கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வால் முடங்கும் சிறுதொழில்கள், நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல்-எரிவாயு விலை உயர்வு ஆகியவை ஏற்கெனவே மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்திருக்கும் சொத்து வரி உயர்வு மேலும் மக்களது சுமையைக் கூட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல்-1 ஆம் தேதி இரவு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பல ஆண்டுகளாக சொத்து வரியில் எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்று நியாயப்படுத்தி சொத்து வரியை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, குறைந்தபட்சமாக சென்னையின் முதன்மைப் பகுதிகள் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையின் பிரதான பகுதிகளில் அமைந்துள்ள 1800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கும், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கும் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பிற்கு எதிராக அ.தி.மு.க, பா.ஜ.க, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் அக்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்
சொத்து வரி உயர்வு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல ‘பம்பர் பரிசுகள்’ காத்திருக்கின்றன” என்றார்.
“தமிழக அரசின் இம்மக்கள் விரோதப் போக்கால், சொந்தத் தொழில் செய்வோர், வீடு வாடகைக்கு விட்டிருப்பவர்கள், வாடகை வீட்டில் தொழில் செய்பவர்கள் மற்றும் குடியிருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது.
தி.மு.க. எதிர்ப்பில் தன்னை ஆளாக்கிக் கொள்ள விழையும் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இச்சொத்துவரி உயர்வு வாயில் விழுந்த அவலாக கிடைத்தது. குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் எதிர்க்கட்சியாகத் திகழ்கிற பாசிச பா.ஜ.க.விற்கு பொன்னான வாய்ப்பாகியது. இதனை ஒட்டி பா.ஜ.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
000
சட்டமன்றத்தில் சொத்துவரி உயர்வு குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த சொத்துவரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. குறிப்பாக அடித்தட்டு மக்களை ஏழை, நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 83 சதவீத மக்களை இவ்வரி உயர்வு பாதிக்காது” என்றார்.
ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் சொத்துவரி அதிகரிக்கப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்திருந்ததை வசதியாக மறந்துவிட்டார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, “சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகு, தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளைப் பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று சொல்வதோடு, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் சொத்துவரி இன்னமும் குறைவாகத்தான் இருக்கிறது என்றும் வாதிடுகிறது தமிழக அரசு. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு, மும்பையில் ரூ.2,157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3.464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924ஆகவும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படித்தான், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திடீரென ஒரே இரவில் ஏற்றப்பட்ட பால்விலை, பேருந்து கட்டண உயர்வின்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவுதான் என்றும், பல வருடங்களாக உயர்த்தாமல் தி.மு.க. அரசு நட்டத்தை உருவாக்கி விட்டதாகவும் அ.தி.மு.க.வினர் அப்போது நியாயப்படுத்தினர்.
சொத்துவரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் பா.ஜ.க.வினர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டு, போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டிய தி.மு.க. தாங்கள் ஆளுங்கட்சியாக மாறியதும், முந்தைய அரசாங்கம் செய்த அதே மக்கள் விரோத செயல்பாடுகளைச் செய்து அவற்றை நியாயப்படுத்துகிறது.
000
சொத்துவரி உயர்வுக்கான காரணம் குறித்துப் பேட்டியளித்த அமைச்சர் நேரு, மார்ச் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரியில் மறுசீராய்வு செய்யவில்லையெனில், மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவை தொகையான ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதியையும், இந்த வருடம் தரவேண்டிய ரூபாய் 15 ஆயிரம் கோடி நிதியையும் தர முடியாது என நிதி ஆணையத்தின் 15-வது நிதிக்குழு நிபந்தனை விதித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் குறித்து பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தமது வசதிக்கேற்ப விளக்கமளித்து, தி.மு.க. அரசை விமர்சித்தாலும், நிதி ஆணையம் குறித்த இந்த விளக்கத்தில்  உண்மை உண்டு. இந்த நிதி ஆணையத்தின் செயல்பாடு குறித்து புரிந்து கொள்ளும் போதுதான், அவர்கள் மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் அழுத்தம் பற்றி  புரிந்துகொள்ள இயலும்.
மத்திய அரசு மக்களிடமிருந்து வசூல் செய்யும் மொத்த வரி வருவாயை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கும் அமைப்பே நிதி ஆணையம். மாநிலங்களின் மக்கள்தொகை, நிலப்பரப்பு, மாநில உள்நாட்டு உற்பத்தி, கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி கொடுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் நிதி பாரபட்சமின்றி எல்லா மாநிலங்களுக்கும் சமமாக சேர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்நிதி ஆணையம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையத்தின் நிதிக்குழு மாற்றியமைக்கப்பட்டு, ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை தனி தலைவர்களும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது 15-வது நிதிக்குழுவின் காலகட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
13-வது நிதிக்குழு வரை நிதிப் பகிர்வானது 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 2014-ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்ட 14-வது நிதிக்குழு, 1971-ம் ஆண்டினது மக்கள் தொகையைவிட 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு முக்கியத்துவம் கொடுத்தும், காடுகளின் பரப்பளவு உள்ளிட்டவற்றை புதிய அளவுகோளாக சேர்த்தும் நிதி ஒதுக்கீடுகளை கணக்கிட்டது. இந்நடவடிக்கையானது பெருமளவிற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய, ‘தொழில் வளர்ச்சி’க்காகத் தொடர்ச்சியாக வனப்பகுதிகளை இழந்து வந்த தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு பலத்த அடியைக் கொடுத்தது.
