22.06.2022
அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு புரட்சி செய்ய துடிக்கும்
வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம்!
ன்பார்ந்த தோழமை சக்திகளுக்கு எமது அமைப்பின் சார்பில் ஒரு வேண்டுகோள்! என்ற பெயரில் வழக்கறிஞர் திரு.ராஜூ அவர்கள் கடிதமொன்றை இணையவெளியில் வெளியிட்டிருந்தார். பொதுவாகவே ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் தாங்கள்தான் அந்த அமைப்பு என்றும், கொடி மற்றும் அமைப்பின் பெயரை பயன்படுத்துவதும் சாதாரணமாக நடைபெறுபவையாகும். மேலும் பிரிந்து செல்லும் தரப்பு மற்ற தரப்பைப்பற்றி கேள்விக்குள்ளாக்குவதும் நடைபெறுபவைதான்.
அப்படிப்பட்ட விவாதங்கள் அரசியல் ரீதியாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு பதில் அளிப்பது என்பது தங்களுடைய அணிகளையும் மக்களையும் அரசியல்படுத்துவதாக அமையும். ஆனால், அமைப்பு ரீதியான பிரச்சினைகளைப் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு ஒருபோதும் விருப்பமில்லை. எனினும் திரு.ராஜூ அவர்கள் வெளியிட்டுள்ள இந்த கடிதத்தில் அரசியல் பிரச்சினையும் அமைப்புப் பிரச்சினையும் ஒருசேர கலந்து இருப்பதால், முடிந்தவரை அக்கப்போர்களில் தலையிடாமல் அரசியல் பிரச்சினையைப் பற்றிய விவாதம் மேற்கொள்வது சரியாக இருக்கும்.
நாமே தெரிவு செய்து முன்வைத்த அரசியலை புறந்தள்ளினீர்கள். சதிகாரர்களோடு இணைந்தீர்கள். உங்களை எமது அமைப்பிலிருந்து விடுவித்தோம். பிளவுக்கு பின்னரும் சரி உங்களையோ, உங்களது தோழர்களையோ எதிரிகளாக பாவித்தது இல்லை. பாசிசத்துக்கு எதிரான சக்திகளில் ஒன்றாகவே உங்களை கருதுகிறோம். ஆனால் 10.06.2022 அன்று வெளியான கடிதமோ எங்களை பா.ஜ.க-விற்கு சேவை செய்வதாக கூறியிருந்தது. ஆகவே உங்கள் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உங்கள் மற்றும் உங்கள் அமைப்புத் தோழர்களின் தியாகம் அர்ப்பணிப்பை மதிக்கும் அதேவேளையில் உங்கள் அணுகுமுறையையும் அரசியலையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்களே எங்களை தள்ளிவிட்டிருக்கிறீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
//மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சிலர் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை தொடர்வதால் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூட்டு இயக்கங்களில் இருவரையும் அழைத்து ஒன்றாக பெயர் போடுவது இன்னும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எனவே அதை தவிர்க்கும் பொருட்டு கூட்டமைப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினரையோ, அல்லது வேறு சிலரோ இதே பெயரில் இயங்குவதை அங்கீகரித்து அழைப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என கோருகிறோம்// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூவை மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்தோம். திரு.காளியப்பன் உள்ளிட்ட சிலரை சதிவேலைகள் செய்த காரணத்தால் எமது அமைப்பிலிருந்து வெளியேற்றினோம். விடுவிக்கப்பட்டவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைந்து மக்கள் அதிகாரம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையை மூடி மறைத்து, ஏதோ நாங்கள்தான் பிரிந்து சென்றோம் என்ற பொய்யை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வைத்து காலம் கடத்துவீர்கள் திரு.ராஜூ?
இரண்டு மக்கள் அதிகாரம் இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவுவதாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் ராஜூ. ஆம்! அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், ஒரு விசயத்தை பரிசீலிப்பதில் இருந்து இந்த விவாதத்தை தொடங்க வேண்டும். ஒன்றாக இருந்தபோது நாங்கள் யார்? மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தனியானதா? அதற்கு வேறு எந்த அமைப்புகளோடும் தொடர்பும் இல்லையா? எவ்வித தொடர்பும் இல்லை என்பதுபோல நாணயத்தோடு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் திரு.ராஜூ அவர்கள்.
தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் தொடர்ச்சியாகவே 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற கொள்கையை முன்வைத்து மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அதில், பங்கு வகித்தவர்கள் யார்? மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணைச் செயலாளர் காளியப்பன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் வெற்றிவேல் செழியன், பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளர் அமிர்தா உள்ளிட்டோர் முதன் முறையாக அமைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவில் இருந்தனர்.
மக்கள் அதிகாரம் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்களிலும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெவிமு ஆகிய அமைப்புகளின் தோழர்கள் பங்குபெற்றதுடன். அந்தந்த அமைப்புகளே மக்கள் அதிகாரம் வேலைகளைக் கொண்டு சென்றன. அப்படி வேலைகளைக் கொண்டு சென்ற, மக்கள் அதிகாரம் அமைப்பையே உருவாக்கிய அந்த நக்சல்பாரி இயக்கங்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு மாற்றாக மக்கள் அதிகாரம் மட்டும் இயங்க முடியுமா?
போலீசு முதல் அரசியல் சக்திகள் வரை யாரிடம் போய் மக்கள் அதிகாரம் என்று கூறினால் அவர்கள் நீங்கள் ம.க.இ.கவினர் தானே என்று கேட்கிறார்கள். இல்லை அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், எங்களுடைய போராட்டங்களில் அவர்கள் கலந்து கொள்வார்கள். அந்த அமைப்புகளின் தலைவர்கள் எங்கள் மேடைகளில் பேசுவார்கள். நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல, நாங்கள் நக்சல்பாரி இயக்கம் இல்லை, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதுகூட தவறு, சிவப்புச் சட்டைப் போடக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்டபோது எங்கேயும் முன்வைக்கப்படவில்லை. மாறாக அதன் நடைமுறையில் இப்படிப்பட்ட வலது விலகல்கள் வெளிப்பட்டன. இதற்கு அடிப்படையாக மக்கள் அதிகாரம் கொள்கையில் எவ்விதத்தீர்வும் வைக்கப்படாமல் இருந்ததே காரணம். அமைப்புப் பிளவுக்குப் பின்னர் அதை நாங்கள் பரிசீலித்து இருக்கிறோம். அதன்படி மக்கள் அதிகாரம் அமைப்பை மார்க்சிய – லெனினிய அமைப்பாக அறிவித்து இருக்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. ஒரு அமைப்பு தனது கடந்தகால தவறுகளில் இருந்து படிப்பினைகளை எடுத்து முன்னேற்றத்தை நோக்கி செல்வது எப்படி தவறாக இருக்க முடியும்?
“அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற ரசியாவின் முழக்கத்திலிருந்தே மக்கள் அதிகாரம் என்ற பெயர் உருவானதென்பதை திரு.ராஜூ நினைவில் வைத்திருக்கிறாரா என்பதை தெரியவில்லை. நினைவில் இருந்தாலும் அவரும் திரு.காளியப்பனும் இதை ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் நான் கம்யூனிஸ்டே கிடையாது என்று இறுதிக் காலங்களில் கூறிக்கொண்டு (இப்போதும் கம்யூனிச அமைப்பாக கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பில் அவர் இருக்கிறார்) இருந்த திரு.ராஜூவும் கம்யூனிச கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதையே வாழ்நாள் இலட்சியமாக தற்போது கொண்டிருக்கும் திரு.காளியப்பனும் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. மணற்கொள்ளை போராட்டங்களின்போது திரு.ராஜூவுக்கு கொலை மிரட்டல் வந்தபோது அதை ஒட்டி சேத்தியாதோப்பு பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் அம்பேத்கர்(வி.வி.மு) “நக்சல்பாரி இயக்கத்தின் தோழரான வழக்கறிஞர் ராஜூ” என்று கூறினாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா என்ன? மேடையில் அமர்ந்திருந்த உங்களுக்கு மறந்து போகலாம். அப்பொதுக்கூட்டத்துக்கு போஸ்டர் ஒட்டுவது முதல் பாதுகாப்பு வரை மேற்கொண்ட எங்களுக்கு தோழர் அம்பேத்கரின் வார்த்தைகள் இன்னமும் நினைவிருக்கின்றன. திரு.ராஜூவும், திரு.காளியப்பனும் இத்தனை ஆண்டுகாலம் கம்யூனிச அமைப்பில் இருந்ததை மறைத்து, மக்கள் அதிகாரமே நக்சல்பாரி இயக்கத்தால் வழிகாட்டப்பட்டது என்பதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? ஊரை ஏமாற்றத்தானோ?
