இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு –
இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமைகள் என்ன?
மே 1 என்றால் தொழிலாளர் தினம், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். அப்படிப்பட்ட மே தினம் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தான், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சென்னையில் தான் முதல்முறையாக 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த வருட மே தினத்துடன் இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1923-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் தோழர் சிங்காரவேலு ஆவார்.
தோழர் சிங்காரவேலு 1923-ம் ஆண்டு மே தின விழாவை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் சிங்காரவேலுவும், தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும் பங்கேற்று பேசினர்.
தென்சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, எம்.பி.எஸ்.வேலாயுதம், சங்கர்லால் ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் என்று அன்றைய இந்து மற்றும் சுதேசமித்ரன் ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
படிக்க :
♦ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !
”மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்பவை தோழர் சிங்காரவேலு மே 1 தின பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகள்.
அக்காலகட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து முழுமையான அரசியல் விடுதலை எனும் முழக்கத்தோடும், பொருளாதார சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி எனும் கோரிக்கையோடும் தனது போராட்டங்களை முன்னெடுத்தது. (டி.கே.ரங்கராஜன், CPIM)
குறிப்பாக தமிழகத்தில் நாகை மற்றும் திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம், சென்னை, கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், கிராமப்புறங்களில் நடைபெற்ற ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, குத்தகைதாரர் உரிமை போராட்டங்கள், விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டங்கள், சென்னையில் டிராம்வே போராட்டம் என மாநிலம் முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அன்றைய காலகட்டத்தில் வெடித்து எழுந்தன. தமிழகத்தை போல் இந்தியா முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன.
மேற்கூறிய சூழல் நிலவும் போது தான் தோழர் சிங்காரவேலு இந்திய தொழிலாளி வர்க்கம் ஒரு பலமான சக்தியாக மாற வேண்டும் என்பதையும், உலகத் தொழிலாளர்களோடு ஒரே வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
அன்று இந்தியாவானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. உலக ஏகாதிபத்தியங்களுக்கிடையே பிரிட்டிஷ் கை மேலோங்கி, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மூலம் உலகை மறுபங்கிட புதியதாக உருவாகிய ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்கள் போட்டி போட்டன. 1917 ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஆதரவாக ரஷ்யா தலைமையில் சோசலிச முகாம், முதலாளித்துவ நாடுகளுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய முகாம் என உலகம் இரு முகாம்களாக பிரிந்து இருந்தது.
அதன் பிறகு சோவியத் ரஷ்யாவானது சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து பல நாடாக உடைந்து சீரழிந்தது. ஆகையால் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கமானது தலைமை தாங்கி செல்லக்கூடிய சோசலிச முகாம் இல்லாமல் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்க ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய முகாமானது ஏறித் தாக்கும் நிலைமையில் இருந்தது. அதனால் அமெரிக்க தலைமையின் கீழ் இருந்த எல்லா நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் என அழைக்கப்படும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறானது. அமெரிக்க ஒற்றை துருவ மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்க – ரஷ்யா மற்றும் அமெரிக்க – சீனா மேலாதிக்க போட்டியானது வளர்ந்து வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரானது அமெரிக்க – ரஷ்ய மேலாதிக்க போட்டிக்கு உதாரணம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் அமெரிக்க – சீன மேலாதிக்க போட்டிக்கு உதாரணம்.
இப்படிப்பட்ட உலக மேலாதிக்க போட்டி மற்றும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக உலகம் முழுவதிலும் ஒரு பொதுப்போக்காக பாசிச இயக்கங்கள் எல்லா நாடுகளிலும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன.
அப்படித்தான் இந்தியாவில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் தன்னுடைய நிகழ்ச்சி நிரலான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லீம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரம் ஏற்படுத்துவதற்கான பண்டிகைகள் என்பதை தாண்டி, இந்துக்கள் பண்டிகைகள் என்றாலே முஸ்லீம் மீதான தாக்குதல் என்ற புதுப்பண்பு உருவாகி உள்ளது. ராமநவமி கலவரம் இதற்கு சமீபத்திய உதாரணம்.
தலித்துகள் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் முன்பை விட பன்மடங்கு அதிகரித்த போதும், தலித்துகள் உட்பட பிற சாதிகள் மத்தியில் நாம் இந்துக்கள் என்ற உணர்வு முன்பை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நாம் இந்துக்கள் என்ற உணர்வு தான் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஒருபுறம் பாஜக – ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிரத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
படிக்க :
♦ மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ
♦ மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
மறுபுறம் இந்தியாவானது உள்நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்களின் வேட்டைக்காடாக மாற்றப்படுகிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு வளர்ச்சி என்ற பெயரில் விற்கப்படுவதும், கார்ப்பரேட்டுகள் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மானியங்கள் என மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பதும், அதற்கு எதிர்மாறாக மக்களை பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் மற்றும் ஜி.எஸ்.டி என்ற பெயர்களில் வரியை போட்டு கசக்கி பிழிவதும் அன்றாட நிகழ்வாகி, மக்கள் மீதான வரிச்சுமை மேலும் மேலும் தீவிரமாகி வருகிறது.
மேற்கூறிய விதத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல பிரிக்க முடியாத வகையில் தீவிரமாக அமல்படுத்துகிறது.
ஆகவே தற்போது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு விரோதமான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதும், ஏகாதிபத்திய முதலாளித்துவதை முறியடித்து சோசலிச சமூகத்தை நிறுவ சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நிறுவதும் ஆகும். இவற்றை நிறைவேற்ற தம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதே இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100-வது ஆண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.
இறுதியாக தோழர் சிங்காரவேலுவின் வார்த்தைகளிலே கூறுவதானால்,
“நம் நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் இரக்கமற்ற அயல்நாட்டு ஆட்சியாளர்களின் விலங்குகளிலிருந்து மட்டிமின்றி, வர இருக்கும் இந்திய முதலாளிகளின் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டால் தான் உண்மையான சுதந்திரத்தோடு இருக்க முடியும்”.

அமீர்