உக்கிரேன் போர் தொடர்பான சொற் போரில் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படும் `பறையா` எனும் சொல்
க்கிரேன் போர் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் சொற்போர், பொருளாதாரத் தடை தொடர்பான அச்சுறுத்தும் அறிக்கைகள் என்பனவும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சொற்போர்களில் மேற்குலகால் கையாளப்படும் ஒரு சொற் பயன்பாடு பற்றியே இக் கட்டுரை பார்க்கப் போகின்றது; அச் சொல்லானது `பறையா` என்ற தமிழ்ச் சொல்லாகும்.
தமிழிலிருந்து ஆங்கிலம் உட்பட்ட பிற மொழிகளுக்குச் சென்றதாகப் பல சொற்களை நாம் பெருமையுடன் குறிப்பிடுவோம்; காசு ( Cash ), கட்டுமரம் (Catamaran ), நாவாய் ( Navy ) என அப் பட்டியல் நீளும். அத்தகைய சொற்கள் எல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்ப்பன. அதேவேளை வேறு ஒரு தமிழ்ச் சொல்லும் பிற மொழிகளுக்குச் சென்றுள்ளபோதும், அதனையிட்டு நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது; அச் சொல் `பறையா` (Pareas / Pariah) என்பதாகும்.
குறிப்பாக இன்றைய போர்க் காலத்தில் ருசியாவினை `பறையா நாடு` (Pariah state ) எனவும் புடினை `உலகப் பறையன்` (Global Pariah) எனவும் மேற்குலக அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். அமெரிக்கத் தலைவர் யோ பைடன் முதல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் (Liz Truss) வரை இச் சொல்லினைப் பொதுவெளியில் பயன்படுத்தியுள்ளனர்.
இச் சொல்லின் ( (Pariah ) பொருளாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் என அகராதி (The Oxford Advanced Learner’s Dictionary) கூறுகின்றது. அதே அகராதி அச் சொல்லின் மூலமாக `தென்னிந்தியாவில் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு பிரிவினரையே அச் சொல் வரலாற்றுரீதியாகக் குறிக்கின்றது` எனக் காட்டவும் தவறவில்லை. இதன் மூலம் இச் சொல்லானது உலகின் ஒரு மூலையில் வாழும் மக்களை இழிவுபடுத்துகின்றது எனத் தெரிந்து கொண்டுதான் இச் சொற் பயன்பாடு உலகில் தொடருகின்றது. இந்தப் பின்னனியிலேயே இந்த நிகழ்வினை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
`பறையா` என்ற சொல்லின் ஏற்றுமதியின் வரலாற்றுப் பின்னனி :-
`பறையா` என்ற சொல்லானது ஐரோப்பாவுக்குச் சென்ற வரலாறு குறித்து பேராசிரியர் முனைவர்.அழகரசன் பி.பி.சியிடம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், “இந்தச் சொல் முதன்முதலாக போர்ச்சுகீசிய மொழியில் தான் உலா வரத் தொடங்குகிறது. 1500 முதல் 1517 வரை போர்ச்சுகீசிய அரசரின் சார்பாக இந்தியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த டுவர்டே பர்போசா (Duarte Barbosa) என்பவரின் எழுத்துகளில் தான் முதன்முதலில் ‘பறையா` (Pareas)’ என்ற சொல் பயன்பாடு தெரிகிறது. அங்கிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சென்ற இந்தச் சொல், பிறகு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளுக்கும் பின்னர் ஆங்கிலத்திற்கும் சென்றது” . இவ்வாறு தொடக்க கால வரலாறு இருந்த போதிலும், பிரித்தானியர் இந்தியாவினை ஆண்டபோதுதான் இச் சொல்லானது மேற்குலகில் மிகவும் பரவலடைந்திருந்தது.
இச் சொல்லினைப் பிற மொழிகளுக்குக் கடத்தியதில் பார்ப்பனியத்தின் பங்கு அளப் பெரியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களே பெருமளவுக்கு அவர்களின் அதிகாரிகளாகவும் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்திருந்தார்கள். `பறை` என்ற சொல்லினைப் பறவைகளின் பெயரிடல் மூலம் ஆங்கிலத்துக்கு ஏற்றுமதி செய்யும் நுட்பத்தினையும் பார்ப்பனியம் விட்டு வைக்கவில்லை. ஆங்கிலேயர் இங்கு கரும் பருந்து, செம் பருந்து என இரு வகையான பருந்துகளைக் கண்டு, ஆங்கிலத்தில் எவ்வாறு பெயர் வைப்பது எனக் குழம்பி நின்றார்கள். அப்போது பார்ப்பனர்கள் கரும் பருந்தினைப் `பறைப் பருந்து` என மாற்றி, ஆங்கிலத்தில் ` Pariah kite ` என கரும் பருந்துக்குப் பெயரிட்டார்கள். மறுபுறத்தில் செம் பருந்தினை `பார்ப்பரப் பருந்து` எனவும் ஆங்கிலத்தில் `Brahmini kite ` எனவும் பெயரிட்டார்கள்.