//மக்கள் அதிகாரம் பெயரில் இயங்கும் எமது அமைப்பு “குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கை சரியாக அவதானித்து அதை எதிர்த்து முறியடிக்கும் வகையில் மக்களை அணிதிரட்டும் வகையில் ஒன்றுபட்ட அரசியல் தலைமையால் வழக்கறிஞர் சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராக, தோழர் காளியப்பன் பொருளாளராக மேலும் சில தோழர்களை உள்ளடக்கி மாநில ஒருங்கிணைப்பு குழுவாக 2015-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. போராடி வருகின்ற பல்வேறு தரப்பு வர்க்க பிரிவு மக்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் நோக்கத்தில் மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டது.
அன்றைக்கு ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக இருந்த தோழர் வெற்றிவேல் தரப்பினர் இந்த நோக்கத்திலிருந்து மாறியதுடன், 2015ஆம் ஆண்டு துவக்கபட்டபோது, “குறிப்பான தருணத்தில் நாட்டின் பிரதான அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதை நோக்கமாக கொண்டு புதிய ஜனநாயக புரட்சிக்கு இடையில் ஓர் அதிகார அமைப்பாக” மக்கள் அதிகாரம் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டதை தற்போது மறுத்து விட்டனர். மீண்டும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்கின்றனர். கொடியில் இருந்த கருப்பு கலர் கையினை இடது பக்கம் திருப்பியதுடன், வெள்ளை நிறத்திற்கு மாற்றி உள்ளனர். அதற்கு “வலது திசை விலகலை அடையாளபடுத்தும் விதமாக கை வலது புறம் இருப்பதை இடது புறமாக திருப்புகிறோம் என்றதுடன் ஒற்றுமையின் அடையாளம் கருப்பு அல்ல, எனவே வெள்ளையாக மாற்றுகிறோம் என சித்தாந்த விளக்கம் அளித்தனர். மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை அமைப்பாக கொண்டு செயல்படுகின்ற எமது மக்கள் அதிகாரம் பெயரை புதிய ஜனநாயகப் புரட்சிதான் மக்கள் அதிகாரத்தின் இலக்கு என அறிவித்துக் கொண்ட பிறகும் மக்கள் அதிகாரம் என்ற பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாதது அறிவு நாணயமற்றது உள்நோக்கம் கொண்டது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
மேலும், பாசிசத்தை வீழ்த்துவதற்கு தோழர் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தற்போதைக்கு சாத்தியம் இல்லை. புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு அமைப்பு பெயரை மட்டும் மாற்றாமல் இருப்பது நேர்மையற்ற செயலாகும்.// (திரு.ராஜூவின் கடிதம்)
திரு.ராஜூ அவர்கள் தோழர் டிமிட்ரோவின் வாக்கியங்களை பயன்படுத்துவதற்காகவாவது கம்யூனிஸ்டுகளுடைய புத்தகங்களின் சில பக்கங்களை படித்திருப்பாரேயானால் மகிழ்ச்சியே. ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.விமு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு ஆகிய நக்சல்பாரி அமைப்புகளால் உருவாக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அதன் இலட்சியத்தில் இருந்து தடம் புரள்வதை தடுத்து நிறுத்தினோம். சதிகாரர்களையும் நான் கம்யூனிஸ்டே இல்லை என்று ஓங்கி ஒலித்த திரு.ராஜூ போன்றவர்களையும் வெளியேற்றவும் விடுவிக்கவும் செய்தோம். மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்டு 5 அண்டுகள் ஆகியும் அமைப்பு விதிகள் கூட வகுக்க முடியாத அளவுக்கு பிரபல வாதத்தில் மூழ்கிக்கிடந்தது தலைமைக்குழு. அதிலிருந்து மீண்டு பிளவு ஏற்பட்ட ஓராண்டில் அமைப்பு விதியை வகுத்து முடித்தோம். அதனால் அம்பலப்பட்ட திரு.ராஜூ தரப்பினர் உடனே மாநாட்டை நடத்தி அமைப்பு விதிகளை நிறைவேற்றினார்கள். ஆக எங்களின் செயல்பாடுகள் உங்களை அறியாமலே அமைப்பு முறைக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறதே, அதனால் ஏற்பட்ட விரக்திகூட இப்படி ஒரு கடிதம் எழுத காரணமாக இருக்கலாம்.
