மோடி ஆட்சிக்கு எதிராகப் பேசினால் நமக்கு மட்டுமல்ல, அந்த சிவபெருமானே ஆனாலும் ஒடுக்குமுறைதான் என்பதற்கு அசாம் மாநில சமூக செயல்பாட்டாளர் பிரிஞ்சி போரா கைது செய்யப்பட்டது ஒரு சான்று.

நாகௌன் நகரில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு குறித்து இவரது குழு வீதிநாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் சிவபெருமான் வேடமிட்ட பிரிஞ்சிபோரா மோடி அரசை அம்பலப்படுத்துகிறார்.

உமையாள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, சிவபெருமான் புல்லெட் வண்டியை ஓட்டி வருவதாக நாடகக் காட்சி. வண்டி பாதியில் நின்றுவிடுகிறது. கோபித்துக் கொண்ட உமையாள் சண்டையிடுகிறாள். வண்டி நிற்கக் காரணம் போதுமான அளவில் பெட்ரோல் போட என்னிடம் பணமில்லாதது தான் காரணம் என தன்னிலை விளக்கமளிக்கிறார் சிவபெருமான். மேலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு இப்படி அனைத்துக்கும் கடவுளாகிய தான் காரணம் இல்லை, மோடியின் இந்த மக்கள் விரோத ஆட்சிதான் காரணம் என்று கூறுகிறார். நாடகத்தின் இறுதியில், “மோடி அரசை எதிர்த்து நாம் கேள்விக் கேட்க வேண்டும்” என்று மக்களைப் பார்த்து சிவபெருமான் கூற, மக்கள் ஆரவாரத்தோடு அதை வரவேற்கிறார்கள்.

இந்த நாடகம் உள்ளூர் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளி வந்து பரபரப்பாக பேசப்படவே, பாரதிய ஜனதாவின் குண்டர்படை தங்கள் “தெய்வங்களை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும்” புகார் அளித்து சிவபெருமானாக நடித்த பிரிஞ்சி போராவை கைதுசெய்ய வைத்துள்ளது. இந்த நடவடிக்கை பொது மக்களிடம் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தவே பின்னர் பிணையில் வெளியிடப்பட்டார்.


படிக்க: ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !


மோடி ஆட்சியின் யோக்கியதையை கேள்வி கேட்டுவிட்டார் என நேரடியாக புகார் கொடுக்கவில்லை பா.ஜ.க. மாறாக, அவர் சிவபெருமான் வேடமிட்டு நடித்ததன் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டாராம். இதன் பொருள் என்ன? மோடியை ஆட்சியை சிவபெருமானே விமர்சித்தாலும் அவரும் இந்து உணர்வைப் புண்படுத்தியவர்தான் என்கிறார் பா.ஜ.க.வினர்.

பிரிஞ்சி பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது ஏன் இந்த நாடகம் நடத்தப்பட்டது என்பதை விளக்கினார்:

“நரேந்திரமோடி நல்லாட்சி தருவார் என்றுதான் அவரை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் அவரோ பெட்ரோல்-டீசல், காஸ் சிலிண்டர், ஏன் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெயைக் கூட விலை உயர்த்திவிட்டார். ஏழைகள் வாழ்வதுதான் எப்படி? வருடம் இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்று சொன்னார். நாடெங்கும் வேலையில்லா திண்டாட்டம். உள்ள வேலைகளையும் பறித்து விட்டார். 23 லட்சம் அசாம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் 1 லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் சொன்னது அத்தனையும் பொய் என்று தெரிகிறது. இந்த நாடகம் இதைப் பற்றியதுதான். இதில் என்ன தவறு. தானும் சிவா பக்தன் தான். பா.ஜ.க.வுக்கு மட்டுமே கடவுள் சொந்தமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்த பிஸ்வா சர்மா மத்திய அரசின் வழக்குகளுக்குப் பயந்து கட்சி காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு தாவியவர். இந்த நபர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஊழல், கொலை, அடிதடி என பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொரோனா நோய் தடுப்புக்காக வாங்கிய கருவிகள் மற்றும் உடைகளில் கூட பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாக “தி வயர்”, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு விசாரணைக்கு ஏற்பாடு ஆகியுள்ளது.

இத்தகைய ரவுடிகள் மதத்தையும் தெய்வங்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம். ஆனால் அவர்களது யோக்கியதையைப் பற்றிப் பேச அந்த தெய்வங்களுக்கே கூட உரிமை இல்லை என்பதுதான் மோடியின் பாசிச ஆட்சி.


கிருஷ்ணராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க