தோழர் தேவ முருகனை நீங்கள் பார்த்ததுண்டா? அவருடன் பழகியதுண்டா?
பாத்திரம் கழுவி கொண்டிருப்பார், அடுத்து சில நிமிடங்களில் வாசல் சுத்தம் கொண்டிருப்பார், அடுத்த முறை பார்க்கும் பொழுது சாம்பார் வாளியை தூக்கிக் கொண்டு அனைவருக்கும் சாம்பார் ஊற்றி கொண்டிருப்பார். யாராவது யாரையாவது தோழரே இட்லி வேண்டுமென்று என்று கூறினால், உடனே ஓடிப்போய் இட்லி எடுத்துக் கொண்டுவந்து வைப்பார். போதுமா என்பார். கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகு அவர் சேர் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார். அறையை சுத்தம் செய்வார்.
யாரைப் பார்த்தாலும் நலமாய் இருக்கிறீர்களா? எப்படி அமைப்பு வேலை செய்கிறீர்கள் என்றபடி கட்டியணைப்பார். ஏறத்தாழ 55 வயதை கடந்த ஒருவர், அரசு அதிகாரத்தில் – அதிகாரியாக இருக்கும் ஒருவர், இப்படியெல்லாம் ஓடியாடி நமக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
தன்னை எங்கேயும் எப்பொழுதும் அமைப்பின் உடனேயே, அமைப்பின் மூலமாகவே தன்னை அறிமுகம் செய்து கொள்வார். அமைப்பிலே பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர் விரும்பியதில்லை. ஒரு புரட்சிகர அமைப்புக்கு, சரியான பாதையில் செல்லும் அமைப்புக்கு, தன்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் அவர் உறுதியாக இருந்தார்.
இவருடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எத்தனை பேருக்கு இது போன்று சமூக உணர்வுகள் இருக்கும்?
ஒரு அமைப்பிலே குறிப்பிட்ட காலம் வேலை செய்த உடனேயே தலைக்கனம் வந்துவிடுகிறது. தன்னை விட்டால் யாருமில்லை; தான் மட்டுமே அறிவாளி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தேவ முருகன் அரசு அதிகாரியாக இருந்த பொழுதும் அவர் காட்டிய பணிவு யாருக்காக? எதற்காக? புரட்சிக்காக, புரட்சிகர அமைப்புக்காக என்பதைத் தாண்டி எதுவும் இல்லை.
ஒவ்வொரு தோழரையும் அவர் அழைத்து பாசமாகவும் பரிவுடனும் பேசுவதை நீங்கள் யாராவது கேட்டதுண்டா? அவருடன் பேசி முடித்தவுடன் எங்கள் சோர்வு காணாமல் போகும், விரக்தி வீசியெறியப்படும். அந்த பாசத்தையும் நேசத்தையும் இனி நாங்கள் எங்கே யாரிடம் போய் காண்போம்? அது உழைக்கும் மக்களின் மீதான புரட்சியின் மீதான பாசம்.
நான் தான் பெரியவன், நான் இத்தனை ஆண்டுகாலம் இந்த அமைப்பினை வேலை செய்தேன். நான் அதைச் செய்வேன். இதைச் செய்தேன் என்றெல்லாம் ஜம்பம் பேசியவர்கள் எல்லாம் தேவ முருகனின் அர்ப்பணிப்புக்கும் பணிவுக்கும் முன் தூசியாக போய்விடுகிறார்கள்.
உதவி என்றவுடன் தேவ முருகனை கேட்கலாம் என்று இனிமேல் நாங்கள் ஒருபோதும் சொல்ல முடியாது.
அமைப்பிலேயே எப்பொறுப்பும் வகிக்காத இதுபோன்ற தோழர்கள் அமைப்பின் முகமாக பலருடனும் விவாதித்து, அமைப்பின் கொள்கையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே எமக்குப் பெருமையான ஒன்றாகும்.
அமைப்பின் பிளவுக்கு பிறகும் இது சரியான அரசியல் என ஏற்றுக்கொண்டு நம்முடன் உறுதியாக நின்றார். தோழர் தேவ முருகனின் அர்ப்பணிப்பையும் பணிவையும் கடும் உழைப்பையும் நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
சிவப்பஞ்சலி
தோழர் தேவ முருகன் !
மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க