இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்காவிற்கு வெற்றியா?

இம்ரான் கான் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், அவர் தலைமையிலான ஆட்சியும் அமெரிக்காவின் முற்றுமுழுதான ஆதிக்கத்துக்கு தோதானது அல்ல. அதாவது இரஷ்ய-சீனக் கூட்டணிக்கு ஷெபாஸ் ஷெரீப் எதிரானவரல்ல.

இம்ரானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சி நீங்கலாக இருபெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளாக உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீம் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே சீனாவுடன் நல்லுறவைப் பேணும் கட்சிகளே. பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் நீண்டகால அரசியல்-பொருளாதார உறவுகள் இருந்துவருவதைப் போலவே, சீனாவுடனும் இருந்துவருகின்றன.

தற்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீஃப் முன்னர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்தவர். அவரது ஆட்சியில் அம்மாகாணத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனாவின் பொருளாதார உதவியைப் பெற்றே நிறைவேற்றினார். ஆட்சிக்கு வந்த பிறகு புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இம்ரான் கானை விட ஆர்வமாக செயல்படுகிறார் ஷெரீப்.

படிக்க : புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

பிறகு, இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் அமெரிக்க ஆதரவு ஆளும் வர்க்க கும்பல் சாதித்தது என்ன? இதற்கான பதிலை சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. “சீனாவுடனான நட்பிலோ, அதன் அனைத்துவகையான போர்தந்திர ஒத்துழைப்பிலோ பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருப்பின் அத்தகைய உறவுகளை எந்தக் கட்சி சிறப்பாக நிலைநிறுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது” – என்று குயென் ஃபெங் என்ற அரசியல் பகுப்பாய்வாளர் கூறுவதை எடுத்துக் காட்டுகிறது குளோபல் டைம்ஸ்.

குயென் ஃபெங் கூறுவதைப் போல, சீனாவுடனான போர்தந்திர ஒத்துழைப்பில் மற்ற கட்சிகளை விட அதிகம் சிறப்பாக செயல்பட்ட கட்சி இம்ரான் கானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கக் கட்சிதான். மேலும் இம்ரான் கான், தீவிர இரஷ்ய-சீன சார்பாளராக இருந்தார். அவர் வெளிப்படையாகவே அமெரிக்காவை விமர்சித்தார். ஆனால், மற்ற இரு ஆளும் வர்க்க கட்சிகளோ சீனாவுடன் ஒத்துழைத்த போதிலும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவில்லை; அந்நாட்டுடனான அரசியல்-பொருளாதார உறவுகளைத் தளர்த்திக் கொள்ளவில்லை; இரஷ்யாவுடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இதையெல்லாம் இம்ரான் கான் செய்தார். அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக இரஷ்யாவும் சீனாவும் கூட்டணிக் கட்டிக் கொண்டு முன்னேறும்போது, அக்கூட்டணியின் பொருத்தமான விசுவாசியாக இம்ரான் கான் இருந்தார். அவரது ஆட்சியை கவிழ்த்துள்ளதன் மூலம் சுவாசிப்பதற்கான அவகாசத்தைப் பெற்றுள்ளது அமெரிக்கா. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அமெரிக்காவையும் ‘அனுசரித்துப் போவார்’ என்று கூறப்படுகிறது.

***

ஆப்கானிஸ்தான்

20 ஆண்டுகாலப் போரைவிடக் கொடுமையான துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது ஆப்கான். அமெரிக்க – நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது; வரலாறு காணாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுவதால் வறுமையும் பட்டினிச் சாவுகளும் கோரத்தாண்டவம் ஆடுகின்றன.

ஆப்கான் “பசி சுனாமி”யை சந்தித்து வருவதாக கூறுகிறது ஐ.நா. பெரும்பாலான குடும்பங்களில் உண்பதற்கோ, சமைப்பதற்கோ எதுவும் இல்லை. தன்னார்வக் குழுக்கள் அளிக்கும் ரொட்டியும், சர்க்கரை இல்லாத தேநீருமே அம்மக்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது.

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில், 13,700 பச்சிளங் குழந்தைகள் பட்டினியால் மடிந்திருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆப்கானில் 19.7 மில்லியன் மக்கள், அதாவது 50 சதவீத மக்கள் தொகையினர் பட்டினியால் வாடுகின்றனர். 95 சதவீத ஆப்கானியர்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர்.

