பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலை!

கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்தபோது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

1

2002-ம் ஆண்டு பில்கிஸ் பானோ-வை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் 2022 ஆகஸ்ட் 15 அன்று கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனவரி 21, 2008 அன்று மும்பையில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், பில்கிஸ் பானோ-வை கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் பானோவின் குடும்பத்தினர் ஏழுபேரை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர்கள் மீதான தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

பில்கிஸ் வழக்கை விடக் குறைவான கொடூரமான குற்றத்தைச் செய்த ஏராளமான குற்றவாளிகள் எந்தவித நிவாரணமும் இன்றி தொடர்ந்து சிறைகளில் வாடுவதாக மனித உரிமை வழக்கறிஞர் ஷம்ஷாத் பதான் ஆகஸ்ட் 15 அன்று இரவு தெரிவித்தார்.

பிப்ரவரி 27, 2002 அன்று 59 கரசேவகர்களைக் கொன்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது, அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ, தனது சின்னஞ்சிறு மகள் மற்றும் 15 பேருடன் தனது கிராமத்தை விட்டு வெளியேறினார்.


படிக்க : குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்


மார்ச் 3 அன்று, அவர்கள் ஒரு வயலில் தஞ்சம் அடைந்தனர், அப்போது 20-30 பேர் கொண்ட கும்பல் அரிவாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதங்களுடன் அவர்களைத் தாக்கியது. பில்கிஸ் பானோ அக்கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது. அதே நேரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். மற்ற 6 உறுப்பினர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 2004-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். விசாரணை அகமதாபாத்தில் தொடங்கியது. இருப்பினும், சாட்சிகள் பாதிக்கப்படலாம் என்று பில்கிஸ் பானோ அச்சம் தெரிவித்ததையடுத்து, சிபிஐ சேகரித்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 2004-ல் மும்பைக்கு மாற்றியது.

ஜனவரி 21, 2008 அன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சிறப்பு நீதிமன்றம் சாட்சியங்கள் இல்லாததால் மற்ற குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்தது. குற்றவாளிகளில் ஒருவர் விசாரணையின் போது இறந்துவிட்டார். எனினும் 2018-ஆம் ஆண்டு 7 பேரின் விடுதலையை பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 2019 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம், பில்கிஸ் பானோவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

“மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என்னுடன் நிற்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தியுள்ளது. 2002-ஆம் ஆண்டு வன்முறையில் இழந்த அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான எனது வலி, எனது துன்பம் மற்றும் எனது போராட்டத்தை இது புரிந்துகொண்டது. எந்த குடிமகனும் அரசின் கைகளால் பாதிக்கப்படக் கூடாது” என்று பில்கிஸ் பானோ கூறினார்.

ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கும் “பொருத்தமான அரசாங்கம்” மகாராஷ்டிராதான், குஜராத் அல்ல என்று கூறிய உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் 1, 2022 நிலவரப்படி 15 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் விடுதலை இல்லாமல் சிறையில் இருந்ததாக ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜூலை 9, 1992 தேதி, முன்கூட்டியே விடுவிப்பதற்கான விண்ணப்பத்தை பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

“பல குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்துவிட்டாலும், அவர்கள் ஏதோ ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள்; ஒன்று அல்லது இரண்டு கொலைகளில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற கொடூரமான வழக்குகளில், குஜராத் அரசு குற்றவாளிகளின் விடுதலையை எளிதாக அங்கீகரித்து, அவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கிறது” என்று பதான் கூறினார்.

கலவரம் செய்து முஸ்லீம் குடும்பத்தை கொடூரமாக கொலை செய்த, முஸ்லீம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, காவி பயங்கரவாதிகள் விடுதலை அடைந்துள்ளார்கள். கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்த போது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.


சந்துரு