மோடியின் அரசு கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தில், நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தைத் திருத்த ஒரு முன்மொழிவை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பெண்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் அடைந்தால் மட்டுமே அவர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும். அதற்கு குறைவான வயதில் திருமணம் நடைபெறும் பட்சத்தில் அது குழந்தை திருமணமாக கருதப்படும்.
ஆனால், மணமக்களில் எவரேனும் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்று நிரூபித்தால் மட்டுமே அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும். அதேவேளை, இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்கள் பூப்படைந்து பதினாறு வயதானால் போதும் அவர் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர் என்பதும் தற்போதைய நிலை.
000
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட வரைவுக்கான முன்னுரை, வழக்கத்திற்கு மாறான வகையில் மிக நீண்ட விளக்கத்தைக் கொண்டுள்ளது. முதலாவதாக, நடைமுறையில் உள்ள இந்து, கிறித்தவ, இஸ்லாமிய, பார்சி, சிறப்புத் திருமண சட்டங்கள், வெளிநாட்டவர் திருமண சட்டங்கள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அங்கீகரிக்கப்பட்ட திருமண வயதைக் கொண்டிருகின்றன. அதேவேளை, பல்வேறு இன, சமய மக்களுக்கும் வெவ்வேறு வயது குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்களுக்கிடையே கூட சம உரிமை இல்லை எனவும் அதைப் போக்குவது இச்சட்டத்தின் முதல் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
படிக்க :
குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!
திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !
அடுத்ததாக, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள சம உரிமை இன்னமும் பெண்களுக்கு சென்று சேரவில்லை என்றும்; குறைவான வயதில் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதால் அவர்கள் அதிகப்படியாக உடல், மன, பொருளாதார ரீதியாக மிகுந்த துயரத்திற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் என்றும்; இந்தியா கையொப்பம் இட்டுள்ள சர்வதேச எழுதாச் சட்டங்களையும் (International conventions), கடப்பாடுகளையும் (Obligations) நிறைவேற்றும் வண்ணம் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
கூடவே, இந்த சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டம் என்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இனங்கள், சமயங்கள், பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை அழுத்தி கூறுகிறது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் நடைபெறும்  திருமணங்கள், இந்து திருமண சட்டம், இஸ்லாமிய தனி நபர் (ஷரியத்) சட்டம் என்று எந்தச் சட்டத்தின்கீழ் வந்தாலும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த பிறகு, இச்சட்ட முன்வரைவை நிலைக் குழுவுக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு அறிக்கை அளித்த பின்னர்தான் இச்சட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
சமூகத்தில் குறுகிய காலத்தில் இச்சட்டம் பெறும் விவாதப் பொருளாகியிருக்கிறது. தற்போதைய சட்டத்தினை மீறியே ஆங்காங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால், பெரிய அளவில் சமூகத்தில் யாரும் அழுத்தம் கொடுக்காத ஒன்றை – பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது – மோடி அரசு சட்டமாக கொண்டுவர முயல்கிறது. மோடி அரசு அமைத்த இந்திய சட்ட ஆணையம் கூட (Indian Law Commission of India 2018) அனைவருக்கும் உகந்த வயது 18 என்று சட்டம் இயற்றவே பரிந்துரை செய்திருந்தது.
கடைந்தெடுத்த பிற்போக்காளர்கள், பாசிச பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் முற்போக்கு முகமுடி போர்த்திக் கொண்டு இச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கான உள்நோக்கம் முசுலீம்களை குறிவைத்தே.
பெண்கள் முன்னேற்றத்தில், சனாதனவாதிகளுக்கு என்ன பங்கு!
குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லைஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே, 1891-ம் ஆண்டு ஒப்புதல் வயது சட்டம் (Age of Consent Act 1891) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. “உடல் உறவு கொள்ள ஏதுவான வயது 12; அதன் பின்னரே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும்” என்றது அச்சட்டம். ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களான இந்து சனாதனவாதிகளால் இது கடும் எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து அவர்கள் பல்வேறு கலவரங்களை நடத்தினார்கள்.
அதன்பிறகு 1929-ம் ஆண்டு “சாரதா சட்டம்” என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் (Prohibition of Child Marriage Act) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண்ணின் திருமண வயது 14 எனவும் ஆணின் வயது 18 எனவும் வரையறை செய்யப்பட்டது. இச்சட்டமும் சனாதனவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்கள், சோசலிஸ்டுகள் மற்றும் காங்கிரசின் பங்கு இருந்தது.
சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் முகமாக குடும்பம் நடத்தும் அளவுக்கு மன நிறைவுள்ள பெற்றோரை உருவாக்கும் வயது வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் 1979-ல் மீண்டும் திருத்தப்பட்டது. அதில், பெண்களுக்கு திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 என்று மறுவரையறை செய்யப்பட்டது.
இப்படி நீண்ட போராட்டங்கள், விவாதங்களுக்கு இடையே உருவான இந்த சீர்திருத்தச் சட்டங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இச்சட்டங்கள் கொண்டுவரும்போது அதற்கு எதிராக இருந்தவர்கள் அவர்கள்.
தவறான நபர்கள் கொண்டு வந்த, சரியான சட்டமா?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பிற்போக்குவாதிகளாக இருப்பதால் அவர்கள் என்ன கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டுமா என்று சில நண்பர்கள் கேட்கின்றனர். இதுபோன்ற முற்போக்கான சட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவைப்படுகிறது தானே எனக் கருதுகின்றனர். சில விவரங்களை பரிசீலிப்பதிலிருந்து இதற்கு விடை காண்போம்.
கடந்த 1901 முதல் 2011 வரை கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விபரங்களின்படி, பெண்களின் சராசரி திருமண வயது இயல்பாகவே உயர்ந்துகொண்டுதான் வருகிறது. 1901-ல் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 13-ஆக இருந்தது. ஆனால், இது படிப்படியாக உயர்ந்து கடந்த 2011-ம் 20-ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் குழந்தைத் திருமணங்கள் ஒரேடியாக இல்லாமல் போய்விடவில்லை. 2015-2016-ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (NFHS-5) 26.8% பெண்கள், அதாவது சுமார் நான்கில் ஒரு பெண், 18 வயது நிறைவுபெறும் முன் திருமணம் செய்துகொள்கிறார். 15 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்பவர்கள் பதினைந்தில் ஒரு பெண் மட்டுமே.
குழந்தை திருமணம்குறைந்த வயது திருமணத்தின் ஒரு பகுதி, மனமுதிர்ச்சியற்ற விடலைப் பருவ அவசரத் திருமணங்கள் என்று கணக்கில் கொண்டால், 18 வயதுக்கு குறைவான பெண்களின் திருமணங்கள் மிகவும் சொற்பமே.
இப்படி பெண்களின் திருமண வயது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதற்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அதற்கான காரணம் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. சான்றாக, இன்று நாட்டில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கும் பகுதிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வடமாநிலங்கள்.
குறிப்பாக, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் குழந்தைத் திருமணங்களைக் காணமுடியும். எனவே வர்க்கப் பின்னணி இதில் முக்கியப் பங்காற்றுகிறது. தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்து கொள்ளவுமே அல்லாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் தன் பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடுதான்.
ஆண் பிள்ளைகளாய் இருந்தால் சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி அவர்களை வேலைக்கு அனுப்பிடுவார்கள். பெண் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து விடுவதுதான் ஒரேவழி. நிலவுகின்ற சமூகத்தில், பெண் பிள்ளைகளை காப்பாற்றுவது அடித்தட்டு வர்க்கத்திற்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போன்றது.
படிக்க :
பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
இதிலிருந்து பெறப்படும் முடிவு என்னவெனில், மேலிருந்து சட்டம் போட்டுவிடுவதால் மட்டும் குழந்தைத் திருமணங்களை ஒழித்துவிட முடியாது. வயது வரம்பை உயர்த்திவிட முடியாது. குழந்தைத் தொழிலாளர் முறையும் கிட்டத்தட்ட இதே போலத்தான்.
இலவச கல்வி, அனைவருக்கும் வேலை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க அளவில் ஒவ்வொரு குடும்பத்திற்கு போதுமான வருவாய் போன்ற ஆதாரங்களை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம்தான் சமூக வளர்ச்சியோடு பெண்கள் முன்னேற்றத்திற்கும் வழியேற்படுத்தி தர முடியும்.
அதனடிப்படையில் மோடியின் பாசிச நோக்கத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால்கூட, மேற்ச்சொன்ன மக்கள் நலப்பணிகளை அரசு செய்துதராமல் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றுவது எந்த வகையிலும் முற்போக்காக கொண்டாட முடியாது. அவை தன்னியல்பிலேயே மக்களை ஒடுக்கும் சட்டங்களாகத்தான் மாறும்.
(குறிப்பு: மார்ச் மாத பு.ஜ அச்சு நூலில் காணப்பட்ட இக்கட்டுரையின் பிழையை தற்போது சரிசெய்து வெளியிடுகிறோம்)

கிருஷ்ணராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க