இப்போது திரு.ராஜூவுக்கு என்ன பிரச்சினை? மக்கள் அதிகாரத்தை கம்யூனிச அமைப்பாக்கி விட்டார்கள் என்பதுதானா? இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? நாங்கள் மார்க்சிய – லெனினிய தத்துவத்தால் வழிகாட்டப்பட்ட மக்கள் அதிகாரம் என்று அழைத்துக் கொள்கிறோம். நீங்கள் கம்யூனிச இலட்சியம் என்று அறிவித்துக் கொள்ளுங்கள் அல்லது முதலாளித்துவ அமைப்பு என்று அறிவித்துக் கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம். அணிகளையும் மக்களையும் ஏய்க்க, உள்ளுக்குள் நாம் கம்யூனிச அமைப்புதான் என்பதும் ஆளும் கட்சிகளோடு ஒட்டிக்கொள்வதற்கு, நாங்கள் கம்யூனிச அமைப்பு கிடையாது என்பதுமான இரட்டை நாடகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஆடப்போகிறீர்கள்? அதற்கு ஏன் எங்களை இழுக்கிறீர்கள்? நீங்கள் தேர்தல் சகதியில் புரள்வதற்கும் நீந்துவதற்கும் நாங்கள்தான் காரணமாக கிடைத்தோமா என்ன? இப்படியெல்லாம் இருந்துவிட்டு அறிவு நாணயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே!
//மக்கள் அதிகார கொள்கையை ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம் நிர்வாகியாக வரலாம் என்பதை சுருக்கி கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் மட்டும் என மாற்றி புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக்கொண்டனர்// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆகா, என்ன ஒரு வியாக்கியானம்! மக்கள் அதிகாரம் பரந்து விரிந்த கொள்கையாம். கம்யூனிச கொள்கையை ஆதரிப்பவர்கள் என்றால் அது சுருக்குவதாம். மக்கள் ஜனநாயகம், புதிய ஜனநாயகம், சோசலிசம், இவை அனைத்தும் வெவ்வேறு படி நிலைகளைக் கொண்டதாக இருந்தாலும் அவை கம்யூனிச இலட்சியத்தை கொண்டதே. அது சரி! நாங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பாக மாற்றிக் கொண்டதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் உங்கள் அணிகள் உங்கள் அமைப்பை கம்யூனிச அமைப்பாக மாற்ற வேண்டும் என்று போராடுகிறார்களா? அவர்களுக்கு பதில் கூற முடியாமல் எங்கள் மீது பாய்கிறீரோ?
//புதிய ஜனநாயகப் புரட்சியே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி என்று கொள்கை முடிவெடுத்து புதிதாக கொள்கை அறிக்கையும் நிறைவேற்றிய பிறகு// (திரு.ராஜூவின் கடிதம்)
ஆக, எதையும் முழுமையாகப் படிக்காமல் கருத்து சொல்வதுபோல எங்களுடைய கொள்கை அறிக்கையையும் முழுமையாகப் படிக்கவில்லை போலும். படித்துவிட்டு வாருங்கள், தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். வீம்பாக தவறுகளைப் பிடித்துக் கொண்டு தொங்க மாட்டோம்.
//மக்கள் அதிகாரத்தின் அரசியல் தலைமை 2020-ஆம் ஆண்டு தனது ஜனநாயக விரோத அதிகாரத்துவ தன்மையினால் ஏற்பட்ட தவறுகளை மறைப்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் உட்பட பெரும்பான்மையினரை புறக்கணித்து ஒரு சில தோழர்களை ரகசியமாக கூட்டி அனைவரையும் நீக்கி விட்டதாக அறிவித்தனர். அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது. தலைமைக்குழுவில் இருந்த வெற்றிவேல் செழியனும் சில தோழர்களும் அமைப்பை பிளவுபடுத்தி வெளியேறிய பிறகு புதிய பெயர் வைத்து இயங்காமல் பெரும்பான்மை தோழர்கள் உள்ள எமது மக்கள் அதிகாரம் அமைப்பு பெயரை பயன்படுத்தும் செயலையும் கண்டிக்கிறோம்.
பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுக்குழு கூடி 80% தோழர்கள் பங்கேற்க வெற்றிவேல்செழியன் தரப்பிலான சிறுபான்மை தோழர்கள் ரகசியமாக எடுத்த முடிவை நிராகரித்து தற்போது தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரத்தை உறுதி செய்தது.// (திரு.ராஜூவின் கடிதம்)
அமைப்பு பிளவுபட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஸ்ஸப்பா… போதும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிறுபான்மை, பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள். ஒரு அமைப்பு பிளவுபட்ட நேரத்தின்போது நான் சிறுபான்மை நீ பெரும்பான்மை என்று பேசலாம். பிளவுபட்ட உடனே ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து செயல்படுவது சாதாரணமான நடைமுறைதானே.
//அமைப்பின் ஜனநாயக வழிமுறைகளை துச்சமாக தூக்கி எறிந்து எந்த விவாதமும் இன்றி தலைமையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பிய மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர்களை அவதூறு செய்து தமக்கு சாதகமான ஒரு சிலரை அழைத்துக்கொண்டு அமைப்பை பிளவுபடுத்தியது// (திரு.ராஜூவின் கடிதம்)
யாரோ சிலர் சொன்னால் ஏற்றுக்கொண்டு செல்ல யாரும் ஆட்டு மந்தைகள் அல்ல. மற்றவர்கள் சிந்திப்பார்கள், சொந்தமாக முடிவெடுப்பார்கள் என்ற இயக்கவியலை மறுக்கும் பார்ப்பனீய புத்தி கொண்டோர்க்கு எங்கள் செயல்பாடுகள் அப்படித்தான் தெரியும். ஏனெனில் அணிகள் சுயமாக சிந்திக்கக் கூடாது என்பதில்தானே உங்கள் தலைமை இறுதி வரை காப்பாற்றப்படும். உங்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் எல்லாம் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட தலையாட்டி பொம்மைகள் அல்ல. இந்த அமைப்புக்காக அர்ப்பணிப்பு தியாகம் அனைத்தையும் சிரமேற்று செய்தவர்கள். இந்த அமைப்பில் பல ஆண்டுகளாக நீடித்த வலது திசைவிலகல் அரசியலை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே செல்கின்ற பாதை சரி என்று முடிவெடுத்தவர்கள் தானே தவிர, அவர்கள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல. உங்கள் தரப்பு ஆகட்டும் எங்கள் தரப்பு ஆகட்டும் அனைவருமே சொந்தமாக யோசித்து முடிவெடுத்தவர்கள்தான் என்பது உங்களுக்கு எப்போது புரியும்?
//பாசிசத்தை வீழ்த்த பரந்த ஐக்கிய முன்னணி தேவை அதை உருவாக்க வேண்டும் என்பதில் முழு உறுதியோடு செயல்பட விரும்புகிறோம். ஆனால் கூட்டு இயக்கங்களில் ஒரே பெயரில் இரு அமைப்புகள் என்பது தொடருவது தவிர்க்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இது குறித்து தாங்கள் ஜனநாயக அடிப்படையில் பரிசீலியுங்கள் என கோருகிறோம். அது மட்டுமல்ல எமது அமைப்பிற்கும், வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற உட்கடசி ஜனநாயக கோட்பாட்டை நாங்கள் வழுவாமல் கடைபிடிப்பதால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்கின்ற பல கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றுடன் ஜனநாயக பூர்வமான விவாதங்களையும் தோழமையுடன் கூடிய அணுகுமுறையையும் நாங்கள் கையாண்டு வந்துள்ளோம்.
நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.
எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
அமைப்புகள் கட்சிகள் பிளவுபடுவது ஒன்றும் புதிதல்ல.பெரும்பான்மையான அமைப்புகளில் நடந்து வருகின்ற ஒரு செயல்தான். பிரிந்தவர்கள், சிறுபான்மை தகுதி கொண்டவர்கள் தங்களது பெயரை மாற்றி செயல்பட்டு வருவதுதான் மரபு, ஜனநாயக பூர்வமானது நேர்மையானது. இதற்கு முன்பு பிரிந்த தேர்தல் கட்சிகளோ, பெரியாரிய இயக்கங்களோ பிரிந்தவர்கள் மீண்டும் கூட்டாக வெவ்வேறு பெயரில் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் வெற்றி தரப்பினர் பிடிவாதமாக அதே பெயரில் இயங்குவதன் மூலம் அவர்களின் கீழ் உள்ள அணிகள் மத்தியில் எமது அமைப்பின் மீதான வெறுப்பரசியலை விதைப்பதுடன், அவதூறு சேற்றை வாரி இறைத்து சக தோழர்களுடன் உரையாடுவதையே தடுத்து சிதைக்கின்றனர்.
இன்றைய அரசியல் பொருளாதார பண்பாட்டு சூழல் அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய கார்ப்பரேட்-காவி பாசிசத்தை தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் பரந்து பட்ட கூட்டணி அமைத்து முழுமையாக வீழ்த்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அத்தகைய போராட்டத்தின் வழியாக பெரும் மக்கள் திரள் நலனை பிரதிபலிக்கும் உத்திரவாதப்படுத்தும் பங்கேற்க செய்யும் ஜனநாயக கூட்டரசை உருவாக்க வேண்டும். இதற்காக மக்கள் அதிகாரம் சாத்தியமான அனைவரோடும் கைகோர்த்து செயல்படும் என்பதை உறுதியாக சொல்கிறோம்.// (திரு.ராஜூவின் கடிதம்)
மக்கள் ஜனநாய இளைஞர் கழகம் பிளவுபட்டது, ம.ஜ.இ.க-வும் ம.ஜ.இ.மு-வும் ஒரே கொடியை பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இந்த அமைப்புக்கள் ஒருவர் கலந்து கொள்ளும் கூட்டமைப்பில் தாங்கள் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுக்கவில்லை. ஏனெனில் காலப்போக்கில் அமைப்புகளின் பெயரில் ஒன்று மாற்றம் பெற்றே தீரும் அதிலும் கூட மக்களும் சூழலுமே முடிவெடுக்கும் காரணியாக இருக்கும். ஒரு அமைப்பு பெயரையும் அல்லது கொடியையையும் பயன்படுத்துவதும் அதில் அரசியல் நியாயமிருக்கும் வரை அது அவ்வாறே தொடரும். அவ்வளவு நாணயமுள்ளவராக இருந்தால் புதிய ஜனநாயகம் என்ற பெயரின் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் ஒரு பத்திரிகை பெயரில் நாம் செயல்படக் கூடாது என்று திரு.ராஜூ தனது அரசியல் தலைமையிடம் ஏன் தெரிவிக்கவில்லை. தனக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
//நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதனை பிரதான எதிரியாக வைத்து எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்கு பொருத்தமான வேலை முறையை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டு செயல்படும் சிலர் நட்பு சக்திகளை எதிரிகளை போல கடுமையாக விமர்சனம் செய்து உண்மையான எதிரிகளான பாரதிய ஜனதா கட்சி கட்சிக்கு சேவை செய்கின்றனர்.// (திரு.ராஜூவின் கடிதம்)
நட்பு சக்தியை பகை சக்திபோல கடுமையாக விமர்சனம் செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு சேவை செய்கின்றோமாம். உங்களுக்கு நேர்மை இருந்தால் அந்த நட்பு சக்திகள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் சாயம் வெளுத்துப்போகும். காங்கிரசும், திமுகவும் செய்யக்கூடிய தவறுகளை எதிர்க்கிறோம் இது தவறா? திமுகவிற்கு கோபம் வருவதற்கு முன்னர் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வெடிக்கிறது?
டாஸ்மாக்கை மூடுவோம்! என்று 2016 தேர்தலின்போது வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்யவில்லை என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள்! வேண்டுகோள் வைத்தீர்கள்!
தமிழில் பாடுவதை தடுக்கும் தீட்சிதர்களை ஏன் கைது செய்யவில்லை? அதற்கு திராணி இல்லையா என்று கேட்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர் அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். சிற்றம்பல மேடையிலேயே தமிழ் பாடினீர்கள். மிக்க மகிழ்ச்சி, வரவேற்கிறோம். ஆனால் இப்போது என்ன செய்கிறீர்கள்? தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பது போலவும் முகாந்திரத்துக்காக அலைவது போலவும் அதற்காக பொதுமக்களே புகார் கொடுங்கள் என்று புகார் வாங்குகிறது. நீங்களும் ஆயிரம் பேர்களுக்கு மேல் கையெழுத்து வாங்கி புகார் அளிக்கின்றீர்கள். உங்கள் புகாரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்போகின்றதா? இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்துவிட்டீர்கள்?