இது போலவே கறுப்பாக இருக்கும் மைனா, பாம்பு போன்ற பல உயிரிகளுக்கு `பறை` என்ற முன்னொட்டுக் கொடுத்து, பெயரினை ஏற்றுமதி செய்தார்கள். இது பற்றி விரிவாக நான் எழுதிய `தெரிந்தும் தெரியாத தமிழ்` என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன் (பக்கங்கள் 93-94).
பிரித்தானிய காலனி ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் பலரிடம் காணப்பட்ட நிறவெறி, கறுப்பு மீதான வெறுப்பினைப் பயன்படுத்திப் பார்ப்பனியம் இச் செயலினை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. இந்தப் பின்புலத்தில்தான் `பறையா` என்ற சொல்லானது `ஒதுக்கப்பட்டவர்`களைக் குறிக்க உலக மொழிகளுக்குப் போன பின்புலத்தினை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இச் சொல் மூலம் அடையாளப்படுத்தப்படும் போது, அவர்களுடன் பொருளாதார-சமூக உறவுகள் எதனையும் பேணாது, அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே இன்றைய பொருளாகும்.
படிக்க :
கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் ! | பறையிசை படக் கட்டுரை
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
இந்தியாவில் பல்வேறு சாதிகள் தீண்டப்படாத / ஒதுக்கப்பட்ட பிரிவுகளாகப் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்தன; வால்மீகி, மாலா, மதியா போன்ற பல பிரிவுகள் காணப்பட்டிருந்தன; இவ்வாறிருக்க `பறையர்` என்ற பெயரினை மட்டுமே தெரிந்து எடுத்து பார்ப்பனியம் ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
`பறையர்’ என்ற சொல் இன்று சாதி குறித்ததாகவிருந்தாலும், சங்க காலத்தில் அச் சொல் குறித்தது ஒரு குடியினையே! (சாதி-குடி பற்றிய வேறுபாடு பற்றி ஏற்கனவே வினவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்).
பறையர் என்ற குடியானது சிறப்பான ஒரு குடி எனப் புறநானூறு பாடும்.
“‘துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;”  : புறநானூறு 335:7-8
அத்தகைய தமிழ்க் குடியினை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவதுதானே. மேலும் பழைய அகராதி (லெக்சிகன்) ஒன்றில் தமிழருக்கு இரு பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தன; ஒன்று பறையர், மற்றையது ‘விளிம்பில்லாத பாத்திரம்` (டம்ளர்). இவற்றினைக் கருத்திற் கொண்டு பார்த்தால், இச் சொல்லின் ஏற்றுமதி மூலம் முழுத் தமிழர்களையும் இழிவுபடுத்துவதே பார்பனியச் சூழ்ச்சியின் நோக்கமாகும்.
இன்று புடினை ‘ உலகப் பறையன்’ ( Global Pariah) என்பது போல; சில ஆண்டுகளுக்கு முன் சுப்பிரமணிய சுவாமி ஒருவரை ‘ அனைத்துலகப் பறையன்’ ( International pariah) எனக் குறிப்பிட்டிருந்தார். அது யாரைத் தெரியுமா ? அவர் குறிப்பிட்டது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை. பிரபாகரன் செயலில் ஒரு சாதி மறுப்பாளர், பிறப்பினடிப்படையில் கூட அவர் ‘ பறையர்’ என்ற சாதிக்குள் வரமாட்டார், அவ்வாறிருக்க ஏன் அவரை அவ்வாறு சுப்பிரமணிய சுவாமி அழைத்தார்.
