தற்போதைய இலங்கை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, சுருக்கமாக ஒருசில வாக்கியங்களில் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஆளும் வர்க்கங்கள், மோடியை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி, அவருக்கு ஒளிவட்டம் சூட்டி, பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் – மோசடிகளைச் செய்து, ஆட்சியில் அமரவைத்ததைப் போல, இலங்கையின் அதிபர் தேர்தலில் அனுர திசயநாயக்கே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவ்வளவே!
இலங்கையில் நேற்றைய முன் தினம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், அனுர திசயநாயக்கே வெற்றி பெற்றுள்ளார். இது இலங்கை வரலாற்றில் பெரிய திருப்பம் என்று கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டுவிட்டதாகச் சித்தரிக்கின்றன. “இடதுசாரி தலைவர்” என்று அனுரவைப் புகழ்ந்தும், இதனால் சீனாவுக்கு ஆதரவானவர் என்று இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் கொம்பு சீவும் வகையிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் ஊடகங்கள் அல்லது இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் இவ்வாறு கூவுவதைப் பற்றி முதலில் பேசிவிடுவோம்.
சென்றவாரத்தில் மட்டும், தி.மு.க.வின் முப்பெரும் விழா, விஜய் அரசியல் மாநாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் அறிவிப்பு; கேஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலை; அதிஷி முதல்வர் பதவி ஏற்பு; திருப்பதி லட்டு, அதில் மாட்டுக் கொழுப்பு; இப்படியாக பரபரப்பூட்டி வந்த கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது இலங்கை அதிபர் தேர்தலை வைத்து பரபரப்பூட்டி வருகின்றன.
எந்தப் பிரச்சினையிலும் ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே சென்று மக்கள் சிந்திக்க முடியாதபடி, ஊடகச் செய்திகளைக் கட்டியமைக்கும் வகையில் தான், இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஊடகச் செய்திகளும் அமைந்திருக்கின்றன என்பதால், அந்தக் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவதைத் தவிர்க்க வேண்டும்.
படிக்க: ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1
மேலும், இலங்கை அரசியல் போக்குகளைத் தொடர்ந்து கவனித்து வரும் புதிய ஜனநாயகம், தற்போதைய அதிபர் தேர்தலுக்கு முந்தைய சூழலிலிருந்து அரசியல் போக்குகள் குறித்து ஏப்ரல் மாத இதழில் விளக்கியிருந்த அம்சங்களிலிருந்து எந்த வகையிலும் இத்தேர்தல் முடிவுகள் மாறாக வரவில்லை என்பதைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.
ஆகையால், கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் வகையில், இந்தத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையல்ல; ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமும் அல்ல; இலங்கைத் தேர்தலில் இன அரசியல் வெளிப்படவில்லை என்று குறிப்பிடுவதும் உண்மையல்ல.
***
2021-இல் இலங்கையை தமது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதில், அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த போட்டியில், இலங்கை பல அம்சங்களில் சீனாவுக்கு நெருக்கமாகச் சென்றதையடுத்து, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளை ஐ.எம்.எஃப். ஏற்படுத்தியது.
அதன் விளைவாக, ஏற்றுமதி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை உயர்வு, எரிபொருள்களின் தட்டுப்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, 2022 ஜனவரியில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. இந்த மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல், அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாகத் தப்பியோடும் நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர், ஐ.எம்.எஃப்.- அமெரிக்காவின் கைப்பாவையான ரணில் அதிபராக்கப்பட்டார்.
மகிந்த ராகபக்சே ஆதரவுடன் அதிபரான ரணில், இலங்கையை ஐ.எம்.எஃப்.க்கு அடகு வைத்தது மட்டுமின்றி, கடும் அடக்குமுறைகளைச் செலுத்தி மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் திணித்தார்; அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியை நடத்தினார்.
மொத்தத்தில், இதுவரை தங்களை ஆண்ட, ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த தேர்தல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், இந்த அரசியல் தருணத்தைப் பயன்படுத்தி, அரசியல் களத்தில் ஆளும் வர்க்கங்களால் முன் தள்ளப்பட்ட புதிய நபர்தான் அனுர திசநாயக்கே.
இவர், ஜே.வி.பி. எனும் சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி, போலி கம்யூனிச இயக்கத்தின் தலைவர். கார்ப்பரேட் ஊடகங்களின் தேர்தல் பரப்புரை யுக்திகளால் இவர் வளர்ச்சி நாயகனாக ஊதிப் பெருக்கப்பட்டார். இதன் விளைவாக, ஓராண்டுக்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்புகளின் போதே, அதிபர் தேர்தலில் அனுர வெற்றி பெறுவார் என்று 51 சதவிகிதம் பேர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதுவும் அனுரவை ஆட்சியில் அமரவைக்கும் ஒரு உளவியல் பிரச்சாரம்தான்.
