செப்டம்பர் 17, 2022
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பேயாட்சியின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா இந்த ஆட்சியில். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு – என அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நமது வாழ்வு!

ஜி.எஸ்.டி கொண்டுவந்த ஒரே ஆண்டில், ஐந்தில் ஒரு பங்கு சிறுகுறு தொழில்கள் அதலபாதாளத்தில் வீழ்ந்தன. சில்லறை வணிகத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு, ஆன்லைன் வர்த்தக ஊக்குவிப்பு உள்ளிட்டவற்றால் சிறுவணிகம் பேரழிவைச் சந்தித்துள்ளது.

இடுபொருட்களின் விலை உயர்வு, கட்டுப்படியாகாத கொள்முதல் விலை, ‘வளர்ச்சி’யின் பெயரால் விளைநிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுவது, திட்டமிட்ட மானிய வெட்டுகள் ஆகியவற்றால் விவசாயிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது; மொத்தமாக வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்கவே வேளாண் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

நீம், எஃப்.டி.இ போன்ற காண்டிராக்ட் கொத்தடிமைச் சட்டங்களைக் கொண்டுவந்த மோடி அரசு, தொழிலாளர் உரிமைகளை மொத்தமாகப் பறிப்பதற்காகவே தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியிருக்கிறது.

தனது தேசவிரோதங்களை மறைத்துக் கொண்டு, “இந்த தேசத்துக்கு எதிரிகள் முசுலீம்கள்தான்; மதமாற்றம்தான் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்” என மதவெறியைத் தூண்டி விடுகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ்.

முசுலீம் பகுதிகளைக் குறிவைத்து மதவெறிக் கலவரங்களை நடத்துகிறார்கள் காவி குண்டர்கள்; முசுலீம்களை இனப் படுகொலை செய்ய வேண்டும்’ என்று வெளிப்படையாக அறைகூவுகிறார்கள்.

உண்மையில் கார்ப்பரேட்டுகளுக்கு அதிலும் குறிப்பாக அம்பானி, அதானிகளுக்கு மட்டும்தான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சி சுபிட்சம்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளிட்டு தற்போதைய 5ஜி ஒப்பந்தம் வரையில் அம்பானி, அதானி மற்றும் டாட்டா போன்ற ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கே நாட்டின் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. இக்கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்காகவே வேளாண் திருத்தச் சட்டம், தொழிலாளர் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, சில்லறை வணிகம் மற்றும் இராணுவம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு தாராள அனுமதி, தேசிய பணமாக்கல் திட்டம் என சட்டத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகிறது.

அரசு மக்களுக்குச் சேவை செய்யக் கூடாது; கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை மட்டுமே பார்க்க வேண்டும் என்று 90-களில் ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டதே ‘தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்’ என்ற மறுகாலனியாக்கக் கொள்கை. மோடி தலைமையிலான பாசிச பாஜகதான் இக்கொள்கையை மூர்க்கமாக அமல்படுத்துவதற்கு பொருத்தமானது என்று கருதி அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் ஏகமனதாக ஆதரிக்கிறார்கள்.

நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ் வங்கி, போலீசு, இராணுவம் என அனைத்து துறைகளிலும் தங்கள் ஆட்களை நிரப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக. தேர்தல் மூலம் அமைக்கப்படும் நாடாளுமன்றம் மட்டுமல்ல, சுயேட்சையான அரசுக் கட்டுமானங்கள் அனைத்தையும் பாசிஸ்டுகள் வளைத்துவிட்டார்கள்.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க, தேர்தலுக்கு வெளியே மக்கள் எழுச்சியை உருவாக்கப் போராடுவதே தீர்வாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு-குறு வணிகர்கள், மாணவர் – இளைஞர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அமைப்பு ரீதியான போராட்டமே பாசிசத்தை வீழ்த்தும்!

♦ ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!

♦ போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெழுவோம்! பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!


நிகழ்ச்சி நிரல்

தலைமை: அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.

உரையாற்றுவோர்:

  • வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலர், மக்கள் அதிகாரம்
  • தொல்.திருமாவளவன், MP தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  • ஜவாஹிருல்லா, MLA, தலைவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  • B.அப்துல் ஹமீது, மாநிலத் துணைத் தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு
  • கே.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர், SKM, தமிழ்நாடு
  • பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • பரசுராமன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
  • சேல்முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க
  • பழனி, ம.ஜ.இ.மு
  • பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி
  • அபிகவுடா, நிறுவனர், ஒருங்கிணைப்பாளர், திராவிட சிட்டி இயக்கம், கர்நாடகா
  • இராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • துணைவேந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

நன்றியுரை: ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி


மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
9791653200, 9444836642, 7397404242, 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க