மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !

உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சான்று.

2

லங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டல்லஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர கே.திஸாநாயக்க மூன்று வாக்குகளையும் பெற்றனர்.

73 வயதான ரணில் தனது வெற்றியை சட்டமன்றத்தின் பொதுச் செயலாளரால் அறிவித்த பிறகு, “இந்த மரியாதைக்காக நான் பாராளுமன்றத்திற்கு நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

ஜுலை 20, காலை நடந்த தேர்தலில், இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் 223 பேர் வாக்களித்தனர். முன்னாள் பிரதமரும் அதிபருமான மஹிந்த ராஜபக்ஷ உட்பட கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர்கள் இருவர் மற்றும் மருமகன் ஒருவரும் கலந்துகொண்டனர். ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 219 வாக்குகள் மட்டுமே கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வாரம் கோத்தபய ராஜபக்சே ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் வணிக விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றதை அடுத்து, இலங்கையில் 6 முறை பிரதமராக இருந்த விக்ரமசிங்கே தற்காலிக அதிபரானார். தற்போது அவர் இலங்கையின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்புள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது விக்கிரமசிங்க முன்னணியில் இருந்தார். ஆனால் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும முன்னணியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சுயேச்சை மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. ஆனால், முன்னாள் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளிக்கவில்லை.


படிக்க : இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!


நூற்றுக்கணக்கான போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவ துருப்புக்கள் பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி 13 கி.மீ தொலைவிற்கு நிறுத்தப்பட்டன. சாலையில் குறைந்தது மூன்று தடுப்புகள் இருந்தன. படகுகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டிடத்தைச் சுற்றி ஒரு ஏரியில் ரோந்து சென்றனர். இராணுவ ஜீப்புகளும் கவச வாகனங்களும் சுற்றளவுக்குள் நிறுத்தப்பட்டன..

ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த மாத தொடக்கத்தில் அதிபர் செயலகத்தையும் இல்லத்தையும் கைப்பற்றியதால், அப்போதைய பதவியில் இருந்த கோத்தபய ராஜபசே நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போராடும் இலங்கை மக்கள் விக்கிரமசிங்கவை ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளியாக பார்க்கிறார்கள். ஜூலை 5-ம் தேதி ரணில் – கோத்தபய பதவி விலகவேண்டும் என்று இலங்கை மக்கள் போராட்டத்தில் முழக்கமிட்டனர். ஜூலை 9-ம் தேதி ரணிலின் வீடு மற்றும் அலுவலகம் இலங்கை மக்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதிபர் செயகத்தில் இருந்து கோத்தபய இராணுவத்தின் உதவியுடன் தப்பியோடினார். ஜூலை 13-ம் தேதி மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக கோத்தபய மற்றும் ரணில் ஆகியோர் தமது பதவி விலகலை அறிவித்தனர். அன்று மக்கள் அதிபர் செயலகத்தையும், கோத்தபய-வின் அரசு இல்லத்தையும் கைப்பற்றினர். இது உலக பாசிச சக்திகளுக்கு பேரபாயத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தது.

ஆனால், தற்போது இலங்கையில் அரசியல் கட்சிகளால் நாடாளுமன்ற ரகசிய தேர்தல் வாக்கெடுப்பு முறையின் மூலம் ரணில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நபர், ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியான ரணில் விக்கிரமசிங்கே அதிபராவது என்பது இலங்கை மக்களுக்கு இழைக்கப்பட்டப் பட்டவர்த்தனமான துரோகம். அதிபரையோ பிரதமரையோ விரட்டியடிப்பது மட்டுமல்ல; அரசு கட்டமைப்பை மாற்றியமைப்பதுதான் தீர்வு. மாற்றை முன்வைக்கவில்லை என்றால் ஆளும் வர்க்கம் இப்படிதான் செயல்படும்.

உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சான்று.


காளி