இரு காரணங்கள் ; உள்நாடு சார்ந்து பறையன் என்பது சிறப்பாகத் தமிழரையே குறிக்கும் என்ற புரிதல் , இரண்டாவதாக அனைத்துலக மட்டத்தில் அவரைத் தனிமைப்படுத்தல் என்பனவாகும். இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இனவாதச் சிங்களவர் தமிழர்களைப் பொதுவாகத் திட்டும் போது `பறைத் தமிழோ` எனத் திட்டுவனைச் சொல்லலாம்; இங்கு சாதி வேறுபாடு எதுவுமில்லாமல் முழுத் தமிழரையுமே இழிவுபடுத்தும் நோக்கிலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது. எனவேதான் இச் சொல்லின் இன்றைய பயன்பாடு குறித்து முழுத் தமிழர்களுமே அக்கறை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பறையா` என்ற சொல்லின் மேற்குலகப் பயன்பாடு :-
`பறையா` என்ற சொல் மேற்குலகுக்கு வந்த வரலாறு குறித்தும், அதன் பொருள் குறித்தும் ஏற்கனவே பார்த்துள்ளோம். இச் சொற் பயன்பாடானது இன்றைய உக்கிரேன் போர்க் காலத்தில் அதிகரித்துள்ள போதும், இதற்கு முன்னரும் இச் சொல்லானது அவ்வப்போது பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்து இளவரசர் அன்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த போதும் கூட , கேற்றி ( KATIE STRICK) என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்பினை ` The fall of Prince Andrew — from party prince to royal pariah` { விருந்தின் இளவரசனாகவிருந்து அரச குடும்பப் பறையனாக இளவரசர் அன்ட்ரூவின் வீழ்ச்சி} என அமைத்திருந்தார் (படம் காண்க).
பாலியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளர் கார்வி வெயின்சிடீனுடைய (Harvey Weinstein ) படத்தினைப் போட்டு, ரைம் (Time ) இதழானது `பறையா`என அவரினை அட்டைப் படத்தில் போட்டிருந்தது. அப்போதும் (2017 இல்) அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன [ , “Producer. Predator. Pariah” ]. தன்பால் ஈர்ப்புக்காக குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒரு பெண் விலக்கி வைக்கப்பட்ட கதையினைக் கூறும் ஒரு ஆங்கிலத் திரைப்படம் 2011 இல் வெளிவந்திருந்தது; அந்தப் படத்தின் பெயர் கூட இதுதான் : Pariah. இவ்வாறு இச் சொல்லானது கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தபோது , எதிர்ப்புகள் சிலவும் எழுந்தே வந்தன.
மேற்கூறிய குறித்த ரைம் (Time) இதழின் அட்டைப்பட நிகழ்வின் போது (தற்போதைய) இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்கள், குறித்த இதழுக்கு இச் சொல்லின் பயன்பாடு குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். அதே போன்று எலெனி வரிகாசு ( Eleni Varikas ) என்பவர் எழுதிய ` la figure du paria ` (The Figure of the Outcast) என்ற ஆய்வுக்கட்டுரையும் தனது எதிர்ப்பினைக் காட்டியிருந்தது. இத்தகைய எதிர்ப்புக்கள் அடங்கிப் போன நிலையில் இன்று இச் சொல்லின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
‘பறையர் தேசம்’ ( Pariah state) என்றால் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு என்பதே பொருள். அப்படிப்பட்ட நாட்டுடன் எந்தவிதப் பொருளாதார- சமூக உறவுகளையும் கொள்ளக்கூடாது எனவும் `அரசியல் கலைச்சொல் அகராதி` பொருள் கூறுகின்றது. ‘பறையர்’ என்ற சொல்லுக்கான மூலமாக தென்னிந்தியாவில் பிரித்தானிய காலணி ஆட்சி இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட சாதி முறைப் பெயர் என்பதனையும் கூட இவர்கள் அறிந்தே பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவும் அறிந்த பின்பும் இந்த வசைச் சொல்லினை/ இந்தப் பாகுபாட்டினை ஊக்கப்படுத்தக் கூடிய சொல்லினை இவர்கள் பொது வெளியில் கூச்சமே இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். இதுதானா இவர்கள் பேசும் நாகரிக உலகம், மக்களாட்சி எல்லாம். இரு நிலைகளில் இச் சொல்லாட்சிக்கு எதிரான போரினை நாம் செய்ய வேண்டும்.
1. மேற்குலக நாடுகளிலுள்ள முற்போக்காளர்களுடன் இணைந்து , மேற்குலக அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் இச் சொல்லாட்சியின் தாக்கத்தினை விளக்கி, அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
2. தமிழ்நாடு அரசு மூலமாகவும் இந்திய முற்போக்காளர்கள் மூலமாகவும் அங்குள்ள மேற்குலக தூதரகங்களுக்கு அழுத்தம் கொடுத்தல்.
இந்த நிலையில் ஒரு திரைப்படப் பாடல் வரிகளுடன் இக் கட்டுரையினை நிறைவு செய்வோம்.
” இன்னும் இங்கு பள்ளுப் பறை எனச் சொல்லும் மடைமைகள் உள்ளதடா….
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்கதடா”
வி. இ. குகநாதன்
disclaimer