இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற ஆட்சி வரலாற்றில், இதுவரை எந்த பிரதமர்களும் தங்களது ஐந்தாண்டு கால ஆட்சியினை முழுமையாக நிறைவுசெய்தது கிடையாது. இதுவரை பாகிஸ்தானை ஆட்சி செய்த 29 பிரதமர்களுள் 18 பிரதமர்கள் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளும் கூட்டணிக்குள்ளான முரண்பாடுகள் மற்றும் நேரடி இராணுவத் தலையீடுகளின் மூலமாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பிரதமர்கள் அடுத்த தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பாளர்களாகவோ அல்லது எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவோ இடைக்காலமாக நியமிக்கப்பட்டவர்கள்.

எனினும் பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் ஆட்சி பறிக்கப்பட்டவர் இம்ரான் கான் மட்டுமே.

342 நாடாளுமன்ற இருக்கைகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனவே அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் பதவி பறிக்கப்பட்டார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தவிடாமல் அவர் மேற்கொண்ட முயற்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தகர்க்கப்பட்டது.

இம்ரான் கான் மீதான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, பண வீக்கம் – அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு – அந்நிய செலாவணி தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி சூழல், இராணுவத் தளபதி குவாமர் ஜாவீத் பஜ்வா-வுடனான மோதல் போக்கு ஆகியவையே காரணங்களாக கூறப்படுகின்றன.

ஆனால், அமெரிக்க அரசுதான் தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக திட்டமிட்ட சதியை அரங்கேற்றியதாக இம்ரான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு சதியின் மூலம்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததாகவும் இதற்காக பெருமளவில் பணம் வாரியிறைக்கப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியிருந்தார்.

படிக்க : உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

இந்தச் சதியில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளரான டொனால்டு லு என்பவர் ஈடுபட்டிருப்பதாக இம்ரான் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்க தரப்பிலிருந்து தன்னை மிரட்டும் வகையில் இரகசிய கடிதம் ஒன்று வந்ததாக கூறினார்.

அமெரிக்கா இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது. “பொதுவாகவே பாகிஸ்தான் மக்களிடம் அமெரிக்கா தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகிறது என்ற கருத்து இருக்கிறது; அதை தன்னுடயை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் இம்ரான்” – என்று வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

பாகிஸ்தான் இராணுவ கும்பலுடனான அமெரிக்காவின் உறவு

தனது தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு, இம்ரான் கான் ஏற்பாடு செய்து நடத்திய மாபெரும் பேரணி.

பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிந்ததிலிருந்து அந்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் நெருங்கிய உறவு இருந்துவருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்தை அமெரிக்கா தன்னுடைய விசுவாச கும்பாலகவே மாற்றிவைத்திருந்தது. இந்த விசுவாச கும்பல்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக அரசாங்கத்தில் தலையிட்டு, பல்வேறு ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது.

பனிப்போர் காலத்தில், இரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு தெற்காசியாவில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய அடியாளாக இருந்தது பாகிஸ்தான். 1947-லிருந்து இதுவரை 72 பில்லியனுக்கும் அதிகமாக பாகிஸ்தானுக்கு நிதிவழங்கியுள்ளது அமெரிக்கா.

1979 முதல் 89 வரையில் ஆப்கானில் சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற அரசைத் தூக்கியெறிவதற்காக, பாகிஸ்தானுடன் கூட்டுவைத்துக்கொண்டுதான் முஜாகிதீன்களை வளர்த்துவிட்டது அமெரிக்கா. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் பல்வேறு இராணுவ உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர், 2001 செப்டம்பர் இரட்டைக்கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவுடனான உறவு வலுப்பட்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில், ஆப்கான் மீது அமெரிக்க – நேட்டோ படைகள் படையெடுத்தது தொடங்கி (2001), கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் படைவிலக்கிக் கொள்ளப்பட்டது வரையில், 32.5 பில்லியனுக்கும் அதிகமான சிவில் மற்றும் இராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இப்போரில், பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி பெறும் நாடுகளின் பட்டியலின் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் மேற்கூறிய சிவில் மற்றும் இராணுவ உதவிகள் எவையும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுவரவில்லை; அந்நாட்டை அமெரிக்கா தனது மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு உகந்த வகையில், தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்திவந்தது. பாகிஸ்தானின் இராணுவ மற்றும் உளவுத்துறை உதவி தேவையில்லாமல் போகும்போதெல்லாம் நிதியுதவியை அமெரிக்க நிறுத்தியிருக்கிறது.

சான்றாக, 1989-இல் முஜாகிதீன்களோடு நடத்திய போரில் பின்னடைவைச் சந்தித்து சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வெளியேறிய பின்னர், ஓராண்டு கழித்து பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா. அதன் பிறகு பல ஆண்டுகள் இராணுவ நிதி உதவி வழங்கப்படவில்லை.

