தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கைத் தேர்தல் முடிவுகளில் ஜே.வி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. “இடதுசாரிகள் வெற்றி” என்ற வகையில் சிலரால் இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி. கட்சி இடதுசாரி இயக்கமா அல்லது இனவெறி இயக்கமா என்பது குறித்து டிசம்பர் 1989 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
***
ஜே.வி.பி. இயக்கம்தரும் படிப்பினைகள்! | பாகம் 1
ஜே.வி.பி.யை நிறுவித் தலைமையேற்று வழி நடத்தியவர் ரோகண விஜியவீரா என்று அனைவராலும் அறியப்பட்ட பெண்டிடான் நந்தசிரி விஜியவீரா. இலங்கையின் ‘இடதுசாரி’ இயக்கங்களின் இதயமாக தெற்கில் உள்ள மாத்தரா மாவட்டம் தங்கெல்ல பகுதியின் கொட்டகோடா கிராமத்தில் 1943 ஜூலை 14 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை உறுப்பினராக இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் பள்ளி மாணவராகவிருந்த போதே இணைந்தார். அலியன் நானயக்காரா என்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்குத் தேர்தல் பணிபுரிந்தார். அவரது உதவியால் 1960ல் உதவித் தொகை பெற்று மாஸ்கோவில் உள்ள சர்வதேச மக்கள் நட்பு நவு- பாட்ரீஸ் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி படிக்கப் போனார். அப்போது சர்வதேசக் கம்யூனிச இயக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது.
1963-இல் விடுமுறைக்காகத் தாயகம் திரும்பிய விஜியவீரா சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக ருஷ்ய அரசு அறிந்தது. எனவே அவர் மாஸ்கோ திருப்பி தனது படிப்பைத் தொடர அனுமதி மருந்து விட்டது. 1965ல் சண்முகதாசன் தலைமையிலான ‘சீன ஆதரவு’ கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார், விஜியவீரா. உடனே இளைஞரணியின் படிப்பகம் பொறுப்பாளராக்கப் பட்டதால் நாடு முழுவதுமான கட்சியின் தீவிர இளைஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. சண்முகதாசன் கட்சி நிதியைக் கையாடல் செய்யும் ஒரு தொழிற்சங்கவாத – பிழைப்புவாதி; மார்சிஸ்டு அல்ல என்ற முடிவுக்கு ரோகண விஜியவீரா வந்தார். எனவே சணத், கருணரத்னே, லோகு அதுலா போன்ற பல்வேறு மட்டப் பொறுப்பாளர்களைக் கொண்ட ரகசியக் குழுவைக் கட்சிக்குள்ளேயே உருவாக்கினார். இதை அறிந்த சண்முகதாசன் ரோகண விஜிய வீராவையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார்.
1970 ஆகஸ்டில் கொழும்பு ஹைடே பூங்கா பேரணியில் தான் ஜே.வி.பி. அமைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 1966 ஏப்ரல் – மேயிலேயே விஜிய வீராவைப் பொதுச் செயலாளராகக் கொண்ட இரகசியக் கட்சியாக அமைத்து கிளைகளை உருவாக்கத் துவங்கி விட்டிருந்தனர். பொருளாதார நெருக்கடி, இலங்கையின் சுதந்திரம், இந்திய விரிவாக்கம், இலங்கை இடதுசாரி இயக்கம், இலங்கைக்கான புரட்சிப்பாதை ஆகிய ஐந்து வகுப்புகள் அணிகளிடையே நடத்தப்பட்டன. அவற்றில் ஜே.வி.பி.யின் அரசியல், இராணுவப் பாதைகள் பற்றிய நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
★ இலங்கையின் காலனிய, நவகாலனிய முதலாளித்துவ அமைப்புதான் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படை. குறிப்பாக இந்தியத் தொழிலாளர்களை வைத்து தேயிலை ரப்பர் தோட்டங்களை அமைத்து சிங்கள விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி விட்டனர். எனவே அவற்றை அழித்து சுயச்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்து கூட்டுடைமை விவசாய – தொழிலை நிறுவ வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் சோசலிச சமுதாயத்தைப் படைப்பதன் மூலமே அது சாத்தியம்.
