ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2

ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய - லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கைத் தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. “இடதுசாரிகள் வெற்றி” என்ற வகையில் சிலரால் இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி. கட்சி இடதுசாரி இயக்கமா அல்லது இனவெறி இயக்கமா என்பது குறித்து, ஜனவரி 1990 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

***

ஜே.வி.பி. இயக்கம்தரும் படிப்பினைகள்! | பாகம் 2

1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது.

1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஜெயவர்த்தனே ஆட் சிக்கு வந்ததும் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். அப்போது ஜே.வி.பி. சுயவிமர்சனம் செய்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொள்ளுவதாக தமது நிலைப்பாடுகளில் பலமாற்றங்களை அறிவித்தார் விஜியவீரா.

“புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளைப் புறக்கணித்து, வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாக வர்க்க சமரசத்தைக் கடைப்பிடித்தது. சர்வதேசியத்துக்குப் பதிலாகக் குறுகிய இனவெறி மற்றும் தேசிய வெறியில் மூழ்கியது ஆகிய காலகட்டம் எமது வரலாற்றின் இருண்ட அத்தியாயம்” என்று ஜே.வி.பி. அதிகாரப்பூர்வ சுயவிமாசனம் செய்து கொண்டது.

‘இந்திய விரிவாக்க ஆதிக்கம்’ என்ற கருத்தை ஜே.வி.பி. கைவிட்டது. ஈழத்தமிழர் தனித் தேசிய இனமென்றும் அதற்கு மொழி மற்றும் பிற சம உரிமைகள் தர வேண்டும் என்றும் அறிவித்தது. மலையகத் தமிழ்த் தோட்டத் தமிழர்களைப் புறக்கணித்தது தவறென்று ஒப்புக் கொண்டது.

‘தனி ஈழம்’ கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழரின் ஏகமனதான ஆதரவு பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக வந்தது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி. ‘தனி ஈழம்’ கோரிக்கை வலுத்து, ஆயுதந்தாங்கிய ஈழப்போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் துவங்கின. அதே சமயம் நாடாளுமன்ற சமரசப்பாதையில் ஜே.வி.பி அடியெடுத்து வைத்தது. அதற்கேற்ப தேசிய இனப்பிரச்சினையில் சந்தாப்பவாத அரசியலில் தஞ்சம் புகுந்தது. தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராக அரசு பயங்கரவாதத்தை ஏவி அடக்குவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஜே.வி.பி. எதிர்ப்பதாகக் கூறியது. ஆனால் மூலாதார வசதிகளற்ற சிறிய பிராந்தியமான ஈழம் தனி நாடாக முடியாது என்றும், ஒன்றுபட்ட இலங்கை சோசலிசப் புரட்சியிலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் 1980 வரை கூறி வந்தது.

இந்த நிலைப்பாடுகளிலிருந்து சரிந்து சுயநிர்ணய உரிமை, அதிகாரப்பகிர்வு, கூட்டமைப்பு ஆகிய ‘எல்லாத் தீர்வுகளையும் எதிர்க்கத் தொடங்கியது. 1982 மேயில் ஜே.வி.பி. மத்தியக் குழு பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. “முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தான் ஈழம் கோரிப்போராடும்படி தூண்டுகின்றன. பயங்கரவாத இயக்கம் கேடானது; மக்களுடைய நலனுக்கு ஏற்றதல்ல. எனவே ஈழ பயங்கரவாத இயக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்”. இது சிங்கள இனவெறி மற்றும் தேசிய வெறிக்கும் வர்க்க சமரசத்துக்கும் ஜே.வி.பி. திரும்பியதைக் குறித்தது.

1982 இலங்கை அதிபர் தேர்தலில் குதித்தது ஜே.வி.பி. ஜெயவர்த்தனே, பண்டாரநாயகா கட்சியின் கேப்பகடுலாவுக்கு எதிராகப் போட்டியிட்டு  41 சதவிகித ஓட்டுகள் பெற்று மூன்றாவதாக வந்தார். ரோகண விஜியவீரா மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்குப் போட்டியிட்ட ஜே.வி.பி. 4 மாவட்டங்களில் 13 இடங்களைப் பிடித்தது.

