Thursday, December 5, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு - மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.

-

வணிகப்பயன்பாட்டுக்கு நிலத்தை கையகப்படுத்தினால் நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் லாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

சிப்காட் போன்ற வணிகப் பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது நில உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்ட பங்குபெறும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இழப்பீடை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தெரியாமல் வீணாக மக்கள் செலவு செய்து விடுவார்கள் என்றும் அக்கறைப்பட்டிருக்கிறது ஆணையம்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்:

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டம் 2013 என்ன சொல்கிறது என்றால், அரசானது மக்களின் நிலத்தை கையகப்படுத்தும்போது கருத்து கேட்பு நடத்த வேண்டும், சமூக பாதுகாப்பை கணக்கிட வேண்டும், போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் அச்சட்டத்தின் 105-வது பிரிவானது 13 விசயங்களை பட்டியலிட்டு அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்தினால் கருத்து கேட்பு கூட்டத்தையோ சமூக பாதிப்பு கணக்கிட்டையோ செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது.

படிக்க : மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

இந்த பைத்தியக்கார சட்டத்தை 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்து திருத்தம் செய்தது. இந்தச் சட்டத்தின் படி பெரும் முதலாளிகள் கொழுத்து திரிய, சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த மக்களே சாட்சி:

தற்போது ஒன்றிய அரசின் என்.எல்.சி நிர்வாகம் சுரங்கம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றிற்காக நிலங்களை கையகப்படுத்துவது என்று திட்டமிட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். நிர்வாகம் தரும் இழப்பீடுகளை மற்றும் உத்தரவாதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கின்றனர். மக்களின் எதிர்ப்புக்கு காரணம் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்ட என்.எல்.சி நிர்வாகம் வாக்களித்தபடி இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது என்பதுதான்.

இதேபோல் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு திமுக அரசும், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைத்திட நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.

மக்களின் இதுபோன்ற எதிர்ப்புகளை காயடித்து போராட்டத்தை திசை திருப்பவே லாபத்தில் பங்கு என்கிற புதிய சரக்கை ஆளும் வர்க்கம் இப்போது இறக்கியிருக்கிறது.

கருத்து கேட்பு, உரிய இழப்பீடு, மறுவாழ்வு, வேலைக்கு உத்தரவாதம் என்று தான் சொல்லிய எந்த வாக்குறுதியையும் தானே நிறைவேற்றாத இந்த அரசுதான் தற்போது நிறுவனங்களுக்கு நிலத்தை பறிகொடுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு  நிறுவனத்திடம் இருந்து லாபத்தில் பங்கு வாங்கி தருவதாக கதை அளக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா வளர்கிறது என்ற கோஷம் நம் செவியை கிழித்து கொண்டிருந்த போதுதான் நோக்கியா நிறுவனம் ஆலையை மூடிவிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை தெருவில் நிறுத்தி விட்டு, சத்தமின்றி கடையை காலி செய்து ஓடியது.

படிக்க : வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

கார்ப்பரேட் முதலாளிகள் கடல் கடந்து முதலீடு செய்வது இயற்கை வளங்களையும், உழைப்பையும் சுரண்டத்தானே அன்றி உழைக்கும் மக்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்க அல்ல! கேட்பவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதை தான் இது! லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.

சிப்காட் போன்ற வணிக நிறுவனங்களுக்காக நிலத்தை பறிக்கும்போது இழப்பீடாக அரசு தருகின்ற பணம் மக்களின் பணம். அதையும் அந்த நிறுவனத்திடமே கொடுத்துவிட்டு அவர்கள் லாபமீட்டி அதில் ஒரு பங்கு மக்களுக்கு கொடுப்பார்கள் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று.

மக்களை தெரிந்தே முட்டாளாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை கூறு போட்டுக் கொடுப்பது என்பது எப்போதும் அரசுக்கு கைவந்த கலைதான். ஆனால் அதை முறியடிக்க  மக்களும் ஒரு கலையை கற்றுணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதன் பெயர் போராட்டம்!

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க