மதுரையில் மார்ச் 8 சர்வதேச மகளிர் தின அரங்கக் கூட்டம்!
மதுரையில் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தின அரங்கக் கூட்டம் மார்ச் 8 மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் உமா அவர்கள் தலைமை தாங்கினார்.
தனது தலைமை உரையில், “1910-ம் ஆண்டு ஜெர்மன் பெண்கள் எட்டு மணி நேர வேலைக்காகப் போராடினார்கள். அதன் பிறகு பல்வேறு கட்டங்களில் நடந்த தொடர்ச்சியான போராட்டங்களால் தான் பெண்கள் தினம் உருவானது. இன்றும் பெண்கள் மீதான வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் விடுதலை அடையவில்லை. அதற்கு காரணமான இந்த சமூக கட்டமைப்பை மாற்றுவதின் மூலமே பெண் விடுதலையை சாதிக்க முடியும்” என்றார்.
தோழர் அமீர் தனது உரையில், “ஒவ்வொரு மதமும் பெண்களை எப்படி ஒடுக்குகிறது. குறிப்பாக, பார்ப்பனிய இந்து மதம் மனு நீதியின் அடிப்படையில் பெண்கள் சுயமாக இயங்க முடியாதவர்கள் ஆணுக்கு கீழானவர்கள் என்கிறது” என விரிவாகப் பேசினார். மேலும் சமூகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் நிலை என்ன என்பதை விவரித்து பேசினார். இந்த நிலையை மாற்ற சமூக மாற்றம் வேண்டும் அதற்கு புரட்சி அவசியம் என்றார்.
தோழர் கவிதா தனது உரையில், இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்திற்கு மிக முக்கியமான  காரணமாக உள்ளது பார்ப்பனியம். தாலி, மஞ்சள், பொட்டு என பெண்கள்  அணியும் ஒவ்வொரு பொருளிலும் அடிமைத்தனத்தை புகுத்தியுள்ளது பார்ப்பனியம். பெண்கள் மேலாடை உடுத்துவதற்கே பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது இன்றும் பெண்கள் தமது விடுதலைக்காக தொடர்ந்துப் போராட வேண்டியுள்ளது” என பேசி முடித்தார்.
தோழர் ராம் தனது உரையில், “குடும்பமே ஆண் – பெண் பாகுபாடு மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுவுகிறது. மேலும் பெண்கள் தினம் போராட்ட வரலாற்றை பேசினார். காவி – கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறி வரும் வேலையில் நாளை இதைப்போல பெண்கள் தினக் கூட்டம் நடத்த முடியுமா என்பது தெரியவில்லை. இதை உணர்ந்து புரட்சிக்காக சமூக மாற்றத்திற்காக களத்திற்கு வரவேண்டும்” என பேசி முடித்தார்.
தோழர் ரம்யா தனது உரையில், “பாலியல் வன்முறை குற்றங்கள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நடக்கின்றது. இதற்கு ஆபாச இணையதளங்கள், போதைப்பழக்கம் ஆகியவை காரணமாக உள்ளது. பெண்கள் விடுதலைக்காக அன்று கிளாரா ஜெட்கின் போன்றவர்கள் போராடினார்கள்; இன்று நாம் போராட வேண்டும்” என்றார்.
குட்டித் தோழர் அர்ஜுன் அவர்கள் கவிதை வாசித்தார்.
தோழர் ஆனந்த், தனது உரையில், “ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்; அங்கு பெண்களுக்கு முறையான சாப்பாடு இல்லை; தங்கும் இடமில்லை; காண்ட்ராக்ட் வேலை மூலமாக ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். அதன் கொந்தளிப்பு தான் இந்த போராட்டம். 48 மணிநேரம் சாலையை மறித்து பெண்கள் போராடினார்கள் பெண்கள் என்றால் போராட வர மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்துள்ளார்கள்” என்றார்.
தோழர் குருசாமி தனது உரையில், “ஆணாதிக்கம், மதம், சமூகம் என அனைத்திற்கும் எதிராக பெண்கள் போராட வேண்டும். அறிவாளிகளும் படித்தவர்களும் கூட பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அதற்கு காரணம் இந்த சமூக கட்டமைப்பு தான். பல்வேறு குடும்பங்களிலும் பழைய பிற்போக்கு விஷயங்கள் இருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் செல்வாக்கு செலுத்தும் வளரவும் முடிகிறது. இதுதான் கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினையில் மாணவர்களை முஸ்லீம்களுக்கு எதிரான மதக் கலவரம் செய்ய தூண்டுகிறது. இதை உணர்ந்து நாம் நமது குடும்பத்தில் இருக்கும் பல்வேறு ஜனநாயக விரோதமான விஷயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும். காவி – கார்ப்பரேட் பாசிசம் ஒழிக்கப்படுவதில் தான் பெண்விடுதலையும் உள்ளது” என பேசி முடித்தார்.