இந்த அரசுக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்கள், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்டிருக்கும் அனுரவை கார்ப்பரேட் ஊடகங்கள் மாற்றாக நிறுத்தும் போது, அதனை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மற்றபடி, சஜித் பிரேமதச, ரணில் ஆகிய இருவருக்கும் எந்தவகையிலும் மாற்றுப் பொருளாதார அரசியல் திட்டங்களைக் கொண்டவரல்ல, அனுர.
படிக்க: ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2
அதானி, அம்பானிகளின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்; ஐ.எம்.எஃப்.யுடனான ஒப்பந்தங்கள் குறைக்கப்படும் போன்ற அனுரவின் வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் நேர சவடால்கள் தவிர வேறொன்றும் இல்லை.
மேலும், யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய அனுர “நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன்; பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன்; எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வரவில்லை” என்றார். தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றிக்கொண்டு மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார். தமிழ் மக்கள் மீதான ஜே.வி.பி-இன் நிலைப்பாடு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதேபோல இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் போர்த்தந்திர முக்கியத்துவம் உள்ள இடத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இலங்கையின் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளை எந்த வகையில் இவை கைவிடாது. தற்போது, அமெரிக்கா-இந்தியாவின் ஆதிக்க நிலைமை இலங்கையில் இருப்பதால், இதனைத் தொடர்வதற்கான அனைத்து வேலைகளையும் இந்தியா முன்கூட்டியே செய்து முடித்துவிட்டது.
தங்களது அடிமைத்தனத்தை மறைக்க, “இந்தியாவுடன் உறவு”, “சீனாவுடன் நட்பு”, “ஐ.எம்.எஃப்-உடன் கடன் உதவி” என்று இலங்கை ஆளும் வர்க்கக் கட்சிகள் சவடால் அடிப்பதைத்தான் அனுரவும் செய்து கொண்டிருக்கிறார்.
ஆகையால், இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை.
இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும். மாறாக, இந்தத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இன்னும் சிக்கலான திசைவழியில்தான் இலங்கை அரசியல் சூழல் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
தமிழ் மக்களின் இன உரிமைக்கு அச்சுறுத்தல்
ரணில், சஜித் கும்பல்களை ஆதரித்துக் கொண்டே, “தனி ஈழம்”, “தன்னுரிமை”, “சுயாட்சி அந்தஸ்து” போன்ற முழக்கங்களை முன்வைத்த தமிழர் கட்சிகள் பெரிதும் அம்பலப்பட்டுப் போயிருப்பதையும், தமிழ் அமைப்புகள் சார்பாக நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் 2,26,343 (1.7 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்திருப்பது, தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடுகளாகும். இது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் இருப்பதை உணர்த்தவும் செய்துள்ளது, இது நம்பிக்கையளிக்கும் முடிவுமாகும்.
மேலும், கணிசமான பகுதிகளில் தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்புகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது. இலங்கையிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவு 66.93 சதவிகிதம், (தேசிய சராசரி வாக்குப் பதிவு 79.46 சதவிகிதம்) யாழ்ப்பாணத்தில்தான் பதிவாகியுள்ளது. இது செல்லாத ஓட்டுக்களையும் (மொத்த செல்லாத ஓட்டுக்களில் 8 சதவிகிதம்) உள்ளடக்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.
படிக்க: அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு
அனுரவுக்கு அதிகமான வாக்குகள் சிங்கள மக்கள் வாழும் பகுதியிலிருந்து கிடைத்திருப்பது, அதன் இன அரசியலை பளிச்சென வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசியலில் நேரடியாக இனவாத அரசியல் வெளிப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள், தமிழர்களின் ஆதரவு பெற்ற தலைவராக அனுர இல்லை என்பதையும் உணர வேண்டும்.
அதேவேளையில், தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அனுரவுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குகள் (யாழ்ப்பாணத்தில் 7.29 சதவிகிதம், வன்னியில் 9.86 சதவிகிதம், திரிகோணமலையில் 20.83 சதவிகிதம்…) விழுந்திருப்பது, தமிழ் மக்களின் இன உரிமைக்கு அச்சுறுத்தல்களாகும்.
வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி முதன்மையான பிரச்சினையாக இருப்பதால், இந்தத் தேர்தலில், இனவெறுப்பு அரசியலை கார்ப்பரேட் கட்சிகள் முன்னிறுத்தவில்லை என்பதைத் தவிர, தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குவதற்கோ, சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கோ தயாராக இல்லை என்பதை நன்கு உணர முடிகிறது. மேலும், இனவெறுப்புப் பிரச்சாரம் இல்லாத இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் உரிமைகள் தவிர்க்க இயலாத அளவிற்கு அரசியல் அரங்கில் முன்னிலைக்கு வந்திருப்பதன் வெளிப்பாடுமாகும்.
மாறாக, இந்தியாவில் 2014-இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடி-அமித்ஷா கும்பல், வளர்ச்சி முகமூடியை அணிந்ததைப் போலவே, இப்போது அனுர கும்பலும் வளர்ச்சி முகமூடியை அணிந்துள்ளது.