பட்டினப்பிரவேசத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள். மிகவும் பாராட்டக் கூடியதும் வரவேற்கக் கூடியதுமாகும். ஆனால் போராடிய தோழர்கள் நள்ளிரவு வரை மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்களே. இப்போது கூடவா உங்களுக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை அல்லது வேறுவழி இல்லையா?
பறையா என்று இழித்துரைத்து பேசுகிறார் அண்ணாமலை. ஆனால் தமிழ்நாட்டு அரசு அவரை கைது செய்யவில்லை. இந்தப் பிரச்சினையில் எப்படி உங்கள் பாணியில் திமுகவுக்கு நட்பு முறையில் எடுத்துக் கூறுவது திரு.ராஜூ அவர்களே!
//எமது அமைப்பிற்கும் வெற்றிவேல் செழியன் தரப்பினருக்கும் நடைமுறையில் பொது எதிரிக்கு எதிரான கொள்கையிலும், முழக்கங்களிலும் தேர்தல் முறையை அணுகுவதிலும் பாரிய வேறுபாடு இருக்கிறது // (திரு.ராஜூ கடிதம்) இது உண்மையிலும் உண்மை.
அய்க்கியமும் போராட்டமும்தான் தோழமையை பலப்படுத்தும் என்ற அரசியல் அடிப்படையே புரியாமல் ஆளும் திமுகவிற்கு சோப்பு போட்டு அய்க்கிய முன்னணி கட்டும் வேலையில் அல்லவா இறங்கி இருக்கின்றீர்கள்.
உங்களுடைய தலைவர் திரு.மருதையன் அவர்கள் திமுக அரசாங்கத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்ற வேலையை, திமுக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற வேலையை மேற்கொள்வதுதான் மக்கள் இயக்களின் வேலை என்றார். அதை தமிழ்நாட்டில் எந்த மக்கள் இயக்கங்களும் ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் திரு.மருதையனின் கருத்துக்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றி அல்லவா வருகிறீர்கள்.
திமுக அரசு 5 ஆண்டு காலம் தொடர்ந்து நீடித்திருப்பதற்காக, சொர்க்கத்துக்கு செல்லும் பட்டினப்பிரவேசத்துக்கு, முள் பொறுக்கியாக வேலை செய்ய வேண்டுமென்ற திரு.மருதையனது அரசியலை தாங்கள் சிறப்பாக செய்து முடிக்க திட்டமிட்டு இருக்கின்றீர்கள். அந்த பட்டினப்பிரவேசப் பாதையில் நாங்கள் முள்ளாக வந்து விட்டோமோ?
புரட்சிக்கான பாதையில் முள்ளாக இருப்பதுதான் தவறு. திமுகவை பல்லக்கில் வைத்து தூக்கிக்கொண்டு செல்வோருக்கும் முள் பொறுக்குவோருக்கும் நாங்கள் முன்வைத்த அரசியல் முள்ளாக உள்ளதென்றால் என்றால் அது மகிழ்ச்சியே. அதுவும் கூட நீங்கள் பரிசீலிப்பதற்கே.
//எனவே தற்போது நாட்டின் பிரதான அபாயமான கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுவதை திசைதிருப்புகின்ற வகையில் செயல்படும் வெற்றிவேல் செழியன் எமது மக்கள் அதிகாரம் பெயரில் இயங்குவதையும் தாங்கள் அதனை அங்கீகரிப்பதை பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
எனவே கூட்டியக்கங்களில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதே பெயரில் இயங்கும் தோழர் வெற்றிவேல் செழியன் தரப்பினர் அல்லது வேறு எவரையும் அதே பெயரில் அங்கீகரித்து எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும் ஒன்றாக அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.// (திரு.ராஜூ கடிதம்)
காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளோடும் இணைந்து போராடுவதே காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்திற்கு எதிரான முக்கியப்பணி என்று வகுத்துக் கொண்ட நாங்கள், யாரையும் வரக்கூடாது; இவர்கள் இருந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று ஒருபோதும் சொல்லமாட்டோம். பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருக்கும், பொறுப்புடன் வேலை செய்யும் எவருடனும் இணைந்து செயல்படுவோம் இதுவே எமது நிலைப்பாடு.