ஏற்கெனவே 10-வது நிதிக்குழுவிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த தமிழகத்திற்கான நிதி, 14-வது நிதிக்குழுவில் கிட்டத்தட்ட 16 சதவிகிதம் வரையில் குறைந்தது. இந்த நிதிக்குழுவின் பரிந்துரையால் தென்மாநிலங்கள் இழப்பைச் சந்தித்த அதே வேளையில், வடமாநிலங்கள் பெரும் லாபத்தை அடைந்தன. சான்றாக, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் 100 ரூபாய் வரியில் 29 ரூபாய் மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது. அதே நேரத்தில் பீகாருக்கு 219 ரூபாயாகவும், உத்திரபிரதேசத்திற்கு 149 ரூபாயாகவும் திருப்பித் தருகிறது, ஒன்றிய அரசு. (செய்தி ஆதாரம்: மெட்ராஸ் ரிவியூ)
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை வெட்டிச் சுருக்கிய மோடி அரசு, நிதி கொடுப்பதற்கு விதிக்கும் நிபந்தனைகளும், அவற்றை நடைமுறைப்படுத்தக் கொடுக்கும் அழுத்தங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் இந்திய அரசானது நிதிமூலதனக் கும்பலின் கங்காணியாக மாறி, மறுகாலனியாக்கத்தைத் தீவிரப்படுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதும் நடக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வைத் திணித்து வருவதையும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே, ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவந்து மாநிலங்களின் வரி வருவாயில் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மேலும், எரிபொருட்கள் மீது பங்கிடப்படும் வரிகளைக் குறைத்து, ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளும் வரிகளை அதிகப்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதிகளை இல்லாதொழித்து வருகிறது. அவ்வப்போது தரவேண்டிய நிதிப்பங்கீடுகளை நிறுத்தி வைப்பது, புயல் – வறட்சி நிவாரணத் தொகைகளைத் தர மறுப்பது ஆகியவற்றின் மூலம் மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது.
இதன் மூலம் குறைந்தபட்ச மக்கள்நலத் திட்டங்களையேனும் செயல்படுத்தி, மக்களிடம் தமது செல்வாக்கை நிலைநாட்டவும் வாக்கு வங்கியைத் தக்க வைக்கவும் விரும்பும் தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்கும் தமது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் நிறைவேற்றி வருகிறது.
படிக்க :
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
♦ அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!
நாம் சொல்லும் நிபந்தனையை ஏற்று நடைமுறைப்படுத்தினால்தான் நிதி தருவேன் என்று மாநிலங்களை தமது காலனியாக கருதி நடத்துகிறது ஒன்றிய அரசு. மாநில உரிமை வாய்ப்பந்தல் போடும் தி.மு.க. அரசு இதற்கெதிராக போராடாமல் “மனம் உவந்து செய்யவில்லை, வேறுவழியில்லை” என்று பசப்புகிறது. உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாகத்தான் தி.மு.க.வின் பேச்சு இருக்கிறது.
நீட், புதிய கல்விக் கொள்கை, எழுவர் விடுதலை, காவிரி நீர் உள்ளிட்ட பல்வேறு விசயங்களிலும் “சட்டப் போராட்டம் நடத்துவோம், சட்ட நுணக்கங்களை ஆராய்வோம்” என்ற வரம்புக்குட்பட்டு மாநில உரிமை பேசுகிறது தி.மு.க. அண்டை மாநிலமான தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தன்னுடைய மாநில விவசாயிகளிடமிருந்து புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யாமல் வஞ்சித்ததால், மோடி அரசைக் கண்டித்து டெல்லியில் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மக்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளுதல், பா.ஜ.க. எதிர்ப்பு அணியில் தன்னை முக்கியத் தலைவராக முன்னிறுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரலே அவரது இத்தகைய எதிர்ப்பை உந்தித் தள்ளின. எனினும் அது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தி.மு.க.வோ தனக்கு நெருக்கடி வராமல் ஒரு பக்கம் மாநில உரிமை பேசுகிறது. மறுபக்கம் வேறு வழியில்லை என்று மோடி அரசின் திட்டங்களுக்கு அடிபணிகிறது.
தி.மு.க.வின் இந்த இரட்டைப் போக்கை விமர்சிக்கும் தார்மீகப் பொறுப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு எதிராக அக்கட்சியை ஆதரித்தவர்கள். இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவர்கள் வாய்திறந்து பேச வேண்டும். இல்லையெனில் பாசிச பா.ஜ.க. பேசுவதுதான் மக்கள் காதில் ஒலிக்கும். அது அபாயமிக்கது.

துலிபா