டந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியுள்ளனர்.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொது தேர்வுகள் எழுதுவதே மாணவர்களுக்கு பெரும் சவாலாகவும் சுமையாகவும்  இருக்கிறது. இதனை நம்மால்  எப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்றால் தேர்வு முடிவு வெளியாகும் பொழுது மாணவர்கள் அநேகர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நீட் தேர்வு வந்ததிலிருந்து, அத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு  படிக்க  முடியும்  என்ற  சூழ்நிலை  உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அந்தந்த மாநில பாடத்திட்டத்தில் படித்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அந்த அடிப்படையில்  ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் இதுவரை படிக்காத என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகத்தை படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் பெரும் சுமையாகவும் இருக்கிறது.

நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

இதையெல்லாம் கடந்து நீட் தேர்வு எழுத போனால் அங்கு பெண்கள் உள்ளாடையில் உலோக கொக்கி இருக்கிறது என்றும் அவர்கள் உள்ளாடையை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் கூறி, அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளாடையை கழற்ற வைக்கிறார்கள் தேர்வு மைய ‘உத்தமபுத்திரர்கள்’. தேர்வு எழுத சென்ற பல மாணவிகள் வேறு வழியின்றி உள்ளாடையில் இருந்த உலோக கொக்கியை அகற்றிவிட்டு துணியை கட்டிக்கொண்டு தேர்வு எழுத சென்றார்கள்.

இதனையடுத்து கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், “பல மாதங்கள் கடுமையாக படித்தும் இது போன்ற மன ரீதியான தொல்லையால் என் மகள் சரியாக தேர்வு எழுதவில்லை; அழுது கொண்டே வெளியே வந்தாள்” என போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் மற்றும் புர்காவையும் அகற்ற சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கேவலமான நடவடிக்கைகளின் மூலம், நீட் தேர்வுகள் மிகவும் கண்டிப்போடும் கட்டுப்பாடோடும்  நடக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்களின் லட்சணம் என்ன தெரியுமா? மாணவிகளின் உள்ளாடை வரை பரிசோதித்த இதே நீட் தேர்வில், டெல்லி மற்றும் ஹரியானாவில் தேர்வர்களுக்கு பதிலாக வேறு சிலர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது  அம்பலமாகியுள்ளது.

மேலும், டெல்லியில் கவுதம் நகரை சேர்ந்த சுசில் ரஞ்சன் என்பவர் ஆள் மாறாட்ட முறைகேடுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பல்வேறு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுடன் சேர்ந்து போலி நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை தயாரித்து மாணவர்களுக்கு பதில் வேறு நபர்களை தேர்வு எழுத அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையாக செயல்பட்டு வந்த சுசில் ரஞ்சன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அறை கண்காணிப்பாளரின் துணை இல்லாமல் எப்படி ஆள் மாறாட்டம் செய்ய முடியும்?  ஆள் மாறாட்டம் செய்வதற்கு அந்நிறுவனமும் ஹால் கண்காணிப்பாளரும் ஒத்துழைத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். இதுபோல் அதிகாரிகள் பணக்கார மாணவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கி கொண்டு களவாணித்தனம் செய்திருப்பது பல இடங்களில் அம்பலமாகியுள்ளது. ஆனால் நேர்மையாக தன்னை நம்பி மட்டுமே தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதிக்கப்படுகின்றனர்.

“நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக் காண விழையும் பெரும் முயற்சி” என்று கதை அளந்து விடுபவர்களின் முகத்தில் காரி உமிழும் வண்ணம் வகையில் தான் தொடர்ச்சியாக நீட் தேர்வு நடந்து வருகிறது. சமீபத்தில், கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், “நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை” என்பதனை தரவுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

“நீட் தேர்வின் விதியோ தரமான மாணவர்களை” தேர்ந்தெடுப்பது என்று நீட் தேர்வை ஆதரிக்கும் கும்பல்கள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் உள்ள விதியோ தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தின் லாப வேட்டைக்கானதாக தான் உள்ளது.

கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

மொத்தமாக பார்த்தால் நீட் தேர்வில் இரண்டு முரணான அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்கள் யாரும் மருத்துவராகக் கூடாது. அவர்கள் இந்த சமூகத்தில் முன்னேறக்கூடாது என்பது. மற்றொன்று இந்தத் தேர்வை வைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீட் பயிற்சி மையம் வைத்திருப்பவர்களும் கொழுத்து கொண்டிருக்கின்றனர்.

பணம் உள்ளவர்கள் மட்டுமே கனவு காண வேண்டும் என்று ஒவ்வொரு தேர்வின் போதும் எளிய மக்களின் முகத்தில் ஓங்கி அறைகிறது நீட் தேர்வு. ஆனால் ஆரம்பத்தில் போராட்டங்களின் மூலம் திருப்பி அறைந்து கொண்டிருந்த தமிழகம், அனிதா இறந்த போது போர்க்களமான தமிழகம், இன்று பல அனிதாக்களை இழந்த போதும் எழவு வீட்டில் எந்த சலனமும் இல்லாமல் ஓய்ந்து கிடப்பது போல் ஓய்ந்து கிடக்கின்றது. இது தான் இங்குள்ள சமரச சக்திகளின் மிகப் பெரிய வெற்றி.

இதுவரை தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் கொல்லப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இத்தாக்குதலை தொடுப்பது இரட்டை குழாய் கொண்ட தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற கொலைகார துப்பாக்கி தான். இந்த துப்பாக்கியின் விந்தை என்னவென்றால் ஒரு துளையின் மூலம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உயிரைக் கொன்று குவித்து வருகிறது. இன்னொரு துளையோ பண முதலைகளுக்கு பண மாலையாக விழுகிறது. இந்த துப்பாக்கியை அடித்து நொறுக்காமல் நீட்டிலிருந்து நமக்கு விடிவில்லை.

ஆதி