21.11.2022
வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நவம்பர் 19 அன்று வாரணாசி காசியில் தமிழ் சங்க நிகழ்வை நடத்தி இருக்கிறது பாஜக. அதில் மோடி “தமிழைக் காக்க தவறினால் நாட்டுக்கே நஷ்டம். அத்தகைய தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியர்களின் கடமையாகும். அதை புறக்கணிப்பது தேசத்திற்கு செய்யும் மிகப்பெரும் அவமதிப்பு” என்று பேசி இருக்கிறார். மேலும் பேசிய மோடி, “தமிழ் வளரவும், நம் கலாச்சாரத்தை உயர்த்த வேண்டும்” என்றுள்ளார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியின் தமிழ் மொழியும், அதோடு செத்த மொழி சமஸ்கிருதத்தையும் இணைத்து பேசுகிறார். ஒன்றைப் பேசி அப்படியே சமஸ்கிருத மொழியையும் இணைத்து பேசுவது இவர்களின் சூழ்ச்சி.
நிகழ்வுக்கு ஐஐடி மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை அழைத்து செல்கிறார்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கு மத்திய இணை அமைச்சராக இருக்க கூடிய முருகன் காவிதுண்டும் அணிவித்து வழியனுப்புகிறார். இவ்வளவு அக்கறை தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் வர காரணம் என்ன? இப்படிப் பேசுவதன் நோக்கம் என்ன? எப்படியாவது தமிழகத்திலும் தமிழக மக்கள் மனதிலும் நாம் கால் பதித்தாக வேண்டும் என்பதுதான். அதற்காக ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் தொடர்ந்து வேலைசெய்து வருகிறது.
படிக்க : ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்
ஒரு பக்கம், நரித்தனமான பேச்சு மறுபுறம், நடைமுறையில் அதற்கு எதிராக வேலை செய்வார்கள். உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளியில் கட்டாய தமிழ் பாடத்திட்டம் இல்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளாக தமிழ் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை செய்ய வேண்டாம் என யார் தடுத்தது. அதேபோல் கீழடி அகழாய்வு பணிகளை தொடர்ந்து முடக்கியது யார்? தமிழை நீச பாசை என்றும் தமிழில் பாடினால் தீட்டு என்றும் கூறிக்கொண்டு வருடாவருடம் பிப்ரவரி மாதம் திருவையாறில் தியாகய்யர் உற்சவம் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது பார்ப்பன கும்பல். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடுவதை தீட்சித கும்பல் தடுக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் பதில் என்ன? தமிழ் மீதும் தமிழகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் முன்நிற்கிறது மோடி பா.ஜ.க. கும்பல்.
வரலாற்றை திரிப்பது, இந்தியை கட்டாய பாடமாக திணிப்பதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு எப்படியாவது வரலாற்றை திரித்து நாம் தான் இதை காக்க வந்தவர்கள்போல் காட்டிக் கொள்ளும் மோடியின் வாய்ச்சவடால்களுக்கு நயவஞ்சக நாடகங்களுக்கு மயங்குவார்கள் அல்ல மாணவர்கள், இளைஞர்கள் தமிழக உழைக்கும் மக்கள். இவர்களின் சூழ்ச்சிகளையும் நயவஞ்சகத்தையும் எதிர்த்து இன்று, நேற்று என பல ஆண்டுகளாக தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சதி திட்டத்தை முறியடித்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசத்தை கருவறுப்போம்.
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு-புதுவை.