காலங்காலமாக பாஜகவை புறக்கணித்து வந்த வாக்காளர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் செய்வதன் மூலம் பாஜக கட்சியை நாட்டின் கடைகோடி வரை கொண்டு போய் சேர்ப்பதற்கான வேலைகளை அமித்ஷா – மோடி இணை செய்துவருகிறது.

ஆனால் 40 ஆண்டுகள் ஆன இந்த கட்சியில் இன்னமும் கட்சி அமைப்பின் நிர்வாகத்தில் தொன்மையான வரணாஸ்ரம சனாதனத்தை அப்படியே பின்பற்றி வருகிறது என்பதை கடந்த 2018-ம் ஆண்டு தி பிரிண்ட் இணையதளம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

தி பிரிண்ட் பத்திரிகை வெளியிட்ட இந்த ஆய்வு ஆகஸ்ட், 2018-ம் ஆண்டு வரையிலுமான நிலைமைதான் என்றாலும், பாஜக-வின் நிலைமையை இன்றளவும் பிரதிபலிக்கக் கூடியதாகவே இருப்பதால், அவ்வாய்வுக் கட்டுரையை சுருக்கி இங்கே தருகிறோம்.

பாஜகவில் வர்ணாசிரம சாதிய படிநிலையின் படி, உயர்சாதியினரின் ஆதிக்கமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், பிற்பட்ட சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் அவர்களது ‘சாதிய படிநிலைக்கு’ உரிய இடங்களையே வழங்கி வந்திருக்கிறது பாஜக.

படிக்க :
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

இந்தியாவை சித்பவன் பார்ப்பனர்களின் சாம்ராஜ்யமாக மாற்றி ‘அவர்களின் பொற்காலத்தை’ மீட்டெடுக்க கனவுகளோடு களத்தில் சகல தகிடுதத்தங்களையும் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாராளுமன்றப் பிரிவான பாஜக-வின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது மிக அவசியமாகும்.

அதனடிப்படையில், மிக ஆழமாக அந்த கட்சியின் அமைப்பு நிர்வாகத்தில் சாதிய விவரங்களை ஆராய வேண்டியிருக்கிறது.

தலைமை தாங்குவது உயர்சாதி வெறியர்கள் :

தேசிய அளவில் கட்சி நிர்வாகிகளில் நான்கில் மூன்று பங்கு உயர்சாதியினரின் ஆதிக்கமே உள்ளது. அதன் தேசிய செயற்குழுவில் 60 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள சாதியினரே. நாடு முழுவதும் மாநில தலைவர்களில் 65 சதம் இடத்தை பொதுப்பட்டியலில் உள்ள சாதியினர்தான் ஆக்கிரமித்திருக்கின்றனர்.

இதற்கு கீழ் உள்ள பதவிகளிலும் பெரும்பான்மையான தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர்தான் உள்ளனர். நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் பதவிகளிலும் 65 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள உயர்சாதியினரே ஆவர்.

தலைமைப் பதவி எப்போதும் ‘தலையில் பிறந்த’ பார்ப்பன சாதியினருக்கே என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தாங்கித் தான் இயங்குகிறது பாஜக.

சட்டையை உரித்தாலும் பாம்பு பாம்புதான்

பாஜகவை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் விரோதமான கட்சி என்பதுதான் அதன் துவக்க கால அடையாளம். ஆனால் பாஜக ‘பார்ப்பன – பனியா’ உயர்சாதியினருக்கான கட்சி என்ற தனது உண்மையான தன்மையை மறைத்துக் கொள்ள சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் பல இடங்களில் பாஜகவை நாட ஆரம்பித்தனர். கீழே உள்ள பொறுப்புகளில் பெயரளவிற்காவது பல சாதியினரையும் அனுமதித்தாலும் அதன் உயர்மட்ட அமைப்புகளில் இன்னும் தீண்டாமைதான் கோலோச்சுகிறது.

தலித் மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை பாஜக அங்கொன்றும் இங்கொன்றுமாக நரித்தனமாக பயன்படுத்திக் கொள்ள அவர்களை நிர்வாகப் பதவிகளில் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு தேசிய நிர்வாகிகளில் சிறுபான்மையினர் (முசுலீம், புத்தமதம், கிறிஸ்தவம்) இரண்டு பேர்தான் இருக்கின்றனர்.