1983 இனப்படுகொலை சம்பவங்களையொட்டி, ஈழப்போராளி அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகக் கூறி ஜே.வி.பி மற்றும் பிற போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஜெயவர்த்தனே அரசு தடை செய்தது. இன, மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைப் பிடிக்கும் சதியின் ஒருபகுதி என 1983 இனப்படுகொலையைச் சித்தரித்தது. ஒருபுறம் ‘பிளாட்’ முதலிய தமிழ்ப் போராளி குழுக்களுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து கொண்டும்,  மறுபுறம் சிங்கள இனவெறியைத் தூண்டி தமிழர்களைத் தாக்கியும் வருவதாக ஜே.வி.பி. மீது குற்றம் சாட்டியது.

ஆனால் ஜே.வி.பியோ “வடக்கில் வகுப்புவாத இயக்கம்” என்றும் “பயங்கரவாத நடவடிக்கைகள்” என்றும் ஈழப் போராட்டங்களைச் சாடியது. பிறகு ஈழப் போராளி அமைப்புகள் இந்திய விரிவாக்க ஆதிக்கத்துக்குத் துணைபோகும் தேசத்துரோக அமைப்புகள் என்றும் பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் சிங்கள இளைஞரிடையே மீண்டும் இரகசிய அமைப்புகளைக் கட்டத் துவங்கியது: அரசு எந்திரத்துக்குள் ஊடுருவி இரகசியக் குழுக்களைக் கட்டியது.

பிரிவினைவாத, இனவெறி பிடித்த தமிழர்களைக் கருவியாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவோடு நாட்டைப் பிளவுபடுத்தும் இந்திய முதலாளிகளின் சதிதான் சமாதான முயற்சிகள் என்று ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது இந்திய – இலங்கை ஒப்பந்தம், இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் ஆகியன ஜே.வி.பி.க்கு அரசியல் மேலாண்மையைக் கொடுத்தது. இந்திய விரிவாக்க ஆதிக்கம் குறித்த ஜே.வி.பி.யின் கணிப்பு – எச்சரிக்கை நிரூபணமாகியதோடு, இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசபக்த எழுச்சியின் தலைமையாக மையமாக ஜே.வி.பி. மாறியது

தேசபக்த மக்கள் முன்னணி (டி.ஜே.வி) என்ற அமைப்பை உருவாக்கியது இந்திய –  இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்வது; இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவது; ஜெயவர்த்தனே ராஜினாமா, நாடாளுமன்ற கலைப்பு, புதிய தேர்தல்கள் நடத்துவது; ஜே.வி.பி.க்கு எதிரான தடையை ரத்து செய்வது போன்ற ஆறு கோரிக்கைகளை டி.ஜே.வி. மூலம் வைத்தது.

இவற்றுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல நாட்கள் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடத்தவே கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து, மின்துறை மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் உட்பட  அனைத்துப் பிரிவினரும் பலநாள் வேலை நிறுத்தங்கள் நடத்தவே தொழில்கள் முற்றாக முடக்கப்பட்டன. தொடர்ச்சியாகப் பலநாட்கள் அரசுக்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் வெற்றிகரமாக நடந்து பொருளாதாரமும் நிர்வாகமும் நிலைகுலைந்து போயின அரசு இயந்திரங்களுக்குள்ளாகவே ஜே.வி.பிக்கு ஆதரவு  பெருகி பலமுறை சிறைத் தகர்ப்புகள்  –  ஆயுதப் பறிப்புகளை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் கட்டி தேசியப் புரட்சியாக வளர்த்தெடுக்கத் தவறியது ஜே.வி.பி. அது உருவாக்கிய டி.ஜே.வி.யே கூட முழுக்கவும் இராணுவ ரீதியில் கட்டி தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள், சதி மற்றும் நாசவேலைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தேசியப் புரட்சிக்கான கடமைகளையும், உள்நாட்டில் வர்க்கப் போராட்டக் கடமைகளையும் கலந்து குழப்பியது எனவே, தேசபக்த, ஜனநாயக சக்திகளை முழுமையாகத் திரட்டத் தவறியது.

இந்திய – இலங்கை ஒப்பந்த ரத்து, இந்திய இராணுவ வெளியேற்றம் என்ற கோரிக்கைகளுக்காக பொது அரசியல் வேலைநிறுத்தம் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்பது போன்ற இயக்கங்களை நடத்தியது. இருந்தபோதும், அவற்றைவிட முக்கியமாக தனிநபர் அழித்தொழிப்புக்களைச் செய்தது. மற்ற பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களோடு தொண்டர்களையும் கொன்றது அரசு அதிகாரிகளையும் சாதாரண ஊழியர்களையும் கொன்றது.