கையில் பணம் இல்லாததால், பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்று குடும்பத்தின் உணவுக்கு பணம் திரட்டுகிறார்கள் ஆப்கான் மக்கள். வீதிக்கு வீதி சிறுநீரகத்தை விலைக்கு வாங்கும் மருத்துவக் கூடாரங்களை சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இதனோடு கூட தங்கள் குடும்பத்து பெண் குழந்தைகளை விற்கும் அவலமும் அரங்கேறுகிறது; “ஒரு குழந்தையை விற்றாவது, மற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்கள் தங்கள் குழுந்தைகளை விற்பனை செய்யும் பெற்றோர்கள்.

கடந்த ஆண்டின் மூன்றாவது கால்பகுதியில் மட்டும் சுமார் 5 லட்சம் ஆப்கானியர்கள் வேலையிழந்திருப்பதாகக் கூறுகிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. இந்த ஆண்டின் மத்தியில் அது 7 முதல் 9 இலட்சமாக உயரலாம் என்றும் பெண்களின் வேலைவாய்ப்பு 21 சதவிகிதம் குறையலாம் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இச்சூழல் ஒருபுறம் எனில், மதவாதக் கழிசடைகளான தாலிபான்களின் ஆட்சி பேயாட்சியாக இருக்கிறது. பெண் குழந்தைகள் கல்வி பயிலத் தடை, பெண்கள் கார் ஓட்டக் கூடாது, புர்கா அணியாமாலும் ஆணின் துணையில்லாமலும் வெளியே வரக்கூடாது – என 90களுக்கு பிறகு மீண்டும் கடும் பிற்போக்கு பேயாட்சி தலைவிரித்தாடுகிறது. ஆப்கானைப் பற்றி பேசும் எந்தவொரு முதலாளித்துவ ஊடகங்களும் தாலிபான்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ‘சுவாரசியமான’ பல கட்டுரைகளை எழுதித்தள்ளுகின்றன.

ஆனால், பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவிக்கும் ஆப்கானியர்களின் துயரத்தைப் பற்றியோ, அவர்களின் இந்நிலைக்கு யார் காரணம்? என்பது பற்றியான கேள்விகளுக்குள்ளோ அவர்கள் செல்வதில்லை. ஏனெனில் அதற்குள் சென்றால், இந்த துயரங்களுக்கு காரணமாக இருக்கிற அமெரிக்காவின் மேலாதிக்க வெறி அம்பலப்பட்டுவிடும்.

ஆம்! படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதும் 20 ஆண்டுகாலப் போரைவிட கொடுமையான மறைமுகப் போரை ஆப்கானுக்கு வெளியிலிருந்து நடத்திவருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

***

புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, ஆப்கான் மத்திய வங்கிக்குச் சொந்தமான 7 பில்லியன் டாலர்களை முடக்கி வைத்துள்ளது அமெரிக்கா. ஆப்கானில் பச்சிளங் குழந்தைகளும், சிறுவர்களும் பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் போதும் நிதியை விடுவிக்கவில்லை மேலாதிக்க வெறி கொண்ட பைடன் அரசு. சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளிடம் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 3.5 பில்லியன் டாலர்களை மட்டும் விடுவித்தது. இந்த சொற்ப நிதி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவவில்லை.

தொடர்ச்சியாக ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக இருந்த ஆப்கான், தனக்கென சுயேட்சையான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்ளாத நாடு. 20 ஆண்டுகால உள்நாட்டுப் போர் காலத்தில், அந்நிய நிதி உதவிகள் மட்டுமே ஆப்கான் பொருளாதாரத்தில் பெரும்பங்குவகித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாலிபான்கள் அரசமைப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்நிய நிதி உதவி மட்டுமே ஆப்கானின் ஜி.டி.பி.யில் 42.9 சதவிகிதமாக இருந்தது. அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகு இந்நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுதான் அனைத்து நெருக்கடிக்களுக்கும் அடிப்படை.

2021 – 2024 காலகட்டத்தில் ஆப்கானுக்கு வழங்குவதாக இருந்த 1.2 பில்லியன் யூரோ நிதி உதவியை நிறுத்திவிட்டது ஐரோப்பிய ஒன்றியம். 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை ஆப்கானுக்கு மேம்பாட்டு நிதியாக வழங்கி வந்தது உலக வங்கி, அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் சுமார் 65 பில்லியன் அந்நிய நாடுகளின் நிதி உதவியை பெற்றிருக்கிறது ஆப்கான். இதில் பெரும்பங்கு அமெரிக்காவினுடையது.

அமெரிக்கா உள்ளிட்ட நன்கொடை நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை ஆப்கானின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் பொது சேவைகளை பராமரிப்பதற்காகவும் கொடுத்துக் கொண்டிருந்த நிதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் திணறிவருகிறது தாலிபான் அரசு.

சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கானின் அவசரகால இருப்பாக உள்ள 460 மில்லியன் டாலரை விடுவிக்கக் கோரிய தாலிபான் அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது சர்வதேச நாணய நிதியம். “தாலிபான் அரசை சட்டப்பூர்வமாக அமைந்த அரசாகத் தாங்கள் கருதவில்லை” என்று அதற்கு காரணம் கூறுகிறது.

ஆப்கானிஸ்தான் மீதான அரசியல் – பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக இராணுவ ரீதியான நெருக்கடிகளையும் கொடுத்துவருகிறது அமெரிக்கா. ஆப்கானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில், கடந்த மே மாதத் தொடக்கத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front) என்ற ஆயுதக் குழுவினர் தாலிபான்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இவர்கள் வடக்கு கூட்டணி (Northern Alliance) என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமியக் குடியரசை நோக்கமாகக் கொண்ட பிற தாலிபான் எதிர்ப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய, அமெரிக்காவின் ஆசி பெற்ற புதிய ஆயுதக் குழுவாகும்.

***

ஆப்கானின் மெஸ் அய்னக் பகுதியில் சீன நிறுவனங்கள் அமைத்துள்ள தாமிரச் சுரங்கம்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, இரஷ்யாவும் சீனாவும் உள்நுழைவதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுடன் அரசியல் – பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொள்வதில் இரஷ்யாவும் சீனாவும் தீவிர கவனம் செலுத்துகின்றன.

கடந்த மார்ச் இறுதியில், காபூலில் தாலிபான்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் சீனா, இரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானின் தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கு இக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

மற்றொரு தருணத்தில், சீனாவின் புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை ஆப்கானிஸ்தான் வரை விரிவுப்படுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. தாலிபான் இடைக்கால அரசாங்கத்தின் துணை பிரதமர் முல்லா அப்துல் ஹானி பராதர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி ஆகியோர் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு சீனாவுடன் ஒத்துழைப்பு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கானில் மெஸ் அய்னக் (Mes Aynak) என்ற பகுதியில் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தாமிரத்தை வெட்டி எடுக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது தாலிபான் அரசு. 2008-ஆம் ஆண்டிலேயே அப்போதைய ஹர்மித் கர்சாய் தலைமையிலான அரசால் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாமிரச் சுரங்கம் அமைப்பதற்காக வேலைகளை விரைவுப்படுத்தியிருக்கின்றன சீன நிறுவனங்கள். இத்திட்டத்தின் நிறைவேற்றத்தை மேற்பார்வையிடுவதற்காக, ஷாபுதீன் தில்வார் என்பவரை சுரங்கம் மற்றும் பெட்ரோலியத் துறையின் பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளது, தாலிபான் அரசு.

மேலும் 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சுரங்கப் பணிகளைத் தொடங்குமாறு சீன நிறுவனங்களுடன் கடந்த ஆறு மாதங்களாக காணொளி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2008-இல் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்காக சீன நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு காபூல் வரவிருக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள 19.5 சதவிகித இராயல்டி விதிப்பை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது சீனாவின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இச்சுரங்கம் அமைப்பதன் மூலம் தாலிபான் அரசிற்கு ஆண்டிற்கு 250-300 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். எனவே இச்சுரங்கப் பணிக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதியளிப்பது தாலிபான்கள் தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வதற்கான பொருளாதார அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால், சீன நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

படிக்க : ஜார்க்கண்டில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த மகேந்திரா நிறுவனம்!

மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் நாடுகளும் தற்போதைய இரஷ்ய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலங்களுமான துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்காணிக்கவும் அச்சுறுத்தவும் ஆப்கானில் தனது பிடி தளராமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா. ஆனால், ஆப்கானில் இடைக்கால அரசமைத்துள்ள தாலிபான்கள் இரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்கள்.

இத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானில் இரஷ்யாவும் சீனாவும் மேலாதிக்கம் பெறுவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகும். ஆகவே, இதை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாகவே தாலிபான் அரசு மீது நேரடி மற்றும் மறைமுக நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது அமெரிக்கா.

***

அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது. இவர்களின் மேலாதிக்கப் போட்டிகளுக்கிடையில் பலியாகிக் கொண்டிருப்பதோ அப்பாவி உழைக்கும் மக்கள்தான். இந்தப் பின்னணியில் தங்கள் நாட்டு நெருக்கடிகளை புரிந்துகொள்வதானது, மேலாதிக்கங்களுக்கு எதிராக தெற்காசியப் பிராந்திய உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டியமைப்பதில் முக்கியமானது.

(முற்றும்)

அப்பு

1 மறுமொழி

Leave a Reply to Alex பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க