இதுவரை அணிகளுக்கு ஆணையிட்டு வந்த திரு.ராஜூ, இப்போது மற்ற அமைப்புகளுக்கும் ஆணையிட ஆரம்பித்துவிட்டார். எமது அமைப்பை அழைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்று மறைமுகமாக மிரட்டவும் தொடங்கிவிட்டார். ஒரு கூட்டு நடவடிக்கையோ அல்லது கூட்டமைப்போ அதன் நோக்கத்திலிருந்துதான் யாரை சேர்த்துக் கொள்வது என்ற முடிவை எடுக்கும். இதைப்பற்றிய அடிப்படை புரிதல் இன்றி அமைப்பு பிளவு – தனிநபர் பிரச்சினை என்ற அக்கப்போரை மற்ற அமைப்புக்களின் முன்வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்கிறார் திரு.ராஜூ அவர்கள். அடிப்படை கொள்கைகளோடு மாறுபாடு இல்லாத எவருடனும் பயணிக்கலாம். அப்படி இல்லாமல் இவர் வந்தால் நான் வரமாட்டேன் என்பதெல்லாம் பார்ப்பனீய புத்தியே.
செஞ்சட்டை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் சிவப்பு சட்டையில் வந்திருக்கும்போது, தனக்கிருக்கும் சிவப்பின் மீதான – கம்யூனிச சித்தாந்தத்தின் மீதான – அலர்ஜி காரணமாக செஞ்சட்டையை தவிர்த்த ராஜூவால் அதற்கான காரணத்தைக்கூட வெளிப்படையாக கூறமுடியாது. திரு.ராஜூ அவர்கள் எங்கேயாவது தன்னை தோழர் என்று விளித்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது துண்டறிக்கையில் தோழர் என்று போட்டுக்கொள்ள அனுமதித்து இருக்கிறாரா?
எல்லாவற்றிலும் தான் தனித்திருக்க வேண்டும். எல்லோரும் தனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற தனது கொள்கையை மற்ற அமைப்புகளுக்கும் விரிவு படுத்திவிட்டார். அவருடைய கனவெல்லாம் திமுக, காங்கிரசுடன் இணைந்த அய்க்கிய முன்னணியில் அல்லவா இருக்கிறது. அதனால்தான் அவருக்கு ஆணையிடுவது எளிதாகிவிட்டது.
இறுதியாக ஒன்று,
கொள்கையை துறந்தோடியது நாங்கள் அல்ல; மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் இந்த கட்டமைப்பை பயன்படுத்த முடியாது, தேர்தல் கட்டுமானம் சீரழிந்து போயிருக்கிறது, ஆளை மாற்றுவது தீர்வல்ல; கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்று கூறியிருப்பதை மூடி மறைத்துவிட்டு தேர்தல் பாதையில் மூழ்கி முத்தெடுத்து, அதிகாரத் தாழ்வாரங்கங்களில் ஒட்டிக்கொண்டு புரட்சித் திட்டம் கொண்டிருக்கும் நீங்களே இன்னமும் மக்கள் அதிகாரம் என்று பெயரை தாங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள். நக்சல்பாரி இயக்கத்தின் வழித்தோன்றலாக, நாங்கள் செய்த தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக முன்வைத்து முன்னேறிவரும் எங்களுக்கு மக்கள் அதிகாரம் என்ற பெயரை முன்னெடுத்துச்செல்ல உரிமை இல்லையா என்ன?
எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள். நாங்கள் மக்கள் அதிகாரம் பெயரை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்; மக்கள் முடிவு செய்யட்டும். நீங்கள் ஆளும் வர்க்கத்தின் புட்டம் வலிக்காதவாறு முள் பொறுக்கும் புனிதப்பணியை மேற்கொள்வீராக! அரசியலற்ற விவாதங்களில் எங்களை தள்ளிவிடாதிருப்பீராக!
நாம் இருவரும் தத்தமது அரசியலை நேர்மையாய் முன்வைப்போம்! எது சரி என்று மக்கள் தீர்மானிக்கட்டும்!

தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.