2001 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மீண்டும் பாகிஸ்தான் தயவு தேவைப்பட்டது. மீண்டும் இராணுவ உதவி வழங்கப்பட்டது.

ஆனால், 2011 ஆண்டிற்கு பின்பு, இந்த இராணுவ நிதி உதவியும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில், டிரம்ப் ஆட்சியின்போது, இந்த இராணுவ நிதி உதவிகள் மொத்தமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய அப்போதைய அதிபர் டிரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர் உதவிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கியுள்ளதாகவும், உண்மையில் அந்நாடு அமெரிக்காவுக்கு வஞ்சகம் புரிந்துவிட்டு, பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழ்வதாகவும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரமுற்ற அப்போதைய பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா அசீஃப், ஆப்கானில் தனது சொந்த தோல்வியிலிருந்து திசைதிருப்புவதற்காகவே டிரம்ப் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவதாகத் தெரிவித்திருந்தார். அதைப் போலவே 2020 ஆம் ஆண்டு பிப்ரவரில் போடப்பட்ட தோஹா ஒப்பந்தம் மூலம் அமெரிக்க-நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இவ்வாறு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவில் விரிசல் தோன்றியிருக்கும் போதுதான், 2018 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

இம்ரான் கான்: இரஷ்ய – சீனக் கூட்டணியின் உறுதியான கூட்டாளி

இரஷ்ய-சீனக் கூட்டணியானது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேசச் சூழலில், அந்நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவு வலுப்பெற்றது; இரஷ்ய-சீனக் கூட்டணியின் உறுதியான கூட்டாளியாக இருந்தார் இம்ரான் கான்.

சீன பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி.

2015 ஆம் ஆண்டு தொடங்கி, பாகிஸ்தானில் சீனாவின் புதிய பட்டுப்பாதைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சீன – பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டம் (China Pakistan Economic Corridor) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்திலிருந்து மேற்கு சீனா வரை எரிவாயு எண்ணெய் குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இத்திட்டத்திற்காக 62 பில்லியன் டாலர்கள் வரை சீனா முதலீடு செய்திருக்கிறது.

இம்ரான் ஆட்சியில், கடந்த பிப்ரவரி மாதம் சீன – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரத்தின் கீழ் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான தொழில் கூட்டு ஒப்பந்தம் (Industrial Co-operation Agreement) கையெழுத்தானது. இது அத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்று அழைக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இரஷ்ய இராணுவம் பயிற்சியளிக்கத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு இரஷ்யாவின் உதவியுடன் பாகிஸ்தானின் வடக்கிலுள்ள லாகூர் நகரையும் தெற்கேயுள்ள கராச்சி நகரையும் எரிவாயுக் குழாய் மூலம் இணைக்கும் 1,100 கி.மீ நீளம் கொண்ட “பாகிஸ்தான் எரிவாயுக் குழாய் திட்டம்” (Pakistan Stream Gas Pipeline Project) போடப்பட்டது.

டாலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு நாணயங்களில் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உதவிகளை மேற்கொள்ள இருதரப்பு நாணய பரிமாற்று முறை (Bilateral Currency Swap) இரஷ்யா மற்றும் சீனாவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு, சீனாவுடன் இத்தகைய நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது பாகிஸ்தான். இம்ரான் ஆட்சிக்கு வந்த 2018 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு 475 பில்லியனாக இருந்த இவ்வொப்பந்தத்தின் கீழான நாணயப் பரிமாற்றம், 2021 ஆம் ஆண்டு 731.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதன் மூலம் டாலரின் ஆதிக்கம் கேள்விக்குள்ளானது.

2021 ஆண்டு டிசம்பரில், இரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக அமெரிக்காவின் ஒருங்கிணைப்பில் ஜனநாயகத்துக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்காக அவ்விரு நாடுகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் இம்ரான் கான் அம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், இரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுக்கும் சூழல் நிலவியபோது, இம்ரான் கான் இரஷ்யாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டம் வைத்திருந்தார். இதை இரத்து செய்யச் சொல்லி அமெரிக்கா வலியுறுத்தியதை இம்ரான் புறக்கணித்தார். அவர் மாஸ்கோவில் இருந்தபோதே, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுத்தது.

ஐ.நா.வில் இரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்டு 22 நாடுகள் பாகிஸ்தானுக்கு கூட்டுக் கடிதம் எழுதின. “மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் அடிமையில்லை” என்று அதைக் காட்டமாக விமர்சித்து ஒதுக்கினார் இம்ரான். இரஷ்ய எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்தது பாகிஸ்தான்.

முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபயஸ் அகமது மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா

இரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியபோது, “இந்தியா எந்த வல்லாதிக்க நாடுகளுக்கும் அடிபணியாத ‘இறையாண்மையுள்ள’ நாடு” என்று இந்தியாவைப் புகழ்வதுபோல, மறைமுகமாக அமெரிக்காவைத் தாக்கினார் இம்ரான்.

