முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வரி வசூல் முக்கியமானது. வரி வசூல் இல்லையெனில் அரசு இயங்காது. மக்களிடம் வசூலிக்கும் வரியில் குறிப்பிட்ட அளவு தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்கும், சாலை அமைத்தல், பள்ளிகள், கல்லூரிகள் அமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்கும் செலவிடுவார்கள்; அல்லது மக்கள் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

வசூலிக்கப் படும் வரிகள் நேர்முக வரி (Direct Tax) மற்றும் மறைமுக வரி (Indirect Tax) என இரண்டு வகைப்பட்டவை. கார்ப்பரேட் வரி, வருமான வரி, சொத்து வரி, வீட்டு வரி போன்றவை நேர்முக வரி பிரிவின் கீழ் வருகின்றன. ஜி எஸ் டி, கலால் வரி, சுங்க வரி போன்றவை மறைமுக வரியின் கீழ் வருகின்றன.

நேர்முக வரியை அதிகரி, மறைமுக வரியை குறை. 1930-களில் ஜான் மேனார்டு கீன்ஸ் அறிமுகப் படுத்திய இந்த வரிவிதிப்பு முறையை இன்றும் பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. அரசுகள் அவ்வப்போது சில வரி விகிதங்களில் மாற்றங்களைச் செய்தாலும், யாரால் அதிக வரி செலுத்த முடியுமோ, அதாவது பணக்காரர்கள், அவர்களிடம் அதிக வரி வசூல் செய்வதும், யாரால் வரி செலுத்த முடியாதோ, அதாவது ஏழைகள், அவர்களிடம் குறைந்த வரி வசூல் செய்வதும் பல நாடுகளின் வரி விதிப்பு கொள்கையாக இருக்கிறது.

இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதாரணமாக, அதிக வருமானம் பெறுபவர்கள் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான நேர்முக வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.


படிக்க : டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


ஆனால், மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும், அந்தச் சுமையை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதாவது, ஒருவர் ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையினை வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது விதிக்கப்பட்ட வரியின் சுமை, நுகர்வோர் மீது கடத்தப்படும். இந்த வரிகள் பொருளின் விலையோடு சேர்த்தோ (உதாரணம் பெட்ரோலின் விலை) அல்லது சிற்றுண்டி சாலை உணவு பில்களில் சேவை வரி குறிப்பிடுவது போன்று தனியாகவோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரி நீங்கள் வாங்கும் பொருளின் விலையினை கூடுதலாக்குகின்றது.

ஏழை பணக்காரர் எல்லோரும் ஒரே விதமான மறைமுக வரிகளை செலுத்துவார்கள் என்பதால், பொருளாதாரத்தில் வருமான மறுபகிர்வுக்கு நேர்முக வரிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும், அதில்தான் வரி செலுத்தும் திறனுக்கேற்ப வரிவிகிதங்களை மாற்றி அமைக்க முடியும்.

இந்த அடிப்படை விதிப்படி பார்த்தால், ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியையும், பெட்ரோல் – டீசல் வரியையும் குறைக்க வேண்டும். ஏழை மக்களை பாதிக்காத பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும். ஆனால், மோடி அரசு என்ன செய்தது?

பெட்ரோல் – டீசல் வரி

2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48-ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56-ஆகவும் இருந்தது. அதன் பின்னர் மோடி அரசு பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை படிப்படியாக தொடர்ந்து உயர்த்தியதின் விளைவாக,  2020-ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.32.9-ஆகவும், டீசல் மீதான வரிகளை லிட்டருக்கு ரூ.31.8-ஆகவும் உச்சம் தொட்டது.

மக்கள் போராட்டம், சில மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விகளின் விளைவாக பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.19.9-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.15.8-ஆகவும் மோடி அரசு சில மாதங்களுக்கு முன்னர் குறைத்தது.

2014-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெட்ரோல் மீதான கலால் வரி இரு மடங்கும், டீசல் மீதான கலால் வரி 4.5 மடங்கும் உயர்த்தியுள்ளார் ஏழைப் பங்காளன் மோடி.

ஜி.எஸ்.டி வரி:

ஜி.எஸ்.டி பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா? சுடுகாட்டில் வாங்கப்படும் மயான கட்டணம் தவிர்த்து அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி உண்டு என்று சொன்னால் அது பொய் ஆகாது. அமலில் உள்ள ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் உங்களுக்கு தெரிந்தது தான். இருப்பினும் சில பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை மட்டும் இங்கே நினைவு படுத்துகிறோம்.

இதற்கு முன்பு வரை ஜி.எஸ்.டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்த பேக்கிங் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் உள்ளிட்ட பொருட்களுக்கு சமீபத்தில் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, அப்பளம், வெல்லம், மீன், இறைச்சி உள்ளிட்ட பொருட்களுக்கும் 5% ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வசூலிப்பதால் சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி இருக்கும் என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்தது. சுடுகாட்டில் எரிக்கவோ, புதைக்கவோ அல்லது இதர மயானச் சேவைகளுக்கோ ஜி.எஸ்.டி கிடையாது என நிர்மலா சீதாராமன், இப்போதைக்கு செத்த பிணத்தை மட்டும் ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கி வைத்துள்ளார். இவர்கள் ஆட்சியில் நீண்ட நாளுக்கு பிழைத்திருந்தால், விரைவில் பிணத்தை எரிக்கவும் ஜி.எஸ்.டி விதிக்கப்படலாம்.