ஆகையால், பௌத்த மதவாதம், சிங்கள இனவாதத்தை மறைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கும் மக்களின் உணர்வை நாடிப்பிடித்து, சந்தர்ப்பவாத யுக்திகளைக் கையாண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கும், அனுரவை வழக்கமான ஓர் ஆளும் வர்க்க அரசியல்வாதியாகக் கருதுவது தவறாகும்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பி ஒடுக்கவும் ஏகாதிபத்தியங்களால், பேரினவாதம், பெரும்பான்மைவாதம், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீதான வெறுப்பு போன்ற இனவெறி, மதவெறி, தேசவெறி துவேசங்கள் முன் தள்ளப்படும் பின்னணியில் அனுரவின் வெற்றியைப் பார்க்கவேண்டும்.
புரட்சிகர கட்சியின் தேவை
அந்தவகையில், 2021 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கை அரசியல்-பொருளாதார நிலைமையானது புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்திருப்பதையும் பௌத்த மதவாத, சிங்கள இனவாத அனுர கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதையும் உணர்ந்து, இவற்றை முறியடிப்பதற்குரிய குறித்த திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது, புரட்சிகர கட்சியின் கடமையாகும்.
இந்தக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, மக்களுக்கு அவர்களின் எதிரிகளைச் சரியாக அடையாளப்படுத்தி, இவ்வெதிரிகளை வீழ்த்துவதற்கு ஒவ்வொரு அரசியல் தருணத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறைவேற்ற மக்களுக்கு அறைகூவல் விடுக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் மக்களின் போராட்ட உணர்வை வளர்த்தெடுக்க முடியும்.
அந்தவகையில், புரட்சிகர திசையில் மக்களை வழிநடத்திச் செல்வதற்குப் பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சிக்காக இலங்கை காத்துக்கொண்டிருக்கிறது!
இலங்கை மா-லெ இயக்கங்களின் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத பாதை
புதிய ஜனநாயக மார்க்சிய-லெனினியக் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களால் உருவாக்கப்பட்ட, “மக்கள் போராட்ட கூட்டமைப்பு” என்ற கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட நுவன் போபெகே, 11,191 (0.08 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, சமகால அரசியல் சூழலை அனுமானித்து, இந்த இடைக் கட்டத்திற்குரிய குறித்த திட்டம், அதனை அடைவதற்கான செயல்தந்திரங்களை வகுத்துச் செயல்படும் பார்வை இல்லாததாலும் மக்கள் அடித்தளம் இல்லாததாலும் இந்தக் கூட்டமைப்பு தேர்தல் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக, இந்தத் தேர்தல் பரப்புரை முழுவதும், இவ்வியக்கங்கள் மக்களின் எதிரிகள் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தவில்லை. இவை மட்டுமின்றி, பல்வேறு பெயர்களில் இயங்கும் போலி இடதுசாரி, போலி சோசலிச அமைப்புகள், கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவு மக்களைத் திசைதிருப்பியிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவற்றைக் கையாள்வதற்கான செயல்தந்திரங்களும் இந்தக் கூட்டமைப்பிடம் இல்லை.
இந்தக் கூட்டணியானது, சோசலிசம் என்ற உயர்ந்த இலட்சியத்தையும் அதனை அடைவதற்கான “நிலைமாறு கால வேலைத் திட்டம்” என்ற ஒன்றையும் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. இதில், ஐ.எம்.எஃப். உடனான உறவுகளையும் உடனுக்குடன் முடிவுக்குக் கொண்டுவருவது, ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலைப் பெறுவது, விவசாயத்தில் ஆதிக்கம் புரியும் ஏகபோக தேசிய மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களை விரட்டியடிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது, ஒரு முதலாளித்துவ நாட்டில் புரட்சிகரக் கட்சியின் கட்சித் திட்டம் போன்றுள்ளது.
இந்த ‘தேர்தல் அறிக்கை’ மிகக் குறுகிய காலத்தில்தான் முன்வைக்கப்பட்டுள்ளது; இது பெரும் அளவில் மக்களிடம் சென்று சேரவில்லை என்பது ஒருபுறம் இருப்பினும், இந்த உயர்ந்த கோரிக்கைகளை, திட்டங்களை ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அரசியலுக்குள் சாதித்துவிட முடியும் என்ற மாயை உருவாக்குவது கடைந்தெடுத்த வலது சந்தர்ப்பவாதத்தைத் தவிர வேறல்ல.
ஒரே அடியில் சோசலிசத்தை சாதிக்கும் இந்த அதிபரவசக் கொள்கைகளைத் தேர்தல் அரசியல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் போது, அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனது வியப்புக்குரியதுமல்ல!
வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ள இலங்கை மா-லெ இயக்கங்கள் தங்களது பாதையை மறுபரிசீலனை செய்யவேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்.
தங்கம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
வினவிடம் ஒரு கேள்வி? இலங்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றம்மார்ஸ்ய லெனினிஸ்ட் இடது மாற்றம் தானே வினவு முன்வைக்கக்கூடிய இடதுப்பாதை என்ன?