவதில் ஏகப்பட்ட இன்னல்களை சந்திப்பதால் பெண்களை கல்லூரிக்குப் படிக்க அனுப்புவதைத் தவிர்க்கின்றனர்.
இந்நிலையில் கிராமப்புற, நகர்ப்புற உழைக்கும் ஏழைக் குடும்பத்தை நடத்தவே வருவாய் போதாமல் பெண் பிள்ளைகளை 12-ம் வகுப்பை முடிப்பதற்கு முன்பே எக்ஸ்போர்ட், ஓட்டல், விற்பனை கடைகள் போன்ற நகர்புற வேலைகளுக்கும், கிராமப் புறங்களிலிருந்து திருப்பூர், கோவை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு பின்னலாடை, உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வேலைகளுக்கும் ஒப்பந்தம் என்ற அடிப்படையில் குறைந்த கூலிக்கு அனுப்புவது என்பது அன்றாடம் நடந்தேறுகிறது.
இதற்கு வாய்ப்பு இல்லாதவர்களும், வேலைக்கு அனுப்ப மனம் இல்லாதவர்களும் பட்டப்படிப்பு முடிந்தவுடன் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி திருமணச் சட்டம் வலியுறுத்தும் வரம்பை மீறியும் அதை பொருட்படுத்தாமலும் 19 வயதுக்குள் திருமணத்தை முடிக்க வேண்டுமென்ற கிராமப்புற மக்களின் மனநிலையின் காரணமாக, ஊட்டச்சத்து இல்லாதபோதும் குழந்தைப் பெறுவதற்கான உடல் ஆரோக்கியம் இல்லாதபோதும் திருமணம் செய்கின்றனர்.
இவற்றையெல்லாம கணக்கில் கொண்டு, இவற்றைப் போக்குவதற்கான எந்த முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு, விலையேற்றம் மூலம் மக்களின் குரல்வளையை நெறிக்கிறது, மோடி தலைமையிலான பாசிச கும்பல்.
போதாக்குறைக்கு தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச வாழ்வை நசுக்கவும் அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட்களைக் கொழுக்க வைக்கவும் விவசாயச் சட்டம், தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடி அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிட்டு திருமண வயதை 21-ஆக உயர்த்திவிட்டால் கல்லூரி கல்வியும், வாழ்வில் முன்னேற்றமும் பெறமுடியும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இருப்பினும் ‘பார்ப்பன பாசிசக் கும்பல் குடுமி சும்மா ஆடாது’ என்பதை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் அனைத்து மதங்களின் திருமண சட்டங்களைத் திருத்துவது என்ற பெயரில் 1937 இஸ்லாமிய தனியுரிமை (ஷரியத்) சட்டத்தை இலக்கு வைத்தே – பொது சிவில் சட்டத்தை முன்னோட்டமாக வைத்தே – கொண்டு வரப்படுகிறது என்பதை திரைமறைவாக திருவாய் மலந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
அதே வேளையில் திருமண வயது 21-ஆக உயர்த்துவதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டியதும், இதில் பார்ப்பன பாசிஸ்டுகளின் சதியை அம்பலப்படுத்துவதும் அவசியமாக உள்ளது.
திருமண வயது 18-ஆக இருந்தாலும் சரி 21-ஆக இருந்தாலும் சரி பெண்களின் கல்வியிலும் வாழ்விலும் எந்த மாற்றமும் கடந்த கால நிகழ்கால பெண்களின் வாழ்நிலைமைகளை பரிசீலித்தாலே எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதே வேளையில் இளம் பருவத்தில் திருமணம் செய்வது; ஆணும் பெண்ணும் வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் செய்வது; என்பதெல்லாம் அறிவியல் பூர்வமானது அல்ல.
படிக்க :
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !
முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !
பெண்களுக்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வருவாய் ஆகியவற்றுக்கான வழியை உருவாக்குவதும் அவர்களின் வாழ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதோடு, ஆணுக்கு பெண் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பெண்களை போகப் பொருளாக்கி அவர்களின் உடலை ஆபாசமாக வர்ணிக்கும் வக்கிரப்புத்தியையும்; பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தையும், ஆணுக்கு பெண் அடிமை என்ற பெண்ணடிமைத் தனத்தையும் முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கான மக்கள் திரள் போராட்டங்களை பரந்து-விரிந்த அளவில் தொடர்ச்சியாக இடைவிடாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் வரை நடத்துவதே அறிவியல் பூர்வமான நடைமுறையாக இருக்கும். ஏனெனில் நடைமுறைதான் உரைகல்.
பெண்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதற்கான நமது நோக்கத்தை சிதைக்கும் இதுபோன்ற சட்ட விவாதங்களைப் புறக்கணிப்போம். அதே வேளையில் மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேறுவதை அனுமதிக்காமல் முறியடிக்கும் வேலையை முன்னெடுப்போம் !