பாகிஸ்தானின் சுதந்திர வெளியுறவுக் கொள்கைகளை பொறுக்கமாட்டாமல்தான் அமெரிக்கா தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துள்ளது என குற்றஞ்சாட்டினார் இம்ரான் கான். இதையே “தனது கீழ்படியாமைக்காகத்தான் இம்ரான் கான் தண்டிக்கப்பட்டுள்ளார்” – என அமெரிக்காவை மறைமுகமாக சாடினார் இரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர்.

ஆளும் வர்க்கத்தில் பிளவும் ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவக் கும்பலின் தலையீடும்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வாவுடன் இம்ரான் கான் மோதல் போக்கைக் கடைபிடித்தது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. பல்வேறு முதலாளித்துவப் பத்திரிகைகளுமே இதுகுறித்து வெளிப்படையாக எழுதிவிட்டன.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.இன் தலைவர் ஃபயஸ் அகமதை மாற்றிவிட்டு, அதன் புதிய தலைவராக ஜெனரல் ஹகீம் அஞ்சுமை நியமித்தார் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா. அரசாங்கத்தின் சார்பாக இதனை அங்கீகரிக்க வேண்டிய இம்ரான் கான் மூன்று வாரங்கள் அறிவிப்பை வெளியிடாமல் தாமதப்படுத்தினார். ஏனெனில், ஃபயஸ் அகமது இம்ரான் கானுக்கு நெருக்கமானவராக இருந்தார்.

இம்ரான் கானின் அரசியல் எதிரி நவாப் ஷரீஃபை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்ததிலும் இம்ரான் கான் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் அவரது பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை அப்பொறுப்பிலேயே நீட்டிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார்.

இராணுவத்தின் உயரடுக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு கும்பலுக்கும் இம்ரான் கானை ஆதரிக்கும் இரஷ்ய-சீன ஆதரவு இராணுவக் கும்பலுக்கும் இடையிலான முறுகல் நிலையின் வெளிப்பாடாகவே இச்சம்பவம் வெளிப்பட்டது. இதில் இராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா, அமெரிக்க ஆதரவுப் பிரிவை பிரதிநிதித்துவப் படுத்தினார்.

இம்ரான் கானின் தொடர்ச்சியான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை இராணுவத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு பிரிவு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியமான காரணம். இதனால் அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு பிரிவு இராணுவக் கும்பல், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டும் எதிர்கட்சிகளுடன் கூட்டுசேர்ந்தும் மறைமுகமாக இம்ரான் கானை வீழ்த்தியது. இதை அமெரிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் இதழே வேறு வார்த்தையில் ஒப்புக்கொள்கிறது.

படிக்க : நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

இரஷ்ய-சீன ஆதரவு நிலைப்பாடு எடுத்து, அமெரிக்கா நடத்திய ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டை புறக்கணித்தற்காக, இம்ரான் கானை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் பாகிஸ்தான் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் கம்ரான் கான். சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சுட்டிக்காட்டி, இம்ரான் கான் பெய்ஜிங்கிடம் இஸ்லாமாபாத்தை அடகுவைத்துவிட்டார் என்று அவர் பேசினார்.

“இராணுவ உயரடுக்கிலிருந்து கையசைக்காமல், ஒரு பத்திரிகையாளர் பிரதமரை விமர்சித்து இவ்வாறு பேச முடியாது” என்று எழுதியது நியூயார்க் டைம்ஸ். மேலும் “பாகிஸ்தானின் இராணுவத் தளபதிகள் பொதுவாகவே ஜனநாயகத்தின் மீது சிறிதளவு அன்பு கொண்டவர்கள் அல்லது அமெரிக்கா விசயத்தில் நேச சக்திகள்” எனவும் எழுதியது.

‘அந்நிய சதி’ என்று நேரடியாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டிய இம்ரான் கான், மறந்தும் கூட பாகிஸ்தானின் இராணுவத்தை நேரடியாக குற்றம் சாட்ட மறுத்தார். அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு கைக்கூலி வேலை பார்க்கிற இராணுவத்தின் யோக்கியதை அம்பலப்படுத்தப்பட்டால், உழைக்கும் மக்களிடையே அது ஏற்படுத்தும் கோபம் தனது ஆதாரத்தளமான இரஷ்ய-சீன ஆதரவு கும்பலுக்கும் சேர்த்து பிரச்சினையை உண்டு பண்ணும் என்று எண்ணினார் இம்ரான்.

அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் கேடான நடவடிக்கைகள்தான் தாம் வெளியேற்றப்படுவதற்கு காரணம் என மறைமுகமாக குவாமர் ஜாவித் பாஜ்வாவை விமர்சித்த இம்ரான் கான்; அதேநேரம் நான் அந்த நிறுவனத்தை குற்றம்சொல்லவில்லை, அதிலுள்ள ஒருசிலர்தான் பிரச்சினை என்றார்.

(தொடரும்…)


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க