privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!

என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!

அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.

-

டந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி கெளதம் அதானி, என்.டி.டிவியின் (NDTV) 29.18 சதவிகித பங்குகளை வாங்கியதாக செய்திகள் வெளியானது. மேலும் அதானி குழுமம் இந்நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளையும் வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருக்க கூடிய தேசிய ஊடகங்களில் என்.டி.டிவி மிகவும் முக்கியமானது. தேசிய அளவில் 24 மணி நேரமும் இயங்க கூடிய ஆங்கில ஊடகமாக இருந்து வந்த என்.டி.டிவி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் கூட சுதந்திரமாக செயல்பட்டுவரும் ஊடகங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இத்தகைய ஊடகத்தைதான் தற்போது அதானி கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.

என்.டி.டிவியை அந்நிறுவனத்திற்கே தெரியாமல் எப்படி கைப்பற்றி இருக்க முடியும் இது சாத்தியமா? என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம், அது எவ்வாறு சாத்தியமானது என்பதை பார்ப்போம்.

படிக்க : இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

ஒரு நிறுவனத்தை உரிமை கொண்டாட அந்நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்க வேண்டும். என்.டி.டிவி நிறுவனத்துடைய முக்கியமான இரண்டு பங்குதாரர்களான “ராதிகாராய் மற்றும் பிரானாராய்” கணவன் மனைவி இருவரும் சேர்ந்து 32.36 சதவிகித பங்குகளையும், ராதிகா ராய் பிரானாராய் பிரைவேட் லிமிடட்(RRPR Holdings) என்னும் நிறுவனத்தின் மூலமாக 29.18 சதவிகித பங்குகளையும்( மொத்தமாக 61.54 சதவிகிதம்) வைத்திருந்தனர். இந்த RRPR-யிடம் இருந்த 29.18 சதவிகித பங்குகளைதான் அதானி குழுமம் தற்போது கைப்பற்றியுள்ளது.

எப்படி வஞ்சகமாக கைப்பற்றியது என்பதுதான் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு விசயம். என்.டி.டிவி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ராதிகா ராய் பிரானாய் ராய் ஆகியோர் “விஸ்வ பிரதான் கமர்சியல் பிரைவெட் லிமிடட்” என்னும் நிறுவனத்திடம் என்.டி.டிவி.யின் 29.18 சதவிகித பங்குகளை அடகுவைத்து 403 கோடி கடன் வாங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் ஒரு செல் (shell) கம்பெனி; அதாவது எந்த விதமான சொத்துக்களும் இல்லாமல் வெறும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படும் நிறுவனமாக இயங்கி வந்திருக்கிறது. கடந்த வாரம் வரை இந்த நிறுவனத்திற்கு என்று எந்த சொத்துக்களும் இல்லை. எனவே இந்த நிறுவனம் 403 கோடி கடன் கொடுப்பதற்காக “சினானோ” என்ற நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியுள்ளது. இந்த சினானோ என்னும் நிறுவனம் அம்பானியின் “ரிலைன்ஸ் ஹொசிங் இன்வஸ்மண்டுக்கு” சொந்தமான ஒரு நிறுவனமாகும்.

இதனை வைத்து பார்க்கும்போது என்.டி.டிவி.க்கு கடன் அளித்ததன் மூலமாக மறைமுகமாக அம்பானி இதன் பின்னால் இருக்கிறார். ஆனால் இந்த இடத்தில்தான் சூட்சுமங்கள் மாறுகின்றன. இந்த வி.சி.பி.எல் நிறுவனத்தை 2012-ஆம் ஆண்டு முதல் எமிரண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த எமிரண்ட் நிறுவனத்தை வைத்திருப்பவர் அம்பானி நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றிவரும் மகேந்திரா என்பவர். இவரிடம் இருந்துதான் வி.சி.பி.எல் நிறுவனத்தை அதானினுடைய நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இப்படி வாங்கியதன் மூலமாக வி.சி.பி.எல் நிறுவனத்திடம் அடகு வைக்கப்பட்ட 29.18 சதவிகித என்.டி.டிவி நிறுவனத்தின் பங்குகள் அதானியால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் “எல்.டி.எஸ்” என்னும் நிறுவனம் 9 சதவிகிதத்திற்கும் மேலாக தன்னுடைய பங்குகளை என்.டி.டிவியில் வைத்திருக்கிறது. இதே எல்.டி.எஸ் நிறுவனம் அதானிக்கு சொந்தமான அதானி எண்டர்ப்ரைசஸ், அதானி பவர்ஸ், அதானி ட்ரான்ஸ்விசன், அதானி கேஸ் என்ற நான்கு நிறுவனங்களிலும் தனித்தனியே சுமார் ஒன்றரை சதவிகிதம் பங்குகளை வைத்திருக்கிறது.