கதிரவன்

7 மறுமொழிகள்

 1. ஆணுக்கு எதிர் பெண்கள் கிடையாது…

  பெண்களுக்கு எதிர் ஆண்கள் இல்லை.. அப்படியான தோற்றத்தை உருவாக்குவது கார்பரேடும் அரசும் தான் இவர்களுக்கு எதிராக தானே போராட வேண்டும்

 2. கட்டுரையில் வரும் “திருமண வயது 18-ஆக இருந்தபோதும் கல்லூரி செல்லும் பெண்களின் சதவிதமோ 1% கூட இல்லை என்பதே இன்றைய நிலை” என்ற புள்ளிவிவரம் தவறானது.

 3. பெண்பிள்ளைகளை நல்லவிதமாக/ஒழுக்கமாக வளர்த்து திருமணம் செய்துவைத்து கத்தியில் மீது நடப்பது போல உள்ள காலத்தில்18 ஐ 21 ஆக உயர்த்தியது மிகவும் மோசமான விடயம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பாசிச ஆட்சியில் பெண் பிள்ளைகளை இன்னும் 3 ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?

  • 15 வயதிலேயே திருமணம் செய்தால் நல்ல பாதுகாப்போடு இருக்குமா

 4. சாதக பாதகம் குறித்து எந்தவித தர்க்க ரீதியான விளக்கமும் இல்லாமல். பொத்தாம் பொதுவாக அரசியல் நிலைப்பாட்டில் இருந்து வெற்றுகட்டுரை வினவு தளம் வெளியிடும் என நான் எதிர்பார்க்கவில்லை

 5. நண்பர் தம்மவேல் அவர்களுக்கு,
  “பெண்களை போகப் பொருளாக்கி அவர்களின் உடலை ஆபாசமாக வர்ணிக்கும் வக்கிரப்புத்தியையும்; பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தையும், ஆணுக்கு பெண் அடிமை என்ற பெண்ணடிமைத் தனத்தையும் முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட சமுதாயமும்
  ..பெண்களுக்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வருவாய் ஆகியவற்றுக்கான வழியை உருவாக்குவதும் அவர்களின் வாழ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதோடு, ஆணுக்கு பெண் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும்
  ..திருமண வயது 18-ஆக இருந்தாலும் சரி 21-ஆக இருந்தாலும் சரி பெண்களின் கல்வியிலும் வாழ்விலும் எந்த மாற்றமும் கடந்த கால நிகழ்கால பெண்களின் வாழ்நிலைமைகளை பரிசீலித்தாலே எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதே வேளையில் இளம் பருவத்தில் திருமணம் செய்வது; ஆணும் பெண்ணும் வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் செய்வது; என்பதெல்லாம் அறிவியல் பூர்வமானது அல்ல.”
  இவைதான் கட்டுரையின் தர்க்க முடிவு.
  மாட்டு மூத்திரம், பிளாஸ்டிக் சர்ஜரி பிள்ளையார்,புகழ் மோடி அரசு, மொத்த சிவில் சமூக பெண்கள் நலன் பேசுவதாக சொல்வது என்பது,வறிய குடும்ப பெண்களுக்கு அரசே, கள்ளிப்பால் ஊத்துவதைத்தவிர வேறல்ல! எதிரிக்கு(முஸ்லீம்) இரண்டு கண்ணும் போக நாம் (இந்து) ஒரு கண்ணை இழப்பதுதான் தேசப்பற்று,அதுதான்,இராம இராஜ்ஜியம்.
  ஜெய் ஹிந்!

Leave a Reply to ashak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க