★ இந்திய மூலதனம், குறிப்பாக சிந்தி, போரா மற்றும் தமிழ் வியாபாரிகள் நடத்தும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நான் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதோடு கலாச்சார ரீதியிலான ஊடுருவல் மற்றும் இந்தியத் தமிழர்களின் ‘தாயக’ விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு இனப்பிரச்சினையைத் தூண்டி இந்தியா தனது விரிவாக்க ஆதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது.
★ ஏற்கெனவே அமைப்பு ரீதியில் திரட்டப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் மலையகத் தொழிலாளர்கள் புரட்சிக்கு முன்வர மாட்டார்கள். எனவே கிராமப்புற பாட்டாளிகள், இளைஞர்கள், மாணவர்களைக் கொண்டு சேகுவாராவின் கியூபா பாணியிலான ஆயுதப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
மேற்கண்ட அடிப்படையில் கட்சி அமைப்புகளைக் கட்டவும், புரட்சிக்குத் தயாரிக்கவும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. முக்கியமாகப் பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களில் தேஷ்பிரின் சிஸ்ய சங்கமாயா என்ற மாணவர் அமைப்பும் தேஷ்பி ரேமி பிக்கு பெரமுனா என்ற புத்த சாமியார் அமைப்பும் கட்டப்பட்டன.
கோட்பாடு மற்றும் பிரச்சாரப் பணியை விஜிய வீரா ஏற்றார். தொழிலாளர், மாணவர், பெண்கள் மற்றும் பிக்குகளை அமைப்பாகத் திரட்டும் பணி சணத்துக்கும், ஆயுதங்களைச் சேகரிக்கும் பணி லோக்கு அதுலாவும் ஏற்றனர். ஒரு லட்சம் வெடி குண்டுகளும், துப்பாக்கிகளும் வெடி மருந்துகளும் சேகரிப்பது, ஒரு குறிப்பிட்ட நாளில் போலீசு நிலையங்கள் அனைத்தையும் தாக்கிக் கைப்பற்றுவது என்று திட்டமிட்டுத் தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.
“நாசவேலை, ஆட்சிக்கவிழ்ப்புக்கு” ஜே.வி.பி. தயாரிப்பதாக உளவறிந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு ரோகண விஜிய வீராவை 1970 ஆரம்பத்தில் கைது செய்தது. அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் போலி சோசலிச மற்றும் போலி கம்யூனிசக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற்ற சிரிமாவோ பண்டாரநாயகா கூட்டணி அரசு அமைத்தது. தேர்தலில் சிரிமாவோ கூட்டணியை ஜே.வி.பி. ஆதரித்து வேலை செய்திருந்தது. எனவே 1970 ஜூலையில் ரோகண விஜிய வீரா விடுதலை செய்யப்பட்டார்.
உடனடியாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயுதப் புரட்சிக்கான ஆதரவு திரட்டினார், விஜிய வீரா. போலீசு நிலையங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது சிரிமாவா பண்டாரநாயகாவைக் கடத்துவது அல்லது கொன்று விடுவது; இதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றும் இந்தப் புரட்சிக்கான நாளாக 1971 ஏப்ரல் 8ந் தேதி குறிக்கப்பட்டது.
ஆனால் 1971 மார்ச்சு 10த் தேதி வெடி குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது வெளிமாடா, நெலுன்தேனியா ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து விபத்துக்கள் நடந்தன. 5 இளைஞர்கள் மாண்டனர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தை ஜே.வி.பி. தாக்கியதில் ஒரு போலீசு அதிகாரி கொல்லப்பட்டார். அடுத்த வாரம் பெரதேனியா பல்கலைக்கழக விடுதியில் ஒரு குண்டு வெடித்தது. அங்கு சோதனையிடவே ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் சிக்கின.