இதன் மூலம் 29.18 சதவிகிதத்துடன் 9.75 சதவிகிதம் சேர்ந்து 38.93 சதவிகித பங்குகள் அதானியின் கையில் சிக்கியுள்ளது. இந்த என்.டி.டிவி நிறுவனத்தில் இன்னும் சில பங்குதாரர்களும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் கூட அதானிக்கு தங்களுடைய பங்குகளை விற்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாய் இருக்கிறது.

அதானி என்.டி.டிவி.யை கைப்பற்றியது ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை வாங்குகிறது என்னும் ரீதியில் கடந்துவிட முடியாது. எப்படி “ரிப்பப்ளிக்” என்னும் தொலைக்காட்சியின் வாயிலாக பா.ஜ.க தன்னுடைய பரப்புரைகளை, இந்துத்துவ பிரச்சாரத்தை செய்துவருகிறதோ, அதேபோன்ற செயலை இன்னும் பல ஊடகங்களின் வாயிலாக செய்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் என்.டி.டிவி.யை கைப்பற்றி இருக்கிறது இந்த கொள்ளைக்கார கும்பல்.

***

ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தமிழ்நாட்டில் இருக்க கூடிய ஊடகங்களின் முக்கிய செய்தி ஆசிரியர்களை அழைத்து பேசி இருக்கிறார். ‘நாங்கள் மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்து இருக்கிறோம் நீங்கள் எங்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் எங்களுடைய அமைப்பு மிகவும் பலமானதாக மாறிவருகிறது. தமிழ்நாட்டையே இரண்டு பகுதிகளாக பிரித்து பல்வேறு பள்ளிக் கூடங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சாகாக்களை நாங்கள் நடத்தி வருகிறோம். (we are increasing our social ways)’ என்று பேசி இருக்கிறார்.

நேரடியாக பத்திரிகையாளர்களிடம் எந்த பேரமும் பேசப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் எங்களுடைய கால் தடம் வலுவாக பதிந்துகொண்டிருக்கிறது என்று சொல்வதன் மூலமாக நீங்கள் எங்களுக்கு அடிபணியா விட்டால் என்.டி.டிவி.க்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும் என்பதை முன் அறிவிப்பதற்காகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையாளர்கள் கூட்டம்  நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் பேரலை யூடியூப் செய்தியாளர்கள்.

தமிழ்நாட்டிற்கு வந்து ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும் என்.டி.டிவி நிறுவனத்தை அதானி கைப்பற்றுவதற்கும் என்ன தொடர்பு என்று பலரும் கேள்வி எழுப்பலாம்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

ஆனால், தொடர்ச்சியாக ஊடகங்களின் மூலமாக இந்துத்துவ பிரச்சாரத்தை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதற்கு, சிறுபான்மை மதத்தவர்களையும், பட்டியல் பழங்குடியின, பிற்படுத்தபட்ட மக்களுக்கான உரிமைகளுக்கு எதிரான குரல்களையும் தொடர்ந்து பரப்புவதற்கு அவர்களுக்கு ஊடகங்கள் தேவைபடுகின்றன. அதனால் ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார கும்பல்.

அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் சுதேசி என்னும் உணர்வை ஊட்டுகிறேன் என்ற பெயரில் இந்துத்துவ வெறியை மக்கள் மனதில் பதியவைப்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்கும் ஊடகங்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. அதை நேரடியாகவும் மற்றும் மறைமுகமாக அதானி போன்ற தங்களுடைய முதலாளிகளின் மூலமாகவும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இதை அனைத்தையும் ஒன்றிணைத்து பார்த்தால் சுதந்திர ஊடகங்களுக்கான அச்சுறுத்தல் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது. ஒன்று நீங்கள் ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிபணிந்தவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இருக்கவே கூடாது என்னும் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

இதற்கு ஊடகங்கள் அடிபணிந்துவிடக் கூடாது தங்களுடைய இருப்பை மேலும் வலிமையானதாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் மக்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்ற அம்பானி – அதானி போன்ற முதலாளிகளின் உன்மை முகங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இதை ஊடகங்கள் அம்பலப்படுத்த தவறினால் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.


ஆதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க