பிறகு தனிநபர் பயங்கரவாதம் முற்றி மிருகத்தனமான கொலைவெறியாக மாறியது. கிராம சேவகர்கள், கிராமோதயா மண்டல தலைவர்கள், விவசாய அதிகாரிகள், பள்ளி-கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் அதே போல நகரவைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வானொலி, வானொளி, பத்திரிக்கைகள் போன்ற பிரச்சார சாதனங்கள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் யாரும் பணியாற்றக் கூடாது என்று தடைவிதித்தது ஜே.வி.பி: அந்தக் கட்டளையை மீறியதாக அந்நிறுவனங்களின் தலைவர்களோடு ஊழியர்களைக் கொன்றது.

ஜே.வி.பி.யின் கொலைப் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட்டது. சிறுதிருடர்கள், கள்ளச்சாராயக்காரர்கள் முதல் பத்திரிக்கை முகவர்கள், விநியோகிப்பவர்கள், அரசு லாட்டரி சீட்டு விற்பவர் மட்டுமல்ல: கொலையுண்டவர்களுக்கு மதச்சடங்கு செய்வோரும். அவற்றிலே கலந்து கொள்வோரும் கூட கொல்லப்பட்டனர்.

தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு யார் பலியாகிறார்கள் என்கிற அக்கறையும் ஜே.வி.பி.க்குக் கிடையாது. வயோதிகர்கள், குழந்தைகள் – சிறுவர்கள்,பெண்கள், பார்வையாளர்கள் – உறவினர்கள் ஆகிய அனைவரையும் கொன்றனர். மிகவும் குரூரமான முறைகளையும் மேற்கொண்டனர். தெருவிளக்குக் கம்பத்திலே கட்டி, டயர் மாலை போட்டுக் கொளுத்தினர்! தலைகளை வெட்டிப் பிணத்தைச் சாலையோரங்களில் வீசினர். இவை எதிரிகளை எச்சரிப்பதற்கானவையாகக் கருதினர்.

அதே சமயம் ‘மக்கள் புரட்சி செஞ்சேனை’, பச்சைப் புலிகள், தேள், கழுகுப்படைகள் என்கிற பெயரில் போலீசு மற்றும் தொழில்முறைக் கிரிமினல்களை வைத்து ஜெயவர்த்தனே பிரேமதாசா கும்பல் இரகசியக் கொலைக் குழுக்களைக் கட்டி ஜே.வி.பி. மீது ஏவியது. அவை ஜே.வி.பி. அணிகள் மற்றும் அப்படிச் சந்தேகிக்கப்படுவோர் மட்டுமின்றி இளைஞர்கள் அனைவரையுமே தேடிப்பிடித்து படுகொலைகள் செய்தன. சாலையோரங்கள், கடற்கரைகள், ஆறுகள், பள்ளி கல்லூரி வளாகங்களிலே பிணங்களை சிதறியடித்து பயபீதியை உருவாக்கினர்.

பாசிசத் தேர்தல் மோசடிகள் மூலம் பிரேமதாசா அதிபராகி இந்திய அரசுடன் புதிய பேரங்கள் நடத்த இந்திய இராணுவ விலக்கத்துக்கு சம்மதிக்க வைத்து விட்டார். அரசியல் முன் முயற்சியை இழக்கும் நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது. ஆனால் அதுவோ தற்கொலைக்கொப்பான இருமுடிவுகள் எடுத்தது. அரசு அலுவலகங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களைக் கொளுத்துவது; போலீசு இராணுவத்தினர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும், இல்லையேல் அவர்களது குடும்ப உறவினர் கொல்லப்படுவர் என எச்சரித்தது. இந்த இருமுடிவுகள் காரணமாக பரந்துபட்ட மக்களிடமிருந்து ஜே.வி.பி. தனிமைப்பட்டது; கணிசமான அளவு போலீசு – இராணுவத்துக்குள் ஊடுருவி ஆதரவாளர்களைப் பெற்றிருந்த போதும் ஜே.வி.பி. யினரைப் பழிவாங்கும் கொலைவெறியில் போலீசு – இராணுவத்தைத் தள்ளியது.

“ஜே.வி.பி.யி.னரின் ஒவ்வொரு கொலைக்கும் 14 ஜே.வி.பி.யினரைக் கொன்று பழிதீர்ப்போம்” என்று பிரேமதாசாவின் கொலைக் குழுக்கள் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து அரசு பயங்கரவாதமும், ஜே.வி.பி. பயங்கரவாதமும் உச்சநிலையை அடைந்தன. இலங்கையின் இன்றைய இளைய தலைமுறையே பூண்டோடு அழிக்கப்பட்டு விடுமோ என்கிற அளவு கொலைவெறி தாண்டவமாடியது. அதன் உச்சக்கட்டமாக ஜே.வி.பி.யின் நிறுவனத் தலைவர் ரோகண விஜியவீரா உட்பட அதன் தலைமை முழுவதும் பாசிச பிரேமதாசா கும்பலால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டது.