பாஜகவின் நிர்வாகிகள் பட்டியலையே எடுப்போம்.

தேசிய நிர்வாகிகள்- 50 பேர். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் – 97பேர். மாநிலங்கள்-29 யூனியன் பிரதேசங்கள் 7 ஆக மொத்தம் – 36 மாநில தலைவர்கள். அதோடு 24 மாநிலங்களில் மாவட்டத்தலைவர்கள்-752 பேர்

வடகிழக்கிந்திய மாநிலங்கள் அஸ்ஸாம், திரிபுரா தவிர அடிப்படையில் பழங்குடியின மக்களே ஆதிக்கத்தில் இருப்பதால் மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் இந்த சமூக நிலைமைகள் எதிரொலிக்கவே செய்யும் என்பதால் ஆய்வுக்கு இவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சாதி வகைபடுத்துதல் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட சாதியின் நிலையை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் புத்த மதத்தினர் மற்றும் கிறித்துவர்கள் சிறுபான்மையினர் என்ற வகையில் சேர்க்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி! பஞ்சாபியருக்கு அநீதி

சீக்கியர்களை சிறுபான்மையினராக வகை பிரிக்கவில்லை. பாஜகவில் அதிகமான அளவில் சீக்கியர்கள் பதவிகள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது பஞ்சாப் மாநில பாஜக கட்சிஅமைப்பில் மட்டும்தான். அங்கே அவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இந்த நிலைமை. ஆனால் பஞ்சாபுக்கு வெளியே பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு சீக்கியரும்,  தேசிய செயற்குழுவில் ஒரே ஒருவரும், மத்தியபிரதேசம், சட்டிஸ்கரில் ம்ாநிலங்களில் தலா ஒரு மாவட்ட அளவிலான பதவிகளிலும் மட்டுமே சீக்கியர்கள் உள்ளனர்.

ஆனால் பார்ப்பனர்கள் பனியாக்கள் எடுத்துக் கொண்டோமெனில், மக்கள் தொகையில் அரிதாக இருக்கும் அவர்களுக்கு கட்சிதான் அதிகார மையம்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட விதம் :

தேசிய பொறுப்பாளர் மற்றும் தேசிய செயற்குழு பட்டியலும் பாஜக கட்சியின் இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை.

தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர்கள், இணை பொதுச் செயலர்கள், தேசிய செயலர்கள், தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் துணை இணை அமைப்புகளின் (மோர்ச்சா) தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். தேசிய செயற்குழுவில், மாநில தலைவர்களும் உறுப்பினர்களே. மாவட்டத் தலைவர்கள் பற்றிய விபரங்கள் கட்சியின் மாநில இணையத் தளங்களில் காணக் கிடைக்கும்.

படிக்க :
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

மாவட்ட தலைவர்கள் எண்ணிக்கை, சில மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களை விட, அதிகமாக இருக்கும். மாவட்டங்கள் பெரிதாக இருந்தால் தலைவர் பதவிகள் ஒன்றுக்கு அதிகமாக இருக்கும். சாதிய அளவீடுகள் முடிந்த அளவு துல்லியமாக தரப்படுகிறது. சாதியை அடையாளப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால், சில திருத்தங்கள் இருக்கலாம்.

இனி நிர்வாகிகள் பொறுப்பாளர்களில் பாஜக-வின் சமூக நீதியை பார்ப்போம்.

தேசிய நிர்வாகிகள் மொத்தம் 50 பேர்.
பார்ப்பனர்கள் – 17 பேர்
பிற உயர்சாதியினர் – 21 பேர்
மொத்தத்தில் 50க்கு 38 பேர் உயர்சாதியினர்.

மீதி உள்ள 12 பதவிகள்தான் பிற சாதியினருக்கு பிரிக்கப்பட்டுள்ளது. அதில்,
இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் – 4 பேர்
தாழ்த்தப்பட்ட சாதியினர் – 3 பேர்
மலைவாழ் பழங்குடியினர் – 2 பேர்
முஸ்லீம்கள் – 2 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்

பாஜகவின் அதிஉயர்மட்ட முடிவுகள் எடுக்கும் தேசிய நிர்வாகிகள் அமைப்பில் மிக மோசமான அளவிலே தான் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான 3 பிரதிநிதிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டோருக்காக பாஜக நடத்தும் அமைப்பின் தலைவர். அதே போல,  மலைவாழ் பழங்குடியின மக்களை எடுத்துக்கொண்டால் இது இன்னும் மோசம். இருக்கும் 2 பேரில் ஒருவர் கட்சியில் மலைவாழ் பழங்குடியினருக்கான பிரிவின் தலைவர். இன்னொருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி துருவா. இவரின் சாதி நிலை பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அவரது சாதிய நிலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

ஆக மொத்தத்தில் இருக்கும் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 76 சதம் பேர் உயர்சாதியினர்தான். 8 சதம் பேர் இதர பிற்பட்டுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். வெறும்  6 சதம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள்.

தேசிய செயற்குழுவிலும் இதே நிலைதான். மொத்த உறுப்பினர்கள் – 97 பேர். அதில்,
பார்ப்பனர்கள் – 29 பேர்
உயர்சாதியினர் – 37 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் – 18 பேர்
தாழ்த்தப்பட்டோர் – 7 பேர்
சிறுபான்மையினர் – 3 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்
மலைவாழ் பழங்குடியினர் – 1 நபர்

அதாவது மொத்தம் 97 நிர்வாகிகளில் 66 பேர் உயர்சாதியினர். உயர்சாதியினர் 69 சத பதவிகளை ஆக்ரமித்துள்ளனர். 27 சதம் பேர் மட்டுமே மற்ற சாதிகளிலிருந்து வந்துள்ளனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 36. கடந்த 2018-ம் ஆண்டுவரையில் இதில் தலைவர் பொறுப்புகளில் ஒருவர் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் மட்டும்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவர் பொறுப்பில் உட்கார வைத்திருக்கிறது பாஜக.

மொத்தமுள்ள 36 பேரில்,  (2018 நிலவரம்)
பார்ப்பனர் – 7 பேர்
பிற உயர்சாதியினர் – 17 பேர்
பழங்குடி மலைவாழ்பிரிவு – 6 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 5 பேர்
முஸ்லீம் – 1 நபர்

மொத்த்த்தில் இருக்கும் 36 பதவிகளில் 24 பேர். அதாவது 69 சதம் பேர் உயர்சாதியினர் தான். மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களில் கூட இதேநிலை நீடிக்கிறது. மாவட்ட அளவிலான 752 பதவிகளில் 65 சத பதவிகளில் இருப்பது உயர்சாதியினர்தான்.

மொத்தமுள்ள 752 பதவிகளில் 746 மாவட்ட தலைவர்களின் விவரங்கள் உள்ளன. அதில் 487 பேர் உயர்சாதியினர். அதாவது 65 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர். 25 சதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) / பிற்படுத்தப்பட்டோர் (BC) / மிகபிற்படுத்தப்பட்டோர் (MBC). தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் 4 சத அளவுக்குதான் பிரதிநிதித்துவம். சிறுபானமை மதத்தினருக்கோ 2 சதவீதம்தான்.

மக்கள்தொகையில் ஒவ்வொரு சாதியும் இருக்கும் அளவுக்கு ஈடானதாக கட்சியில் அதன் பிரதிநிதித்துவம் இல்லைஎன்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அதற்கு பதில் பார்ப்பன பனியா மற்றும் உயர்சாதியினருக்கு, அவர்கள் மக்கள் தொகையில் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி தலித் மக்கள் 16.6 சதம்; மலைவாழ் பழங்குடியினர் 8.6 சதம்; முஸ்லிம்கள் 14 சதம் என தரவுகள் கூறுகின்றன. மற்ற சாதியினருக்கான சரியான விவரங்கள் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2007-ல் எடுத்த கணக்கெடுப்பு படி இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்(ஓபிசி) 41 சதம் பேர் உள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் மாநில வாரியாக பாஜக கட்சித் தலைமையில் உள்ள சாதிய பிரிவினையை விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். மூலக் கட்டுரைக்கான இணைப்பு கீழே கட்டுரை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும் நாம் அவர்களது சித்தாந்தத்தில் இருந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும் எனினும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.


நன்றி : தி பிரிண்ட்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மணிவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க