பெரு நிறுவன வரி அல்லது கார்ப்பரேட் வரி:

உலகெங்கும் ஜி.எஸ்.டி, தனி நபர் வருமான வரி விகிதங்கள் கார்ப்பரேட் வரியை விட குறைவாக இருக்கும். மோடி நாட்டில்(ஆட்சியில்) தலைகீழ். சிங்கப்பூரில், ஜி.எஸ்.டி 7%; கார்ப்பரேட் வரி 17%. அமெரிக்காவில், அதிக பட்ச ஜி.எஸ்.டி 13%; கார்ப்பரேட் வரி 21%. இந்தியாவில் அதிக பட்ச ஜி.எஸ்.டி 28%; கார்ப்பரேட் வரி 22%.

30 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியை 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் 22 விழுக்காடாக மோடி அரசு குறைத்ததால் ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைக்குழுவின் தலைவர் பாஜக பாராளுமன்ற உறுப்பினர். குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 12 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தால், கார்ப்பரேட் வரி கூடுதலாக வசூலாகும் என கடந்த மூன்று வருடங்களாக நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். ஆனால் பாஜகவைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு கார்ப்பரேட் வரியைக் குறைத்ததால் 1.84 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாக தனது அறிக்கையில் (ஆகஸ்டு 8 2022) குறிப்பிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஹஸ்டன் நகரின் ஹவ்டி மோடி (Howdy Modi) நிகழ்ச்சி நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த கார்ப்பரேட் வரிக்குறைப்பு மோடி அரசால் செய்யப்பட்டது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தருவதற்கு ஒன்றிய அரசிடம் பணமில்லை என்பதையும், இனிமேல் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை தரமாட்டோம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தால், ஒன்றிய அரசுக்கு வரி வசூல் அதிகரிக்கும் என்றும், குறைக்கப்பட்ட வரியின் மூலம் சேமித்த பணத்தை கார்ப்பரேட்டுகள் மூலதன செலவுகளுக்கு (Capital expenditure) பயன்படுத்துவார்கள் மோடி அரசால் ஜால்சாப்பு சொல்லப்பட்டது.

இரண்டையும் பொய் என கவுரவ் வல்லப் புள்ளி விபரங்களின் உதவியுடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

2020-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 2021-ஆம் நிதியாண்டில் பெருநிறுவனங்கள் 138 சதவீத லாபம் சம்பாதித்துள்ளன.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2021-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 2022-ஆம் நிதியாண்டில்  பெருநிறுவனங்களின் லாபம் 66.2% அதிகரித்துள்ளது.

ஸ்டேட் வங்கி ஆய்வுக் கட்டுரையின் ஒன்றின்படி, 2021-ஆம் நிதியாண்டில் மட்டும் பெரு நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பில் 19 சதவீதம் கார்ப்பரேட் வரிக் குறைப்பின் பங்களிப்பு உள்ளது. எனவே கார்ப்பரேட் வரிக் குறைப்பு பெருநிறுவன இலாபத்தை அதிகரிக்க உதவியதே அன்றி, பெருநிறுவன வரி வசூலை உயர்த்தவில்லை.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


2021-22 நிதியாண்டில் மூலதனச் செலவு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 2.3% மட்டுமே அதிகரித்ததால், கார்ப்பரேட் வரிக் குறைப்பால் பெரு நிறுவனங்களால் சேமிக்கப்பட்ட பணம் மூலதனச் செலவாக மாற்றப்பட்டது என்ற மற்றொரு வாதமும் பொய் என்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். கார்ப்பரேட் வரிக் குறைப்பினால் பலன் பெற்ற பெரு நிறுவனங்கள், அவ்வாறு மோடி அள்ளிக் கொடுத்த பணத்தை, தங்களது  கடன்களை கட்டவும், கையிருப்பு பணத்தை அதிகரிக்கவும், பிற நடப்புச் சொத்துக்களை வாங்கவும் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

மக்களை வாட்டி எடுத்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஊரக வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கார்ப்பரேட் உலகிற்கு வரிக் குறைப்புகளை அள்ளித் தந்தது மோடி அரசாங்கம்.

சோசலிச சமூகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு சாதாரணமாக கிடைக்க கூடிய உரிமைகள் தனியார்மய – தாராளமய – உலகமய முதலாளித்துவ உலகில் கடும் போராட்டத்திற்கு பிறகு பெயரளவில் கிடைக்கின்றன. அப்படி பெயரளவில் புழக்கத்தில் உள்ள சிற்சில உரிமைகளைக் கூட ஆளும் பாசிச மோடி அரசு பறித்து, தனது நண்பர்களான அதானி – அம்பானி கையில் தூக்கி கொடுத்துவிடுகிறது. அதன் ஒரு சிறு உதாரணம்தான் மோடியின் கார்ப்பரேட் கருணை. அதன் விலை 1.84 லட்சம் கோடி. இந்த தாராளத்தினால் பெருநிறுவனங்கள் பெற்ற 1.84 லட்சம் கோடி பரிசு 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற தொகை. இனிவரும் ஆண்டுகளிலும் மோடி தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பல பில்லியன் கோடிகளை அள்ளித் தருவார்.

சு. விஜயபாஸ்கர்.
செய்தி ஆதாரம்: Thehindu, Newindianexpress

disclaimer

1 மறுமொழி

  1. நாடாளுமன்ற அரசமைப்பும் அரசின் தனியார்மயக் கொள்கையும் கார்ப்பரேட் கும்பலுக்கானது தான் என்பது அம்பலப்பட்டு நிற்கிறது.
    புள்ளிவிவரங்களை அட்டவணை வடிவில் இணைக்கே வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க