முழுக்கவும் இராணுவ – சதிமுறையிலான அமைப்பாகவே ஜே.வி.பி. மற்றும் டி.ஜே.வி. ஆகியன இயங்கி வந்ததால் அவற்றுக்குள் ஊடுருவி தலைமையை அழிப்பது அரசுக்கு வாய்ப்பாக அமைந்தது. இப்பெரும் பின்னடைவுக்குப் பிறகும் பியசிரி ஃபெர்னாண்டோ தலைமையில் ஜே.வி.பி மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; பாரிய படிப்பினைகளைப் பெற மறுக்கிறது.

ஜே.வி.பி. தன்னை ஒரு மார்க்சிய – லெனினியப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அமைப்பாகக் கூறிக் கொண்ட போதிலும், அதற்கு மாறான, தவறான பல அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது.

★ ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய – லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.

★ இலங்கை பெயரளவிலான சுதந்திரம் பெற்ற ஒரு நவீன காலனிநாடு என்று கணித்திருந்தது. இருந்தபோதும் அதன் யதார்த்த நிலைமைகளை ஆய்வு செய்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை மேற்கொள்ளவில்லை. டிராட்ஸ்கிய சித்தாந்த அடிப்படையில் சோசலிசத் திட்டத்தை முன்வைத்தது. தேயிலை, ரப்பர் தோட்டங்களை அழித்துவிட்டு கூட்டுப் பண்ணைகளை அமைக்கும் கற்பனாவாத சோசலிசப் பொருளாதாரத் திட்டத்தை வைத்திருந்தது.

★ இலங்கையின் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள். குறுகிய சிங்கள பேரினவாதத்துக்குப் பலியான ஜே.வி.பி. அவர்களையும், ஈழத் தமிழர்களையும் புரட்சிக்குத் திரட்ட வேண்டிய பணியை நிராகரித்தது. சிங்கள இனவாத அரசியலை மையமாக வைத்து விரைவான ஆதரவைத் தேடி விடமுடியும் என்ற கருத்தில் சிங்கள இனவெறி புத்தபிக்குகள், சிங்கள முதலாளிகள் ஆகியோரோடு வர்க்க சமரசம் மேற்கொண்டது.

★ மலையகத் தொழிலாளர்களை மட்டுமல்ல, நகர்ப்புறத் தொழிலாளர்களும் புரட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள் என்று நிராகரித்தது; அதே போல விவசாயிகளைத் திரட்ட வேண்டியதன் அவசியத்தை ஏற்கவில்லை. மாணவர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வேலையற்ற இளைஞர்களைக் கொண்ட இராணுவ ரீதியிலான அமைப்பு மட்டுமே கட்டியது. பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாத புத்திஜீவிகள், சிங்கள – புத்த வியாபாரிகள் ஆகியோர் ஜே.வி.பி.யின் சமூக அடிப்படைகள்.

★ மக்கள் திரள் புரட்சிப் போராட்டங்கள், நீண்டகால மக்கள் யுத்தப்பாதை ஆகியவற்றை நிராகரித்து விட்டு சேகுவாராவின் இராணுவப் பாதையை ஜே.வி.பி. தெரிவு செய்து கொண்டது. அதன்படி இரகசியக் கொரில்லாக் குழுக்களைக் கூட்டி ஆயுதங்களைச் சேகரித்து திடீரென்று சிவில் – இராணுவத் தலைமையைத் தாக்கி அழிப்பது; போலீசு நிலையங்கள், இராணுவ முகாம்கள் முதலிய கேந்திர நிலைகளைத் தாக்கிக் கைப்பற்றுவது; இந்த ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதுதான் ஜே.வி.பி.யின் இராணுவத்திட்டம், அதற்கு முன்னோடியாகத்தான் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அரசியல், பொருளாதார நிர்வாகத்தை நிலைகுலைக்க முயன்றது.

★ புரட்சியின் நண்பர்களையும் எதிரிகளையும் பகுத்தறிந்து, அணுகத் தவறியது. ஒருபுறம் வென்றெடுக்கப்பட வேண்டிய ஜனநாயக, தேசபக்த சக்திகளையும், அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டிய சமரச சக்திகளையும் எதிரிகளாகப் பாவித்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. மறுபுறம் தேசிய இனவெறிச் சக்திகளுடனும், ஆளும் வர்க்க பிரதிநிதிகளுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டுகள் வைத்துக் கொண்டது

இக்காரணங்களால் ஜே.வி.பி. ஒரு சிங்கள பேரினவாத சமூக பாசிச இயக்கமாகச் சீரழிந்து போனது. தற்போதைய பின்னடைவு, வீழ்ச்சியையும் சரிக்கட்டி அது மீண்டும் எழலாம். ஏனெனில் எல்லா நாடுகளிலுமே பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்துக்கு இணையாக குட்டி முதலாளித்துவ சீர்குலைவு அராஜகத்துக்கான அடிப்படைகள் நிலவுகின்றன.

மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையைச் சித்தாந்த வழிகாட்டியாகக் கொண்ட, யதார்த்த நிலைமைகளுக்குப் பொருத்தமான புரட்சிகரத் திட்டம், அரசியல், இராணுவப்பாதை, போல்ஷ்விக் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வதேசக் கண்ணோட்டம் ஆகியவை மட்டுமே புரட்சியைச் சாதிக்க முடியும் என்ற இந்தப் படிப்பினையை மீண்டும் ஒருமுறை ஜே.வி.பி.யின் வரலாறு காட்டுகிறது.

ஆனால் எல்லா நாட்டிலும் புரட்சிகர இயக்கங்களின் அனுபவமும் இதுதான்! இன்னும் குறிப்பான, நமது நாட்டுப் புரட்சி இயக்கங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான சில படிப்பினைகளை ஜே.வி.பி. கொடுத்திருக்கிறது.

இடது தீவிரவாதத் தவறுகளைக் களைவது; மக்கள் திரளை வென்றெடுப்பது; பெரும்பான்மையான நிலைமைகளுக்கு ஏற்ப ‘தந்திரமாக’ நடந்து கொள்வது என்கிற பெயரில் பல குழுக்கள் ஜே.வி.பி.யின் தவறுகளையே இங்கே பின்பற்றுகின்றன. அரசியலற்ற தன்னார்வக்குழுக்கள் முதல் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் வரை சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்துக் கொள்ளுகின்றன. இன்னும் சில குழுக்கள் அம்பேத்கர் போன்ற முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள், வன்னிய சங்கத் தலைவர் ராமதாஸ் போன்ற சாதி, மதவாதிகளுக்கு வால்பிடிக்கின்றன. மற்றும் சில குழுக்கள் தமிழரசன். பெருஞ்சித்திரனார் போன்ற இனவாதிகளைப் பின்தொடர்கின்றன அல்லது ‘தனித் தமிழ்நாடு’ போன்ற தேசிய இன முதலாளித்துவ முழக்கங்களைத் தாமே வரித்துக் கொள்ளுகின்றன.

பரபரப்பூட்டி குறுக்கு வழியில் விரை வான வெற்றியைச் சாதித்து விடும் வேகத்தோடு பாலங்கள் – சிலை தகர்ப்பு, அரசு அலுவலகங்கள் – வாகனங்களைக் கொளுத்துவது, வங்கிக் கொள்ளைகள், தனிநபர் அழித்தொழிப்பு போன்ற சாகசச்செயல்களில் சில குழுக்கள் ஈடுபடுகின்றன. இப்படிப்பட்ட தனிநபர் பயங்கரவாதச் செயல்களுக்காகவே – அவர்களின் சித்தாந்தம், அரசியல் – இராணுவப் பாதை எதுவானாலும் – ஜே.வி.பி.யையும், அதன் ஈழப் பதிப்பான புலிகளையும், இந்தியப் பதிப்பான தமிழரசன் குழுவையும் புகழ்ந்து தள்ளுகின்றன. இன்னும் மேலே போய் சீக்கிய மதவெறி தீவிரவாதிகளைக் கூட ஆதரிக்கின்றன. இவர்கள் மீது விமர்சனக் கண்ணோட்டம் வைப்பது கூட வறட்டுத்தனமான அணுகுமுறை என்று அக்குழுக்கள் சாடுகின்றன.

ஆனால் இம்மாதிரியான அணுகுமுறை புரட்சியை நோக்கி இந்தக் குழுக்களை அழைத்துச் செல்லாது. ஒருபுறம் வலது சந்தர்ப்பவாதிகளாகச் சீரழிக்கும் அல்லது எதிரிகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் அழித்துவிடும். இந்தப் படிப்பினைகளைத்தான் ஜே.வி.பி இயக்கம் அளிக்கிறது.


சோமநாதன்

[01 – 15 ஜனவரி, 1990 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க