This slideshow requires JavaScript.

தோழர் சிவகாமு தனது உரையில், “ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் எப்படி அரசியல் ரீதியாக உறுதியாக இருக்க வேண்டும்; அதுதான் இந்த சமூக மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என்பதை வலியுறுத்திப் பேசினார். அதில் தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். பெண்களுக்கு இந்த சமூகத்தில் கூடுதலான பிரச்சினைகள் உள்ளது. அதற்கு போராட பெண்கள் முன்வர வேண்டும்” என பேசி முடித்தார்.
இறுதியாக, தோழர் ரவி தனது நன்றியுரையில்,  “மற்ற இடங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் எல்லாம் தனித்தனியாக பெண்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வழிகாட்டுகிறது. ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சமூகத்தை மாற்றி அமைப்பதே பெண் விடுதலையை சாதிக்கும் என்ற பார்வையில் பார்க்கிறது இந்தக் கூட்டம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு இந்த கூட்டத்திற்கு உண்டு” என பேசி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தோழர்களுக்கும் அதற்காக உழைத்த தோழர்களுக்கும் கலந்து கொண்ட தோழர்களுக்கும் நன்றி கூறி அரங்கக் கூட்டத்தை நிறைவு செய்தார்.
இடையிடையில் தோழர்கள் புரட்சிகர பாடல்களை தயாரித்து வந்து பாடினார்கள்.
அரங்கச் சுவர்களில் பெண்கள் போராட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடிய பெண்களின் படங்கள், மார்க்ஸ், லெனின், அலெக்சாந்ரா கொழந்தாய் ஆகியோரின் பெண்கள் பிரச்சினை சம்பந்தமான மேற்கோள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்
மதுரை மாவட்டம்.
000
மார்ச்- 08, உலக மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அறைக்கூட்டம்!
பெண்களை வக்கிரமாக காட்டி இழிவுபடுத்தும் ஆபாச இணையதளங்கள், சினிமா – சீரியல்கள், மசாலா பத்திரிகைகள், டாஸ்மாக் ஆகியவற்றை தடைசெய்ய போராடுவோம்!
பெண்களை போகப்பொருளாக காட்டி அடிமைபடுத்தும் ஆணாதிக்க – பார்ப்பனிய – ஏகாதிபத்திய நுகத்தடிகளை முறியடிப்போம்!
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பாலியல் வன்முறைகளுக்கு காரணமான காவி- கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! என்ற முழக்கத்தின் கீழ் அறைக்கூட்டம் நடந்தது.

This slideshow requires JavaScript.

இந்த அறைக்கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தோழர் மயிலா தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டலச் செயலாளர் தோழர் கோபிநாத் பெண் விடுதலை குறித்தும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார். குறிப்பாக, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலையை மாறி இன்று பெண்கள் கல்வி கற்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், படித்த மாணவ – மாணவியர்கள் யாருக்கும் வேலை இல்லை. இதற்கு காரணம் முதலாளித்து சுரண்டல், இலாபவெறிதான் என்பதை விளக்கியும், இதற்கு எதிராக போராடும் போதுதான் பெண் விடுதலையை சாதிக்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.
இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. உழைக்கும் பெண்கள் தமது கடமைகளையும் உணரும் வகையில் இந்த அறைக்கூட்டமானது நடந்தேறியது பெண்களிடம் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருமபுரி மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க