எச்சரிக்கை அடைந்த போலீசு 1971 மார்ச்சு 13ந் தேதி ஐந்து பேரோடு சேர்த்து மீண்டும் விஜிய வீராவைக் கைது செய்தது. உடனடியாகப் புரட்சியை நடத்தி அதிகாரத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கட்சிக்குள் நிர்பந்திக்கத் துவங்கினர். ஏப்ரல் 2ந்தேதி வித்யோதயா சங்கரமாயாவில் கூடிய ஜே.வி.பியின் அரசியல் தலைமைக்குழு புரட்சிக்கான தேதியை முன் தள்ளியது. 1971 ஏப்ரல் 5-ந் தேதி இரவு 11 மணிக்கு தாக்குதலைத் தொடுப்பது என்றும் 500 பேர் கொண்ட படை அனுப்பி விஜிய வீராவை விடுவிப்பது என்றும் தீர்மானமானது. வெற்றியைப் பிரகடனம் செய்யும் வானொலி உரைகூட தயாராகி விட்டது.
ஆனால் புரட்சியைத் துவங்குவதற்கான தகவல்கள் சரியாகப் போய்ச் சேரவில்லை. ஏப்ரல் 5தந் தேதி அதிகாலை 5 மணிக்கே வெள்ளிவாயா போலீசு நிலையத்தைத் தாக்கி 2 போலீசாரைக் கொன்றனர். 2 ஜே.வி.பியினரும் மாண்டனர். உடனடியாக 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போலீசு எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நாட்டில் அவசரநிலை பிறப்பித்திருந்தனர்.
சிரிமாவோவைக கொல்வது அல்லது கடத்துவது, விஜிய வீராவை விடுவிப்பது ஆகிய இரண்டு முயற்சிகளும் தோற்றுப் போயின. ஆனால் ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள், செய்தித் தொடர்புகள், மின் இணைப்புகள் ஆகியவற்றைத் துண்டித்து முற்றாகச் செயலிழக்கச் செய்வதில் ஜே.வி.பி.யினர் வெற்றி பெற்றனர். 92 போலீசு நிலையங்களைத் தாக்கி 56ஐ நாசப்படுத்தினர். 32ஐத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 43ஐ கைவிட்டு போலீசரர் ஓடிவிட்டனர். 305 போலீசு காரர்களும் 63 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.
இந்த ஆரம்பநிலை வெற்றிக்குப் பிறகு இராணுவம் எதிர்த் தாக்குதல் தொடுத்தது. இந்தியாவும் இங்கிலாந்தும் இராணுவத்தை அனுப்பின. ருஷ்யா, ஆஸ்திரேலியா, யுகோஸ்லாவியா ஆகியன ஆயுத உதவிகள் அனுப்பின. 17 நாட்களில் ஜே.வி.பியின் புரட்சி முற்றாக ஒடுக்கப்பட்டது. ஏப்ரல் 22ந் தேதி கடைசியாக அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்பித்தியா பிராந்தியம் வீழ்ந்தது.
மொத்தம் 1200 ஜே.வி.பி.யினர் கொல்லப்பட்டதாக, சரணடைந்த 4200 பேர் உட்பட 23,000 பேர் கைதாகியதாக அரசு அறிவித்தது. ஆனால் ஏறக்குறைய 20,000 இளைஞர்கள் (அவர்களிலே 90 சதவிகிதத்தினர் 18-25 வயதினர்) கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல். 32 பேர் சதிக்குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றனர். 15,000 பேர் வழக்கின்றியும், மீதிப்பேர் படிப்படியாகவும் விடுவிக்கப்பட்டனர். அவர்களும் 1975 வரை போலீசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அனைவருக்கும் அரசு வேலைகள் நிரந்தரமாக மறுக்கப்பட்டது. ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டாலும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.
(அடுத்த இதழில் முடியும்)
சோமநாதன்
[16 – 31 டிசம்பர், 1989 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை]
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram